Tuesday, March 26, 2024

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலுக்குள் திவ்ய உலா வந்தவர் மஹா பெரியவர். கங்கை கொண்டான் மண்டபத்தில் ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் சார்பாக வானமாமலை, அஹோபிலம், காஞ்சி காமகோடி பீடம் ஆகிய மூன்று மடங்களின் பீடாதிபதிகளுக்கு மட்டும் சடாரி மரியாதை உண்டு. அந்த வகையில் மஹா பெரியவருக்குப் பரிவட்டம் கட்டி சடாரி சாற்றியுள்ளனர்.

108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஐந்து திவ்யதேச பெருமாள்களை ஒரே இடத்தில் தரிசிக்கும்படியாக அமைந்துள்ளது.
🙏🏾#ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தரிசித்து, பாடல் பெற்ற தலங்களை மங்களாசாசனம் செய்தவை என சிறப்பித்து வழங்குதல் சம்பிரதாயம். அப்படி பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.

திருமங்கை ஆழ்வார் பாசுரத்தின் இறுதியில் தென்னன் தொண்டையர்கோன் செய்த நன் மயிலைத் திருவல்லிக்கேணி என்ற வாக்கின் மூலம் ஆலயத்தின் பழைமையும், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என்ற மயிலையும் இணைந்திருந்தமை தெரிகிறது.

இரண்டு வாசல், இரண்டு துவஜஸ்தம்பம், இரண்டு கருட சன்னிதி ஆகிய தனிச் சிறப்பு கொண்ட திருக்கோயில் இது.

வைகுந்தத்திற்கு இணையான இத்திருத்தலத்தில் மூலவர் சன்னிதி என்று வழங்கப்படும் பார்த்தசாரதி சன்னிதியில் மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் ஆஜானுபாகுவாய் பகவான் ருக்மணி தேவி, அண்ணா பலராமன், தம்பி சாத்யகி, மகன் ப்ரத்தும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோருடன் குடும்ப சமேதராய் விளங்குகிறார்.

ஆனால் உற்சவத் திருநாட்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விளங்கும் உற்சவர் பார்த்தசாரதி சுவாமிதான் திருவீதி உலா வருவார்.

இத்திருக்கோயிலில் திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், எம்பெருமானார் எனப் போற்றப்படும் ஸ்ரீமத் ராமானுஜர், வைணவ கிரந்தங்களை பெருவாரியாக தொகுத்து இன்றுவரை அனுசந்திக்கும்படி அருளிய மகான் மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்துள்ளன.

🔥  #பள்ளி_கொண்ட கோலத்தில் பெருமாள்

தனிச் சன்னிதியில் ராமர், சீதா, லட்மணன், ஆஞ்சநேயருடன் சேவை சாதிக்கிறார். அருகிலேயே ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலேயே திருச்சன்னிதி கொண்டுள்ளார்.

மனம்குளிரப் பெருமாளைத் தரிசித்துவிட்டு சன்னிதியை விட்டு வெளியே வந்தால் ஆழ்வார், ஆச்சாரியர்களைத் தரிசித்தபடியே வரும்பொழுது சிறிய திருவடியான ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.

வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நித்ய கருட சேவையில் அருளுகின்றார் மூலவர் காஞ்சி வரதர்,

தனி வாசலும், தனி த்வஜஸ்தம்பமும் கொண்டு மூலவராக யோக நரசிம்மர் அருள்பாலிகிறார். உற்சவருக்கு அழகிய சிங்கர் என்பது திருநாமம். இந்தப் பெருமாளை `தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே` என்று போற்றுகிறது பாசுரம்.

🔥💃#ஆண்டாள், தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். இச்சன்னிதியை அடுத்து, ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை விளக்கும் வகையில் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டு, பாசுரங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளவிதம் அற்புதம்🙏🏾

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...