செல்வங்களை வாரித்தரும் நல்லாத்தூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம்
தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை படைத்த சிவபெருமான் பூவுலகில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் அவதரித்து பக்தர்களின் துயரத்தை போக்கி வருகிறார். அதன்படி கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை பொன்னம்பலநாதர் (எ) சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
ஆலய வரலாறு...
இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இத்தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. கோயில்களில் சாளரக் கோயில் என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் வாசற்படி இருக்காது. இறைவனை பலகனி எனப்படும் ஜன்னல் (சாளர சக்கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. இதன் அருகில் நந்தி மண்டபம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் உள்ள ராஜகோபுரம், 3 நிலை 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
மகா மண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. மகா மண்டபத்தில் கர்ண விதாயினி என்னும் பெயரில் சரஸ்வதி வீணை வாசிக்கும் சிற்ப சிலை உள்ளது. துவாரபாலகர்களை இக்கோயிலில் வலம் வர முடியும். மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தியாக மேற்கு புறமாக காட்சி தருகின்றார். இதனால் இத்தலம் வட
திருக்கடையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆயுள்விருத்தி தரும் தலம். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு மீண்டும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு வந்து மனமுருக வழிபட்டால் ஆயுள்விருத்தி, செல்வ செழிப்பு உண்டாவதோடு, பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்சய யாகம், மகா சிவராத்திரி, மாத பிரதோஷங்கள், ஐப்பசி அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் வழிபாடு, ஒவ்வொரு தமிழ் மாத முதல்நாள் சூரியன், ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆங்கிலேயர் காலத்தில் தென்னாற்காடு மாவட்ட (தற்போதைய கடலூர் மாவட்டம்) கலெக்டர் பகோடா என்பவரது மகள் கண்பார்வையற்று இருந்தார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதனால் பகோடா தனது மகளுடன் இந்தக்கோயிலுக்கு வந்து சிவபெருமானை மனமுருக வழிபட்டார். என்ன அதிசயம்? அவரது மகளுக்கு கண்பார்வை கிடைத்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பகோடா சிவபெருமானின் மகிமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏராளமான ஏக்கர் நஞ்சை நிலங்களை ஆலயத்திற்கு வழங்கினார்.மேலும் இங்கிலாந்து நாட்டில் இருந்து 1907ம் ஆண்டு அற்புத ஓசையுடன் கூடிய ஆலய மணியை இந்தக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த மணியை பூஜை நேரங்களில் மட்டுமே ஒலிக்கச்செய்கின்றனர். அப்போது மணியோசை 3 கி.மீ தூரம் வரை கேட்குமாம். இதனை கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் கூறுகின்றனர்.
கடலூரில் இருந்து தவளக்குப்பம், மடுகரை, பாக்கம் கூட்ரோடு வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாவும், புதுவையில் இருந்து தவளக்குப்பம் வழியாகவும் நல்லாத்தூர் செல்லலாம்...
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment