Sunday, February 25, 2024

ரவிகுல மாணிக்க ஈஸ்வரர் தாதாபுரம் விழுப்புரம் மாவட்டம்.



*மூலவர்: ரவிகுல மாணிக்க ஈஸ்வரர்
*அம்மன்: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்)
*தல விருட்சம்: வில்வம்
*புராண பெயர்: மணிக்கேஸ்வரம்
*ஊர்: தாதாபுரம்
*மாநிலம்: தமிழ்நாடு
*காலம்: 1000 ஆண்டுகளுக்கு மேல்
*அமைத்தவர்: குந்தவை நாச்சியார் 

விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்று இன்று அழைக்கப்படுகிற ஊர் அன்று வெண் குன்ற கோட்டத்து நல்லூர் நாட்டு நகரமான ராஜ ராஜபுரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் ராஜ ராஜனின் 19 ஆட்சியாண்டில் சுந்தர சோழனின் மகளான குந்தவையால் இக்கோயில் எடுப்பிக்கப்பட்டது. 

இக்கோயில் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இக்கோயிலைக் கட்டிய குந்தவை பிராட்டியாரின் நினைவாக அவரது சிலையும் இடம் பெற்றுள்ளது.

இக்கோயிலை அடிப்படையாகக் கொண்டே கீபி 1010 ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதாக மாணிக்க ஈஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலாகும்.

சோழ இளவரசி குந்தவை தன்தம்பிக்காக ஒரு கோயிலை எடுப்பித்து அதற்க்கு சூரிய குலத்தில் மாணிக்கம் போல் பிறந்தவன் என்ற பொருள் பட ரவி குல மாணிக்கஈஸ்வரம் என்று பெயரிட்டு பொன், மாணிக்கம், வைரம், வைடூரியம், ஆடுகள் என ஏகப்பட்ட நிவந்தங்கள் அளித்து இருக்கிறாள்.

குந்தவை நாச்சியார் தனது திருவுருவ சிலையையும் இக்கோயிலில் இடம்பெற செய்துள்ளார்.. இதற்கான சான்று இக்கோயின் தெற்கே உள்ள தேவா கோட்ட மாடத்து அருகே அழகிய மங்கை ஒருவரின் உருவச்சிலை உள்ளது .இது குந்தவை நாச்சியாரின் சிலை ஆகும் . இந்தத் திருக்கோயில் 1,000 ஆண்டுக்கால பழைமை வாய்ந்தது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று வழங்கப்பட்டாலும் இதன் வரலாற்றுக் காலப் பெயர் ‘ராஜராஜபுரம்’ என்பதாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

மற்ற கோயில்களில் தெய்வ சிற்பங்கள் அழகாக இருக்கும் ஆனால் இங்குள்ள துவார பாலர்கள் மிக மிக அழகாக சொல்ல வார்த்தைன்றி புன்முறுவலுடன் குழந்தை போன்ற முகத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களின் ஆடை, கழுத்தணி, கேயூரம், குண்டலம், பத்ர, மகர பூரிமம், ஆபரணங்கள், தலைக்கோலம், ஆயுதங்கள் ஆகியவை நேர்த்தியாக காண்பவர் கண்ணை கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. நேரில் பார்த்தால் பிரிய மனமே வராது.

கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் காணப்படுகின்றது. மூலவராக ரவிகுல மாணிக்க ஈஸ்வரரும், உற்சவராகக் காமாட்சி உடனுறை மாணிக்க ஈஸ்வரரும் காட்சி தருகின்றனர். கோயிலில் நுழைந்ததும் கோயிலின் முகப்பில் தாமரை வடிவில் பலிபீடம், கல்மேடை மீது அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குந்தவை நாச்சியாரின் கலைநயத்திற்குச் சான்றாக விளங்கும் நந்தி தேவர் இறைவனை நோக்கியபடி கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகின்றார். முக மண்டபம், மகா மண்டபத்தின் முன்புறமாக அமைந்துள்ளது.

முக மண்டபத்தின் கூரை உட்குவிந்த நிலையில் மடிப்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளது போலக் காணப்படுகின்றது. சதுர மகா மண்டபம் நான்கு தூண்களுடனும் அதற்கு அடுத்ததாக அர்த்த மண்டபமும் காணப்படுகின்றது.

ஆவுடையாரின் மீது அமைந்துள்ள சிவலிங்கமே மூலவரான மாணிக்க ஈஸ்வரராகும். இவர் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்க ஈஸ்வரரான சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திர கோடுகள் காணப்படுகின்றன.

தென் திசையை நோக்கியவாறு மாணிக்க வல்லி தாயார் நான்கு கைகளுடன் பக்தர்களுக்குக் காட்சி புரிகின்றார். கோயில் கருவறைக்குச் செல்லும் முன் துவார பாலகர்களும் காட்சி தருகின்றனர்.

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் கணபதி, தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர் போன்ற சுவாமி சிலைகள் குந்தவைப் பிராட்டியாரின் சிற்பக்கலைக்கு எடுத்த காட்டாக அமைந்துள்ளது.

கோயில் வளாகத்தினுள் இடது புறமாக விநாயகரும், முருகரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் ஒரு கால பூஜை மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

#கோயிலமைப்பு :

சிங்கமும், கஜமும் மூலைகளில் இருக்கும் உயரமான உபபீடத்தின் மீது கபோத பந்த அதிட்டானமாக அமைக்கப்பட்டு சாலைகளும், பத்திகளும் பத்ரமாக உள்ளது.சாலைக்கும், பத்திக்கும் இடையே நிஷ்கிராந்த பஞ்சரங்கள் அமைக்கப்பட்டு அழகாய் காட்சியளிக்கிறது. இரு தள விமானம் இப்போதைய காலத்தியதாக உள்ளது. தேவகோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, எண் கரங்களோடு துர்கை, நிருத்த விநாயகர் மற்றும் தெற்கு பக்க சுவற்றில் ரிஷபாந்தகர் சிற்பமும் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம்,முக மண்டபம், மஹா மண்டபம் என பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது.
வெளிச்சுற்றில் விநாயகர்,முருகன், அம்மனுக்கு தனி சன்னதியும், ஷேத்ரபாலர் மற்றும் ஒரு சூர்யன் சிற்பமும் உண்டு. வின்னப்பட்ட தவ்வை, சண்டீஸ்வரர், வராஹி, பிராமி, கௌமாரி, இந்திராணி போன்ற சப்த மாதர் சிற்பங்களும் இருக்கிறது.

#கல்வெட்டுகள் :

முதலாம் ராஜராஜனின் 19ம் ஆட்சியாண்டில் நந்தா விளக்கிற்கு 90 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 21ம் ஆட்சியாண்டில் குந்தவை எடுப்பித்த இக்கோயில், குந்தவை விண்ணகரம், குந்தவை ஜிநாலயம் முதலியவற்றிக்கு கொடுத்த  ஆபரணங்கள், பரிகலன்கள் பற்றி குறிப்பிடுகிறது. 25ம் ஆட்சியாண்டில் நந்தாவிளக்கு எரிக்க கொடையை பற்றி குறிப்பிடுகிறது.

முதலாம் ராஜேந்திரனின் 4ம் ஆட்சியாண்டில்,இருபத்தி ஒன்பது பேர்  இவ்விறைவனுக்கு பத்து நந்தா விளக்கு இரு நாழி  எரிக்க கொடை அளித்துள்ளனர். 

கோமுகத்தின் கீழ் உள்ள 1888 வருட கல்வெட்டு இக்கோயில் செப்பனிடப்பட்ட தகவலை தருகிறது.

மூலவரான லிங்கத்திருமேனியின் மீது பிரம்ம சூத்திரக்கோடுகள் காணப்படுகின்றன. ஆகவே, இந்தத் தல இறைவனை வணங்கி வழிபட்டால் சகல ஞானங்களும் ஸித்திக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பில் கலந்துகொண்டால், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மாதம் தோறும் பிரதோஷ வழிபாடு, ஆண்டுதோறும் காணும் பொங்கல் என்று மாணிக்க வல்லி தாயாரும், சுவாமியும் வீதி உலா செல்கின்றனர். பௌர்ணமி, ஆடிக் கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி மற்றும் மாதம் தோறும் பௌர்ணமி வழிபாடு இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...