Wednesday, February 21, 2024

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் சொல்லை மீறி நடந்து கொண்டதால், அவருக்கு கண் பார்வை இழந்ததாக புராணம் கூறுகிறது.

#சிவபெருமானிடம் சத்தியத்தை மீறிச் சென்ற 
#சுந்தரமூர்த்தி_நாயனார் கண் பார்வையை இழந்து
#திருக்கச்சி_ஏகம்பம் என்ற 
#காஞ்சிபுரத்தில் தேவாரப் பதிகம் பாடி
#இடக்கண்_ஒளி_பெற்ற_ஐதீக_விழா‌ இன்று: 
கைலாயத்தில் பார்வதிதேவிக்கு தொண்டு செய்த அனிந்திதை, பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்று மகிழமரத்தின் சாட்சியாக சத்தியம் செய்து கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால் கண் பார்வையை இழந்தார்.

பார்வையில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந்த சுந்தரருக்கு திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
#விழாவின்_வரலாறு: சுந்தரரால் கச்சி ஏகம்பத்தில் அரங்கேறிய 'ஆலந்தான் உகந்து' என்ற பதிகம் பாடப்பட்ட நாள்.

சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியார் பொருட்டுச் செய்த சூளுறவைப் பிழைத்துத்  திருவாரூருக்குச் செல்லப் புறப்பட்டு்த் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தபொழுது மறைந்த கண்களைத் தரவேண்டிப் பல தலங்களிலும் வணங்கிப் பாடி, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, "கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணளித் தருளாய்' என்று வேண்டிப் பெருமான், இடக்கண் கொடுக்கப்பெற்று மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். 288)

#சுந்தரமூர்த்தி நாயனார் #இடக்கண் பெற #திருக்கச்சி_ஏகம்பம் என்ற காஞ்சிபுரத்தில் 
பாடிய தேவாரப் பதிகம்:

பாடல்: 1
"ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை,
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

பொருள்:

நஞ்சினைத் தான் விரும்பி உண்டு, அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும், யாவர்க்கும், முதல்வனும், தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும், தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும், மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை,

பாடல் : 2

"உற்றவர்க்கு உதவும் பெருமானை, ஊர்வது ஒன்று உடையான், உம்பர் கோனை,
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

பொருள்:

தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர்கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக்கோடாய் நிற்பவனும், தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய, 'உமை' என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற, கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!

கு-ரை: 'வியப்பு' என்பது சொல்லெச்சம், இவ்விடத்து, சேக்கிழார், "விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெருவிடம் உண்ட - கண்ணாளா" (தி. 12 ஏயர்கோன். புரா. 286) என்று அருளுதலின், "ஆலந் தான் உகந்து அமுதுசெய்தானை" என்றதற்கு இதுவே, பொருளாதல் அறிக. 'சீலம்' என்பது, குணம் என்னும் பொருட்டாய், பெருமையைக் குறித்தது. திருவேகம்பத்தில் உள்ள உமையம்மைக்கு, 'ஏவலார் குழலி' எனப் பெயர் வழங்குதல் இங்கு நினைக்கத் தக்கது. 'என்றும் வழிபட' என இயையும்; இனி வரும் திருப்பாடல்களிலும் அவ்வாறு இயைவனவற்றை அறிந்துகொள்க. கச்சி ஏகம்பம், உமையம்மை இறைவனை என்றும் வழிபடும் தலமாய் இருத்தலை, திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துட் காண்க. "வழிபடப் பெற்ற" என்றது. "எடுத்த பொற் பாதமுங் காணப் பெற்றால்" (தி. 4 ப 81. பா 4) என்றதுபோல நின்றது. 'வழிபடப்பெற்ற காலகாலன்' என்றதனை, 'அந்தணர் ஆக்கொண்ட அரசன்' என்பதுபோலக் கொள்க.

பாடல்: 3

"திரியும் முப்புரம் தீப்பிழம்பு ஆகச் செங்கண் மால் விடைமேல்-திகழ்வானை,
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக் கனலா விழித்தானை,
வரி கொள் வெள்வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள் பிரானை, காணக் கண் அடியேன் பெற்ற ஆறே! .

பொருள்: 

வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து, அக்காலை, சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும், யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும், மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும், வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய, 'உமை' என்னும் நங்கை அணுகி நின்று, துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு.

#புராணம்: 

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் சொல்லை மீறி நடந்து கொண்டதால், அவருக்கு கண் பார்வை இழந்ததாக புராணம் கூறுகிறது. அதனால் அவர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பெருமானை வணங்கி, 'ஆலந்தான் உகந்து' என்ற பதிகம் படி இடக்கண் பெற்றார். அந்த விழா ஆண்டுதோறும் மாசி மாதம் திருவாதிரை  நட்சத்திரத்தில் கச்சி ஏகம்பத்தில் நடைபெறும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...