புண்ணிய நதியில் நீராடினால் பாவம் நீங்கிப் புண்ணியமடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான் பக்தர்கள் பலரும் தீர்த்த யாத்திரை செல்கின்றனர். புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடத்தை நதிகளின் சங்கமம் என்று கூறுவர். ஒரு புண்ணிய நதியில் நீராடுவதைவிட நதிகள் சங்கமமாகும் இடத்தில் நீராடுவதால் மிகுந்த புண்ணியம் உண்டாகும் என்று பக்தி நூல்கள் கூறுகின்றன.
அதனால்தான் அலகாபாத் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமமாகும் திரிவேணி சங்கமத்தில் புனித நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி உய்வடைகின்றனர். தமிழ்நாட்டில், ஆண்டாள் அவதாரம் செய்த ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் ஒன்றுகூடும் ஒரு திரிவேணி சங்கமம் உள்ளது. இந்த மூன்று நதிகளும் எதனால் ஒன்றுகூடின என்பதற்கு ஒரு கதை உள்ளது.
முன்னொரு காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை வரை ஒரே காடாக இருந்தது. அந்தக் காட்டில் செண்பகாசுரன் என்ற அசுரன் வாழ்ந்திருந்தான். அந்த இடம் இன்று “செண்பகத் தோப்பு’’ என்று வழங்கப்படுகிறது. தவத்தினால் இறைவனிடம் பல வரங்களைப் பெற்ற அசுரன், அகந்தையினால் பக்தர்களையும், முனிவர்களையும், சாதுக்களையும் கொடுமைப்படுத்தினான். அவர்கள் திருமாலிடம் முறையிட்டார்கள். திருமால் அவர்கள் துயரத்தைத் தீர்க்கத் தன் கையிலுள்ள சுதர்சனம் என்னும் சக்கரத்தைச் செண்பகாசுரன் மீது ஏவினார். சக்கரம் அவன் தலையை அறுத்துக் கொன்றுவிட்டது.
செண்பகாசுரன் கொடியவனாக இருந்தாலும் தவம் செய்தவனாகையால் அவனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம், சுதர்சன சக்கரத்தைப் பற்றிக் கொண்டது. அதனால், ஒளியும் வலிமையும் இழந்துவிட்ட சக்கரம், தனக்கு நேர்ந்த பாவத்தைத் தீர்த்துப் பழையபடியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று திருமாலிடம் முறையிட்டது. திருமால், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளையும் அழைத்து சக்கரத்தாழ்வானின் பாவத்தைப் போக்க அந்த வனத்திற்கே வர வேண்டுமென்று ஆணையிட்டார். அதற்கு அந்த நதிகள், `பரந்தாமா, உங்கள் ஆணையை ஏற்று வானிலிருந்து பூலோகத்திற்கு வருகிறோம். ஆனால் நாங்கள் தினமும் பக்தியுடன் தங்களைப் பூஜிக்கத் தாங்கள் வைகுண்டத்தில் உள்ள கோலத்துடன் எங்கள் அருகே எழுந்தருள வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டன. திருமாலும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
மூன்று நதிகளும் ஒன்றாக வானிலிருந்து வந்த சக்கரத்தை நீராட்டி அதன் பாவத்தைப் போக்கிய பின்பு, சக்கரம் திருமாலின் வலது கரத்தில் வந்து சேர்ந்தது. மூன்று நதிகளும் இன்றைய வில்லிபுத்தூரிலே மேற்கில் தடாகமாக நிறைந்தன. மூன்று நதிகளும் தடாகமாக நிரம்பியதால், முக்குளம் என்றும் திரு என்ற அடைமொழியுடன் `திருமுக்குளம்’ என்று பெயர் பெற்று விளங்குகிறது.
மூன்று நதிகளும் வேண்டிக் கொண்டவாறே திருமால் வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் தோற்றத்தில் திருமுக்குளத்திற்குக் கிழக்கில் யாரும் நுழையமுடியாத அடர்ந்த காட்டில் “வடபத்ரசாயி’’ என்ற பெயருடன் எழுந்தருளினார். அதனால், பல ஆண்டுகள் திருமால் அங்கெழுந்தருளியிருப்பது தம்மைப் பூஜிக்கும் மூன்று நதிகளைத் தவிர யாருக்கும் தெரியாமலிருந்தது. திருமால் தாம் எழுந்தருளியிருப்பதை மக்கள் பலரும் அறிந்து தம்மை வணங்கி உய்வடைய வேண்டுமென்று விரும்பினார்.
அது சமயம் வில்லி, கண்டன் என்னும் வேடுவச் சகோதரர்கள் காட்டில் புலி வேட்டையாட வந்தனர். இருவரும் வேறு வேறு திசைகளில் சென்றபோது கண்டன் என்பவனைப் புலி கொன்றுவிட்டது. தம்பியைத் தேடி வந்த வில்லி, அவனைக் காணாமல் கவலையுடன் ஒரு மரத்தின் அடியில் படுத்து உறங்கிவிட்டான். வட பத்ரசாயி வில்லியின் கனவில் தோன்றி உன் தம்பியைப் பற்றிக் கவலைப்படாதே, நீ படுத்துறங்கும் இடத்திற்குச் சிறிது தூரத்தில் நான் வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருப்பது போல் எழுந்தருளி இருக்கிறேன்.
பெரும் காட்டிற்கு நடுவில் நான் இருப்பதால் மூன்று நதிகளைத் தவிர நான் இருக்கும் இடம் வேறு யாருக்கும் தெரியாது. நீ இந்தக் காட்டை அழித்து அழகான நகரமாக உருவாக்க வேண்டும். நான் பள்ளிகொண்டிருக்கும் இடத்தில் அழகான கோயில் கட்டிப் பக்தர்கள் வணங்குவதற்கும் பூஜை செய்வதற்கும் தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.இதற்குத் தேவையான ஏராளமான பொருள் நீ படுத்திருக்கும் மரத்தின் அடியில் புதையலாக உள்ளது. இதை நீ நிறைவேற்றினால் இந்நகரம் ஒப்பற்ற புனிதத்தலமாக விளங்கும். உனக்கு இம்மையில் அழியாத புகழும் மறுமையில் உயர்ந்த பதவியும் கிடைக்கும் என்று கூறினார்.
வில்லியும், பெருமாள் கூறியதுபோல அழகான மணி மாடங்களும் ரதவீதிகளும் உடைய நகரைப் பாடுபட்டு உருவாக்கினார். அழகான கோயில் கட்டி அதில் வடபத்ரசாயி பெருமாளை எழுந்தருளச் செய்தார். காடாக இருந்த இடம் புதிய நகரமாக உருவாக்கப்பட்டதால் “புத்தூர்’’ என்றும் “வில்லி’’ என்பவரால் உருவாக்கப்பட்டதால், “வில்லிபுத்தூர்’’ என்று இது பெயர் பெற்றது. ஆண்டாள் அவதாரத்திற்குப் பிறகு “ஸ்ரீ ’’ என்ற அடைமொழியுடன் “ஸ்ரீ வில்லிபுத்தூர்’’ என்றும் பெயருண்டாயிற்று. இந்த தலத்தில், அந்தணர்களில் வேயர் குலத்தைச் சேர்ந்த விஷ்ணுசித்தர் என்பவர், வடபத்ரசாயி கோயிலில் நந்தவனம் அமைத்து பூக்களை தொடுத்து மாலையாக வடபெருங்கோயிலுடையானுக்கு அணிவித்துவரும் திருத்தொண்டு செய்துவந்தார். இவரே பெரியாழ்வார் என்றும் போற்றப்படுகிறார்.
ஒருநாள், வடபத்ரசாயி கோயில் நந்தவனத்தில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில், துளசிச் செடியின் அடியில் பூமி தேவியின் அம்சமாக அழகான பெண் குழந்தையைக் கண்டு, பெரியாழ்வார் அத்தெய்வீகக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் வளர்த்து, பக்தி உணர்வை ஊட்டினார். கோதை என்று பெயர் சூட்டினார். அக்குழந்தை, அரங்கனுக்கு அணிவிக்க வேண்டிய மாலையை, தான் அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். அதைக் கண்டு கோபித்த பெரியாழ்வாரின் கனவில், அரங்கன் தோன்றி, `உன் மகள் சூடிக் கொடுத்த மாலையையே எனக்கு அணிவிக்க வேண்டும்’ என்று கூறினார். அரங்கனையே ஆட்கொண்டதால், `ஆண்டாள்’ என்றும், `சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்றும் கோதைக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.
அரங்கன் மேல் ஆண்டாள் கொண்டுள்ள பக்தி, காதலாக மலர்ந்து வளர்ந்தது. அதனால், மானிடர் யாரையும் மணக்கமாட்டேன், அரங்கனையே மணப்பேன் என்று உறுதிகொண்டாள். ஆண்டாளின் பக்திக் காதலை ஏற்ற அரங்கன், ஆண்டாளைத் திருவரங்கத்திற்கு அழைத்து வரச் செய்து, தம் அருகில் துணைவியாக ஏற்றுக் கொண்டார். இதனால், நூற்றுஎட்டு வைணவத் திருப்பதிகளில், வில்லிபுத்தூர் தனிப்பெருமை பெற்றது.
பன்னிரண்டாழ்வார்களில், அரங்கனை மருமகனாகப் பெற்ற பெரியாழ்வார் பிறந்த பெருமை என்ன சாமான்யமானதா?இத்தலத்தில் உள்ள ராஜகோபுரம், பெரியாழ்வாரின் சீடர் வல்லப தேவ பாண்டியனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கோபுரங்களில், உயரமான கோபுரம் என்ற பெருமையைப் பெற்றிருந்ததால், தமிழக அரசு இக்கோயிலின் கோபுரத்தையே அரசின் சின்னமாக வைத்துள்ளது. திருமுக்குளம் குளக்கரை மண்டபத்தில்தான் ஆண்டாளின் நீராட்ட உற்சவம் பிரதி வருடம் மார்கழி மாதத்தில் நடைபெறும். எனவே ஸ்ரீ வில்லிபுத்தூரில் தினம் தினம் திரிவேணி சங்கமம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment