வயலூர் முருகன் கோவில்
அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடிப் பரவசமடைந்ததலம். வயலூர்.
வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் குமரன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம்.
திருத்தலப்பெருமை :
ஞானம் விளையும் திருத்தலமென்பது. ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு குமரன் தனது வேலால் குத்தி திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாகக் கூறுகிறது புராணம். அக்னித்தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்தத் தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலய சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.
உறையூரை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது..... வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு மூன்று கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து இரத்தம் சொட்ட பதறிப்போன மன்னன் உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு இலிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்.....
‘அருளில் சீர் பொய்யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலியில் அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’
இந்தப் பாடலின் அழகும், அருணகிரி நாதரின் வாக்கின் இனிமை இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டார்.
அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் ஏழாவது காண்டமாகிய உபதேசக் காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.
தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன். கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது. வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.
தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள். திருமண பரிகாரத் தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் ஆட்சிகொண்டு விடுகிறான்.
நேரம்:
06:00 AM to 01:00 PM & 03:30 PM to 09:00 PM
04:00 AM to 11:00 PM (பண்டிகை நாட்கள்)
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment