Wednesday, July 17, 2024

கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில்..



கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோயில்
கார்க்கோடகன் வழிபட்ட கோடகநல்லூர் கைலாசநாதர் திருக்கோவில்.

சுவாமி:

கைலாசநாதர்,

அம்மை:

சிவகாமி அம்மை,

சிறப்பு சன்னதி:

ஆனந்த கெளரி அம்மன்,

திருக்கோவில் விருட்சம்:

வில்வம்,

தீர்த்தம்

: தாமிரபரணி.

தல வரலாறு :
முற்காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இந்த பகுதியில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருந்தார். ஒரு நாள் அந்த முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அந்த முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்துகளை சேகரிப்பதற்காக, அந்த முனிவரின் மகன் காட்டிற்குள் சென்றிருந்தான். அப்போது பரிஷத் மகாராஜாவின் மகன் அந்த காட்டிற்குள் வேட்டையாட வந்திருந்தான். அவன் வேட்டையாடிக் கொண்டே முனிவர் அமர்ந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். நீண்ட நேரம் காட்டிற்குள் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் களைப்பும், சோர்வும் அடைந்த அந்த இளவரசனுக்கு தாகம் ஏற்பட்டிருந்து. அவன் குடிக்க நீர் வேண்டி முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதுகளில் கேட்கவில்லை.

இதனால் கோபம் கொண்ட இளவரசன், தன்னுடைய அழைப்பிற்கு செவி சாய்க்காமல் இருந்த முனிவரின் மீது, ஆத்திரத்தில் அருகே கிடந்த இறந்த போன பாம்பின் சடலத்தை எடுத்து கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால், அங்கு நடந்த சம்பவங்கள் பற்றி அவர்எதுவும் அறிந்திருக்க வில்லை.

அதே வேளையில் முனிவரின் மகன், தனது தந்தை வேள்வி செய்வதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய ஞான திருஷ்டியால், அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்து கொண்டான். இதனால் அவனக்கு பெருங் கோபம் ஏற்பட, தன் தந்தையும், குருவும் ஆனவரை அவமானப்படுத்திய இளவரசனின் தந்தை பாம்பு தீண்டி இறந்து போகட்டும் என்று சாபமிட்டான்.

இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரிஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதனால் பாம்பு தீண்டி அவர் இறந்து விட நேரிடும் என்றும் மகாராஜாவிடம் தெரிவித்தனர். அதனைக் கேட்ட பரிஷத் மகாராஜா, தனது உயிரை பாம்பிடம் இருந்து காத்துக் கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, கப்பலில் மண்டபம் ஒன்று கட்டி, பாம்பு எளிதில் புக முடியாத இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரிஷத் மகாராஜாவை சாபப் படியும், கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விடுகிறார்.

பின்னர் ஒரு நாள் கார்கோடகன் என்னும் அந்த பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு, நள மகாராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை.

இதனால் நள மகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நள மகாராஜாவின் மாமனார் வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்கிறார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. பரிஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகா விஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோடகனின் முன் மகா விஷ்ணு தோன்றி, அந்த பகுதியில் உள்ள தாமிரபரணிக்கரை சிவலிங்கத்தை வழிபட்டு வந்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறி அருள் புரிந்தார்.

அதன் படி கார்கோடகன் பாம்பு தாமிரபரணி கரைக்கு வந்து அங்கிருந்த சிவலிங்கத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டு தவம் இருந்தது. அதன் தவத்தை மெச்சிய ஈசன், அங்கு தோன்றி காட்சியளித்து கார்கோடகனுக்கு முக்தி அளித்ததாக வரலாறு கூறப்படுகிறது.

கோடகநல்லூர் பெயர்க் காரணம்:

கார்கோடகன் வழிபட்டதால் இந்த ஊர் கார்கோடக நல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடக நல்லூர் என்ற பெயர் மருவி கோடக நல்லூர் என்று விளங்கி வருகிறது.

சுவாமி கைலாசநாதர்:

கிழக்கு நோக்கிய கருவறையில் சுவாமி கைலாசநாதர் லிங்கத் திருவுருவில் அழகிய வடிவாக காட்சித் தருகிறார். இவருக்கு விசேஷ காலங்களில் நாகாபரணம் சாத்தி அலங்காரம் செய்யப்படும்.

அம்மை சிவகாமி:

தெற்கு நோக்கிய தனி கருவறையில் அம்மை சிவகாமி நின்ற கோலத்தில், ஒரு கையில் மலர் ஏந்தியும், மறு கையை கீழே தொங்கவிட்ட படியும், இடை நெளித்தும், அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள்.

ஆனந்த கெளரி அம்மன்:

இங்கு தனி சன்னதியில் காட்சித் தரும் ஆனந்த கெளரி அம்மை ஐந்து தலை நாகம் குடைபிடித்த நிலையில் காட்சித் தருவது சிறப்பம்சம். இவளை வணங்கினால் சர்ப்ப தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

நவ கையிலாய தலங்களிலேயே இத்தல லிங்க மூர்த்தம் தான் அளவில் பெரியது என்ற சிறப்பை பெறுகிறது.

இங்கு விநாயகரும், சுப்பிரமணியருமே துவார பாலகர்களாக காட்சித் தருகின்றார்கள்.

இங்கு நவக்கிரகங்களுள் அங்காரக பகவான் சிவனை வழிபட்டதால், செவ்வாய் தோஷ பரிகாரத்திற்கு ஏற்ற தலம் இது என்று கூறப்படுகிறது.

இங்கு மற்ற கோவில்களை போல கொடி மரம், பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதி இல்லை.

இங்குள்ள நந்திக்கு செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் விரலி மஞ்சளால் கட்டப்பட்ட மாலை சாற்றி வழிபடுவது சிறப்பம்சம் ஆகும்.

முக்கிய திருவிழாக்கள்:

இங்கு மாசி மாத சிவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகிய வருடாந்திர உற்சவங்களும், பிரதோஷம் மற்றும் செவ்வாய்கிழமை சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.

அமைவிடம்:

திருநெல்வேலி

நகரம் - சேரன்மகாதேவி சாலை வழியில் சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ளது

கோடகநல்லூர் சிவன் கோவில்

. இங்கு செல்ல திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சேரன்மகாதேவி மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி கல்லூர் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். கல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே சுமார் 2 கி. மீ தொலைவில் கோடகநல்லூர் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. க்ஷ

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...