"ஜடாவர்மன் அரிகேசரி பாண்டியன்"
காலத்தில் கட்டப்பட்ட,
நெல்லையில் உள்ள பஞ்ச குரு தலங்களில் ஒன்றானதும்,
குபேரன் சிவனை வழிபட்ட தலமானதும் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான
#ஹரிகேசநல்லூர்
#அரியநாதசுவாமி
#பெரியநாயகிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
சிவபெருமான் - பார்வதிதேவி திருமணத்தின்போது ஈசனின் ஆணைக்கேற்ப அகத்திய முனிவர் தென்னாட்டுக்கு வந்தார். வடக்கையும் தெற்கையும் சமமாக்கினார். நிறைவாகப் பொதிகை மலையில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். அகத்தியப் பெருமானுக்கு ஈசனின் தன் திருமணக் கோலத்தை எண்ணற்ற தலங்களில் அருளினார். பொதிகையில் உற்பவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்தோடும் வற்றாத ஜீவநதியான பொருநை எனப்படும் தாமிரபரணி நதியின் இரு கரைகளிலும் 200க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பும், புராணப் பழமையும் கொண்ட சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பல ஆலயங்கள் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை என்கிற பெருமைக்குரியவை.
காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற ஆலயங்கள் இருப்பதைப் போன்றே தாமிரபரணியின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள அரிகேசவநல்லூர். தற்போது ஹரிகேசநல்லூர் என்று அழைக்கிறார்கள். இங்குள்ள பெரியநாயகி சமேத அரியநாதர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், அரிதாகக் காணப்படும் குபேரன் சந்நதியும், ஜேஷ்டா தேவியின் சந்நதியும் இங்குதான் அமைந்திருக்கின்றன. இந்த ஊருக்குள் நவநீத கிருஷ்ணசுவாமி ஆலயமும் உள்ளது. அரிகேசரி பாண்டியன், இந்த ஆலயத்தை அமைத்துள்ளான். இக்கோயிலில் பிரதோஷம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 1900ல் குடமுழுக்கு நடைபெற்றதை ஆலய அர்த்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
நெல்லை மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அருமையான ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றுதான் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள ஹரிகேசநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். சுமார் 1,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், குபேரனே இத்தலம் வந்து சிவனை வழிபாடு செய்திருக்கிறார். இங்கே சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவிக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் ஹரிகேசநல்லூர் என்றழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆலயத்தின் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி. அடுத்து மண்டபம் கடந்து உள்ளே நுழைந்தால் ஆகமக் கோயிலுக்குரிய சூரியன், சந்திரன் ஜுரதேவர், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலது காலின் மீது மடித்து வைத்தபடி தோற்றமளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது, ஜடாவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டாகும். 12வது நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் இங்குள்ள இறைவன் ‘‘அரிகேசரிநல்லூரில் உள்ள அரிகேசரி ஈசுவரமுடைய நாயனார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அரிகேசரி என்ற பாண்டிய மன்னன் இந்தச் சிவாலயத்தைக் கட்டியதால் மன்னன் பெயரால் இவ்வூர் அரிகேசரி நல்லூர் என்றழைக்கப்பட்டதாகவும் கூறுவர்.
இவை அனைத்தையும் விட முக்கியமானது, ராவணன் தனது சகோதரன் குபேரனிடம் இருந்த செல்வங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு, அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டு துரத்தியடித்தபோது அவர் ஹரிகேசநல்லூரில்தான் வந்து விழுந்தாராம். அவர் ஸ்தாபித்த லிங்கம்தான் ஹரிகேசநல்லூர் சிவனாவார். குபேரன் இந்த சிவனை பூஜித்து, தான் இழந்த செல்வங்களையெல்லாம் திரும்பப் பெற்ற தலம் என்பதால், இந்த ஹரிகேசநல்லூர் சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகக் திகழ்கிறது. கடன் தொல்லை இருப்பவர்கள், செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜித்த சிவனை வழிபாடு செய்தால் செல்வச் செழிப்பு உண்டாகி, வாழ்வில் எல்லா வளங்களும் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகச் சிறப்பு வாய்ந்தவர். இடக்காலை வலதுகாலின் மீது மடித்து வைத்தபடி திகழ்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியுள்ளார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சிலைகளில் பின் இரு கரங்களில் அட்சமாலை அல்லது அக்னி மற்றும் டமருகம் (உடுக்கை) காணப்படுகின்றன. நெல்லை மாவட்டத்திலுள்ள பஞ்ச குருத் தலங்களில் இந்தத் தலம் மூன்றாவதாகத் திகழ்கிறது. இந்த பஞ்ச குருத் தலங்களிலுள்ள தட்சிணாமூர்த்தியின் திருமேனிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த ஆலயங்களில் குருப் பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு எதிராக உள்ள சப்த கன்னியர் சந்நதியில் வீரபத்திரருக்குப் பதிலாக ‘ருரு’ பைரவர் அமர்ந்து அருட்பாலிக்கிறார். இந்த ருரு பைரவரை மனமாறத் தொழுதால் அஷ்டமா சித்திகளும் கிட்டும் என்ற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடையே நிலவுகிறது.
வெளிச் சுற்றுப்பிராகாரத்தில் சனீஸ்வரனின் மனைவி ஜேஷ்டா தேவி தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக்கொண்டு சன்னிதி கொண்டிருக்கிறாள். சாதாரணமாக ஜேஷ்டா தேவியின் சன்னிதியை சிவாலயங்களில் காண முடியாது. ஆனால், இக்கோயிலில் பெரிய திருவுருவத்துடன் சன்னிதி கொண்டிருக்கிறாள். ஜேஷ்டா தேவி இங்கே சன்னிதி கொண்டு அருள்பாலிப்பதால் இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் வழிபடப்படுகிறது.
அதேபோல, வடக்குச் சுற்றில் இறைவன் சன்னிதிக்கு வடகிழக்கே செல்வத்தின் அதிபதியான குபேரனின் மிகப்பெரிய கற்சிலை காணப்படுகிறது. வலக்கையில் கதையை ஏந்தி, இடக்கையை மடித்த காலின் மீது வைத்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் மிகப்பெரிய உருவமாக குபேரன் காட்சியளிக்கிறார். இங்கே குபேரன் எழுந்தருளியிருக்கும் காரணத்தால் ஒரு காலத்தில் இந்த ஊர் அழகாபுரி என்னும் பெயரால் கூட அழைக்கப்பட்டதாம். இந்த குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் வெளியூரிலிருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து இங்கே வழிபாடு செய்கின்றனர்.
அரியநாதர் ஆலயத்தில் இறைவனுக்குத் தனிக் கோயிலும், அந்த ஆலயத்தின் வடகிழக்கில் இறைவி பெரியநாயகி அம்மைக்கு விமானத்துடன் கூடிய தனிக்கோயிலும் அமைந்துள்ளன. தேவியின் ஆலயம் பிற்காலத்தில் தனியே கட்டப்பட்டதாகத் தெரிகிறது. பெரிய என்ற அடைமொழிக்கேற்ப பெரிய திருமேனியோடு இறைவி காட்சி தருகிறாள். சுமார் ஏழு அடி உயரமான இறைவியின் சிலை கலை நுணுக்கமும் வனப்பும் மிக்கது. இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் வீரவநல்லூருக்கும் முக்கூடலுக்கும் இடையே ஹரிகேசநல்லூர் அமைந்துள்ளது.
மிகத்தொன்மையான இந்தக் கோயிலின் புனருத்தாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மிகச் சிறப்பு வாய்ந்த, தொன்மையான குபேரன் வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீட்டெடுத்த இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று குபேரன் வழிபட்ட சிவனையும், குபேரனையும் வழிபட்டு வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி - அம்பாசமுத்திரம் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரவநல்லூரை அடையலாம்..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment