Monday, July 29, 2024

செம்மண் குன்றின் மேல் வீற்றிருக்கும் விலங்கல்பட்டு முருகன்!

செம்மண் குன்றின் மேல் வீற்றிருக்கும் விலங்கல்பட்டு முருகன்!

கடலூர் வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலும்,நெல்லிக்குப்பம் தெற்கே 5 கி. மீ தொலைவில் உள்ளது கடலூர்-திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலம் ஆற்றின் தென்கரையில் இருக்கிறது.

நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். கடலூர் துறைமுக நகருக்கு மேற்கேயும், திருவந்திபுரத்திற்குத் தெற்கேயும் அமைந்துள்ளது நீண்ட மலைத் தொடர். இந்த மலை கடலூர் குன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



செம்மண் மணற்பாறைகளும் காணப்படுகின்றன. இந்த மலைத் தொடரில் பல சிறப்பான திருத்தலங்கள் உள்ளன. திருவந்திபுரம், திருமாணிக்குழி, விலங்கல் பட்டு, மலையாண்டவர்கோயில், நடுவீரப்பட்டு சிவாலயம் போன்றவை.

இப்போது நாம் விலங்கல்பட்டு முருகனைப் பார்ப்போமா.. விலங்கல் என்றால் மலை எனப் பொருள் மலைமேல் உள்ள தலம் எனப் பொருள்கொள்ளலாம். நூறடி உயரக் குன்று அதன்மேல் முருகனாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. மலையின் தென்புறம் மேலே ஏறுவதற்குச் சரிவு படிக்கட்டுகளும், சரிவான ஒரு சாலையும் உள்ளன. சாலை வெறும் ஜல்லியாக உள்ளது, அதனால் நடந்தே மலையேறுவோம்.



ஐந்து நிலை கோபுரம் ஒன்று தெற்கு நோக்கி உள்ளது, படிக்கட்டுகள் தென்புறமே உள்ளது. முருகன் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது. அதில் மயிலும் பலிபீடமும் 
உள்ளது. சுற்றிவர அகலமான பிரகாரம் உள்ளது. கிழக்குப் பகுதியில் இடும்பன் சிலை கொண்ட மாடமும், ஆதிவேல் சன்னதி ஒன்றும் உள்ளது. வடபுறத்தில் பக்தர்கள் காவடி வைத்தல், உணவருந்துதல் செய்ய நீண்ட தகர கொட்டகை உள்ளது.

இங்குள்ள மூலவர் சிவசுப்ரமணியர் சிலையின் நெற்றியில் சிவலிங்கம் உள்ளது சிறப்பு, இதனை வேறு எங்கும் காண இயலாத ஒன்றாகும். இக்கோயில் ஒரு தனிமையான மலையில் இருப்பதால் காலை பூஜை செய்துவிட்டு அரைமணியில் அர்ச்சகர் கிளம்பிவிடுகிறார், மாலை ஐந்து மணிக்கு வந்து பூஜை செய்துவிட்டு ஒரு மணிநேரம் இருந்து விட்டுக் கிளம்பிவிடுகிறார். கார்த்திகை நாட்கள், முழுநிலவு நாட்களில் போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மக்கள் அதிகம் வருகின்றனர்.

பங்குனி உத்திரம் இங்குச் சிறப்பானது. காலை,மாலை வேளையில் கெடில நதியின் ஈரக்காற்றும், தென்புற பசுமை வயல்களின் மரகதப்பச்சையும், தென்னையின் உச்சியில் நின்று அகவும் மயிலும், தூரத்து மலையாண்டவர் கோயிலில் ஒளிரும் மின்விளக்கும், இக்கோயிலின் மெல்லிய மணியோசையும் உங்கள் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும்.

 ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...