Tuesday, October 29, 2024

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்.

வினைகள் தீர்க்கும் விநாயகர் தலங்கள்...!
மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம்.கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார்.

நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார்.

தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான். 

கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம்.மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத் தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழை பொழியும் அற்புதம் நிகழ்கிறது. 

மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம்.பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார்.

அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம்.இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார்.

லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம். 

நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதி கும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம்.இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார்.இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம்.

இக் கோவிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

சேலம் மாவட்டம்,ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம்.இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார். 

சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ.தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார்.

நம்பியாண்டார் நம்பிக்கு அருள் புரிந்த விநாயகர் இவர்.ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர்.உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை.இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

ஓசூர்,பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார்.

இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், மலைக்கோட்டை மாணிக்க விநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர். 

திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலின் அடிவாரத்தில்,மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார்.

இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவி சாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார். 

திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோவிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார். 

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம்.நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார். 

தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்)ஆலயம் அமைந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...