Friday, March 1, 2024

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,திருக்கொண்டீஸ்வரம் சன்ன நல்லூர், நன்னிலம் தாலுக்கா,திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கொண்டீஸ்வரம், அஞ்சல்:610105.
வழி சன்ன நல்லூர், 
நன்னிலம் தாலுக்கா,
திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்: ஸ்ரீ பசுபதீஸ்வரர்

*அம்பாள்: ஸ்ரீசாந்தநாயகி

*தீர்த்தம்: 
க்ஷீரா புஷ்கரணி

*தல விருட்சம்  வில்வம் மரம்.

*பாடல் பெற்றதலம்: தேவாரப் பதிகம் பாடி அருளியவர் திருநாவுக்கரசர். 

*திருக்கொண்டீச்சரம் என்ற புராணப்பெயர் கொண்ட இத்தலம்  தற்போது  திருக்கண்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.          
"கொண்டீச்சரம்"-
"கொண்டி" என்றால் அடங்காத பசு என்று பொருள்.
 
*இத்திருத்தலம் காமதேனு வழிபட்ட தலம்.

*ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபித்தார் ஈசன். பகவானால் காமதேனுவாக சாபம் பெற்ற உமாதேவி இத்தலத்தில் பூமியை கொம்பினால் கிளறிக்கொண்டே வந்தபோது,  பூமியில் லிங்கவடிவில் புதையுண்டிருந்த இறைவனின் தலையில் கொம்பு பட்டு இரத்தம் வடிந்தது. காமதேனு (உமாதேவி) ஈசனின் சிவலிங்கத் திருமேனியை பாலால் அபிஷேகம் செய்து காயத்தை ஆறச்செய்து சாப விமோசனம் பெற்றாள். இதன் காரணமாக இன்றும்சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது.     இறைவனும் பசுபதீஸ்வரர் எனப்போற்றப்
படுகிறார்.  

*கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். 

*இத்தலத்தில் சிவபெருமானையும் அம்மனையும் வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவர். 
 
*அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் வடிவில் வந்து அவரை குணப்படுத்தினார். 

*அர்த்தமண்டபத்தில்  ஒரு தூணில் மூன்று திருவடிகளுடன் ஜுரஹரேஸ்வரர் உருவம் உள்ளது. 

*கடும் காய்ச்சலால் அவதிப்படும் பக்தர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வெந்நீரில் அபிஷேகம் செய்து, மிளகு ரசம் மற்றும் அன்னத்தை பிரசாதமாகப் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகிறது.  

*பிரகாரத்தில் வடமேற்கு திசையில் "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். ஜேஷ்டாதேவி என்றால் மூத்ததேவி  என்று அர்த்தம். 

*திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காணப்படும்  ஜேஷ்டாதேவி, ஸ்ரீதேவியான (சீதேவி) லட்சுமியின் சகோதரியாவாள். மூதேவி (மூத்ததேவி) என்றும் சொல்லப்படுவாள். இவளை யாரும் தரிசிப்பதில்லை. 

*ஆனால், இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.    சோம்பல் இல்லாத சுறுசுறுப்பான வாழ்வைத் தர வேண்டும் என இவளிடம் பிரார்த்திக்க வேண்டும். 
*இவளை வழிபடுவதன் மூலம், பக்தர்கள் திருமண வரம், குழந்தை வரம் மற்றும்  பில்லி, சூன்யம்  ஏவல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள்.       

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொண்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம்.

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...