Friday, October 18, 2024

தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்......



நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

*தோஷங்களை நீக்கும் ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்*
அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.

அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம்.

மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.

இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான்.

மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.

அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.

மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.

ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது.

ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது.

எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.

தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது.

சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.

*நாகநாத சுவாமி*

ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.

ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது.

இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார்.

இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.

வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது.

அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள்.

அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.

*கன்னி மூலையில் நவக்கிரகங்கள்*

பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று.

ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும்.

இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.

இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது.

திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.

இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.

கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும்.

இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும்.

இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது.

வேலூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மேற்கே சுமார் 50 கி.மீ.

தொலைவில் ஆம்பூர் இருக்கிறது. இவ்வூருக்கு ஏராளமான பேருந்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் வசதியும் உண்டு.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்

 கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய பதிவுகள்  மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் ...