Sunday, April 21, 2024

மதுரையில் பிறந்த பெண்களாகட்டும், கட்டி கொடுத்த பெண்களாகட்டும் அன்றுதான் அவர்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வார்கள்


#சித்திரை_திருவிழா முக்கிய நிகழ்வான 
#மீனாட்சி_சொக்கநாதர்_ (#சுந்தரேஸ்வரர்)
#திருக்கல்யாணம்
       
மதுரையில் பிறந்த பெண்களாகட்டும் மதுரையில் கட்டிக்கொடுத்த பெண்களாகட்டும் இன்றுதான் அவர்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வார்கள். அங்கு மீனாட்சி கழுத்தில் தாலியேறும்போது பெண்களும் தங்கள் கழுத்தில் ஏற்கனவே அணிந்திருக்கும் தாலிக்கயிறை கழட்டிவிட்டு புதுத்தாலிக்கயிறு கட்டிக்கொள்வார்கள். இது வழிவழியாக வரும் மரபு. 

பாண்டிய நாட்டில் மலையத்துவஜன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.  அவனும், காஞ்சனமாலையும் புத்திரப்பேறின்றி நீண்ட காலங்கள் வருந்தினர். எனவே உலகையே காக்கும் அன்னை உமையவளே  தனக்கு மகளாக வரவேண்டுமென்று #மலையத்துவஜன்,  #காஞ்சனமாலை இருவரும் வேள்வி செய்தனர்.  அந்த யாகத்தீயில் அக்கினியிலிருந்து உலகை ஆளும் அன்னை உமையவள் சிறு குழந்தையாக தோன்றினாள்.  அப்பொழுது அந்தக் குழந்தைக்கு மூன்று தனங்கள் (மார்பகங்கள்) இருந்தன.   இதைக் கண்டு இவர்கள் சற்றே  வருந்த,  அப்போது ஒரு அசரீரி கேட்டது.  மலையத்துவச மன்னரே!  வருந்த வேண்டாம்!  தங்களுக்கு அந்த உலக அன்னையே மகளாகப் பிறந்துள்ளார்.  இவர் திருமண வயதை அடைந்து,  தனக்கு மணமகனாக வரப்போகிற வரை பார்த்ததும், அதிகமாக இருக்கும் ஒரு தனம் மறைந்துவிடும்!  என்றது! அசரீரி. 
         எனவே இருவரும் மகிழ்ந்து, குழந்தைக்குத்  #தடாதகைப்பிராட்டி எனப் பெயரிட்டு,   ஓர்  அரச குமாரனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்பித்து, மிக மகிழ்வோடு, தடாதகைப் பிராட்டியை இளவரசியாக  நியமித்தான்!  மலையதுவஜ மன்னன்.  பின்னர் மலையத்துவசன் மறைந்துவிட,   தடாதகைப் பிராட்டியார் #மீனாட்சி  என்ற பட்டப் பெயருடன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டைச் சிறப்புடன் ஆட்சி செய்தார்.
          முழுவதும் பெண்களால் ஆன ஒரு படையை அமைத்து,  அன்னை மீனாட்சி மிகவும் வீரத்துடன் பாண்டிய நாட்டை  ஆண்டு வந்தார்.  மீனாட்சி என்றால்  மீனானது தனது கண் பார்வையாலேயே  தனது குஞ்சுகளை பாதுகாத்துருளும். அதேபோல தனது  அருட்பார்வையாலேயே  உலக மக்கள் அனைவரையும் கண்ணென  காத்து வருவார்!  என்ற பொருளில் தடாதகை பிராட்டியாருக்கு,  #மீனாட்சி என்ற பெயர் பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது.      
      #மீனாட்சியம்மை திக்விஜயம் செய்து, அனைத்து தேசத்து அரசர்களையும் வென்றார். முழுபாரதத்தையும் வென்ற அன்னை,   கைலாயத்திற்கும் திக்விஜயம் செய்து போரிட நினைத்த பொழுது அங்கே சிவபெருமானை கண்டதும் அவருக்கு மீதமிருந்த ஒரு தனம் மறைந்தது.  எனவே இவரே தன் நாயகன் என எண்ணி, நாணத்தால்  தலை குனிந்து நின்றிருந்தாள்!  அன்னை மீனாட்சி. 
         அதைக் கண்ட சிவபெருமான்,  நான் உன்னை மதுரைக்கு வந்து மணம் புரிந்து கொள்வேன்!   இப்பொழுது திரும்பிச் செல்!  என்றார்.   இதனால் அவர் தன் படைகளுடன் மதுரைக்கு வந்து தன் அன்னை  காஞ்சனமாலையிடம் இத்தகவலைத்  தெரிவித்தார்.  தன் மகள் திக்விஜயம் செய்து அனைவரையும் வென்று மாபெரும் சக்கரவர்த்தினியாக அரசாட்சி செய்தாலும்,  திருமணம் ஆகவில்லையே?  என வருந்தியர காஞ்சனமாலை இதனால் மிகவும் மனம் மகிழ்ந்தாள். 
           சிவபெருமானுக்கும், தன் மகள் மீனாட்சிக்கும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காஞ்சனமாலை  பெரு மகிழ்வோடு  விமரிசையாகச் செய்தாள்.  மீனாட்சியின் திருமணம் பற்றி செய்தியானது யானையின் மீது அமர்ந்து மணமுரசு மூலம் பாண்டிய நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டு அரசர்களுக்கும் மீனாட்சி திருமணம் பற்றிய ஓலைகள் அனுப்பப்பட்டன.  மக்கள் தங்கள் வீடுகளையும், நகரங்களையும் அலங்கரித்தனர்.  
        பொன்னாலும், நவமணிகளாலும்  திருமண மண்டபம் அலங்கரிக்கப்பட்டது.
திருமணத்தை எல்லோரும் பார்த்து மகிழும் வண்ணம் திருமண மண்டபத்தின் நடுவில் மணமேடை அமைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டது. சிவபிரானின் திருமணச்செய்தியை அறிந்த தேவர்கள் அனைவரும் கையிலையை அடைந்து சிவபெருமானைத்  துதித்தனர். பின்னர் நந்திதேவரின் அனுமதியுடன் இறைவனை கண்டு வணங்கினர். 
         சிவபெருமானை அழகிய #சுந்தரேஸ்வரராக  அலங்கரித்தார் குபேரன். குண்டோதரன் குடைபிடிக்க இறைவனார் இடப வாகனத்தில் ஏறி மதுரை நகரின் வெளியே எழுந்தருளினார்.
இறைவனான சிவபெருமான் மதுரை நகரின் புறத்தே எழுந்தருளி இருப்பதை அறிந்த காஞ்சன மாலை, பாண்டிய நாட்டு அமைச்சர்களுடன் சென்று அவரை வரவேற்றாள்.
        காஞ்சன மாலை இறைவனாரிடம் “உலக இயக்கத்திற்கு காரணமானவரே, தாங்கள் தடாதகை பிராட்டியாரை மணம் செய்து பாண்டிய நாட்டை ஆள வேண்டும்” என்று விண்ணப்பித்தாள். இறைவனும் “அவ்வாறே ஆகுக” என்று காஞ்சன மாலைக்கு அருள்பாலித்தார். பின் மதுரைநகரில் அமைந்திருந்த திருமண மேடைக்கு இறைவன் எழுந்தருளினார்.
          எந்நேரமும் பாம்புகளையே தன் ஆபரணங்களாகக்  கொண்டிருக்கும் சிவபெருமான் இப்பொழுது பொன்னாபரணங்களும், பட்டாடையுமாக அழகிய சுந்தரேஸ்வரராகக்  காட்சி அளித்தார். சிவபெருமானின் அழகினைப் பார்த்த மதுரை மக்கள்  மெய்மறந்து இருகரங்களையும் கூப்பிவாறு சிவனாரை வணங்கியபடியே நின்றிருந்தனர்.
       உலக அன்னையான மீனாட்சி தேவிக்கு பெண்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வந்து மணமகனான சுந்தரேஸ்வரரின் அருகில் அமர்த்தினர்.  திருமால்,  மீனாட்சியைத் தாரை வார்த்து சொக்கருக்குக்  கொடுக்க, மீனாட்சி_சொக்கநாதர் திருமணம் இனிதே நிறைவேறியது.  #பங்குனி_உத்தர நன்னாளில் #மீனாட்சி_சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றது. பின்னர் இறைவன் காஞ்சன மாலைக்கு கொடுத்த வாக்கின்படி மதுரையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
         மீனாட்சியம்மையின் திருமணத்திற்கு மிக விமரிசையாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.  மலை மலையாக உணவு வகைகள் குறித்து வைக்கப்பட்டிருந்தன  ஆனால்  சிவபெருமானின் பூதகணங்களால்   அந்த  உணவுகளை  உண்டு முடிக்க முடியாமல் ஏராளமான உணவு மீதமானது. இதைக்கண்ட மீனாட்சியம்மை இந்த உணவுகளை உண்ண தங்கள் படையில் யாரும் இல்லையா?  எனக் கேட்க  சிவபெருமானும் குண்டோ தரனை அழைத்து, இவன் ஒருவனுக்கு நீ முதலில் உணவளி.  பிறகு மற்றவர்களை உண்ணச் சொல்கிறேன்!  என்றார்!  இளநகையுடன். 
       வடவைத்தீ  போன்ற பசி  வாட்ட, #குண்டோதரன் மீனாட்சி அம்மையின் சமையல்காரர்கள்  தயார் செய்து வைத்திருந்த  திருமண விருந்து உணவு வகைகள்  முழுவதையும் உண்டு முடித்தும்,  அவனுடைய பசிநோயானது தீராமல் அதிகரித்துக் கொண்டே சென்றது.
  அதனால்   குண்டோதரன், சோமசுந்தரரிடம் சென்று தனது பசிநோயினை போக்கியருள வேண்டினான். சோமசுந்தரரும் அவன்மீது இரக்கம் கொண்டு, உலகிற்கு எல்லாம் உணவளிக்கும்  அன்னபூரணித் தாயை மனதில் நினைத்தார்.
       உடனே அங்கே தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின.  சுந்தரேஸ்வரரும், குண்டோதரனிடம் “பசிநோயால் வாடும் குண்டோதரனே, இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக” என்று அருளினார். குண்டோதரனும் இறைவனின் ஆணையின்படி தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்த தயிர் அன்னத்தை எடுத்து உண்டான். இறைவனின் கருணையால் குண்டோதரனைப் பிடித்திருந்த பசிநோய் மறைந்தது. ஆனால் அவனைத் தாகம் வாட்டியது.
           உடனே   *குண்டோதரன் மதுரையில் நீரிருக்கும் இடங்களைத் தேடிபோய் நீரினை அருந்தினான்.  குண்டோதரனின் நீர்வேட்கையின் காரணமாக மதுரையின் நீர்நிலைகளெல்லாம்  வற்றின. ஆனாலும் அவனுடைய நீர்வேட்கை அடங்கவில்லை. இறுதியில் அவன் சோமசுந்தரரைச்  சரணடைந்தான்.  "உலகினை காத்து அருளும்  சிவபெருமானே!  அடியேனின் பசிநோய் தீர்ந்து,   இப்பொழுது நீர்வேட்கை அதிகரித்துள்ளது” என்றான்! குண்டோதரன். 
            அழகிய சொக்கநாதரும்,  தன் தலையில் சூடியிருந்த கங்கையை நோக்கி “பெண்ணே, நீ இம்மதுரை மாநகரின் பக்கத்தில் ஒரு பெரிய நதியாக விரைந்து ஓடி வருவாயாக” என்று கட்டளை இட்டார்.  #கங்காதேவியும், சொக்கநாதரே!    “என்னுள் மூழ்கியவருக்கு பக்தியும், அன்பும், மெய்ஞானமும், வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும்!” என்று  வேண்டினாள்;  சிவனாரும் அவ்வாறே அருள் புரிந்தார்.
      குண்டோதரன் அழைத்து சிவபெருமான் இந்த மண்ணில் "கையை வை"_ 
 "வை கை" என்றார். குண்டோ தரனும் தன் இரு கரங்களையும் அம்மண்ணில் வைக்க,  கங்காதேவி பெரிய நதியாக பெருக்கெடுத்து ஓடி வந்தாள்.  தனது கரங்களை வைத்ததுமா  உருவான நதி என்பதால்  #வைகை என்று   அந்நதி  பெயர் பெற்றது.  சிவபெருமான்,  குண்டோதரனிடம் அந்நதிநீரினைப் பருகக் கட்டளையிட்டார். குண்டோதரனும் ஆற்றின் அருகே சென்று இருகைகளையும் நீட்டி நீரை வாரிக் குடித்து,  தனது  நீர்வேட்கைத் தணித்தான். 
            நீர்வேட்கை தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினான்.அவனது பாடல்களைக் கேட்ட சிவபெருமான் அவனை தனது பூதகணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவனுக்கு அருளினார்.

    #வைகை_நதியின்_வேறு_பெயர்கள்:
       சிவபெருமானின் தலையிலிருந்து இறங்கி வந்ததால் வைகையை  #சிவகங்கை என்றும்  அழைப்பர்.  தன்னைப் பருகுபவர்களுக்கு தெளிந்தச்  சிவஞானத்தை அளிப்பதால் இது #சிவஞானத்தீர்த்தம் என்றும், காற்றைப் போல் வேகமாக வருவதால்  #வேகவதி என்றும், மதுரையை சூழ்ந்து வருவதால் #கிருதமாலை என்றும் வைகைநதி அழைக்கப்படுகிறது. 

#கள்ளழகர்_வைகையாற்றில்_இறங்குதல் 🙏
      பார்வதிதேவியின் அண்ணன் முறையினர் மகாவிஷ்ணு என்பதால்  #கள்ளழகர் (திருமால்) அன்னை மீனாட்சிக்கு அண்ணன்  முறை  ஆகிறார்.   எனவே தங்கையின் திருமணத்தைக்  காண கள்ளழகர் குதிரையில் ஏறி வரும் பொழுது,   திடீரென்று தோன்றிய வைகை ஆறு வெள்ளம் தடுத்ததால் அவர் குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்திற்கு வர இயலவில்லை.   எனவே அண்ணன் வராமல் திருமணம் நடைபெறுவதா?   என மீனாட்சியம்மை வருந்த ,   சிவபெருமானே கள்ளழகர் வடிவில் வந்து தனது திருமணத்தை நடத்தி வைத்தார்.
          அதாவது சிவபெருமானே,  கள்ளழகர் ஆகவும் வந்து  தனக்கு மீனாட்சி அம்மையைக்  கரம்பிடித்து கொடுக்க வைத்தாராம். வைகையாற்றின் கரையில் காத்திருந்த கள்ளழகரோ  வைகையில் வெள்ளம் குறையாததால் வைகை நதியில் குதிரையோடு இறங்கினாராம்.. இதுவே #கள்ளழகர்_வைகையில்_இறங்குதல் என்ற திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது..  இந்தப்  புனித நாள் #சித்திரா_பௌர்ணமி அன்று ஒவ்வொரு வருடமும் "வைகையாற்றில் கள்ளழகர் இறங்குதல்"  என்று கொண்டாடப்பட்டு வருகிறது. நிஜமான #கள்ளழகர் மீனாட்சி _சொக்கநாதர் திருமணம் முடிந்த பிறகே வந்து சேர்ந்தாராம்.   #சிவனாரும்_திருமாலும்_ஒருவரே என்பதை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் ஆடிய நாடகத்தில் ஒன்றே,  #கள்ளழகர்_ஆகவும்_சிவபெருமானே  வந்த நிகழ்வு.
        இறைவனச்  சரணடைபவர்களை இறைவன் கட்டாயம் காத்தருளுவார்!  என்பதே இதன் கருத்தாகும்.  

மீனாட்சி_ சொக்கநாதர் திருமணத்தை மனதார கண்டுகளித்து, உளமார  வணங்குபவர்கள்,  வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறுவர்! என்றும் வளமான வாழ்க்கையை வாழ்வர்!என்பது உறுதி. 🙏

நம்பிக்கை என்பதைத்தாண்டி சில மரபுகள், கலாச்சாரங்கள் நமக்கு ஒரு வித மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தைக் கொடுக்கவல்லது. சித்திரைத் திருவிழாவும் அவ்வாறான கொண்டாட்டத்தை மட்டுமே கொடுக்கக்கூடியது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...