Thursday, August 1, 2024

63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ_நாயனார் குருபூஜை ஆடி_திருவாதிரை....

63 நாயன்மார்களில் சிதம்பரம் என்னும் தில்லையில் தில்லைவாழ் அந்தணர்கள் மணிமுடி சூட்ட மறுத்து, 
நடராஜப்பெருமானின் திருவடியையே மணிமுடியாகப் பெற்ற,
63 நாயன்மார்களில் ஒருவரான 
#கூற்றுவ_நாயனார்
குருபூஜை இன்று:
(#முக்தி_நாள்) 
(#ஆடி_திருவாதிரை)

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.
திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.

சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை.
களந்தை என்னும் ஊரில் இருந்த அம்மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

‘எல்லாம் அவனின் திருவருள்’ என்ற எண்ணத்தினைக் கொண்டவராக இருந்ததால் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். மேலும் பலவகையான சிவத்தொண்டுகளிலும் ஈடுபட்டு பேரின்பம் கண்டார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர் குறுநில மன்னரான கூற்றுவ நாயனார். இவர் சிவபெருமான் மீது தீராத பக்தியை உடையவர். சிவனுக்குரிய ஸ்ரீ பஞ்சாட்சர மந்திரத்தை இடையறாது சொல்லி வந்தார். சிவனடியார்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார்.

தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமான் தன் திருவடிகளை கூற்றுவ நாயனார் தலையில் முடியாக வைத்துப் பெருமைப்படுத்தினார்.
இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை, சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில்..
“ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்”
என்று போற்றுகிறார்.

#கூற்றுவர் என்ற சிற்றரசர்:

களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். இவர் களப்பால் (களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும்) என்னும் சிவதல நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிவபெருமானது திருநாமத்தை நாள்தோறும் ஓதியும், சிவனடியார்களுக்கு தொண்டு செய்தும் வாழ்ந்து வந்தார். அந்த ஒழுக்கத்தின் காரணத்தினால் இடைப்பட்ட வலிமையினால் நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று எதிரிகளுக்கு கூற்றுவன் போல விளங்கினார். [பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் திருப்பெயர் பெற்றார்] அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது.

தனது தோள் வலிமையினால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வள நாடுகளை எல்லாம் கவர்ந்தார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

#முடியுடை மன்னர்:

இறைவனாரின் அருள் வலிமையைப் பெற்றிருந்ததால் அவருக்கு எல்லா வலிமைகளும் தானாகவே கிடைத்தது. தேர்ப் படை, காலாள் படை, குதிரைப் படை மற்றும் யானைப் படை என நால்வகையான படைகளும் நிரம்பி இருந்தன.

ஆதலால் அவர் சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மூவேந்தர்களையும் மேலும் பல மன்னர்களையும் போரில் வென்று வெற்றி முகத்துடன் விளங்கினார். அவருடைய அரசும் விரிந்து பரந்து விளங்கியது.

தமிழ்நாட்டில் மூவேந்தர்களாகிய சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமே மணிமுடி அணியும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். ஆதனால் அவர்களை முடியுடை மன்னர்கள் என்று வழங்குவது மரபு.

குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை.

மூவேந்தர்களின் வழியில் பிறக்கவில்லை என்ற குறையைத் தவிர முடிசூடிக் கொள்ள எல்லாத் தகுதியும் அவரிடம் நிறைந்து விளங்கியது.

மணிமுடியை தாமாகவே மன்னர்கள் சூடிக் கொள்வதில்லை. வேளாளச் செல்வர்கள் தரச் சிறந்த அந்தணர்கள் உரிமையுடைய மன்னர்களுக்கு மணிமுடியைச் சூட்டுவார்கள்.

தில்லை, திருவாரூர், உறையூர் மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் சோழ மன்னர்கள் முடிசூடிக் கொள்ளுவது வழக்கம்.

‘இப்போது நாட்டின் ஆட்சிமுறை நம் கையில் இருப்பதனால் நாமே முடி புனைந்து அரசாள்வது முறை’ என்ற கருத்து கூற்றுவ நாயனாரின் மனதில் தோன்றியது.

ஆகவே கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோவில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர்.

ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவ நாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள் “சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களுக்கு மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்து விட்டனர்.

சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால் அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சினர்.

ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழநாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் சோழ நாட்டினைவிட்டு சென்றதற்கான காரணம் தெரியாமல் கூற்றுவ நாயனார் வருந்தினார்.

இறைவனின் திருவடி
‘தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக்கொள்வேன்’ என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்ததை எல்லோருக்கும் முதலவான இறைவனார் நிகழ்த்தியை எண்ணி நெகிழ்ந்து பரவினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர்.

தில்லைவாழ் அந்தணர்களும் இறைவனார் கூற்றுவ நாயனாருக்கு திருவருள் புரிந்ததை அறிந்ததை அறிந்து அவரிடம் பேரன்பு கொண்டு தில்லை திரும்பினர்.

பின்னர் கூற்றுவ நாயனார் இறைவனார் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டு பேரின்பம் கண்டார். இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை இறையருளால் பெற்றார்.

#சிவபெருமான் திருவடியே மணிமுடி:

திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய கூற்றுவ நாயனார், அரசருக்கு உரிய முடி புனைதல் ஒன்று நீங்கலாக அரசியல் அங்கங்களை அனைத்தும் பெற்றிருந்தார்.

கூற்றுவ நாயனாருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தை இறைவனின் திருக்கோவில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார்.

மணிமகுடம் 
ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணி மகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள், இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.

தில்லையை அடைந்த கூற்றுவ நாயனார் நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார். சோழர் குலத்தில் தோன்றாதவருக்கு முடி சூட்டமாட்டோம் என்று அவர்கள் கூறிவிட்டனர்.

இவர்கள் அச்சமின்றி கூறிய வார்த்தை கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்து வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை துன்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.
கூற்றுவநாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக் கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார். “எம்பெருமானே இந்த அடியேனுக்கு தமது திருவடியையே முடியாக தந்தருள வேண்டும். அடியேனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா” என்று மனமுருக வேண்டினார். அன்றிரவு அவர் உறக்கத்தில் இருந்தபோது அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் தம்முடைய திருவடியை மணிமுடியாகக் சூட்டியருளினார்.

சிவபெருமானுடைய திருவடியையே மணி மகுடமாகக் கொண்டு, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் திருப்பணி செய்து கொண்டு நாட்டினை நீதிமுறையில் ஆட்சி புரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்து இன்பமெய்தினார்.

#குருபூஜை நாள்:

சிவபெருமான் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு செய்தும், சிவனுக்கும் அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தும் இறைவன் மகிழ நல்ல அரசாட்சி புரிந்த கூற்றுவர் நாயனாரின் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன (களந்தை) களப்பால் - கோயில்களப்பால் திருவாரூர் மாவட்டம் அ/மி. ஆதித்தேச்சரர் திருக்கோயிலில் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது.

இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்‘ என்று போற்றுகிறார்.

*கூற்றுவ நாயனாரின் 
அவதார முக்தி தலமான 
#அழகியநாத_ஸ்வாமி கோவில் 
#களப்பால் - தல வரலாறு
- தேவார வைப்புத் தலம்:
 
மூலவர் : ஆதித்தேச்சரர், அழகியநாதசுவாமி,
அம்மன் :பிரபாநாயகி, பண்ணேர் மொழியாள்,
பழமை : கி.பி. 850 - 890,
ஊர் : திருத்துறைப்பூண்டி (வழி), மன்னார்குடி (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்) .

தல வரலாறு:
இத்தலம் மக்கள் வழக்கில் களப்பால் என்றும் கோயில் களப்பால் என்றும் வழங்குகிறது. ஊர் - களப்பால்; கோயில் - ஆதித்தேச்சரம். களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின் இப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இது மருவி களந்தை என்றாயிற்று. இக்கோயில் விசயாலய சோழனின் மகன் ஆதித்தசோழன் (கி.பி. 850 - 890) கட்டுவித்தது. எனவே ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது. "கூற்றுவன் - களப்பாளன்", களப்பால் என்னும் சிவதல (திருவிசைப்பா) நகரத்தை உண்டு பண்ணித் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிற்றரசர். சிறந்த சிவபக்தியும் வீரமும் உடையவர். மூவேந்தர்களை வென்று சபாநாயகப் பெருமான் திருவடினை முடியாகச் சூடிக்கொண்டவர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர். இவர் பெயர் களந்தையாண்டான், களந்தையாளி, களந்தையுடையான், களப்பாளி என்று வழங்குகிறது.

இவரை "ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்" என்று போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

நாடுகளைப் பல கூற்றங்களாகப் பிரித்த காரணத்தால் கூற்றுவன் என்ற சிறப்புப் பெயர் வந்தது. - (ஆதாரம்: சூரியக்குலக் கள்ளர் சரித்திரம்).

சிறப்புக்கள் :

இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும். இது சுந்தரர் வாக்கில் இடம்பெற்ற வைப்புத் தலமுமாகும். இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் ஒருவரான கருவூர்த்தேவர் திருவிசைப்பா பாடியுள்ளார்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

முற்றியாற்றின் கரையில் அமைந்த தலம். இங்கு அழகியநாதசுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன. இவற்றுள் அழகியநாதசுவாமி திருக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும்.

அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டிய மன்னன் குலசேகரனின் கல்வெட்டு இத்தலத்து இறைவனை 'களப்பால் உடையார், ஆதித்தேச்சரமுடையார்' என்று குறிப்பிடுகிறது. (களப்பால் என்பது களந்தை என்று மருவிவரும். ஆதலின் இதுவே திருவிசைப்பா பாடல் பெற்றதாகும். இக்கோயிற் பதிகத்தில் அழகர் என்ற சொல்லால் இறைவனைக் குறிப்பது இதற்குரிய சான்றாகிறது.)

கூற்றுவ நாயனார் அவதரித்த பதி. கோயிலுள் கூற்றுவ நாயனாரின் மூலவுருவம் உள்ளது.

போன்:

அமைவிடம் மாநிலம் :
திருத்துறைப்பூண்டி (வழி), மன்னார்குடி (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்). தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்று மடப்புரம் தாண்டினால் இடப்பால் களப்பால் என்று கைகாட்டி உள்ளது. அச்சாலையில் சென்று இத்தலத்தையடையலாம், ஒருவழிச் சாலை.

இத்தலதிற்குப் பக்கத்தில் திருக்களர், கோட்டூர் (திருமுறைத் தலங்கள்), கீழ்க்கோட்டூர் மணியம்பலம் (திருவிசைப்பா தலம்) முதலிய தலங்கள் உள்ளன.
"ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன், அடியேன்" என்று போற்றுகிறது திருத்தொண்டத் தொகை... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...