Friday, June 28, 2024

அஷ்ட காளி கோயில்களில் தில்லை காளி கோயிலும் ஒன்றாகும்.

தில்லை காளியின் வரலாற்றை தெரிஞ்சிக்கலாம் வாங்க
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தை குறிக்கும்  தில்லை நடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதை அனைவரும் அறிவோம்.  சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள  தில்லை காளி கோயில் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனால் 1229 - 1278ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோயில்களில் தில்லை காளி கோயிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவனை விட்டு தில்லை காளி ஏன் ஊரின் எல்லைக்கு சென்றாள் என்னும் வரலாற்றை இந்தப் பதிவில் காணலாம்.


ஒரு சமயம் தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்கள் துன்புறுத்தி வந்தனர். அப்போது அவர்கள் மகாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் சென்று முறையிட்டனர். அவர்களின் அறிவுரையின் பேரில் பிறகு சிவனிடம் வந்து முறையிட்டனர். பார்வதி தேவியால் மட்டுமே அந்த அசுரர்களை அழிக்க முடியும். ஆனால், அதற்கு பார்வதி தேவி சிவபெருமானை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும். பார்வதி தேவி சிவபெருமானை பிரிந்து செல்லாவிட்டால், உக்கிர காளி அவதாரத்தை எடுக்க முடியாது. மேலும், பார்வதி தேவி முன்னர் பெற்ற சாபத்தின் காரணமாக சிவபெருமானை பிரிந்து சில காலம் வாழ வேண்டும். இதனால் சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, ‘சக்தியில்லையேல் சிவனில்லை’ என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், ‘அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு  தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்’ என்று உரைத்தார்.


காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில்  சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, ‘இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.

பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு  வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்

மன்னன் கோப்பெருஞ்சோழன் தனது ஆட்சியில் வரும் இன்னல்களை சரிசெய்து வெற்றி அடைய வேண்டும் என்று காளி தேவியை வேண்டினான். அதை இந்தத்  தில்லை காளி நிறைவேற்றியதால், இங்கே ஆலயத்தை கட்டினான். பின்னர் சுந்தரபாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டது என்று ஆலயக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. 

இந்தக் காளிக்கு பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் நடைபெறுகிறது.  தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடைவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டு, குங்கும வழிபாடும் செய்யப்படுகிறது. இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...