Sunday, February 25, 2024

சில விநாடிகள் மட்டும் தரிசனம் தரும் அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி.

*சில விநாடிகள் மட்டும் தரிசனம்... வித்தியாசமான தோற்றத்தில் தட்சிணாமூர்த்தி.!*🌹
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் :

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் திருமாணிக்குழி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

கோயில் சிறப்பு :
தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பக்கிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது.

பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின்போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார்.

இறைவனும், இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான 'பீமருத்ரர்" திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன்பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில விநாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள்.

வாமனபுரீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில், வாமனபுரீஸ்வரர் கோவில் அருகே அகத்தியர் சுயம்புலிங்கக் கோவில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் உள்ள யுகலிங்கங்கள், கஜலட்சுமி, வடுகநாதர் நடராஜர் சப்தமாதர்கள், அறுபத்து மூவர் சன்னிதிகள் விசேஷமானவை. மேலும் கோயிலுக்கு எதிரில் உள்ள மலை செம்மலையாகக் காட்சியளிக்கிறது.

இத்தலத்தில் உள்ள மலையில் தீபம் ஏற்றும்போது இறைவனுடைய நெற்றிக்கண் ஒளிர்வது போலவே இருக்கும். இந்த மலைக்கு ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஒளஷதகிரி என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, நாகத்தை கையில் ஏந்திய நிலையில் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

கோயில் திருவிழா :

மகா சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீப தரிசனம் நடைபெறுகின்றது.

வேண்டுதல் :

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11 முறை சுற்றி வர வேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...