Saturday, January 6, 2024

திருவாமாத்தூர்_அபிராமேசுவரர்_கோயில்

#திருவாமாத்தூர்_அபிராமேசுவரர்_கோயில் 
🌺விழுப்புரத்தில் இருந்து ஏழு கீமீ தொலைவில் உள்ளது திருவாமாத்தூர் எனும் ஊர், இங்கு  சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரத் திருப்பதிகங்கள் பாடப்பெற்ற நடுநாட்டுத் திருக்கோவில்களில், 21-வது ஆலயமாக விளங்குகிறது திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் ஆகும்
🌺 இந்த தலத்து ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது. இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்றும், இறைவிக்கு முத்தாம்பிகை என்பதும் பெயர். 

🌺கல்வெட்டுகளில் இவ்விறைவன் திருவாமாத்தூருடைய பராமஸ்வாமிகள் என்றும் ஆளுடைய அழகிய தேவர் என்றும் அழகிய நாயனார் என்றும் , இறைவி நாச்சியார் முத்தை வென்ற முறுவலார் என்றும், இவ்வூர் அருவா நாட்டு மீய்வழி வாவலூர் என்ற பிரிவிலும், ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பிரிவிலும், ராஜராஜ வளநாட்டு பனையூர் நாட்டு என்ற பிரிவிலும் பல்வேறு கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌺பல்லவர் காலத்தில் இருந்தே சிறப்பு பெற்ற இக்கோயிலை பராந்தகனின் 6ம் ஆட்சியாண்டில் அருகூர் தச்சன் நாரணன் வேகந்தன் என்பான் கற்றளியாய் மாற்றியதை இங்குள்ள கல்வெட்டு குறிக்கிறது.

🌺பல்லவர் காலத்திய சப்தமாதர்கள்,  பிரம்மா, லிங்கம், விஷ்ணு அடங்கிய பலகை கல் சிற்பம்,இந்திரன் ,  சுப்பிரமணி, சண்டேசர், விநாயகர்கள்,  தவ்வை ஆகிய சிற்பங்களும், சோழர் காலத்திய துர்கை, தட்சிணாமூர்த்தி , முருகன்,பைரவர், சூரியன், பிக்ஷடனர், நாயன்மார்கள்,லிங்கோத்பவர், துவார பாலர்கள் சிற்பங்களும் உண்டு. கோயில் பெரியதாக திருச்சுற்று, மண்டபங்கள் என்று அமைக்கப்பட்டுள்ளது.

🌺இங்கு நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் பல்வேறு மன்னர்களின் காலத்தில் கொடுக்கப்பட்ட தானங்களின் விவரத்தை விவரிக்கிறது. அதில் மிக முக்கியமாக இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இங்கு திருப்பதிகம் பாட நியமிக்கப்பட்டு இருந்தவர்களில் 16 பேர் கண் பார்வை அற்றவர்கள் அவர்களுக்கு வழி காட்ட இரண்டு பேர் நியமிக்கப்பட்டு அவர்களை  "கண் காட்டுவர்" என்று அழைத்துள்ளமையை கல்வெட்டு சுட்டுகிறது. 

🌺மருந்தன் ஏழிசை மோகன் என்பவர் திருவீதி எடுத்துள்ளார்.அவர் பெயராலே அவ்வீதி அழைக்கப்பட்டுள்ளது.இவ்வூரில் இருந்த மடம் ஒன்றிக்கு பெண் ஒருவர் தலைமை பொறுப்பை வகித்துள்ளார்.

🌺நீலன் வெண்காடன் என்பவரின், இவ்விறைவனுக்கு செண்பக மலர்களால் மாலை அணிவிக்க ஸ்ரீ சோழ கேரளன் எனும் பெயரில் நந்தவனமும்,ஸ்ரீ மதுராந்தக தேவன் என்ற பெயரில் ஒரு நந்தவனமும், மந்திர புஷ்பம் செய்ய 5கழஞ்சு பொன்னையும், இவ்வூர் வைத்தியனுக்கு நிலமும் அளித்துள்ளான். 
சுப்பிரமணி பிள்ளையாருக்கு நெற்றிப்பட்டம், தோடு, ஆரம், காற்சாரி, கைச்சரி ஆகியவை கோப்பெருஞ் சிங்கனால்  வழங்கப்பட்டுள்ளது.

🌺விக்ரம பாண்டியன் தனது பெயரால் பராக்கிரம பாண்டிய சந்தி எனும் அறக்கட்டளை நிறுவி வழிபாட்டு செல வினத்திருக்கும் , தன பிறந்தநாளில் இறைவன் எழுந்தருள்வதற்கும் நிலம், கிராமம் ஆகியவற்றை கொடையாக வழங்கி உள்ளான்.

🌺யானை மீது வைத்து நடந்த ஸ்ரீபலி நின்று விட்டது அது பராந்தகன் மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டது.
ராஜராஜனின் பணிமகன் கொற்ற நங்கி என்பான் கைமணி, செகண்டை இசைக்க ஆட்களை நியமித்து, உவச்சர்களை நியமித்து ஒரு படி நெல்லும், வெள்ளியாலான தட்டு, பாத்திரம் தந்து ராஜகேசரி மரக்காலால் நெல்லை அளந்து உபரி நெல்லை நன்பகல் அக்காரவடிசல் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளான்.மேலும் ராஜராஜன் காலத்தில் குணசேகரன் என்பான் இக்கோயில் நடராஜருக்கு அபிஷேகம் செய்ய பொன்னால் ஆன பாத்திரம், வைரம், பச்சை நிற கற்களால் கைக்காறை செய்ய பொன்னும் அளித்துள்ளான்.

🌺அபிமான பூஷண தெரிஞ்ச கைக்கோளப்படையின் தண்ட நாயகம், இவ்வூரை சேர்ந்த  அரையன் பூமாங்கழல் என்பவர் தலைமை வகித்துள்ளார், இப்படை பிரிவினருக்கு சலுகைகள், உரிமைகள் அளிக்கப்பட்டு இருந்தது.

🌺நரசிங்கராயர் ஆட்சி காலத்தில் பெருமழை காரணமாக திருவாமாத்தூர் ஏரி உடைந்து கோயில் மண்டபம், மதில்,கோபுரம் ஆகியவை விழுந்து ஊரும் பாழ் பட்டது எனவே இவூரை சரி செய்ய இவ்வூரின் வரியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

🌺ஏரி நீரை திறப்பதற்கும் , நீரை வாய்க்கால் வழியாக கொண்டு வரவும், ஆற்றில் இருந்து ஏரிக்கு நீரை எடுத்து செல்ல கால்வாய் அமைக்கவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இக்கோயில் நிச்சயம் காண வேண்டிய தலங்களில் ஒன்றாகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது.

#ராஜராஜசோழன் சதய விழாவை முன்னிட்டு..... நந்தி மண்டபம் ***************************** தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே க...