Monday, July 8, 2024

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர் தஞ்சாவூர்..

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்,
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்  –  ஆண்டளக்கும் ஐயன்
உற்சவர்  –  ஸ்ரீரங்கநாதர்
தாயார்  –  பார்க்கவி
தல விருட்சம்  –  புன்னை, பாடலி
தீர்த்தம்  –  சூர்ய, சந்திர தீர்த்தம்
ஆகமம்  –  பாஞ்சராத்ரம்
பழமை  –  1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்  –  ஆதனூர்
மாவட்டம்  –  தஞ்சாவூர்
மாநிலம்  –  தமிழ்நாடு

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையைத் தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூவுலகில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்தார்.
தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “நான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளைத் திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலைத் திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார்.
 

திருமங்கையாழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், “உங்களுக்கு உதவி செய்ய அரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்” என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி “இம்மரக்கால் கேட்டதைக் கொடுக்கக்கூடியது. அரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், “மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்” என்றார். திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி, அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் “நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?” என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள்.

சிவன், பிரம்மாவின் ஒரு தலையைக் கிள்ளி எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையைத் தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மகத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் அத் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் “ஆதனூர்” (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள்.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் –கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்.

             
திருவிழா:

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.

பிரார்த்தனை:

இங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ நைவேத்யம் படைத்து வழிபடலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...