Wednesday, March 20, 2024

முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர்.

63 நாயன்மார்களில் ஒருவரான, போர்த்தொழில் செய்து அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு சிவனடியார்களுக்கு பல சிவத் தொண்டுகள் புரிந்த வேளாளரான
#முனையடுவார்_நாயனார்
முக்தி நாள் (குருபூஜை):
(#பங்குனி_பூசம்)
முனையடுவார் நாயனார் போரிட்ட வருவாயால் சிவனடியார்களுக்கும் சிவாலயங்களுக்கும் தொண்டுகள் செய்த‌ வேளாளர். 
முனையடுவார் நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். சிவபெருமான் மீது தீராத பக்தியை உடைய முனையடுவார் நாயனார் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று அதனால் பெற்ற வருவாயால் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்களுக்கும் பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்தார்.
முனையடுவார் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் "அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்" என்று போற்றுகிறார்.

#முனையடுவார் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது:

முனையடுவார் நாயனார் பண்டைய சோழவள நாட்டில் உள்ள சிவதலங்களில் ஒன்றான திருநீடுர் ஸ்தலத்தில் வேளாள குலத்தில் அவதரித்தவர். (திருநீடூர் தற்போது மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது)
பண்டைய காலத்தில் வீரத்தில் சிறந்தவர்கள் தம்மோடு பல வீரர்களையும் சேர்த்துக் கொண்டு சிறு அணி ஒன்று அமைத்து கொண்டு, மன்னர்களுக்கிடையே போர் நடக்கும் சமயத்தில், அவர்களுள் எவரேனும் இவர்களின் உதவியை வேண்டினால், அம்மன்னனுடன் சேர்ந்து போர் புரிந்து உதவியை நாடியவருக்கு வெற்றி கிடைக்கும்படி செய்வர். போரில் வென்ற மன்னனும் தனக்கு உதவிய படையுடைய வீரருக்குப் பல பரிசுகளையும் பொன்னையும் பொருளையும் வழங்கி பெருமை படுத்துவார்கள்.
வீரத்திலும் விவேகத்திலும் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு வீர அணி ஒன்றை அமைத்து வைத்துக்கொண்டு இருந்தார். தங்களை நாடி வரும் மன்னருக்கு உதவியாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை வெற்றியைத் தேடித் தருவார்.
பல போர்முனையில் எதிரிகளை வென்றதனால் இவர் முனையடுவார் எனப் பெயர் பெற்றார். ("முனை அடுதல்" என்றால் போர் முனையில் நின்று எதிர் தரப்பை வெற்றி கொள்வது)
இதனால் இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார்.

கடையேழு வள்ளல்களுள் ஒருவராக வைக்கப்பட்ட மலையமான் திருமுடி காரி இத்தகைய படையைக் கொண்டிருந்த பெரும்வீரன்.

ம‌லையமான் திருமுடி காரி எந்த அரசனுக்கு துணையாக நின்று போர் புரிகிறானோ, அம்மன்னன் உறுதியாக போரில் வெற்றி பெறுவான் என்ற எண்ணம் அக்கால மக்களிடத்தில் நிலவியது.

சங்க நூல்களில் பாண்டியனுக்கு உதவிய பெரும்படை வீரன் பாண்டியன் மறவன் என்றும், சோழனுக்கு உதவிய பெரும்படை வீரன் சோழ மறவன் என்றும் குறிப்பிடப்படுகின்றனர்.

வீரத்தில் சிறந்த முனையடுவார் நாயனாரும் தம்முடன் பல வீரர்களைச் சேர்த்துக் கொண்டு பெரும்படை வீரராகத் திகழ்ந்தார்.

தம் உதவியை நாடிவரும் மன்னனின் சார்பாகப் போர் புரிந்து அம்மன்னனுக்கு பெரும் வெற்றியை ஈட்டி தந்தார்.

மன்னர்களும் பெரும்படை வீரரான முனையடுவாருக்கு பொன்னையும் பொருளையும் பரிசில்களையும் வழங்கினர்.

பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், முனையடுவார் சிவனாரிடத்தும் சிவனடியவர்களிடத்தும் பேரன்பினைக் கொண்டிருந்தார்.

ஆதலால் போர் தொழிலால் கிடைத்த பொருட்கள் முழுவதையும் சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிவதற்கும், சிவாலயங்களுக்கு தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார்.

சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உண்டியளித்து, அவர்கள் வேண்டுபவற்றை முகம் காணாது வழங்கி திருதொண்டு புரிந்தார்.

போர்முனையில் எதிரிகளை அடுவதைத் தொழிலாக கொண்டிருந்ததால், இவரின் இயற்பெயர் மறைந்து முனையடுவார் என்று அழைக்கப்பட்டார். இதில் முனை என்பது போர் முனையைக் குறிக்கும்.

போரிட்டு வந்த ஊதியத்தால் சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார் நாயனார், 63 நாயன்மார்களில் ஒருவராக வைக்கப்படும் சிறப்பினைப் பெற்றார்.

#முனையடுவார் நாயனார் செய்த திருத்தொண்டு:

முனையடுவார் நாயனார் பல உயிர்களைக் கொல்லும் கொடிய தொழிலான போர்த்தொழிலைச் செய்தாலும், சிவபெருமானிடத்திலும், சிவனடியார்களிடத்தே மிகுந்த பக்தியுடன் இருந்தார். பகைவர்களைப் போர்முனையில் வென்று தமக்குக் கிட்டிய செல்வங்கள், பொருட்கள் முழுவதையும் சிவன் கோயில் திருப்பணிக்கும், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டுகள் புரிவதற்கும் பயன்படுத்தினார். திருநீடுர்ப் பெருமான் பேரருளால் பொன்னும் பொருளும் புகழும் சேர்ந்தது. முனையடுவார் நாயனார் சிவனடியார்களை வரவேற்று அறுசுவை உணவளித்து, அவர்கள் வேண்டிய அனைத்தையும் வழங்கி பல்லாண்டு காலம் பூமியில் வாழ்ந்து இறுதியில் சிவபெருமான்
திருவருளால் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார்.

குருபூஜை நாள்:

போர்த்தொழிலினால் வந்த வருவாயைக் கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டுகள் செய்த முனையடுவார்
நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தில்
அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் நீடூர் அ/மி. அருட்சோமநாதேசுவரர் திருக்கோயிலில் (மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து வருவோர், திருப்பனந்தாள் சாலையில், பட்டவர்த்தி என்னும் ஊரை வந்து, இடப்புறமாகத் திரும்பி, மயிலாடுதுறை சாலையில் சென்று நீடூரை அடையலாம்) சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இங்கு முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

முனையடுவார் நாயனாரை சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் ‘அறைகொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்‘ என்று போற்றுகிறார்.

முனையடுவார் நாயனார் அவதார முக்தி தலமான #திருநீடூர்
#அருட்சோமநாதர்
#வேயுறு_தோளியம்மை
 திருக்கோயில் வரலாறு:

சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.

இத்தலத்தின் இறைவன் சோமநாதர், இறைவி வேயுறுதோளியம்மை. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. தலவிருட்டமாக மகிழம் மரமும், தீர்த்தமாக நவ தீர்த்தங்களும் உள்ளன.

முனையடுவார் நாயனார் அவதாரத்தலமிது.

*இறைவர் திருப்பெயர்:   

அருட்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர்,  கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர்.  

*இறைவியார் திருப்பெயர்: ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி,     வேயுறுதோளியம்மை.  

தல மரம்:   மகிழ மரம் 

தீர்த்தம் : சந்திர புட்கரணி, இந்திர தீர்த்தம், செங்கழு நீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம்,     வருண தீர்த்தம் ஆகியன.  

வழிபட்டோர்:

சம்பந்தர், அப்பர், சுந்தரர்,  நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், இந்திரன், சூரியன்

#அப்பர் சுவாமிகள் பாடிய திருநீடூர் தேவாரப் பாடல்:

"பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்
 பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத்
 தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் 
 திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை
 நீதனே னென்னேநான் நினையா வாறே.
__அப்பர் சுவாமிகள் 

*சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருநீடூர் தேவாரப்பதிகம்:

"அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கு அமுதாயிடுவானைக் கொல்லை வல்லரவம் அசைத்தானைக் கோல மார்கரி யின்உரி யானை நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை நானும் காதல் செய்கின்ற பிரானை எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.

–சுந்தரர்  

புராண வரலாறு:

ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் இலிங்கத்தைத் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, காவிரி ஆற்றின் மணலை அள்ளி, இலிங்கமாகப் பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு “கானநர்த்தன சங்கரன்” என்றும் பெயர் உண்டு. “பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்” என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன், இலிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இலிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.

தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், இத்தலத்தில் சிவனை வழிபட, விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, சிவனை வழிபட்டான்.

சிவன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவன் தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக, இலிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், இலிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் இலிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு “கற்கடக பூஜை” நடக்கிறது. ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு, “ஆதித்ய அபயவராதம்பிகை” என்றும் பெயர் உண்டு. இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

எந்த செயலையும் செய்யும் முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு, பின்பு பெரியவர்களின் ஆலோசனையையும், அனுபவங்களையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர்.
புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர். சாலைக்கு சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. முகப்பு வாயில் மேலே ரிஷபாரூடர் சிற்பம் வண்ணச் சுதையில் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழ மரம் உள்ளது. நேரே அம்பாள் சன்னிதி. துவார வினாயகராக சிவலோக கணபதி உள்ளார். அவரை வணங்கிக் கடந்து நேரே சென்றால் மூலவர் சன்னிதி. பிரகாரத்தில் இடப்பால் மூன்று கணபதிகள் உள்ளனர். சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி மற்றும் சீவானந்த கணபதி. சப்தமாதாக்களும், சின்மயானந்த கணபதியும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்து உள்ளனர் . அடுத்து மூன்று லிங்கத் திருமேனிகள். சிவலோகநாதர், கயிலாயநாதர் மற்றும் காசி விஸ்வநாதர்.
அடுத்து மஹாலக்குமி சன்னிதி உள்ளது. நடராஜ சபையும் உள்ளது. மூலவர் வெண்ணிறத் திருமேனி. கோஷ்டத்தில் நர்த்தன வினாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா மற்றும் துர்கை உள்ளனர். சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது. முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.

தல புராணம்:

ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது நீடித்திருக்குமாதலின் இஃது 'நீடூர் ' என்று பெயர் பெற்றதென்பர். தலமரம் மகிழமாதலின் மகிழவனம், மகிழாரண்யம், வகுளாரண்யம் எனவும் இத்தலத்திற்கு பெயர்களுண்டு. கிருத யுகத்தில் இந்திரனும், திரேதா யுகத்தில் சூரியனும், துவாபர யுகத்தில் பத்திரகாளியும், கலியுகத்தில் நண்டும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

இந்திரன் காவிரி மணலைப் பிடித்து வைத்துப் பூசித்த லிங்கம் - இதுவே இறுகி வெள்ளையாக மாறியது. பின்னால் நண்டு பூசித்ததும்; அதன் கால் சுவடு இலிங்கத்தில் பதிந்துள்ளது. வழிபட்ட இந்திரனுக்கு அம்பாள் அருள் புரிந்ததாகத் தலவரலாறு சொல்லப்படுகிறது.

இந்திரன் காவிரி மணலால் இலிங்கத் திருமேனி எடுத்து மந்திர விதிமுறைகளோடு வழிபடவும் மார்கழித் திருவாதிரை நாளில் இறைவனார் பாடியாடும் பரமனாக வெளிப்பட்டு இந்திரன் முதலான தேவர்களுக்கு அருள் பாலிக்கவே கோடித் தேவர்கள் கும்பிடும் நீடூர் என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.

திருநாவுக்கரசரால் திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமியுடன் இணைத்துப் போற்றிப் பரவப்பட்டது. மேலும் பொதுத் திருத்தாண்டகத்திலும், திருப்புறம்பயம், திருப்பள்ளியின்முக்கூடல் திருத்தாண்டகங்களிலும் போற்றப்பட்ட பெருமைக்குறியது. திருஞானசம்பந்தர் திருநின்றியூரிலிருந்து திருப்புன்கூர் செல்லும் வழியில் "நாடு சீர் நீடூர் வணங்கி"ச் சென்ற வரலாறு சேக்கிழார் பெருந்தகையரால் குறிக்கப்பட்டுள்ளது.

தன் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஈசன் அடியார்கட்கு உதவியும் பல்சுவை விருந்தளித்தும் மன்னும் அன்பின் நெறிபிறழா வழித்தொண்டாற்றிய முனையடுவார் நாயனாரின் அவதாரத் தலம்; அவர் தொண்டு செய்து முத்தி பெற்ற தலம்.

முனையடுவார் நாயனாரின் கைகூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநின்றியூர் இறைவரை வணங்கி புகழ் நீடூர் பணியாது திருப்புன்கூர் இறைவரை பணிந்திறைஞ்ச செல்லும்போது, மெய்யுணர்வு ஓங்கவே, நீடூர் இறைவரை வந்துப் பாடிப் பணிந்து தங்கிப் பின் திருப்புன்கூர் சென்ற வரலாற்றை சேக்கிழார் பதிவு செய்துள்ள வண்ணம் எண்ணி மகிழத்தக்கது.

வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தல புராணம் 14 சருக்கம், 400 பாக்களைக் கொண்டுள்ளது; மிக அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராசராஜன், மூன்றாம் இராசராஜன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.
முதற்குலோத்துங்கன் காலக் கல்வெட்டுப் பாடலால் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள உமையொடு நிலாவின பெருமானுக்கு மிழலை நாட்டு வேள்கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்திப் பெறப்படுகிறது. 3-வது இராசாதிராசன் காலத்திய கல்வெட்டில் இவ்வூர் ராஜசிகாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப்படுகின்றன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆலாலசுந்தரர், மாணிக்கவாசகர், சூரியன், சிவலோக கணபதி, சந்திரன், கால பைரவர் உள்ளனர். ஆண்ட கணபதி, சிவகுருமூர்த்தி, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி, சின்யமாயனந்த கணபதி, முருகன், சிவலோக நாதர், கைலாசநாதர், காசிவிசுவநாதர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.

அமைவிடம்

இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு 
மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் உள்ளது. மயிலாடுதுறை - நீடூர் பேருந்து வசதி உள்ளது.
 என். கல்யாணசுந்தரக் குருக்கள், 
 அ/மி. அருட்சோமநாதேசுவரர் திருக்கோயில், 
 நீடூர் - 609 203.
 மயிலாடுதுறை வட்டம்.

"திருச்சிற்றம்பலம்"

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...