Thursday, July 18, 2024

வள்ளலாரை குருவாகவும் ஆசானாகவும் ஏற்றுக்கொண்ட சீடர்கள்...

_வள்ளலாரின் மாணாக்கர்கள் மற்றும் சீடர்கள்._


வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரை மானசீக குருவாகவும் ஆசானாகவும் ஏற்றுக்கொண்ட சீடர்களும் மாணவர்களும் நிறைய பேர் இருந்துள்ளனர். அவர்களில் சில குறிப்பிடத்தக்கவர்களின் நிகழ்வுகள் வரலாற்று செய்திகளாகவும் செவிவழிச் செய்திகளாகவும் அவர்களின் நேரடிச் சீடர்கள் மூலமாகவும் நமக்கு கிடைத்த தகவல்களை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.

வள்ளலாரின் நேரடிச் சீடராக வாழ்ந்தவர்கள் கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத முதலியார் மற்றும் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை.
காரணப்பட்டு ச.மு. கந்தசாமிப் பிள்ளை அவர்களுடைய நேரடி சீடர் சிதம்பரம் சுவாமிகள்.
சிதம்பரம் சுவாமிகள் உடைய நேரடி சீடர் வடலூர் சீனி சட்டையப்பர் ஐயா இப்படி மரபுவழியாக குரு சீடர் பரம்பரையில் இருந்து நமக்கு கிடைத்த வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வள்ளலார் சென்னையில் உறைந்த காலத்திலே  அவருடைய புலமைக்கும் ,ஞானத்திற்கும், அருட்தன்மைக்கும், அடிபணிந்து அவரிடம் நிறையவற்றை கற்க வேண்டும் மற்றும் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று பலர் முன் வந்தனர் அவர்களில் முதன்மை மாணாக்கர் என்று குறிப்பிடும்படி விளங்கியவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள்.
அவர் தொழுவூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் மிகப்பெரிய படிப்பாளி அதாவது  மும்மொழியில் புலமை வாய்ந்தவர் (தமிழ், ஆங்கிலம் சமஸ்கிருதம்,). இப்படிப்பட்ட தொழுவூர் வேலாயுத முதலியார் ஒரு பாடலை எழுதிக் கொண்டுவந்து திருவருட்பிரகாச வள்ளலார் இடம் கொடுத்து இது சங்ககாலப்பாடல் என்று கூற அப்பாடலை வாங்கிப் படித்துப் பார்த்த வள்ளலார் இது சங்ககாலப் புலவர்களால் எழுதப்பட்ட பாடல் இல்லை சங்ககாலப் புலவர்களின் பாடல்களில் இவ்வளவு குறை இருக்காது என்று கூறி இப்பாடல் பொருள் இலக்கணம் தேறாத ஒரு தத்துக்குட்டி எழுதியது  என்று கூற மறுகணமே தன் தவறினை உணர்ந்த தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளல் பெருமானிடம் மாணாக்கராக சேர்கிறார்.

அக்கணம் தொழுவூர் வேலாயுத முதலியாரை நோக்கி வள்ளலார் பின்வருமாறு கூறுகிறார் ""நீ நமக்கு புதியவன் அல்லன் முற்றும் பழையவனே நம் பிள்ளை நமக்கே கிடைத்தது"" என்று திருவாய் மொழி மலர்ந்தருளினார்.

(இதன் மூலம் ஏற்கனவே தொழுவூர் வேலாயுதமுதலியார் வள்ளல்பெருமான் உடன் ஆன்மீக தொடர்புபிலோ அல்லது தெய்வீக தொடர்பிலோ இருந்துள்ளார் என்பது அறியப்பட வேண்டிய உள்ளது)

வள்ளலார் சென்னையில் உறயத் தொடங்கிய காலத்தில் அவர் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி தலயாத்திரை புறப்பட்டு பல புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவன்மீதுபல பதிகங்களை இயற்றினார் (இப் பதிகங்களை எல்லாம் நாம் இன்று திருவருட்பாவில் காணமுடிகிறது)
 அக்கால கட்டத்தில் அவர் மட்டும் செல்லவில்லை அவருடன் இருந்த மாணாக்கர்கள் அனைவரும் வள்ளலார் உடன் பயணித்தனர் குறிப்பாக தன் குடும்பம் மனைவி மக்கள் தன் தொழில் அனைத்தையும் விட்டு தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலார் உடன் பயணித்தார்.

இன்று நம் கைகளில் திகழும் திருவருட்பா ஈடு இணையற்ற இந்த ஞான பொக்கிஷத்தை நமக்கு இறைவனே நேரடியாக அருளினார் வள்ளலார் மூலமாக.

வரலாற்றின் அடிப்படையில் பார்க்கையில் இறைவனின் அருளால் திருவருட்சம்மதத்தால் வள்ளலாரின் முழு சம்மதத்துடன் இந்நூல் வெளிவந்தது என்று நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் வரலாற்றின் அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து இந்நூல் வெளிவர காரணமாக இருந்தவர் யார் என்று கண்டோம் ஆனால் அவர்கள் வேறுயாருமல்ல வள்ளல் பெருமானுடைய மாணாக்கர்கள்.

மிக எளிதாக திருவருட்பா என்னும் ஞானநூல் வெளி வந்துவிடவில்லை அதனுடைய பதிப்பு வரலாற்றை நாம் பார்க்கையில் திரு ராம பாண்டுரங்கன் ஐயா அவர்களின் படைப்பான ஆய்வுக்கு உட்பட்ட  வெளியீடான ""திருவருட்பா பதிப்புச்சோலை"" என்னும் நூலில் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பல போராட்டங்களுக்குப் பிறகு பல முன்னேற்பாடுகளுக்கு பிறகு பல சிரத்தைகளுக்கு பிறகு இந்த திருவருட்பா நம்முடைய கைகளுக்கு கிடைத்துள்ளது என்பதனை விளக்குகிறது.

திருவருட்பிரகாச வள்ளலார் சென்னையில் வாழ்ந்த காலத்திலேயே பல பாடல்களை எழுதியுள்ளார் அப்பாடல்கள் பல பிரசித்தமாக போய்விட்டன.
வள்ளலாரின் பல பாடல்களை எங்கேயாவது கேட்டோ அல்லது எங்கேயாவது படித்தோ அல்லது புலவர்கள் யாரிடமாவது இருந்து பெற்றோ தான் எழுதியதாகவே மற்றும் தானே பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் என்பதுபோல் பலபேர் அச்சிட்டு வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள் அக்காலகட்டத்தில் வள்ளலாரின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து தங்களின் சொந்த பாடல்களையும் வள்ளலாரின் பாடல்கள் என்று வெளியிட ஆரம்பித்தார்கள்.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில் வள்ளல் பெருமான் உடைய தோழர் (வள்ளல் பெருமானார் இதனை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்) இறுக்கம் இரத்தின முதலியார் அவர்களும் சிவானந்தபுரம் செல்வராயர் அவர்களும் தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற சீடர்கள் ஆகியோர்கள் முன்நின்று இவற்றைத் தடுத்தனர்.

அதாவது எப்படியெனில் வள்ளலார் பாடல்களையும் வள்ளலார் எழுதாத பாடல்களையும் தான் எழுதிய பாடல்கள் என பதிப்பித்து வெளியிட ஆரம்பித்தது தங்கள்
ஞான குருவாகிய ராமலிங்க அடிகளாரின் பெயருக்கு களங்கம் அல்லவா என்பதை எண்ணி அவர்கள் முன் நின்று இதனை தடுத்தனர். எப்படி எனில் யார் யாரெல்லாம் இந்த அச்சு பணியில் ஈடுபட்டார்களோ அவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருள் உதவி செய்து அந்த அச்சு பணிகளை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

(பொருளுதவி எனில் இந்தப் பணிகளை மேற்கொள்ள அவர்கள் வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் அச்சு பொருட்களால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பினை தங்களுடைய சொந்த பணத்தில் கொடுத்து ஈடுகட்டி உள்ளனர் .)

அதன்பிறகு இனியும் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணிய இறுக்கம் இரத்தின முதலியார், சிவானந்தபுரம் செல்வராயர், மற்றும் தொழுவூர் வேலாயுதனார் ஆகியோர் வள்ளலாரின் பாடல்களை எப்படியாவது அவரின் சம்மதத்தோடு திருமுறைகளாக வெளியிட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் வள்ளல் பெருமானாரோ அவரது எண்ணம் முழுவதும் இறை சிந்தனையிலேயே ஆழ்ந்து இருந்தது அதாவது நடமாடும் ஜீவகாருண்ய ஒழுக்க சீலராக  சதாசர்வகாலமும் இறைத் சிந்தனையிலேயே மூழ்கி இருந்தார் சதாசர்வகாலமும் உலக மக்களின் முன்னேற்றத்திலும் அவர்களுக்கு எப்படி பசிப்பிணி போக்குவது இறைநிலையை அடைய வைப்பது என்ற சிந்தனையிலேயே இருந்ததால் திருவருட்பாவை வெளியிட அவர் முன்வரவில்லை அதாவது அந்த எண்ணம் இல்லாதவராக இருந்தார்.

1857 - 1865 (திருவருட்பா முதல் 4 திருமுறை திரட்டப்பட்ட ஆண்டுகாலம்) ஆம் ஆண்டு வரை இதற்கு முந்தையபட்ட ஆண்டுகளில் வள்ளலார் எங்கு எங்கு சென்றாரோ அந்த எல்லா இடங்களுக்கும் சென்று அவர் எழுதிய பாடல்களை திரட்டி அவற்றையெல்லாம் ஒன்றிணைக்கும் பணியை செய்தவர்கள் இறுக்கம் இரத்தின முதலியார், சிவானந்தபுரம் செல்வராயர் மற்றும் வள்ளலாரின் முதன்மை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவர்.

இந்த நிலையில் அவர்கள் வள்ளல் பெருமானுக்கு  கடிதம் எழுதுகிறார்கள் அக்கடிதத்தில்
""நாங்கள் இங்கே உங்கள் பாடல்களை எல்லாம் தொகுத்து வைத்துள்ளோம் நீங்கள் உங்களிடம் இருக்கும் பாடல்களை எல்லாம் எங்களுக்கு அனுப்புங்கள்"" என்று கடிதம் எழுதுகிறார்கள்.
ஆனால் வள்ளலார்  சதா சர்வகாலமும் இறை சிந்தனையிலேயே மூழ்கியிருந்த காரணத்தால் இதை அவர் கவனம் செய்யவில்லை.

இந்நிலையில் இறுக்கம் இரத்தின முதலியார் கடிதத்தில் வள்ளலாருக்கு பின்வருமாறு குறிப்பிடுகிறார்
"நீங்கள் உங்களிடம் உள்ள பாடல்களை கொடுக்கும் வரை இங்கு என்னால் மூன்று வேளை சாப்பிட முடியாத நிலை இருக்கிறது அதனால் நான் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன்" என்று வள்ளலாருக்கு கடிதத்தில் தெரிவிக்கிறார்.
(இந்தக் கடிதம் இன்றும் நம் உரைநடைப் பகுதியில் காண முடிகிறது).

இந்தக் கடிதத்தை கண்ட வள்ளலார்
 ""இல்லை இல்லை நீங்கள் இப்படி செய்வது தகாது என்னிடமுள்ள பாடல்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவே நீங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறேன் என்று எனக்கு தகவல் அனுப்பும் வரை நான் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவேன்"" என்று பதில் அனுப்புகிறார்.

இப்படி இந்த ஏழு ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு 1867 ஆம் ஆண்டு தருமச்சாலை திறப்பு விழா அன்று திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்வு நல்ல மாணாக்கர்களுக்கு ஒரு பெருமை எப்படி எனில் திருவருட்பா பாடல்களை திரட்டுவது என்பது மிகப்பெரிய பணி ஏனென்றால் திருவருட்பாவின் அனைத்து பாடல்களும் வள்ளல் பெருமானுடைய கைகளில் இல்லை வள்ளல் பெருமான் முன்பு எழுதிய பாடல்கள் அவற்றின் குறிப்புகள் ஆகியவற்றை பல இடங்களிலிருந்து சேகரித்து அவற்றை தொகுத்து மேலும் பல இடங்களில் சேகரித்த பாடல்களில் வள்ளலார் எழுதாத பாடல்களையும் தனியே பிரித்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து இது வள்ளலார் உடைய கருத்துடன் ஒத்துப் போகிறதா அவர் எழுதியது தானா என்பதை பரிசோதித்து இவற்றை எல்லாம் திரட்டி ஒன்று சேர்ப்பது.

இரண்டாவதாக இப்படி சேர்த்த பாடல்கள் அனைத்தையும் செப்பம் செய்யும் பணி.

அதாவது செப்பம் செய்யும் பணி என்றால் வள்ளலார் உடைய கையெழுத்துப் பிரதியை நாம் அனைவரும் இப்பொழுது காணமுடிகிறது அதாவது இப்பொழுது இருக்கின்ற எழுதுகோல் போன்று அப்போது கிடையாது அப்பொழுது பேனாவை  (கட்டைப்பேனா) மையினால் தொட்டு எழுதும் பழக்கம் இருந்துள்ளது அப்படி எழுதும் பொழுது எழுத்துக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே கோர்வையாக இருக்கும் பிரித்துப் படித்துப் பொருள் உணர்வது மிகவும் கடினம் வள்ளலார் காகிதங்களில் மட்டும் எழுதவில்லை நோட்டுப் புத்தகங்களிளும் எழுதியுள்ளார் மேலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதியுள்ளார்.

நோட்டுப் புத்தகங்களில் எழுதி இருப்பதை படித்து பொருள் உணர்ந்து பிரித்து எழுதுவது மிகக் கடினம் ஓலைச்சுவடி என்பது எழுத்துக்கள் இன்னும் மிகச்சிறியதாக இருக்கும் அப்படி இருக்கையில் அவற்றை எப்படி செப்பனிட்டு இருப்பார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இந்த அருட்பெரும் பணியை வள்ளலாரின் அருட்பெரும் நிலையை அறிந்து வள்ளலாரைப் பற்றி முழுமையாக தெரிந்ததாலே வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் இந்த அருட்பெரும் பணியைமுன் நின்று செய்தார்.

மூன்றாவதாக இப்பாடல்களை எல்லாம் வகைப்படுத்துவது என்பது அதைவிட மிகப்பெரிய செயல் அதாவது இத்தனை பாடல்கள் இருக்கின்றன எந்தெந்த பாடல்களை எங்கே வைக்க வேண்டும் எந்த முறையில் திருத்தம் செய்ய வேண்டும் எந்த பாடல்களை முதலில் வைக்க வேண்டும் எந்தந்த பாடல்களை இரண்டாவது மூன்றாவதாக வைக்க வேண்டும் ஏதும் அனுமானத்தில் இவற்றை வைக்க முடியாது. இப்படி இவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து திருமுறைகளாக வகுத்து நமக்கு வழங்கியவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.
(தொழுவூர் வேலாயுதனார் தொகுக்க வள்ளலார் முறைப்படுத்தினார் )

இன்று நம் கைகளில் திகழும் ஆறு திருமுறைகளுக்கும் ""திருவருட்பா"" என்று பெயர் வைத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

பொதுவாக புலவர்கள் இயற்றிய பாடல்களின் தொகுப்புகளுக்கு அந்தப் புலவர்களின் பெயர்களையே முன்வைத்து பிரபந்ததிரட்டு என்று வெளியிடுவதுதான் நம் தமிழக மரபு.

ராமலிங்கம் பிள்ளை அல்லது ராமலிங்க அடிகளார் பிரபந்தத் திரட்டு என்று பெயர் வைக்காமல்  உச்சரித்தாலே  நாவினிக்கும் வகையில் ""திருவருட்பா"" என்று பெயர் வைத்தது தொழுவூர் வேலாயுத முதலியார்.

வள்ளலாருக்கு ""திருவருட்பிரகாச வள்ளலார்""
என்ற திருநாமத்தைச் சூட்டியவரும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களே.

அதாவது வள்ளலாரை ராமலிங்கம் பிள்ளை அல்லது ராமலிங்க அடிகளார் அல்லது சிதம்பரம் ராமலிங்கம் சாமி என்று தான் அனைவரும் அறிவர் இப்படி இருக்கையில் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர் இட்டு அழைத்த பெருமை தொழுவூர் வேலாயுத முதலியாருக்கே சாரும்.

ஆக வள்ளலார் உடைய இந்த திருமுறைகளை (பாடல்களை) தேடித் திரட்டி வகை செய்வதே மிகப் பெரிய காரியம் அதோடு மட்டுமில்லாமல் அவற்றைச் செப்பம் செய்து முறையாக தொகுத்து வழங்கியதோடு மட்டும் இல்லாமல் திருமுறை என மிக அழகாக பெயரிட்டு (அதாவது சைவத்திருமுறைகளுக்குத்தான் சைவத்திருமுறை என்ற பெயர் உண்டு) அவற்றை ஒன்றாம் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை என்று ஆறு திருமுறைகளாக வகைப்படுத்தி நமக்கு வழங்கியவரும் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களே.

இன்று சிதம்பரம் இராமலிங்க அடிகளார் என்று சொன்னால் தெரிவதை விட வள்ளலார் மற்றும் திருவருட் பிரகாச வள்ளலார் என்று சொன்னால்தான் அனைவருக்கும் மிகத் தெளிவாக தெரிகிறது இந்த திருநாமத்தை ராமலிங்க அடிகளாருக்கு சூட்டிய பெருமையும் அவரையே சேர்கிறது.

திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் முதலில் வெளியிடப்பட்டது அந்த திருமுறைகளில் வழங்கியவர் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிடப்பட்டுள்ளது அதனை கண்ட வள்ளலார் திருவருட் பிரகாச வள்ளலார் என ஏன் அச்சிட்டீர் என்று  வினவ அதற்கு பதில் ஏதும் கூறாமல் தொழுவூர் வேலாயுத முதலியார் அமைதியாக இருந்தார் பிறகு அதற்கு வள்ளல் பெருமானார் 
சமாதானம் செய்யும் வகையில் திருஅருட்பிரகாச வள்ளல் யார் என்னும் சிதம்பரம் ராமலிங்கம் என்று இறைவனை யார் என்று தேடிக்கொண்டு இருக்கும் ராமலிங்கம் என்று தன்னடக்கத்திலே அச்சடிக்க சொன்னார்.

ஒருவழியாக பல முயற்சிகளுக்குப் பிறகு திருவருட்பா என்னும் ஞானநூல் நம் கைகளுக்கு கிடைத்தது.

திருவருட்பா வெளிவந்த பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்பல அதாவது அருட்பா மருட்பா வாதங்கள் எழத்தொடங்கின.
திருவருட்பா என்று பெயரிட்டதை சிலர் ஏற்றுக்கொள்ள இயலவில்லை வள்ளலார் பாடல்களுக்கு திருமுறைகள் என்று பெயரிட்டது  சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வைதீக மரபிலே மற்றும் சித்தாந்த மரபிலே ஊறிப்போன பலரால் வள்ளலாருடைய சிறப்பு தெரிந்திருந்தும் அவர்களால் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
இப்படி திருவருட்பாவிற்கு வந்த எதிர்வினைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கியவர்கள் வள்ளலாரின் மாணாக்கர்கள்.

வள்ளலாருக்கு உலகியலில் சிறிதும் நாட்டம் இல்லை இது போன்ற காரியங்களில் ஈடுபடவும் விரும்பவில்லை ஆனால் தன்னுடைய குருநாதரின் பெருமையை நிலைநாட்டியவர் தொழுவூர் வேலாயுத முதலியார் பல மறுப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார் என்பதனை அருட்பா மருட்பா என்னும் நூலினை ஆய்வு செய்து உயர்திரு சரவணன் என்பவர் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த நூலிலே வள்ளல் பெருமானுக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்களும் வள்ளல் பெருமானுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட வாதங்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய காலகட்டத்தில் தொழுவூர் வேலாயுத முதலியார் மற்ற சீடர்களும் வள்ளலாருக்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பல நூல்களை வெளியிட்டு எதற்காகவும் பின்னோக்கி செல்லாமல் திருவருட்பாவிற்கு அந்த சிறப்பு இருக்கிறது தகுதி இருக்கிறது திறமை இருக்கிறது வளமை இருக்கிறது என்று போராடி  நிரூபித்தவர்கள் வள்ளலார் உடைய மாணாக்கர்கள்.

இப்படி வள்ளலாரின் மாணாக்கர்கள் வெளியிட்ட நூல்களின் அடிப்படையில் இறுதியாக இஸ்லாமிய அன்பர் உயர்திரு தெய்வத்தம்பி பாவலர் அவர்கள் (இவர் ஒரு அவதானியார்) இந்த நூல்களை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் இறுதியாக அவர் வாதம் செய்து திருவருட்பா அருட்பாதான் என்று நிலை நாட்டினார்.

இப்படி இன்று நம் கைகளிலே அருள் குழந்தையாக திகழும் திருவருட்பா வெளி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் வள்ளல்பெருமான் உடைய மாணவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தருமச்சாலை
............................

இன்று உலக உயிர்களின் பசிப்பிணி போக்கும் ஆலயமாக அற்றார் அழிபசி தீர்க்கும் திருக்கோவிலாக விளங்கிவரும் தருமச்சாலையை திருவருட்பிரகாச வள்ளலாரின் சித்திக்கு பிறகு சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளலாரைப் போன்று மிகத் திறம்பட நடத்தியவர்கள் வள்ளலாரின் மாணாக்கர்கள் மற்றும் சீடர்கள்.

வள்ளலார் தான் சித்தி அடைவதற்கு முன்பு சன்மார்க்க சங்கத்தை தொழுவூர் வேலாயுத முதலியாரின் பொறுப்பிலும் சத்திய தரும சாலையை கல்பட்டு ஐயா பொறுப்பிலும் சத்திய ஞான சபையை ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் பொறுப்பிலும் வள்ளலார் இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடன் இரண்டறக் கலந்த சித்தி வளாகத்தை சேலம் ஒயிட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பொண்ணு ஞானாம்பாள் என்ற அம்மையாரின் பொறுப்பிலும் ஒப்படைக்கிறார்
 (இந்த அம்மையார் சேலத்திலிருந்து  மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் வள்ளலாருக்கு பிறகு சித்தி வளாக தீபத்தை பாதுகாக்கும் பணியை இந்த அம்மையார் தான் மேற்கொள்கிறார்) .

இவர்கள் அனைவரும் வள்ளல் பெருமானை கண்டு வள்ளல் பெருமானை வணங்கி அவருக்கு அடிமை பூண்டவர்கள்.

சத்திய தருமச்சாலையை திருஅருட்பிரகாச வள்ளலார் சித்தி அடைந்த பிறகு மிகச் சிறப்பாக கல்பட்டு ஐயா முன்னின்று நடத்தினார்கள் அதன்பிறகு அவருடைய சீடர் நெல்லூர் அய்யா வழி நடத்தினார்கள் அவருக்குப் பிறகு கல்பட்டு ஐயா உடைய மாணவர் சுப்பராயலு பரதேசி அவர்கள் வழி நடத்தினார்கள் அதன்பிறகு கொண்டா ரெட்டி அவர்கள் வழி நடத்தினார்கள் அந்தக் கால கட்டங்களில் தருமச்சாலைக்கு மிகவும் உதவிகரமாக முன் நின்று உதவியவர் கட்டமுத்துபாளையம் 
நாராயணரெட்டி அவர்கள் முன்னின்று நடத்தினார்கள்.
இப்படி வள்ளலாரின் சித்திக்கு பிறகு அவருடைய சீடர்கள் சத்திய தருமச்சாலையை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னின்று வழி நடத்தினர்.

வள்ளலார் 1865-ம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தை வடலூரில் ஆரம்பித்தார்.
(வள்ளலார் 1856 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் ஒரு அமைப்பை அமைத்தார் பின்னர் அந்த அமைப்பானது சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.)

இன்று சன்மார்க்க சங்கம் தமிழகத்தில் இல்லாத கிராமங்களே கிடையாது தமிழகம் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் சன்மார்க்க சங்கம் அமையபட்டுவிட்டது.

இதற்குக் காரணம் யார் என்று சொன்னால் சமரச பஜனை ச.மு.கந்தசாமி பிள்ளை ஐயா அவர்களே. வள்ளலார் உடைய நேரடி மாணவர்.

இவர்கள் தனது சகாக்களுடன் கிராமம் கிராமமாக சென்று சன்மார்க்க சங்கத்தை நிறுவி இருக்கிறார்கள்.
திருவருட்பாவை அச்சிட்டு இலவசமாக வெளியிட்டார்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் முத்தையா செட்டியார் அனைத்து பொருள் உதவிகளையும் செய்ய அவற்றின் மூலம் ஆறு திருமுறைகளையும் அச்சிட்டு அனைவருக்கும் இலவச பதிப்பாக கொடுத்துள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று திருவருட்பாவை அனைத்து மக்களுக்கும் கொடுத்து சமரச சுத்த சன்மார்க்கத்தை அனைவருக்கும் விளக்கி சென்ற இடங்களிலெல்லாம் சுத்த சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

உண்மையாக ச.மு கந்தசாமி பிள்ளை ஐயா இல்லை என்றால் இன்று தமிழகத்தில் உள்ள கிராமங்களில் சன்மார்க்க சங்கங்கள் என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

சற்று யோசித்துப் பார்த்தோமானால் அன்றைய காலகட்டங்களில் நான்கு சக்கர வாகனங்கள் கார் வசதி எதுவும் கிடையாது அவர்கள் கூட்டமாக குழுக்களாக அனைத்து கிராமங்களுக்கும் நடந்தே போயிருக்கிறார்கள்
பஜனை செய்வதற்கு தேவையான அனைத்து இசைக் கருவிகளையும் தூக்கிக்கொண்டே சென்றுள்ளார்கள் அதோடு மட்டுமில்லாமல் அன்னதானம் செய்வதற்கு தேவையான அனைத்து பாத்திரங்களும் பொருட்களையும் பண்டங்களையும் தூக்கி சென்றுள்ளார்கள் மேலும் சென்ற இடங்களிலெல்லாம் உணவு சமைத்து அங்கிருந்த ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து உள்ளார்கள் அவர்களுக்கு வள்ளலாரைப் பற்றியும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பற்றியும் ஆறு திருமுறைகளையும் வழங்கி பஜனை செய்து உள்ளார்கள்.
இப்படி அரும்பாடுபட்டு தெய்வத்திரு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்கள் சன்மார்க்கத்தை தமிழகமெங்கும் பரப்பினார்கள்.
(இப்படி ச.மு. கந்தசாமி பிள்ளை ஐயா அவர்களுடன் இசைக் கருவிகளை எடுத்துச் சென்று ஒவ்வொரு கிராமமாக சென்று திருவருட்பா பாடல்களை பாடி சன்மார்க்கத்தை பரவச் செய்த நல்ல உள்ளம் படைத்தவர்கள் இன்றும் அவர்கள் வழித்தோன்றல்கள் இருக்கின்றார்கள்)

இப்படி வள்ளலாரின் மாணவர் ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களுடைய அரும்பணியால் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டி எங்கும் வள்ளலார் சன்மார்க்க சங்கமும் வளர ஆரம்பித்தது.

வள்ளலாரின் ஆறு திருமுறைகளும் 1867 ஆம் ஆண்டு வெளிவந்த பிறகு அதற்கு அடுத்தடுத்த காலகட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று பல (அதாவது மறுபதிப்பு) பதிப்புகளை உலக மக்களுக்கு அச்சிட்டு வெளியிட்டவர் வள்ளலாரின் சீடர்கள்தான்.

மிக மிக முக்கியமான ஒன்று இன்று நம் கைகளிலே திகழும் உரைநடைப்பகுதி என்னும் வள்ளலார் வெளியிட்ட அவருடைய கடிதங்கள் அவருடைய விண்ணப்பங்கள் அவருடைய உபதேசக் குறிப்புகள் மேலும் பல தலைப்புகளில் அவர் கொடுத்த விளக்கங்கள் மற்றும் அருள்நெறி மற்றும் பேருபதேசம் இவையெல்லாம் நமக்கு எங்கிருந்து கிடைத்தது என்று யோசித்துப் பார்த்தோமானால் அனைத்தும் சீடர்களின் முயற்சியால் பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு காலகட்டங்களில் அவருடன் வாழ்ந்தவர்கள் வள்ளலாரிடம் நேரடியாகப் பெற்ற அனுபவங்களை குறிப்பாக எடுத்து வைத்திருந்தார்கள் அவற்றையெல்லாம் அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களிடமிருந்து பெற்று அவற்றை தரம் பார்த்து இவை வள்ளலாரால் வழங்கப்பட்டது என்பதை ஆராய்ந்து அவற்றை எல்லாம் ஒன்று திரட்டி அவற்றை எல்லாம் செப்பனிட்டு அவற்றையெல்லாம் தொகுத்து உரைநடை என்னும் நூலில் நமக்கு தந்து அருளி உள்ளார்கள்.
உரைநடை என்னும் நூலில் ஒரு 30 முதல் 40% தான் வள்ளலார் நேரடியாக கைப்பட எழுதியது மீதி உள்ள அனைத்தும் மேலே சொன்னது போல அவருடன் நேரடியாக வாழ்ந்தவர்களிடம் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட குறிப்புகளின் சாரம்தான் உரைநடைப் பகுதியின் தொகுப்பு. 

இக்குறிப்புகளை எல்லாம் பின்னாளிலே தேடித் திரட்டி அவற்றை நமக்கு பதிப்பித்து வெளியிட்டவர் பதிப்புச் செம்மல் ஆ.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்.

அதுமட்டுமில்லாமல் ச.மு. கந்தசாமிப் பிள்ளை அவர்களே பல குறிப்புகளை பல பதிப்புகளை பல்வேறு நபர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று பதிப்பித்துள்ளார்.

சற்று யோசித்துப் பார்த்தோமானால் இந்த குறிப்புகளை எல்லாம் தேடிப்பிடித்து எடுப்பது என்பது மிகச் சாதாரண காரியம் இல்லை இன்றைய காலகட்டத்தில் இணையம் ( interner and Google)  அதாவது அறிவியல் துறை மிகவும் வளர்ந்து விட்டது அன்றைய காலகட்டத்தில் சற்று யோசித்து பார்த்தால் எந்த வசதிகளும் இல்லாத காலகட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு கூரை வீட்டிலும் இருப்பவர்களிடம் ஏதாவது ஒரு குறிப்பு இருக்கும் அதனை நேரடியாக சென்று வாங்கி வரவேண்டும் அதை வள்ளலார் தான் எழுதினாரா என்று செப்பம் பார்க்க வேண்டும் இப்படிப் பல ஆராய்ச்சி செய்து அதன்பிறகே உரைநடைப் பகுதியை வெளியிட்டுள்ளார்கள்.
இதைவிட ஒரு சீடராகவும் ஒரு மாணவராகவும் வேறு என்ன செய்ய முடியும்.

எந்த வசதியும் இல்லாத காலகட்டத்தில் வள்ளலாரைப் பற்றிய எந்த ஒரு வரலாற்று குறிப்புகளும் இல்லாத காலத்தில் அவருடைய நேரடி மாணவராக இருந்த கந்தசாமி பிள்ளை அவர்கள் (வள்ளலாருக்கு எங்கு எங்கு யாருடன் தொடர்பு இருந்தது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்) வள்ளலார் எங்கு எங்கு சென்றாரோ அங்கெல்லாம் நேரடியாக நடந்தே சென்று யார் யாரை சந்தித்தாரோ அவர்களை எல்லாம் நேரடியாக சந்தித்து வள்ளலாரைப் பற்றிய செய்திகளை வாங்கி பேசி எழுதி இவற்றை எல்லாம் சேகரித்து வள்ளலார் உடைய வரலாறு என்று ஒன்று வெளிவருவதற்கு ஆதார குறிப்புகளை சேகரித்து வெளியிட்ட புண்ணியவான் தெய்வத்திரு ச.மு. கந்தசாமி பிள்ளை அவர்களே.

வள்ளலார் வாழ்ந்த காலத்தில் விருத்தாச்சலத்தில் இன்றும் அமைந்துள்ள வீரசைவ குமாரதேவர் சன்னிதான மடத்திற்கு வள்ளலார் வருவார்கள் அங்கே தங்குவார்கள்.
அம்மடத்தில் வள்ளலார் மீது மிகவும் பற்றுக்கொண்ட அன்பர் ஒருவர் இருந்துள்ளார் அவர் பெயர் இப்பொழுது சரியாக கிடைக்கப்பெறவில்லை அவர் வள்ளல் பெருமானாரை அணுகி
நீங்கள் மிகப் பெரிய ஞானி மிக உயர்ந்தவர் நானோ மிகவும் ஏழையானவன் என்று கூறி அவருக்கு ஒரே ஒரு வேளை உணவு வழங்க வேண்டும் என்று அவர் மனம் ஏங்குகிறது உங்களுக்கு ஒருவேளை உணவு வழங்க வேண்டுமென்று மிகவும் ஆவலாக உள்ளேன் ஆனால் நான் மிகவும் ஏழை என் வீடு ஒரு குடிசைதான் தாங்கள் வருவீர்களா என்று கேட்டுள்ளார்.
அதனைக் கேட்ட வள்ளலார் நீங்கள் போங்கள் நான் இந்த நேரத்திலே வருவேன் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளார்.

வள்ளலார் சொன்னதைப் போலவே சொன்ன நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு அவருடைய வீட்டில் ரச அன்னமும் பருப்புத் துவையலும் அவருடைய வீட்டிலே ஆகாரம் செய்துள்ளார்கள்.
இதனை ச.மு. கந்தசாமிப் பிள்ளையவர்கள் நேரடியாகச் சென்று திரட்டிய ஆதாரங்கள்.

அதுமட்டுமில்லாமல் பிரபந்தத்திரட்டு என்றும் சரித்திரக் கீர்த்தனைகள் என்றும் சுமார் நான்காயிரம் கீர்த்தனைகளை தனது குருவாகிய திருஅருட்பிரகாச வள்ளலார் மீது ச.மு. கந்தசாமிப் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

உலக வரலாற்றிலேயே ஒரு ஞானியை குறித்து இவ்வளவு நூல்கள் வெளி வந்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தோமானால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் ஆம் வள்ளலார் மீது இவ்வளவு பிரபந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
வள்ளலாரை குறித்து அவ்வளவு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

வள்ளலாரைப் பாடி பாராட்டு தொழுது அழுது புகழ்ந்து அத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன.

வள்ளலார் மீது அவருடைய முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் எழுதி வெளியிட்ட பாக்களின் தொகுப்பு.

திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை என ஆறு திருமுறைகள் வெளியிட்டுள்ளார்.

திருவருட்பிரகாச வள்ளலார் வாயுறை வாழ்த்து.

திருவருட்பிரகாச வள்ளலார் திருப்பள்ளி எழுச்சி.

திருவருட்பிரகாச வள்ளலார் தோத்திரப் பாடல்கள் பல தலைப்புகளில்.

திருவருட்பிரகாச வள்ளலார் சதபங்கி.

""திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறையீடு""  1912 ஆம் ஆண்டு நூல் முழுவதும் வெளியிடப்பட்டது.
தொகுத்து வழங்கியவர் உபய கலாநிதி புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

வள்ளலார் மீது திவ்ய பிரபந்தங்கள், பாடல்கள், பாக்கள் பாடியவர்கள்.

1.தொழுவூர் வேலாயுத முதலியார்.
2.பொன்னேரி சுந்தரம்பிள்ளை(வள்ளலாரின் அண்ணன் மருமகன்).
3. காரணப்பட்டு ச.மு.முகந்தசாமிப் பிள்ளை.
4. கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்.
5. ஸ்ரீமத் தண்டபாணி சுவாமிகள்.
6. அரண்வாயில் வேங்கடசுப்பு பிள்ளை.
7. வேலூர் பத்மநாப முதலியார்.
8. பெங்களூரு ராகவலு நாயக்கர்.
9. திரிசிரபுரம் மா. லோகநாதன்.
10. சென்னை சூளை சோமசுந்தர நாயக்கர்.
11. இராமலிங்க நமாம்யஹம்.
12. கா.நமச்சிவாயர்.
13. யோகி சுத்தானந்த பாரதியார்.
14. பொன்னம்மாள் அம்மையார்.
15. பண்டிதை அசலாம்பிகை அம்மையார்.

வள்ளலார் உடைய சீடர்அரண்வாயில் வேங்கடசுப்பு பிள்ளை அவர்கள் திருவருட்பாவின் முதல் திருமுறை முழுவதற்கும் உரை எழுதியுள்ளார்கள்.
இங்கித மாலைக்கும் மற்றும் மகாதேவமாலைக்கும் உரை எழுதியுள்ளார்கள்.

மகாதேவமாலைக்கு அவர் சைவ சித்தாந்தக் கருத்துக்களை எடுத்து கொடுத்த விதம் மிக அருமையாக ஆச்சரியமாக இருக்கும் விதத்தில் அமையப் பெற்றது.

இதுபோன்ற பிரபந்தங்கள் இதுவரை வேறு ஞானிகளுக்கு வழங்கப்படவில்லை என்பது வள்ளலாருக்கு உரிய சிறப்பு.

வள்ளலாரின் மாணாக்கர்கள் மற்றும் சீடர்கள் அணுவளவும் ""நான் எனது"" என்ற எண்ணம் இல்லாது வள்ளலாருக்கு அடியவர்கள் ஆக இருந்துள்ளனர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக சத்திய தருமச்சாலையை நடத்திய கல்பட்டு ஐயா மற்றும் அவருடைய சீடர்கள் பற்றிய குறிப்புகளை அவர்கள் சத்திய தரும சாலையிலே எங்கும் குறித்து வைக்கவில்லை.

வள்ளலாருக்கு பிறகு சன்மார்க்க சங்கத்தை வழிநடத்திய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் அதற்கான குறிப்புகளை எங்கும் குறித்து வைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் தோறும் பட்டி தொட்டி எங்கும் நடந்தே சென்று சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தி வள்ளலாரைப் பற்றி அனைத்து புகழ் பரப்பிய சமு கந்தசாமிப் பிள்ளையவர்கள் அதற்கான குறிப்புகளை எந்த இடத்திலும் விட்டு வரவில்லை.

சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலாரின் சித்திக்கு பிறகு கவனித்து வந்த சேலம் பொன்னம்மா அம்மையார் அவர்கள் அதற்கான குறிப்பை எங்கும் விட்டு வைக்கவில்லை.

இதன் மூலம் நான் எனது என்ற எவ்வித எண்ணமும் அவர்களிடம் வெளிப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர்கள் அனைவரும் விரும்பியது வள்ளலார் விரும்பியது போல ஏழை பணக்காரன் ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் அனைவரும் ஒன்றாக இணைந்து உலகியல் நடத்த வேண்டும் என்று வள்ளலார் சொல்லுக்கு இணங்க வாழ்ந்தவர்கள்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...