Thursday, October 31, 2024

தஞ்சபுரீஸ்வரர் கோவில் தீபாவளித் திருநாளில் குபேரபுரீஸ்வரரையும் லக்ஷ்மி குபேரரையும் வணங்குவோம்.

தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி. சிவபெருமான், தன்னைத் தஞ்சமடைந்தவர்களைக் காப்பாற்றுகிறவர் என்பதால் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். குபேரன் தானிழந்த செல்வத்தைப் பெறச் சிவனை வழிபட்டதால் 'குபேர புரீஸ்வரர்' என்ற பெயர் உண்டாயிற்று. ராவணன் தன் தவ வலிமையால் குபேரனது செல்வத்தைப் பறித்துக்கொண்டான். குபேரன் சிவபெருமானைத் தஞ்சமடைந்து செல்வத்தைப் பெற்றான் என்பது தலவரலாறு.

பிரம்மாவிற்குப் புலஸ்தியர் என்ற மகன் உண்டு. அவருடைய மகன் விச்ரவஸ் என்பவன் சுமாலி என்ற அரக்கனின் மகளை மணந்தான். அவர்களுக்கு ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை, விபீஷணன், குபேரன் ஆகியோர் பிறந்தனர். ராவணன், குபேரன் இருவரும் சிவபக்தர்கள். விபீஷணன் பெருமாள் பக்தன். கும்பகர்ணன் பிரம்மாவின் பக்தன். இராவணன் அரக்க குணத்தோடு கூடவே மிகுந்த பெண்பித்துப் பிடித்தவனாக இருந்தான். கும்பகர்ணன் தூக்கத்தோடு சாப்பாட்டுப் பிரியனுமாவான். விபீஷணன், குபேரன் இருவரும் அரக்க குணமின்றிப் பிறந்தவர்களாவர். குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனான்.

திருமாலின் மனைவி மகாலட்சுமி எட்டுவித சக்திகளுடன் அஷ்டலட்சுமி என்ற பெயர் பெற்றாள். சிவபெருமான் உலகத்துச் செல்வங்கள் எல்லாவற்றையும் குபேரனிடம் ஒப்படைத்து உழைக்கும் மக்களுக்கு அவரவர் விதிக்கேற்றபடி செல்வத்தைக் கொடுத்துவரக் கட்டளையிட்டார். முற்பிறவியில் பாவங்கள் ஏதும் செய்யாதவர்களைக் கோடீஸ்வரன் ஆக்குவது குபேரனின் பணி. மகாலட்சுமி தன் சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். குபேரன் சங்கநிதி, பதுமநிதி இருவரையும் தனது கணக்குப் பிள்ளைகளாக நியமித்துக் கொண்டான்.

குபேரனுக்காக அளகாபுரி என்னும் நகரத்தை உருவாக்கினார் விஸ்வகர்மா. அழகான அரண்மனையையும் கட்டினார். அத்தாணி மண்டபத்தில் மீன் ஆசனத்தில், பட்டு மெத்தையில் அமர்ந்து ஆட்சி செய்தான் குபேரன். குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும், இடப்புறத்தில் பத்மநிதியும் அமர்ந்தனர். சங்கநிதி கையில் சங்குடன் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி அளிப்பவன். கையில் வர முத்திரையுடன் இருப்பான். பதுமநிதி தன் கையில் தாமரையுடன் இருப்பான். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

தஞ்சையில் பிரகதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில் சிவன் கோயில் இருந்தது. அங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். குபேரன் செல்வத்தை ராவணன் பறித்துக் கொண்டதால் குபேரன் தஞ்சை வந்து மீண்டும் சிவனிடம் தஞ்சமடைந்தார். இக்கோயிலில் குபேரன் வந்ததன் அடையாளமாகச் சுவாமி சன்னிதி முன்புள்ள தூணில் குபேரன் சிற்பம் காணப்படுகிறது. விநாயகர், சரஸ்வதி, அம்பிகை ஆனந்தவல்லி ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. சரஸ்வதி அறிவுச் செல்வம் கொடுப்பவள். தீபாவளித் திருநாளில் குபேரபுரீஸ்வரரையும், லக்ஷ்மி குபேரரையும் வணங்கி அருள் பெற்று உய்வோமாக.

No comments:

Post a Comment

Followers

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள்.

ஸ்ரீ பால தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை அருளிய வரலாறு பற்றிய பதிவுகள்  கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ பாலதேவராய சுவாமிகள...