Saturday, August 24, 2024

திருத்தலையாலங்காடு- நர்த்தனபுரிஸ்வர் கோவில் திருவாரூர்...



திருத்தலையாலங்காடு-
 நர்த்தனபுரிஸ்வர் கோவில்

தேவாரபாடல் :

தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான் தன்னை,
             சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை, 
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை,
          ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை, 
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை,
       மூஉருவத்து ஓர் உரு ஆய் முதல் ஆய் நின்ற 
தண்டத்தில்-தலையாலங்காடன் தன்னை,
                 சாராதே சால நாள் போக்கினேனே!.
தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும்நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளைவீணாள் ஆக்கினேன் என அப்பரால் பாடல்பெற்ற ஸ்தலம்.

ஊர்: திருத்தலையாலங்காடு, திருவாரூர் மாவட்டம்

மூலவர்: நர்த்தனபுரீஸ்வரர் ,நடனேசுவரர், ஆடவல்லநாதர்

அம்பாள்: உமாதேவி, திருமடந்தையம்மை, பாலாம்பிகை

ஸ்தல விருட்சம்: ஆலமரம்

தீர்த்தம்: சங்கு தீர்த்தம்

வழிபட்டோர்கள் : கபில முனிவர், தாருகாவன முனிவர்கள், காளி, சனி.

ஸ்தல வரலாறு : 

தமது தவ வலிமையால் அகந்தை கொண்ட தாருகாவன முனிவர்கள் வேள்வி செய்து ஏவி விட்ட முயலகன் என்னும் கொடிய அரக்கனை அடக்கிய சிவபெருமான், அம் முயலகன் மீது நடனம் ஆடிய தலம் இது. எனவே நர்த்தனபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. நடராஜர் சிலையில் ஐயனின் திருப்பாதங்களில் கீழ் முயலகன் இருப்பதை காணலாம். கபில முனிவர் பூஜித்து, தை அமாவாசை தினத்தில் சிந்தாமணியை பெற்றார். சரஸ்வதி தேவி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்றார்.

ஆலய சிறப்புகள்: 

அம்பாள் சன்னதியில் சனி பகவான் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது திருநள்ளாருக்கு அடுத்து இங்குதான். வரலாற்று சிறப்புமிக்க இடம் - சங்க காலத்தில் பாண்டிய நெடுஞ்செழியன் இவ்வூரில் போர் புரிந்து வென்றதால் தலையாலங்கானத்து செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என பெயர் பெற்றார். அப்பருக்கு தை அமாவாசை அன்று காட்சி கொடுத்த திருத்தலம்

தரிசன பயன்கள்:

 சங்கு தீர்த்தத்தில் நீராடுபவர்கள் குன்மம் , முயலக நோய், சித்தபிரமை, வெண்குஷ்டம் முதலிய நோய் தீரும். சனி தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

எப்படி செல்வது :
 கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8.கி.மி. தொலைவில் உள்ளது.

எங்கே தங்குவது: திருவாரூர், கும்பகோணம் 

தரிசன நேரம் :.காலை 8 மணி முதல் 10-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்து இருக்கும்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...