#சங்கு_சக்கரம்_ஏந்திய #முருகப்பெருமான்:
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலமான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
#அழகாபுத்தூர்
#சங்கு_சக்கர_முருகன்:
சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்
ராமர் என்றால் வில்தான் நம் நினைவுக்கு வரும். முருகன் என்றால் நம் நினைவுக்கு வருவது வேல். அப்படிப்பட்ட முருகன் தன் கையில் வேலின்றி, சங்கு சக்கரத்துடன் ஒரு சந்நிதியில் அருள்பாலிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதுதானே!
கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.
அழகாபுத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில் (அரிசிற்கரைப்புத்தூர்) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்த்துணை நாயனார் அவதரித்ததும் முத்தி பெற்றதும் இத்தலத்திலேயே என்பது தொன்நம்பிக்கை.
கும்பகோணம் நாச்சியார்கோயில் பாதையில் திருநறையூருக்கு முன் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியும், கஜலட்சுமி சன்னதியும் உள்ளன. விநாயகர் சன்னதிக்கு முன்பாக மூஞ்சுறும், பலி பீடமும் உள்ளன. முருகன் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலி பீடமும் உள்ளன. முருகன் இங்கு சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடமும் நந்தியும் உள்ளன. இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விசாலாட்சி, விநாயகர், காசி விசுவநாதர், சுப்ரமணியர், புகழ்த்துணை நாயனார், லட்சுமி, மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றின் பின்புறத்தில் சொர்ண பைரவர், கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.
இக்கோயிலில் 5 செப்டம்பர் 1982 மற்றும் 27 ஏப்ரல் 2001இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
புகழ்த்துணை நாயனார் படிக்காசு மற்றும் முக்தி பெற்ற திருத்தலம். கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்த திருத்தலம்.
புகழ்த்துணை நாயனார் சந்நிதி உள்ளது.
உண்மையானந்த முனிவர் எனும் முனிவர் சந்நிதி உள்ளது.
திருமாலே சங்கு சக்கரம் போன்றவற்றைக் கையில் கொண்டிருப்பார். ஆனால் இக்கோயிலில் முருகனின் கையில் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
திருஞானசம்பந்தர் பாடிய அழகாபுத்தூர் தேவாரப் பாடல்:
"மின்னுஞ் சடைமேல் இளவெண்
திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய்
கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார்
அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
கரைமேற் புத்தூரே. மேவா அசுரர் மேவெயில்
வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா
லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன்
நாமம்ஓதி நாடோறும்
பூவால் நீராற் பூசுரர்
போற்றும் புத்தூரே.
திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment