Monday, December 30, 2024

சோழநாட்டு திருச்செந்தூர் முருகன் கோயில்..

அருள்மிகு முருகன் திருக்கோயில்,
திருவிடைக்கழி- 609310,  தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.        
*இறைவர் திருப்பெயர்:   காமேசுவரர்  

*இறைவியார் திருப்பெயர்: காமேசுவரி (சந்நிதி இல்லை)        

*தல மரம்: இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாகும்.

*தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.   

*வழிபட்டோர்: முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர்.                 

*பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், சேந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.                          

*இது சேந்தனார் முத்தி பெற்ற தலம். 

 *இத்தலத்துக்கு மகிழவனம் என்ற பெயரும் உண்டு.   

*திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது. 

*சோழநாட்டு திருச்செந்தூர் எனவும் இந்தக் கோயில் போற்றப்படுகிறது.                  

*முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. 
 
*சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன்,  போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான்   என்பதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது. தாய் பார்வதிதேவியின் ஆலோசனைப்படி
அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக முருகன் தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது.          

*தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டு மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும்  அமர்ந்தார். 

*மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். 

*இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம்  உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.   

*ஆறடி உயர அழகான வடிவத்துடன்  சுப்பிரமணியர்  நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். சுவாமியின் வலதுகை அபயம் தரும் விதத்திலும், இடது கை இடுப்பில் ஊன்றியபடியும் உள்ளன.        

*குமரன் பூஜித்த சிவலிங்கம் முருகனின் முன்னால், ஸ்படிகலிங்கமாக உள்ளது. 

*அம்பாள்  இங்கிருந்து தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. 

*தெய்வயானைக்கு தனி சந்நிதி உள்ளது. 
முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது.  தெய்வானையின் முகம், நாணத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம்.  

*மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரம், திருவிடைக்கழியில் சம தளமான மண்ணிலும் வளர்ந்து தல விருட்சமாக உள்ளது என்பது அதிசமான நிகழ்வு.                

*குரா என்பதை திருப்பி நோக்கினால் ராகு எனவரும். 
*முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, 
ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். 

*நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும்.    

*சிவசண்டேசுவரர், குகசண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக இங்கு சண்டேசுவர மூர்த்தங்கள் இரண்டு உள்ளன.   

*ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்,      சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை,  புறப்பட்டு சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு குராமரத்தடியில் மகா அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனை நடைபெறும். 

இந்த பாதயாத்திரை வழிபாட்டில் பல  மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வருகை தந்து அங்கிருந்து பாதயாத்திரையாக  திருவிடைக்கழி வந்து முருகனை வழிபடுகின்றனர்.

*கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. 

*மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி சென்று  அங்கிருந்து 3 கி.மீ சென்றால் திருவிடைக்கழி தலத்தை அடையலாம்.                  

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரியனார் திருக்கோவில் திருமங்கலக்குடி. சூரிய பகவானுக்கு உகந்த 108 போற்றி

 அருள்மிகு சூரியனார் திருக்கோவில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் நவகிரக தலங்களில் (Navagraha temples) முதன்மையானதாக கருதப்படுவது அர...