_சித்தர்கள் வாழும் பூமியான சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கசுவாமி திருக்கோயில் வரலாறு:_
தெய்வ நம்பிக்கை சார்ந்த அப்படியான ஒரு விஷயம்தான் மலைகளில் ஏறி அங்குள்ள தெய்வங்களை வழிபடுவதும். இன்னும் சொல்லப் போனால், குறிப்பாக சித்தர்கள் அருளும் மலையாக இருந்துவிட்டால், அங்கே சென்று வழிபட பலரும் விரும்புவார்கள். அப்படி பக்தர்கள் பலரும் சதுரகிரி மலைக்குச் சென்று, அங்குள்ள இறைவனையும் சித்த புருஷர்களையும் வழிபடுவதை இன்று நாம் காணவே செய்கிறோம்.
இளைஞர்களுக்கு மலையேறுதல் என்பது ஆகச்சிறந்த பொழுது போக்காக இருக்கிறது. இயற்கையின் ரம்மியத்தால் ஈர்க்கப்பட்டு இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், மன அமைதிக்காகவும் அதிகமாகப் படையெடுக்கின்றனர்.
அப்படி அதிகமாகப் படையெடுக்கும் ஓர் இடமாக சதுரகிரி இருக்கிறது. திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை. இங்கு அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக வருகின்றனர்.
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர் மலைப் பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த மலைப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இந்த வனப்பகுதியானது கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என அனுமானிக்கப்படுகிறது.
இங்கு உள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்குகின்றன. இது தியானம் செய்யவும், மவுனம் மேற்கொள்ளவும் விரும்புகிறவர்களுக்கு உகந்த இடம் ஆகும்.
தமிழ் வருடம் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் கூடி விரதமிருந்து நடைபயணம் மேற்கொண்டு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து மன அமைதியையும், தெய்வீக மேன்மையையும் கிடைக்கப் பெறுகிறார்கள்.
நாலாபுறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் "சதுரகிரி" என அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதால் இப்பெயர் என்பதும் ஒரு கூற்று. சுந்தரமகாலிங்கம் சன்னதியில் மஹாலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது இக்கோயிலின் சிறப்பு.
இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது.
மேலும் சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.
மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கி வருவதாக நம்பப்படுகிறது.
ஐந்து கோவில்கள்:
இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன
1.மகாலிங்கம்
2.சுந்தரமூர்த்தி லிங்கம்
3.சந்தன மகாலிங்கம்
4.இரட்டை லிங்கம்
5.காட்டு லிங்கம்
சதுரகிரி மலை சுந்தர மகாலிங்கம் தல வரலாறு :
நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் இப்பகுதிக்கு சதுரகிரி என பெயர் ஏற்பட்டது. இந்த சதுரகிரி வனப்பகுதி மொத்தம் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. புராணங்களின் படி இங்கு வாழ்ந்த பச்சைமால் எனும் இடையர் குல வாலிபன் தனது மனைவி சடைமங்கையுடன் வாழ்ந்து வந்தான். சடைமங்கை தினமும் பசும்பாலை தனது மாமனாரிடம் கொடுத்து விட்டு வருவது வழக்கம். அப்படி ஒருமுறை அவள் பசும்பாலை கொண்டு செல்லும் வழியில் ஒரு துறவி அந்த பாலை தனக்கு குடிக்க தருமாறு கேட்டார். சடைமங்கையும் கொடுத்தாள். இப்படி தினமும் அந்த துறவிக்கு பசும்பால் கொடுத்துவருவதை அறிந்த அவள் கணவன் பச்சைமால் அவளை அடித்து துரத்திவிட்டான், இதையறிந்த அந்த துறவி சடைமங்கையை, சடதாரி எனும் பெயர்கொண்ட காக்கும் தெய்வ சிலையாக மாற்றிவிட்டு மறைந்தார்.
தனது தவறை உணர்ந்த பச்சைமால் அன்று முதல் இங்கு தவமிருக்கும் சித்தர்களுக்கு பால் தானம் செய்து வந்தான். ஒரு முறை சிவபெருமான் ஒரு துறவி வேடத்தில் சிவபூஜைக்கு பால் கறக்கப்படும் பசுமாட்டின் பாலை கறந்து குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்டு கோபம் கொண்ட பச்சைமால் துறவியின் தலையில் தனது கோல் கொண்டு அடித்தான். அப்போது சிவன் தனது உண்மை வடிவில் தோன்றி அனைவர்க்கும் கட்சி தந்தார். பச்சைமாலுக்கு மோட்சம் அளித்து சித்தர்களின் வேண்டுகோளின் படி இம்மலையிலேயே மகாலிங்கம் என்ற லிங்கமாக தோன்றினார். இன்றும் இந்த லிங்கத்தின் தலை பகுதியில் அடிபட்ட வடுவிருப்பதை காணலாம்.
இந்த சதுர கிரி மலையில் பல லிங்க கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் சில சித்தர்கள் ஸ்தாபித்ததாகவும் இருக்கின்றன. அகத்திய சித்தர் இந்த மலையில் தங்கி தவமியற்றிய போது ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளார். பிற்காலங்களில் சுந்தரானந்த சித்தர் அகத்தியர் பூஜித்த அந்த லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்ததால் பிற்காலங்களில் அந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்” என அழைக்கப்படலாயிற்று.
இங்கு “சந்தன மகாலிங்கம்” கோவில் இருக்கிறது. பார்வதி தேவி இந்த லிங்கத்தை சந்தனம் கொண்டு பூஜித்து சிவனின் ஒருபாதியாகும் அர்த்தநாரீஸ்வர உருவத்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சந்தன லிங்கத்தை சட்டைநாதர் சிதறும் வழிபட்டுள்ளதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.
சதுரகிரி மலை ஏறும் வழியில் ரெட்டை லிங்க கோவில் இருக்கிறது. ராமதேவர் எனும் சித்தர் இந்த ரெட்டை லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று தொலைவில் “தவசி பாறை” என்ற ஒரு இடம் இருக்கிறது. இப்பகுதியில் இருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. பார்வதி தேவி இப்பகுதிக்கு வந்த போது, உடன் வந்த சிவலோக பணிப்பெண்கள் இத்தீர்த்தத்தில் நீராடும் போது மஞ்சள் தேய்த்து குளித்ததால், இங்கிருக்கும் நீர் மற்றும் மண் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் என கூறுகிறார்கள்.
சந்தன மகாலிங்கம்:
சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாக தனியாக காட்சியளிக்கிறார். மலை அருவிக்கரையில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசை நாளில் இலட்சக் கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள்.
இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை மற்றும் பதினெண் சித்தர்கள், சனி பகவான், முருகன் மற்றும் விநாயகருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
பெரிய மகாலிங்கம்:
லிங்க வடிவ பாறை இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பிரமாண்டமாய் நிற்கும் சிவலிங்கம் போன்ற பாறையின் பின்பகுதியில் அரசமரத்தின் வேர்கள் சிவனின் ஜடாமுடிபோல் பற்றி படர்ந்து நிற்பதை நேரில் பார்க்கும்போது மனதில் ஏற்படும் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரமுடியாதுதான்.
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது.
இரட்டை லிங்கம்:
சுயம்புவான இந்த இரட்டை லிங்கங்களுக்கு வழிபாடுகள் மற்றும் பூஜைகளை சித்த புருஷர்களுள் ஒருவரான ராம தேவர் ஆதி காலத்தில் செய்து வந்தார். இதற்காக சந்நிதியின் அருகே ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்தார் இவர். தற்போதும், இரட்டை லிங்கம் சந்நிதிக்கு எதிரே காணப்படும் உயர்ந்த மலையில்தான், 'ராமதேவர் குகை' இருக்கிறது.
லிங்க வடிவ அம்பிகை:
சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.
குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள ஏசி பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.
முன்பு வனத்துறை இங்கு செல்ல அனுமதி கொடுத்தது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்துள்ளது வனத்துறை.
இந்த தவசிப்பாறையில்தான் சித்தர்கள் அதிகம் இருப்பதாகவும் சில நேரங்களில் தவசிப்பாறையில் சித்தர்கள் இரவு நேரத்தில் சிவனை நினைத்து
ஆராதனை மற்றும் நடனங்கள் எல்லாம் நிகழ்த்தி இருப்பதாகவும் அவர்கள் ஒளி ரூபத்தில் சிலருக்கு தெரிந்துள்ளதாகவும் எல்லாம் பல பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
ஆன்மிகமும் அமானுஷ்யமும் கலந்த ஒரு அதிசயமான இடமாக தவசிப்பாறை இன்றளவும் காணப்படுகிறது. சதுரகிரிக்கு சென்றால் மேலே தவசிப்பாறைக்கு செல்ல முடியாவிட்டாலும் 18 சித்தர்கள் வாழும் தவசிப்பாறை கீழிருந்தே தத்ரூபமாக தெரியும் கீழிருந்தாவது தவசிப்பாறையை நோக்கி ஒரு கை கூப்பி வணங்கி விட்டு வாருங்கள்.
சதுரகிரி மலை சிறப்பு:
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களை சேர்ந்தது தான் இந்த சதுரகிரி மலை. வனங்களும், தூய்மையான அருவிநீர் மற்றும் பல அற்புத மூலிகைகளை கொண்ட பகுதியாக இந்த சதுரகிரி மலை இருக்கிறது. இதன் காரணமாக பழங்காலந்தொட்டே இந்த சதுரகிரி மலை சித்தர்களின் இருப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. வருடத்திற்கொருமுறை இந்த சதுரகிரி மலை பாதயாத்திரை மேற்கொண்டு, இங்கிருக்கும் தீர்த்தங்களில் நீராடி, சிவபெருமானை வழிபடுவதால் எப்பேர்ப்பட்ட உடல்நலக்குறைபாடுகளும் நீங்குவதாக பல வருடங்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் அனுபவ வாக்குமூலமாக இருக்கிறது.
மலைப் பயணம்:
சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோவில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் இருக்கின்றன. இந்தப் பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்ரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத் தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. திடகாத்திரமான இளைஞர்கள் மட்டுமே இங்கே செல்ல முடியும். மிகவும் செங்குத்தான பாதை இது. இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு, சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுகிறது. அதைக் கடந்து சென்றால், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோவில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோவில் வரும். பின்னர் மகாலிங்கம் கோவிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம் ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். இவர் பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். “சிவபெருமானே.. தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள் என்பதை, என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்” என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “நான் உம்மை நினைக்கவில்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னிதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு வணிகர் ஒருவருக்கு சிவன் கோவில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால் பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்” என்றார். வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னிதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை ‘பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் சதுரகிரி யாத்திரை மேற்கொள்கின்றனர். சித்ரா பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரி மலை பாதயாத்திரை மற்றும் கிரிவலம் வந்து சிவனை வழிபடுகின்றனர். மகாசிவராத்திரி அன்று இங்கிருக்கும் அனைத்து லிங்க கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திருமணம், குழந்தை பேறு, நோய்கள் நீங்க, தொழில் வியாபாரம் மேம்பட என பலவிதமான கோரிக்கைகள் சதுரகிரி யாத்திரை மேற்கொண்டு சிவனை வழிபடுவதால் நிறைவேறுவதாக கூறுகிறார்கள். இன்றும் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவிலும், அருவமாகவும் சித்தர்கள் வாழ்வதால் இங்கு வந்து வழிபாடும் போது அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்களும் கிடைக்கிறது.
அபூர்வ மூலிகைகள்:
சதுரகிரி மலையில் கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது. முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் உதகம் என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம் செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் உதகம் என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்தவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாகபயன்படுத்த வேண்டும்.
மலையில் வாழும் மலைவாழ் மக்கள் பளியர்கள் வழிபட்டு வந்து மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிகாலத்தில் சாப்டூர் பாளையக்காரராக இருந்த இராமகாடையா நாயக்கர் என்பவரால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவில்கள் கட்டப்பட்டது. 1950 ஆம் ஆண்டு வரை இக்கோவில் சாப்டூர் பாளையக்காரர் பராமரிப்பில் இருந்து வந்தது. இம்மலை பகுதி 1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
கோவில் அமைவிடம்:
அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரிலிருந்து சற்று தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த சதுரகிரிக்கு செல்ல ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்தும், மதுரை மற்றும் விருதுநகரிலிருந்தும் பேருந்து வாடகை வண்டி வசதிகள் இருக்கின்றன.
போக்குவரத்து:
மதுரை, விருதுநகர் பகுதிகளிலிருந்து, திருவில்லிபுத்தூர்க்குச் சென்று, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலம் வத்திராயிருப்புக்கு செல்ல வேண்டும். வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மி. தொலைவில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் கோயிலின் அடிவாரமான தாணிப்பாறைக்குச் செல்ல ஆட்டோ அல்லது நகரப் பேருந்துகள் வசதிகள் உள்ளது.
தாணிப்பாறையிலிருந்து சந்தனமகாலிங்கம் கோயிலை அடைய, 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
ஓம் நமசிவாய.....
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.. க்ஷ
No comments:
Post a Comment