Monday, September 30, 2024

பனையபுரம் திருப்புறவார்பனங்காட்டூர் பனங்காட்டீஸ்வரர்.....

 சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான

தேவாரப் பாடல் பெற்ற திருமுறை தலங்களில் நடு நாட்டுத் தலமான, சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட,

தக்கன் பேறுபெற்ற,

சிபி சக்கரவர்த்தி முக்தி பெற்ற , சூரிய பகவான் வழிபட்ட தலங்களில் ஒன்றான 

#விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 

#பனையபுரம் என்ற 

#திருப்புறவார்பனங்காட்டூர் 

#பனங்காட்டீஸ்வரர்

(நேத்ரோதாரகேஸ்வர சுவாமி)

#சத்யாம்பிகை

(மெய்யாம்பிகை, புறவம்மை) திருக்கோயில் வரலாறு:


பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.


1) கட்டிடக்கலையில் உலக அதிசயத்திற்கு இணையான கோயில்.

2)புராணகால வரலாறு கொண்ட கோயில்.

3) தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் பெற்ற ஆலயம்.

4)தக்கன் பேறு பெற்ற ஆலயம்.

5) சிபிச்சக்கரவர்த்தி முக்தி பெற்ற தலம்.

6)இறைவனையும், இறைவியையும் சூரியன் ஏழு நாட்கள் ஒரு சேர வழிபடும் அரிய தலம்.

7) சோழ மன்னனின் குறு நாட்டு தலைநகரம்.

8)முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் காதலி பரவை நங்கை வாழ்ந்த ஊர்.

9) கண் கோளாறுகள் போக்கும் பரிகார தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக திகழ்வது, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள  பனையபுரம் அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்.


உலக அதிசயங்கள் ஏழு என்பது நாம் அறிந்ததே. இதற்கு இணையான ஓர் அதிசயம் நிகழும் ஓர் இடம் நம் தமிழகத்தில் இருக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி தானே? அதுவும் கண் கோளாறுகளை நீக்கும் தொன்மை வாய்ந்த தேவாரத்தலம்  இது என்பது மற்றொரு சிறப்பு.

இந்த அரிய ஆலயம் சென்னைக்கு தெற்கே 150 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, பனையபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.நீண்ட நெடிய வரலாற்று பின்னணி கொண்ட விளங்கும் இது ஒரு நடுநாட்டுத்  சூரியத்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் முதல் நாளில் தொடங்கி, தொடர்ந்து ஏழு நாட்கள், சிவனுக்கும், அம்பிகைக்கும் சூரியனால் நிகழ்த்தப்படும் சூரியபூஜை தான் இந்த உலக அதிசயம்.

இதை முழுமையாக அறியும் முன் இத்தலத்தின் பெருமைகளை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.


*மூலவர்: பனங்காட்டீஸ்வரர் என்ற நேத்ரோதாரகேஸ்வர சுவாமி

*அம்மன்: சத்யாம்பிகை

(மெய்யாம்பிகை, புறவம்மை)

தீர்த்தம்: பத்ம தீர்த்தம் 

தல விருட்சம்: பனை மரம் 

*புராண பெயர்: திருப்புறவார் பனங்காட்டூர் (பரவைபுரம்)

ஊர்: பனையபுரம் 

மாவட்டம்: விழுப்புரம் 


பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்,

இராமலிங்க அடிகள் 


*திருஞானசம்பந்தர் பாடிய பனையபுரம் தேவாரப் பதிகம்:


"திரையார் புனல்சூடீ தெரிவை பிரியாதாய்

வரதா அருளென்று வானோர் தொழவன்று

புரமூன் றெரிசெய்தாய் புறவார் பனங்காட்டூர்ப்

பரமா பவனேநின் பாதம் பணிவேனே.


*பனையபுரம்:


கல்வெட்டுகள் மூலம் இரண்டாம் ராஜேந்திர சோழ மன்னனின் (கி.பி 1052-1064) தேவியான பரவை நங்கை இத்தல இறைவனார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்ததால் ஏராளம் கொடையளித்தது தெரியவருகின்றது. இவரது பெயராலேயே ’பரவைபுரம்’ என்றழைக்கப்பட்டு பின்னர் பனையபுரம் என்றானது.


*சூரிய கிரணங்கள்:


சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்கு கருவறையிலிருக்கும் சிவலிங்கத்திருமேனியின் மீதும், சத்யாம்பிகை அம்பாள் மீதும் சூரியக் கதிர்கள் படுமாறு அமைக்கப்பட்ட சிறப்பான கட்டடக்கலைக் கொண்ட திருத்தலம்.


*தொன்மை சிறப்பு:


இராஜேந்திர சோழ வள நாட்டின் துணை கூட்டங்களில் ஒன்றான பனையூர் நாட்டின் உட்பகுதி நாடான புரையூர் நாட்டின் பறவை புரமாக விளங்கியதே, இன்றைய பனையபுரம்.பிற்கால சோழர் காலத்தில் தனியூராக விளங்கியது. பல ஊர்களின் தலைமை ஊருக்கு தனியூர் என்ற பெயர் உண்டு. இங்குள்ள சிவன் கோயில் நடு நாட்டின் பாடல் பெற்ற இருபதாவது தலமாகும்.

சோழனின் காதலி

பரவை நங்கைஇவ்வூரில் வாழ்ந்த நாட்டியப் பேரொளி பரவை நங்கையின்  மீது அளவு கடந்த காதல் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன், இவள் பெயரால் பல்வேறு கொடைகளையும், தான தர்மங்களையும் வழங்கினான். ஓர் அரசிக்கு இணையாக அவளை மதித்து வந்தான். இதற்கு ஆதாரமாக கோயிலின் பின்புறச் சுவரில் இரண்டாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1052− 1065) ஆறாவது ஆட்சியாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு விளங்குகின்றது. இக்கல்வெட்டின் மூலம் இராஜேந்திர சோழன் மற்றும் பரவை நங்கை ஆகிய இருவரின் சிலைகள் இருந்ததாகவும், அவற்றிற்கு விளக்கேற்றவும், நைவேத்தியம் செய்யவும் வழங்கப்பட்ட கொடைகளைப் பற்றியும் அறிய முடிகின்றது.ஆனால் கலைநயம் கொண்ட இக் சிலைகளின் இருப்பிடம் அறியப்படவில்லை. இதில் இவ்வூர் பரவைபுரம் என காணப்படுகிறது. இவளைப் பற்றிய குறிப்பு திருவாரூர் தியாகராஜர் கோயில் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இவள் பெயரால் பரவைபுரம் என்ற ஊரை உருவாக்கி, ஆலயம் எழுப்பப் பட்ட செய்தி காணப்படுகிறது.திருவாரூர் ஆலய மேற்கு கோபுர வாயில் அருகேயுள்ள ஒரு சன்னதியில்,முதலாம் இராஜேந்திர சோழன் ,பரவை நஙககை சிலைகள்,புடைப்புச் சிற்பமாக வணங்கிய நிலையில்,அமைந்துள்ளதை இன்றும் காணலாம்.பரவைபுரம் என்ற பெயர், பனையபுரமாக மருவி  இருக்க வாய்ப்பு உண்டு. பரவை நங்கையின் பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில், சித்திரை மாதத்தில் ஜோதி திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டது.


*சிபி மன்னன்:


சிபி மன்னன் என்ற சொல்லை புறவு +ஆர்  எனப் பிரித்துப் பொருள் கொண்டால் புறா நிறைவுற்ற இடம் என அறியமுடிகின்றது. வேடனால் வேட்டையாடப்பட்ட புறாவின் உயிர் காக்க, தன் தசையை அறுத்து தன் உயிரையும் விடத் துணிந்த சிபி மன்னனை தடுத்தாட்கொண்டு இடம் இது என புராணக்கதை கூறுகிறது. இத்தலத்தில் இது நிகழ்ந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இராஜ கோபுரத்தின் எதிரே உள்ள வாகன மண்டபத்திற்கு இருக்கும், நடுவரிசை தூணில் இக்காட்சி புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளதை இன்றும் காணலாம்.

சூரியன் பேறு பெற்றது

தக்கனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரியன், வீரபத்திரனால் தாக்கப்பட்டு பற்களையும்,பலத்தையும்இழந்தாது.  தன் சாபம் நீங்கி பழைய நிலையை அடைய, இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதாக, என தல புராணம் கூறுகிறது இதனை உறுதிப்படுத்தும் வகையில் இத்தலத்தில் ஆண்டு தோறும் சித்திரை ஏழு நாட்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.


*தக்கன் பேறு பெற்றது:


சிவபெருமானை மதிக்காமல் யாகம் வளர்த்து தோல்வி கண்ட தக்கன், தன் பழி பாவம் தீர வழிபட்ட தலங்களுள் ஒன்றாக, பனையபுரம் விளங்குகின்றது. இதற்கு சான்றாக,இராஜகோபுரம் உள்வாசலில் வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தக்கன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

கண் பார்வை தந்த சிவன்

பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.

கல்வெட்டுகள்

இங்கு பல்வேறு கல்வெட்டுகள் காணப்பட்டாலும், இவற்றில் பதினாறு கல்வெட்டுகள் மட்டும் அரசு மரபினரால் பிரிக்கப்பட்டதாகும். இவற்றில் முதலாம் இராஜேந்திரன் (கி.பி.1012),இரண்டாம்  இராஜேந்திரன்( கி.பி.1058),உடையார் ஆதிராஜேந்திர தேவன்( கிபி 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1265) மூன்றாம் விக்கிரம பாண்டியன் (கி.பி.1288) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவற்றின் நகல்கள் மைசூர் தலைமைக் கல்வெட்டாளர்  அலுவலகத்தில் இன்றும் உள்ளது. மூலக் கல்வெட்டுகள் கோயில் புனரமைப்பின் போது இடம் மாறிவிட்டன.

பழங்காலத்தில் கோயில் நிர்வாகம்

சோழப் பேரரசின் போது இக்கோயில் சிறப்பாக இருந்து வந்தது. இதேபோல, மூன்றாம் விக்கிரம பாண்டியன் காலத்திலும் (கி.பி.1288) மேலும் புத்துயிர் பெற்றது. இவ்வாலய நிர்வாகத்தை “திருவொண்ணாழி சபையோம்”,என்ற குழு கண்காணித்து வந்ததை, இரண்டாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாலயத்தின் நிர்வாகத்தை, நகரத்தார்கள் கண்கானித்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்கோயில் காப்பாளர்களாக, சிவ பிராமணர்கள் நிர்வாகம் செய்ததையும் அறிய முடிகிறது. முகலாயர் ஆட்சி காலத்திலும்,கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலும், பொருளாதார நெருக்கடியினால் இக்கோயிலின் செல்வச் சிறப்பு குறைந்தது.அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை இக்கோயிலை தன் பொறுப்பில் எடுத்த போது, நிலைமை சற்று மேம்பட்டது. ஆண்டுதோறும் சூரிய பூஜையும், அதன் பின் வரும் பிரம்மோற்சவமும், ஊர் பெரியவர்கள் மற்றும் பக்கத்து ஊர் மக்களின் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இலக்கியங்கள்

இத்தலத்தினை திருஞானசம்பந்தர் தமது “புறவார்ப் பனங்காட்டூர் பதிகம்” வாயிலாக புகழ்ந்துள்ளார்.

விண்ணமர்ந்தன மும் மதில்களை வீழவெங்கணையாலெய் தாய்விரி,

பண்ணமர்ந்தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்,

பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர்நுதலிடைக்,

கண்ணமர்ந்தவனே  கலந்தார்க்கு அருளாயே− (இரண்டாம் திருமுறை)ஏர் பனங்காட்டூர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற,

சீர் பனங்காட்டூர் மகிழ்நிஷேமமே, என வடலூர் இராமலிங்க சுவாமிகள் தமது திருஅருட்பாவில் புகழ்துரைத்துள்ளார்.இதுதவிர, பனையபுரம் சிவபெருமான் பதிகம் மற்றும் சத்தியாம்பிகை பதிகம் ஆகியவற்றை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்  இயற்றியுள்ளார்.

பேராசிரியர் சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி, இத்தலத்தின் பெருமைகளை பட்டியலிடுகிறது.தமிழ்த்தாத்தாஉ.வே.சாமிநாதய்யர் அவர்களும் தமது நூலில் பனையபுரம் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் “தமிழகம் ஊரும் பேரும்” என்ற நூலில் பனையபுரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.இவ்வூரில் வாழ்ந்தவரும் இவ்வாலயத்தில் புனரமைப்பு மற்றும் குடமுழுக்கு செய்தவருமான சிவனடியார் தென்னாற்காடு புலவர்

இராம பழனிசாமிஅவர்கள், இத்தலத்து”அன்னை மீது, புறவம்மை துதி வெண்பாவும், முருகப்பெருமான் மீது

“தமிழ் தலைவனே வேண்டுதல்” என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

வாசமலர்ச் சோலை வண்டமிழும்,

ஈசன் புகழ்பாடும் என்றுலகு பேசும்,

அறம் வளர்த்த ஆட்சி அருட்சியின் மான்பேர்,

புறவம்மை வாழும்புறம்.இது தவிர, பேராசிரியர் முனைவர் புத்தூர் இராஜாராமன் திருக்கண்ணமர்ந்த நாயனார் ஆலயம்  என்ற ஆய்வுக்கட்டுரையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

புலவர் தாமரைக்கண்ணன் அவர்கள் எழுதிய, வரலாறு கூறும் திருத்தலங்கள் என்ற நூலும் இத்தலம் பற்றி குறிப்பிடுகின்றது. பனையபுரம் அரங்கராசன் சுவாமிகள் இயற்றிய “பூதர் பதிகம்” இத்தலத்து இறைவனை புகழ்ந்நதுரைகக்கின்றது.

கலை பண்பாட்டு மையம்

சோழர்கள் காலத்தில் இக்கோயில் மிகப் பெரிய பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. அதேபோல் பசிப்பிணி போக்கும் வகையில் சிவனடியார்கள் மற்றும் சில பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்தது. கல்வி போதிக்கும் சிறுவர் பள்ளியும் இயங்கி வந்தது. இக்கோயிலில் மூன்று தண்ணீர் பந்தல்கள் இருந்ததையும் அறிய முடிகின்றது.வைணவத் தலம்இக்கோயிலின் முன் மண்டபத்தின் தென்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இராஜேந்திர சோழ விண்ணகர ஆழ்வார்  என்னும் வைணவ ஆலயம் இருந்ததை குறிப்பிடுகின்றது. இவ்வாலய திருவிழா நடத்த நிலக்கொடை வழங்கப்பட்ட செய்தியும் கல்வெட்டின் வாயிலாக தெரிகின்றது. ஆனால் ஆலயத்தின் இருப்பிடம் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.தொல்லியல் ஆய்வினால் இவ்வைணவ திருக்கோயில் வெளிவரலாம்.என்றாலும்,

அம்மன் சந்நிதியின் வலதுபுறம் இரண்டு வைணவ ஆலயங்கள் தூண்கள் மட்டுமே இதற்கு சாட்சிகளாக நிற்கின்றன.


*கோயில் அமைப்பு:


இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பு அளவில் எழிலுடன்  கிழக்கு முகமாக  அமைக்கப்பட்டுள்ளது.சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் கருவறை சிற்பங்கள் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தவையாகும். இதற்கு சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை இன்றும் காட்சி தருகின்றனர். இராஜகோபுரம் 60 அடி உயரத்தில், நான்கு நிலைகளைக் கொண்டு, நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுக தூண்களும், விஜயநகர காலத்தை சேர்ந்தவை ஆகும்.இறைவன் இறைவிகருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக,கிழக்கு முகமாக காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக அதேநேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்துள்ளது நம்மை ஈர்க்கின்றது. திருஞானசம்பந்தர் புறவார் பனங்காட்டூர் என அழைத்தாலும், கல்வெட்டுகளில் கண்ணப்ப நாயனார் என்றும்,பரவை ஈஸ்வரம் உடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காடு உடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மெய்யாம்பிகை,புறவம்மை. சத்யாம்பிகை என்ற பெயரும் வழக்கில் உண்டு. அன்னை கிழக்கு முகமாக, நின்ற கோலத்தில்,மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டு, நான்கு கரங்களுடன் எழிலான கோலத்தில் அன்னை அருள்காட்சி தருகின்றாள். அலங்காரத்தில் அன்னையின் வடிவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

அன்னையின் அழகை காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல.இது தவிர கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர்,பிறகுவிநாயகர் மற்றும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் சன்னதிகள், அறுபத்து மூன்று நாயன்மார் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரியகோலம் அமைந்துள்ளன.


இராஜகோபுரம் உள்புறம் விநாயகர்மற்றும்தக்கனின் வடிவங்களும் அமைந்துள்ளன.மேலும் இவற்றிற்கெல்லாம் மகுடம் ஆக இது சூரியத் தலமாக விளங்குவதால், சிவனின் சன்னிதி வளாகத்திற்குள் சூரியன் தனித்து நின்று காட்சி தருகின்றார்.

ஊர் பஞ்சாயத்து

இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய் சத்தியம் செய்பவர்கள், அடுத்த எட்டு நாட்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்று இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள் அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கின்றாள்.இனி அந்த உலக அதிசயம் என்ன என்பதே காண்போமா ?


*உலக அதிசயம்:

ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் நீண்டு வளர்ந்த இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் ஈசனின் சிரசில் பட்டு வணங்குகிறது.

இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது.

பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது.

இப்படி தொடர்ந்து ஏழு நாட்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றது. சிவனுக்கு, சக்தி அடக்கம் என்ற தத்துவத்தை இது உணர்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது.சூரியன் தன் ஒளிக்கதிர்களால் நிகழ்த்திவரும் இந்த இத்தகு அரிய நிகழ்ச்சியே, இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இறைவனையும்,இறைவியையும், சூரியன் வழிபட்டு வணங்குவதாக ஐதீகம்.சூரியனின் இயக்கத்திற்கு ஏற்றபடி இக் கோயிலின் கட்டட அமைப்பு வடிவமைத்துள்ளது, நம்  முன்னோர்கள் என்பது நமக்குத் பெருமையான ஒன்றாகும்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் சூரிய பூஜை மட்டும் இங்கு இன்றும் தொடர்ந்தபடியே உள்ளது, வானவியல் சாஸ்திரத்திற்கு ஏற்றபடி அமைக்கப்பட்ட கட்டிட கலையை தான் உலக அதிசயம் என்று அழைக்கின்றோம்.

இந்த அதிசயத்தை காண விரும்புவோர் சூரிய உதயத்திற்கு முன்பே ஆலயத்திற்குள் இருக்க வேண்டும்.

இவ்வூர் பழங்காலத்தில் ஒரு நாட்டின் தலைநகராக விளங்கியதற்கு சான்றாக, இவ்வூரைச் சுற்றி இராஜாங்குளம், இராணி குளம்,வண்ணான் குட்டை, துறவி, பனப்பாக்கம், பார்ப்பனபட்டு, மண்டபம் ஆகிய ஊர்கள் இன்றும் அமைந்துள்ளன.

தலம், தீர்த்தம்

தலத்தின் தல மரமாக பனை மரமும், தல தீர்த்தமாக பத்ம தீர்த்தமும் அமைந்துள்ளன.

தல மரமான பனை மரத்தில்,ஆண் பனை உயரமாகவும், பெண் பனை சற்று குள்ளமாக காலங்காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையில் இருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால் பனையபுரம் என்று அழைக்கப்பட்டது எனக் கூறுவோரும் உண்டு.

பிற ஆலயங்கள்

இவ்வூரில் பழமையான சக்தி வாய்ந்த செம்பட விநாயகர் ஆலயம், கங்கை அம்மன் ஆலயம், ஒலை கொண்ட மாரியம்மன் ஆலயம், தெரளபதி அம்மன் ஆலயம் ,பொறையாத்தாள்  ஆலயம், வீரபத்திரர் ஆலயம், ஆஞ்சநேரர் ஆலயம்,ஐயனார் கோயில்,

வீரன் கோயில் மற்றும் ஆல மர விநாயகர் ஆலயம் போன்ற ஆலயங்களும் நிறைந்துள்ளன.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் பனையபுரம் அமைந்துள்ளது.  விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில், விக்கிரவாண்டி− தஞ்சாவூர், விழுப்புரம் −வழுதாவூர் சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் இருந்து ஏராளமான பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றன. விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அடுத்து இடது புறம் செல்லும் விக்கிரவாண்டி −தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முதல் ஊராக பனையபுரம் அமைந்துள்ளது.


இவ்வூரின் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் புகழ்பெற்ற சந்திரமெளலீசுவரர் திருக்கோயிலும் அதனுள் இருக்கும் ஶ்ரீவக்கிரக் காளியம்மன் ஆலயமும் அருகே, தொல்லியல் சிறப்பு வாய்ந்த அரிய கல் மரங்களும் உள்ளன.

மேற்கே சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தேவாரத்தலமான, திருவாமாத்தூர் திருக்கோயிலும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கௌமார மடமும் அமைந்துள்ளன.

பெட்டிச் செய்தி

இந்த உலக அதிசய சூரிய பூஜை ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை ஒரு வார காலம் நிகழ்கின்றது. இந்த அதிசயத்தைக் காண விரும்புவோர், சூரிய உதயத்திற்கு முன்பே ஆலயத்துக்குள் இருக்க வேண்டும் .


*கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்:


புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.


*குழந்தை வரம் அருளும் பனம் பழம்:


இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.


சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம்... 


 ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது

 இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம... 


No comments:

Post a Comment

Followers

செவ்வாய்க்கிழமை முருகப் பெருமான் வழிபாடு சிறப்பு....

_செவ்வாய்க்கிழமை  முருகப் பெருமானை வழிபடலாம்._  *ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம்*  ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி த...