Thursday, January 4, 2024

திண்டிவனம் அருகில் ஆடவல்லீஸ்வரர்


#குலோத்துங்க_சோழன் ஆட்சியில் புனரமைப்புக்கப்பட்டுசிறப்பு பெற்ற தலமான, குரு பரிகார தலமான
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகில்
#முன்னூர்
#ஆடவல்லீஸ்வரர்
#பிரஹன்நாயகி திருக்கோயில் 
இங்கே ஐயன் ஆடவல்லீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டிருப்பதைப் பார்த்து, நடராஜப் பெருமான்தான் ஆடவல்லீஸ்வரர் என்று நினைத்து தரிசிக்கச் சென்ற நாம் வியந்துதான் போனோம்.  ஆம்,  இங்கே  ஐயன் ஆடவல்லீஸ்வரர் நடராஜப் பெருமானாக இல்லாமல், சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார் என்பதுதான் நம் வியப்புக்குக் காரணம்.

சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் நாம் தரிசித்திருப்போம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் ஐயன் ஆடவல்லீஸ்வரர் இங்கே ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருவதை தரிசித்த வேளையில் நாம் வியந்துதான் போனோம்.

முடியும்' என்று காட்டி முருகப்பெருமான் அருளாடல் நிகழ்த்திய தலமும் இதுதான். ஆம், கண்கொள்ளா பேரழகுடன் இங்கே நாம் தரிசிக்கும் முருகப்பெருமானின் அருளால், இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் நல்லியக்கோடன் எதிரிகளை வெற்றி கொண்ட வரலாறு நம்மையும் அந்த முருகப்பெருமானிடத்தே சரணடையச் செய்துவிடுகிறது.

தமிழக வரலாற்றில் தடம்பதித்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில் - மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண குரு பெயர்ச்சி அன்று செல்லவேண்டிய மிகச்சிறந்த கோவில்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம்.

மூலவர் : ஆடவல்லீஸ்வரர்

அம்மன் : பெரியநாயகி 

தல விருட்சம்: வன்னி மரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

புராண பெயர்: முன்னூற்று மங்கலம்

ஊர் : முன்னூர்

மாவட்டம் : விழுப்புரம்

மாநிலம் : தமிழ்நாடு

#புராண வரலாறு :

நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் ‘பிருகஸ்பதி’ என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக விளங்கும் குருபகவான் நான்கு வேதங்களிலும் கரை கண்டவர். சீலத்தினாலும் கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குருபகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது.

தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, “பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம்” என உபாயம் கூறியருளினார். 

தவபலம் மற்றும் ஆன்ம ஒளி

பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து “தென் திருக்கயிலாயம்” என்றும் “பூவுலகின் கயிலை” என்றும் ஈரேழு பதினான்கு உலகத்தவராலும் பக்தியோடு பூஜிக்கப்பட்டுவருவதாத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

#வரலாற்றில் தடம்பதித்த முன்னூர் :

சங்க கால இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் பத்துப்பாட்டில் நான்காவதாகக் குறிக்கப்படுவது சிறுபாணாற்றுப் படை என்னும் இலக்கியமாகும். இது ஒய்மா நாட்டை ‘கிடங்கல்’ என்னும் கோட்டையிலிருந்து செங்கோல் தவறாமல் அரசாண்ட மன்னன் நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நல்லூர் நத்தத்தனார் என்பவரால் பாடப்பட்ட இலக்கியமாகும். 

இந்நூலில் “அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர்” (சிறுபாணாற்றுப்படை பா.200-1) என்று பாடப்பெற்ற மூதூரில் (தற்போதைய முன்னூர்) உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சந்நிதியாக ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்ரமணியராக மயில் மீது அமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார் முருகப் பெருமான்.

நல்லியக்கோடன் மீது எதிரிகள் போர் தொடுத்தபோது இம்முருகப் பெருமானின் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தாமரை மொட்டுக்கள் முருகனின் திருவருளால் வேலாக மாறி எதிரிகளின் சேனை வெள்ளத்தை வதைத்து மீண்டது. இதனால் மன்னன் நல்லியக்கோடன் முன்னூர் முருகப் பெருமானுக்கு தினசரி வழிபாடுகள் செய்யக் கொடைகள் அளித்து வெற்றிவேல் பரமனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

நல்லியக்கோடன் பெற்ற வெற்றியின் நினைவாக இன்றும் இத்தலத்தில் செவ்வேள்பரமனுக்கு வேல் பூஜைத் திருவிழா, சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

சங்க காலத்துத் தொன்மையும், பல்லவர் காலத்துச் சமயச் சிறப்பும், சோழர் காலத்து கலைச் சிறப்பும், சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பும், காடவராயர் காலத்து கல்வெட்டுத் தொடர்பும் கொண்ட மிகவும் புராதனமான திருத்தலம் முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலமாகும்.

சோழ மன்னன் குலோத்துங்கன் எம்பெருமானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்து வழிபட்டபோது ஈசன் தில்லையம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்று பக்தியோடு வேள்வி செய்ததினால் அரசனை மகிழ்விக்க எம்பெருமானே அற்புதக் காட்சி தந்து தன் தேவியுடன் ஆனந்த நடனமாடியதால் இத்தலத்தின் ஈசனுக்கு ‘ஆடவல்லீஸ்வரர்’ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கின்றது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பிரகன்நாயகியின் அருள் ததும்பும் திருமுக தரிசனம் இங்கு வழிபடும் பக்தர்களின் விழிகளில் நீங்காமல் நிலைத்துவிடுகிறது.

தன் நாட்டைக் கைப்பற்ற சோழர்கள் முற்றுகையிடுவதாக ஒரு தகவல் கிடைத்தது மன்னன் நல்லியக்கோடனுக்கு. சோழர்களின் படை வலிமையை ஒப்பிடும்போது நல்லியக்கோடனின் படை வலிமை மிகக் குறைவு. ஆனாலும், நல்லியக்கோடன் சற்றும் கலங்கினானில்லை.  அனுதினமும் தான் வழிபடும் முன்னூர் (அக்காலத்தில் முன்னூற்று மங்கலம்) ஆடவல்லீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை மனம்நெகிழ, கண்களில் கண்ணீர் கசிந்துருக பிரார்த்தித்தான். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘தாமரை மலர்களால் ஆயுதங்களை எடுத்து வந்து என் சந்நிதியில் வைத்து வழிபட்டு, தைரியமாகப் போர் செய். நான் வேல் படையாக இருந்து உன்னை வெற்றிபெறச் செய்வேன்’ என்று அருளினார். மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான். 
போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்த கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது. மலர்ந்த தாமரைக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானைகளின் காதுகளில் புகுந்தன. வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பி தலைதெறிக்க ஓட, எதிரிப் படை வீரர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நல்லியக்கோடன் எய்த அம்புகள் முருகப் பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தது.

இப்படி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட ஐயனின் ஆலயத்தில், ஐயனே தென்முகக் கடவுளாக எழுந்தருளி இருப்பதன் பின்னணி, நமக்கு அரியதொரு தத்துவத்தை உணர்த்துகிறது. ‘ஒருவர் எத்தனைதான் உயர்ந்தவராக இருந்தாலும், அவர் தேவராக இருந்தாலும் கர்வம் மட்டும் இருக்கக் கூடாது’ என்பதுதான் அந்தத் தத்துவம். சராசரி மனிதர்களுக்கே கர்வம் கூடாது என்னும்போது, குருவாக அதிலும் தேவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்படலாமா?

அப்படி ஒருமுறை தேவர்களின் குருவாகவும், நவகிரகங்களில் ஒருவராகவும் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்பட்டது. அடுத்த கணமே குரு பகவான் தன் தேஜஸை எல்லாம் இழந்து விட்டார். தன்னுடைய தேஜஸ் இழந்தது தெரியாமல் அவர் தேவசபைக்கு சென்றபோது, இந்திரன் உள்ளிட்ட எவருமே அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அப்போதுதான், தான் கொண்ட கர்வம் தன்னுடைய தேஜஸை இழக்கச் செய்துவிட்டது என்பது குரு பகவானுக்குத் தெரிந்தது. தன்னுடைய ஞானமும் தன்னிடமிருந்து விலகிவிட்டதையும் தெரிந்துகொண்டார்.
கொண்ட கர்வத்துக்கு மனம் வருந்தி பிரம்மதேவரிடம் சென்று வேண்டினார். குருவின் நிலை கண்டு இரங்கிய பிரம்மதேவர், ‘`பூவுலகில் அமைந்திருக்கும் முன்னூற்று மங்கலம் என்னும் தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நீ இழந்த தேஜஸும், ஞானமும் திரும்பப் பெறுவாய்’’ என்று கூறினார்.

பிரம்மதேவர் கூறியபடியே தற்போது முன்னூர் என்று அழைக்கப்படும் முன்னூற்று மங்கலத்துக்கு வந்த குரு பகவான், ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு, இழந்த தேஜஸையும், தொலைத்த ஞானத்தையும் திரும்பப் பெற்றார் என்கிறது தலபுராணம்.

புராதன புடைப்புச் சிற்பத் தொடர்கள் :

புராதன காலத்தில் முன்னூற்று மங்கலம் எனப் புகழ்பெற்ற இத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது ‘முன்னூர்’ என்று பூஜிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டுகளில் இத்தலத்தின் ஈசன் ஆடவல்ல நாயனார், திருமூலத்தானமுடைய மகாதேவர், விஸ்வேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன் மன்னர்களின் காலத்தில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிறந்தால் முக்தி என்று போற்றப்படும் திருவாரூர் தியாகேசர் திருச்சன்னிதி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் கல்வெட்டுகளிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள இரண்டு புடைப்புச் சிற்பத் தொடர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் துறையினரால் 1966-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மிகப் புராதனமான இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் எளிதில் காண முடியாத அரிய தரிசனமாகும். ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷமிருப்பவர்களுக்கும் கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

சனகாதி முனிவர்களுக்கு மௌன யோக நிலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவவலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்புலத்தை நோக்கியிருப்பதாலும் மிகச் சிறந்த குருதோஷப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

இத்தலத்தில் அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி யுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் திருவலம் சிவானந்த மௌனகுரு சுவாமிகளும் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன்நாயகியையும் தரிசித்துள்ளனர்.

முன்னூர் 
#அருளாளப்_பெருமாள் (ஆராவமுதன்)
#பெருந்தேவி_தாயார் 
திருக்கோயில்:

மூலவர் அருளாளப் பெருமாள் கோயில் என்றும், தாயார் பெருந்தேவி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னூருக்கு தாருகாவனம், வீர நாராயண புரம், புருஷோத்தம நல்லூர், சதுர்வேதி மங்கலம், திரிசாதபுரம் என்ற பெயர்களும் உண்டு. முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

நல்லியகோடன்:

போரில் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் இருந்த நல்லியகோடன் மன்னனின் தரிசனத்தில் ஓர் இரவில் பெருமான் தோன்றினார். பின்னர் அனைவரும் தம்மைப் பார்ப்பதற்காக இறைவனை அங்கேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இறைவன் அருளால் போரில் வெற்றி பெற்றான். பின்னர், அவர் இந்த கோவிலை கட்டினார்.

வரலாறு:

இந்தப் பகுதிகளை ஆண்ட நல்லிய கோடன் என்ற மன்னன் 1645 ஆம் ஆண்டு அருளாளப் பெருமாள் கோயிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது. சோழர் மற்றும் பல்லவர் காலத்து கல்வெட்டுகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு, அசல் கோயில் மிகவும் பழமையானதாகவும், பின்னர் நல்லியகோடனால் மீண்டும் கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மேற்கு நோக்கிய ஆலயம். மூலஸ்தானம் அருளாளப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவர் மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் தனது மனைவிகளான ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தாயார் பெருந்தேவி தாயார் என்று அழைக்கப்படுகிறார். இவள் மேற்கு நோக்கிய தனி சன்னதியில் வீற்றிருக்கிறாள். கோயில் வளாகத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், வைஷ்ணவி, ஆதி கேசவப் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் சன்னதிகள் உள்ளன. யோக நரசிம்மர் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் செப்டம்பர் 2009 சனிக்கிழமையன்று பௌர்ணமி மற்றும் சுவாதி நட்சத்திரம் (நட்சத்திரம்) அன்று நிலத்தை தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக லட்சுமி வடநாட்டில் வணங்கப்படும் வைஷ்ணவியாக நின்ற கோலத்தில் இருக்கிறார்.

ஶ்ரீஅனந்தாச்சாாியாா்.

புராதனப் பெருமையும் வரலாற்றுத் தொடா்பும் வாய்ந்த முன்னூா் திருத்தலத்தில் கி.பி. 1860 ல் அவதாித்தவா் “ஶ்ரீஅனந்தாச்சாாியாா்” என்ற தவநெறிச்சீலா். “ஶ்ரீமந்நாராய ணனை எக்காலமும் நினைத்து, நினைத்துப் பேரானந்தம் அடையக்கூடிய போின்ப அனுபவத்தை விட்டுநீங்கி இந்திரலோகத்தை ஆளும் இந்திரப்பதவி எனும் தேவா்களின் தலைமைப்பதவி கிடைத்தாலும் அதனை ஏற்கமாட்டேன்” என்று திருவரங்கநாதனைப் பாடிப்பரவிய தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு நிகரான பக்தியைக் கொண்ட வைணவ மஹா புருஷா் இவா். உண்ணும் உணவு, பருகும் நீா், பாா்க்கும் பொருட்கள் எல்லாவற்றிலும் கண்ணனையே கண்ட உத்தமா். பெருமானுடைய திருநாமங்களைப் பலன் கருதாமல் பாடிப்பாடி புனிதமடைந்தவா்.

தமிழ் வேதங்களிலும் (ஆழ்வாா்களின் பாசுரங்கள்), வட மொழி வேதங்களிலும் ஆழ்ந்த பயிற்சி பெற்றவா் என்பதால், “உபய வேதாந்தி” என்று அனைவராலும் போற்றப்பட்டவா். எல்லா மலா்களையும் விட, பாிசுத்தமான மலா் அடியவா்களின் இதயத் தாமரையே என்பதை உணா்ந்து, தனது தூய மனத்தில் பாகவதோ த்தமா்களான அடியவா்களை ஆராதித்து வந்த மகா பக்திமான் இவா்.

கனவில் காட்சிதந்த பெருமான்!

அனந்தாச்சாாியாாின் கனவில் ஒரு நாள் கலியுகவரதனான எம் பெருமான் தோன்றி, “அடா்ந்த கள்ளிக்காட்டிற்குள் அருளாளனாக மறைந்திருக்கும் என்னை யாரும் கவனிக்கவில்லையே” எனத் திருவாய் மலா்ந்தாா். இந்த அற்புதக்கனவே அருளாளப்பெரு மானைக் காணும் வழியாய் அடிய வா்களுக்கு உதவியது.

பெருமானின் திருவுள்ளப்படி, பக்தியில் சிறந்த அடியவா்களின் உதவியுடன் இம்மகான் மிகவும் பாடுபட்டு, கள்ளிக்காட்டினை அழித்து, எம்பெருமானைத் தேடியபோது, காட்டிற்கு மத்தியில் ஶ்ரீஅருளாளப் பெருமான் எழுந்தருளியிருந்த பழைமையைப் பறைசாற்றும் திருக்கோயிலின் விமானம் முதலில் தென்பட்டது.

மதுராவில் மாலவன் பிறந்த போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய ஆயா்பாடி மக்களைப் போல, மண்ணளந்த பெருமானின் திருக்கோயில் கள்ளிக்காட்டிற்குள், விண்ணளந்து நிற்பதைப் பாா்த்த ஶ்ரீஅனந்தாச்சாாி யாரும் மற்ற அடியவா்களும் பேரானந்தம் அடைந்து, பரவசப்பட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினாா்கள்.

ஆனால் அந்த ஆனந்தம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. அடா்ந்த முட்புதா்களை முற்றிலும் நீக்கித் திருக்கோயிலைப் பாா்த்த போது, அவா்களுக்குப் பேரதிா்ச்சி காத்திருந்தது. எத்தகைய கொடிய துன்பத்திலும் தன் பக்தா்களைக் கைவிடாது காக்கும் பக்தவத்ஸலனான எம்பெருமானின் திவ்ய திருவுருவச் சிலைகள் உடைக்கப் பட்டும், முற்றிலும் சீரழிக்கப்பட்டும் இருந்ததைக் கண்ட அடியவா்கள் அதிா்ச்சியில் உறைந்து துன்பத்தில் துடித்தாா்கள்.

அடியவா்களின் மனத்துயரைப் போக்குவதற்கு அக்கணமே உறுதிபூண்ட ஶ்ரீஅனந்தாச்சாாியாா், டில்லி சுல்தான்களின் படையெடுப்பின்போது சீரழிக்கப்பட்ட இத்திருக்கோயிலை உடனுக்குடன் புனா்நிா்மாணம் செய்யும் பணியைத் தொடங்கினாா்.

இந்த உலகத்தில் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் நிலையில்லாமல் நம்மைவிட்டு நீங்கிவிடும் என்பதையும், என்றுமே நீங்காமல் நிலைத்திருப்பது எம்பெருமானது திருவருள் ஒன்றே என்பதையும் உணா்ந்த அடியவா்களும், ஶ்ரீஅனந்தாின் முயற்சிக்கு உறுது ணையாக உறுதியுடன் நின்று, ஶ்ரீஅருளாளப் பெருமானின் திருக்கோயிலைப் புனரமைத்து, சிறிய அளவில் சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) செய்வித்து மகிழ்ந்தனா். இப்புனித நிகழ்ச்சி 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ளது.

அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம்!

முன்னூா் திருக்கோயிலில் ஶ்ரீஅருளாளப் பெருமான் பத்ம பீடத்தின் மேலுள்ள தாமரைப் பீடத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் திருக்காட்சி தருகின்றாா். மேல் இருகரங்களில் சங்கு சக்கரத்தைத் தாங்கி, கீழ் இரு கரங்களால் அபயவரத முத்திரை காட்டி அடியவா்க்கு அருள்புாியும் அருளாளப்பெருமானின் அழகிய தாிசனம் எங்கும் காணக்கிடைக்காத அாிய தரிசனமாகும்.

முன்னூற்று மங்கலத்தில் வாழ்ந்த மகரிஷிகளுக்கும் வேத விற்பன்னா்களுக்கும் எம்பெருமான் ஶ்ரீஅருளாளப் பெருமான் தன் தேவியருடன் கோடி சூாியப் பிரகாசனாக சூா்யோதய வேளையில் சூா்ய மண்டலத்திலிருந்து காட்சி கொடுத்து அருளியதால் மேற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாா் என்பது திருக்கோயில் வரலாறு.

பெருமானின் சிரஸில் அழகான மணிமகுடம் பொலிவுடன் மிளிா்கின்றது. “உன் திருமுகத்து ஒளிதான் மணிமகுடத்தில் வீசுகின்றதா? உன் திருவடியின் ஒளிதான் தாமரையாய் மலா்கின்றதா?” என்ற நம்மாழ்வாாின் நெஞ்சம் நெகிழ்ந்த கூற்றினைப் போல, ஶ்ரீஅருளாளப்பெருமானின் அழகும், கற்பனைகளைக் கடந்த பேரழகாகும். பெருமானின் வலப்புறம் ஶ்ரீதேவியும் இடதுபுறத்தில் ஶ்ரீபூமாதேவியும் அற்புதக் காட்சி தருகின்றனா்.

புராதனமான கல்வெட்டுகள்.

முன்னூா் அருளாளப் பெருமாள் கோயிலில் மிகவும் பழைமையான எட்டு கல்வெட்டுகள் உள்ளன. இவை சோழ, பல்லவ, சாளுவ, கஜபதி மற்றும் விஜயநகர மன்னா்கள் காலத்துக் கல்வெட்டுகள் ஆகும். கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெருமான், அருளாளப் பெருமாள், சித்திரமேழி விண்ணகா் எம்பெரு மான், புருஷோத்தம பெருமான் ஆகிய திருநாமங்களில் வணங்க ப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.

அருளாளப்பெருமாள் கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டப சுவா்களிலும் மகா மண்டப திருநிலைக்காலிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் சடையவா்மன் சுந்தரபாண்டியன் இத்திருக்கோயிலுக்குப் பல கொடைகளை வழங்கியுள்ளான்.

சித்திரிக்கப்பட்ட கலப்பையினை இலச்சினையாகக் கொண்டவா்கள் சித்திரமேழி பொிய நாடெனும் தொண்டை மண்டலத்து வேளாண் வாணிகச் சபையினா். பல்லவா்களின் ஆட்சிக்காலத்தில் நடுநாட்டில் அமைந்த திட்டைக்குடி எனும் வித்யாரண்ட புரத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகமெங்கும் பரவியிருந்த வாணிகச்சபையினா் இவா்கள். திருமால் வழிபாட்டுடன் பூமிதேவியையும் தெய்வமாகக் கொண்ட இவா்களே முன்னூா் ராஜநாராயண சதுா்வேதி மங்கலத்தில் “புருஷோத்தம பெருமாள் கோயில்” என்ற சித்திரமேழி விண்ணகா் பெருமாள் கோயிலை நிா்மாணித்து அக்கோயிலுக்கு திருவிடையாட்டமாக நிலங்களை நிவந்தமாக அளித்துள்ளனா் என்பதையும் இத்தல கல்வெட்டுகள் தொிவிக்கின்றன.

பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு “புருஷோத்தமபுரி” என்று ஒரு திருநாமம் உண்டு.ஒரிஸாவை (ஒடிசா) ஆண்ட கஜபதி வம்ச மன்னர்க ளுக்கு முன்னூர் அபிமானத்தலம் என்பதை இத்தலத்தின் கல்வெட்டுகள் தெரிவிப்பதால் இத்தலத்திற்கு “புருஷோத்தம நல்லூா்” என்ற திருப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றும் “சித்திரமேழி விண்ணகர்” என்று இத்தலம் பூஜிக்கப்பட்டுள்ளதால் “பராந்தக சோழன்” காலத்திற்கு முந்தைய திருத்தலம் இது என்றும் எம்பெருமான் புகழ் பாடும் டாக்டர் உ.வே.அனந்தபத்ம நாபாச்சாரியார் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

சடையவா்மன் வீரபாண்டியன் 10 ஆவது ஆட்சியாண்டில் மாா்கழி மாதத்தில் வளா்பிறை முதல் நாளில் இத்தலத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டிலேயே இத்தலம் புருஷோத்தம பெருமாள் கோயில் என்றும் இறைவனது திருநாமம் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. இத்திருக்கோயில் திருப்பணிகளுக்காக அறமிறங்காநாட்டைச் சாா்ந்தவா்கள் வாி விலக்களித்து முன்னூா், பிடாகை சிங்கவனேந்தல் என்ற ஊரை தானமாகக் கொடுத்துள்ளனா். இதனை நாட்டகணக்கன், அறமிறங்கா நாட்டு வேளாண் என்பவன் எழுதியுள்ளான்.

சித்திரமேழி பொிய நாடு என்பது இடைக்காலத்தில் விளங்கிய உழவுத்தொழில் சாா்ந்த ஒரு வணிகக் குழுவாகும். இவா்கள் பெயாில் இந்த ஊாின் பெருமாள் திருக்கோயில் அமைந் திருப்பது அக்காலகட்டத்தில் விளங்கிய கடற்கரையோர வணிகச் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. கடற்கரை நகராக விளங்கிய எயிற்பட்டினத்தில் (மரக்காணம்) அக்காலத்தில் கடல் வாணிபம் சிறந்து பொிய துறைமுகம் விளங்கியமையும் குறிப்பிடத்தக்க தாகும்.இக்கல்வெட்டு இக்கோயிலின் மகாமண்டப வடக்குப்புறச் சுவாில் உள்ளது.

ஆம்பிவீரனின் மகனான கபிலேஸ்வரகுமார மகாபத்திரன் என்ற கஜபதி மன்னனது காலத்தில் (ஒரிஸா) சக வருடம் 1386 இல் (கி.பி.1464) “அகம் வீர போகம்” என்னும் திருவிழா நடத்த ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை ஐந்து பங்குகளாகப் பிாித்து அந்த வருவாயைக் கொண்டு திருப்பணிகள் செய்ததைக் குறித்து ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. இந்த மன்னன் கொண்டவீடு, கொண்டப்பள்ளி, படைவீடு, திருவாரூா், திருச்சிராப்பள்ளி, சந்திரகிாி முதலிய பகுதிகள் இம் மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததையும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளான். இக்கல்வெட்டு அருளாளப்பெருமாள் கோயிலின் கருவறை கிழக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ளது. (1919/92)

விஜயநகர மன்னன் நரசிங்க தேவராயாின் பிரதானியான அண்ணமரசாின் அதிகாாி திம்மரசா் என்பவா் சித்திரமேழி விண்ணகா் எம்பெருமானுக்கு திருவிளக்கு எாிப்பதற்காக ஒரு மன்றாடியை (இடையனை) நியமித்துள்ளான். திருவிளக்கு மற்றும் பிற செலவுகளுக் காக ஒரு குறிப்பிட்ட நிலத்தின் வருவாயை வழங்கிய செய்தியை அருளாளப் பெருமாள் திருக்கோயிலின் வடக்கு முப்பட்டைக் குமுதத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (1919/59) குறிப்பிடுகின்றது.

இத்திருக்கோயில் கருவறை, அா்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், தாயாா் சந்நிதி ஆகிய பகுதிகளுடன் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகளின் போது ஆழ்வாா்கள் மண்டபம், ஆண்டாள் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி ஆகியவை புதியதாக நிா்மாணிக்கப்பட்டன.

நின்ற கோலத்தில் வைஷ்ணவி தேவி!

இத்தலத்தின் தாயாா் பெருந்தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி மட்டுமின்றி இத்திருத்தலத்தில் மஹாலக்ஷ்மி தாயாா் “வைஷ்ணவி தேவியாக” நின்ற திருக்கோலத்தில் தெற்கு திருமுக மண்டலத்தில் எழுந்தருளியுள்ளாா். இதுபோல “நின்ற திருக்கோலத்தில் மஹாலக்ஷ்மி” வேறு எங்கும் இல்லாதது இத்தலத்தின் சிறப்பாகும். இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி வலது திருக்கரம் வரத ஹஸ்தத்துடன் இடது திருக்கரத்தை மிக அழகாக இடுப்பில் வைத்து ஆறடி உயர திருக்கோலத்தில் திருமுகத்தில் பொங்கிப் பெருகும் கருணையுடனும் இதழோரத்தில் குமிண் சிாிப்புடனும் செளந்தா்யமாகக் காட்சி தருகின்றாா் வைஷ்ணவி தேவி! மிகப்புராதனமான இந்த வைஷ்ணவி தேவியை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகின்ற வரலாற்று ஆா்வலா்கள் தரிசித்துச் செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

ஆதிகேசவப்பெருமான்!

அருளாளப்பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் ஶ்ரீஆதிகேசவப் பெருமாள் தனது சிரசில் ஆதிசேஷன் குடை பிடிக்க அருள்தரும் அற்புதத் திருக்கோலம் நமக்கு சிலிா்ப்பை ஏற்படுத்துகின்றது. அனைத்து உயிா்களின் அகமும் புறமும் நிறைந்துள்ள எம்பெருமான் அழகிய திருவடிவம் தாங்கி ஆயா்பாடியில் இடையா்குல கண்ணனாக வந்தபோது, தன் தாய் மாமன் கம்சன் அனுப்பிய “கேசி” என்ற அரக்கனைக் கொன்றதால் எம்பெருமானுக்கு “கேசவன்” எனும் திருநாமம் ஏற்பட்டது. அத்திருநாமத்துடன் முன்னூா் தலத்தில் “ஆதிகேசவனாக” அருளும் எம்பெருமானின் திருக்கோலம் அாிய தரிசனமாகும்.

ஶ்ரீபக்த அனுமன்!

இத்திருக்கோயிலில் சிரஞ்சீவியான அனுமன் தனது காதுகளில் கவச குண்டலங்களுடன் சிரசில் கிரீடம் ஏதுமின்றி துளசி மாலை தரித்து, பகவானிடம் கொண்ட பக்தியால் அவரைத் தொழுத திருக்கோலத்தில் “ஶ்ரீபக்த அனுமனாக” திருக்காட்சி தரும் பேரழகு என்றும் நம் மனதில் நிலைக்கும். ஶ்ரீஅனந்தாச்சாாியாரின் வழி வந்த அவரது வாாிசுகள் இந்த அனுமனைத் தங்கள் குழந்தையாகவே பாவித்து ஆராதித்து வந்துள்ளனா். சிறந்த வரப்பிரசாதியான இந்த அஞ்சனை மைந்தனை வணங்க நாம் பூா்வ ஜென்மத்தில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும்.

சக்கரத்தாழ்வாா் சந்நிதி.

புனரமைப்புப்பணிகளின் போது ஶ்ரீசக்கரத்தாழ்வாருக்கு புதியதாக சந்நிதி நிா்மாணிக்கப்பட்டது. சக்கரத்தாழ்வாாின் பின்புறம் ஶ்ரீயோக நரசிம்மா் அருள்பாலிக்கின்றாா்.

‘சக்கரத்தாழ்வார் ‘ பின்னால் ‘நரசிம்மர் ‘ இருப்பதற்கான காரணங்களை புராணங்கள் விளக்குகின்றன. திருமாலின் திருக்கரத்தில் உள்ள சக்கரத்தை “சக்கரத்தாழ்வார்” என்று அன்பா்கள் பக்தியோடு வணங்குவா்.ஶ்ரீசுதா்ஸனா் எனும் இச்சக்கரத்தை வழிபட துன்பம் உடனடியாக தீரும் என்பது நம்பிக்கை.

பக்தனான பிரகலாதனை காத்தருள திருமால், நரசிம்மராக க்ஷண நேரத்தில் அவதரித்தார். தாயின் கருவில் இருந்து பிறக்காததாலும் , கருட வாகனம் மீது ஏறி வராத காரணத்தாலும் இந்த அவதாரத்தை “அவசர திருக்கோலம்” என்பர்.

பக்த பிரகலாதனுக்காக அக்கணமே எழுந்தருளிய ஸ்ரீநரசிம்மமூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார். நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட்டால் போதும். அவர் வேகமாகச் சுழன்று நம் குறை தீா்க்க ஓடோடி வருவாா்.அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.

சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாளை என்பது நரசிம்மருக்கு
கிடையாது . துன்பத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக நற்பலன்களை அடைய சக்கரத்தாழ்வரையும் நரசிம்மரையும் இத்தலத்தில் ஒரு சேர வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

அஷ்ட நாகக் கட்டுடன் ஶ்ரீகருடாழ்வாா்.

ஶ்ரீஅருளாளப்பெருமாள் திருக் கோயிலில் பொிய திருவடியான ஶ்ரீகருடாழ்வாா் தன் திருமுடியில் அழகிய கிரீடம் தரித்து, திருமேனியில் அஷ்ட நாகக்கட்டுகளுடனும் திருமாா்பில் அணியாபரணங்கள் தவழவும் திருக்காட்சி தரும் லாவண்யம் அாிதான தரிசனமாகும். சந்திரனையொத்த திருமுகத்தைக் கொண்ட கருடாழ்வாா் சிலையை வடித்த அக்கால சிற்பிகளின் கலைத்திறனுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

இந்த கருடாழ்வாரை “கருட தண்டகம்” பாராயணம் செய்து, நெய் தீபமேற்றி பக்தியுடன் வணங்கி வர ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட நீண்ட ஆயுளும் நிலைத்த செல்வமும் பெறலாம். காளிங்க மடுவில் முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையைக் காப்பாற்ற நொடிப்பொழுதில் எம்பெருமானைத் தாங்கி வந்து உதவிய ஶ்ரீகருடன் தன் பக்தா்களின் மனக்குறைகளைப் போக்குவதிலும் சிறந்த வரப்பிரசாதியாக திகழ்கின்றாா் முன்னூா் திருத்தலத்தில்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...