#ஓம் #நமோ
தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்! மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.மற்றும் 108 வைணவ திவ்ய தேச உலா - 7. கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில்
அமைவிடம்: திருச்சி - திருவையாறு சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில் உள்ளது.
தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!
திருமாலின் திருவிளையாடல்கள் ஏராளம். பக்தர்களுக்கு அருளும் பெருமாளின் திருவிளையாடல் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.
குடகுமலைச் சாரலில், நிர்மலன் என்ற ஒரு அரசன் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு சமயம் அவர் வனப் பகுதிக்குச் சென்றபோது, நாரதரைச் சந்தித்து தனது குறைகளைச் சொன்னார்.
‘இளம் வயதில் வனத்தில் பதுங்கி வழிப்போக்கர்களை வழிமறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததன் விளைவே தனக்கு இந்த வியாதி' என்று நிர்மலன் சொன்னபோது, மனம் இறங்கிய நாரதர், ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அந்த மந்திரத்தை தினமும் மனமுருகி ஓதி வேண்டினார் நிர்மலன்.
ஒரு நாள் அசரீரி ஒன்று ஒலித்து, "காவிரிக்கரையில் உள்ள குளங்களில் நீராடு. உனது நோய் எங்கு குணமாகிறதோ, அங்கே நீ பாவ விமோசனம் அடைவாய்'' என்றது.
அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த நிர்மலன், காவிரிக்கரை குளங்களில் நீராடியபோது, மூவலூர் திருத்தலம் வந்து மாணிக்க சகாயேஸ்வரரை வணங்கினார். அப்போது, "பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உனது நோய் நீங்கும். அங்கேயே தங்கி விடு''என்று அசரீரி ஒலித்தது. அதன்படி, ‘கோடி ஹத்தி' என்ற இடத்தில் நிர்மலனின் தொழு நோய் குணமானது.
தனக்கு மறு வாழ்வு அளித்த கடவுளைத் தரிசித்து கடும் தவம் செய்த நிர்மலனுக்கு அங்கிருந்த பெரிய அத்தி மரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். "நீ இனி, ‘பிப்பிலர்' என அழைக்கப்படுவாய். நீ நீராடிய தீர்த்தம் இனி ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்' என அழைக்கப்படும். இங்கு நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி அனைத்தும் நீங்கும்'' என பெருமாள் அருளி மறைந்தார். ஏராளமானோரின் தோஷங்களையும் பாவங்களையும் இந்தத் தல தரிசனம் போக்கியதால், ‘கோடி ஹத்தி' எனவும் ‘பாப விமோசனபுரம்' எனவும் அழைக்கப்பட்டது.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தல வரலாறு கொண்டதாக இங்குள்ள ஏழு மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் கிரந்த மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் கோயிலுக்கு மானியங்கள், திருப்பணிகள் செய்ததாகஅறியப்படுவதோடு தஞ்சை சரபோஜி மன்னரும் இங்கு தரிசித்து யுத்த தோஷம் நீங்கப் பெற்றார்.
பின்னர், அவர் அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக பெருமாளை வடித்து, மூலவராய் கொண்டு கோயிலை எழுப்பிய, மர வேரே இறைவன் திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் இங்குள்ளது. மூலவருக்கு ஸ்ரீ வானமுட்டி பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீ பக்தப்ரியன், ஸ்ரீ வரதராஜன் என்ற பெயரும், தாயார் ஸ்ரீ லட்சுமி எனவும் உத்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் எனவும் வணங்கப்படுகிறார்.
தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!
ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியிருக்கும் கோயில் முன்புறம் விஸ்வ புஷ்கரணி எனப்படும் குளம் உள்ளது. மூலவர் நான்கு திருக்கரங்களுடன் 14 அடி உயரம் கொண்டவர். மேல் கரங்களில் சங்கு சக்கரம் கீழ் இடது கரம் அபய கரமாகவும் உள்ளது. மார்பில் ஸ்ரீ தயா லட்சுமியும், இடதுபுறம் பூதேவியும் உள்ளனர்.
முக மண்டபத்தில் கருடன், கொடிமரம், பலி பீடங்களும், அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், யோக நரசிம்மர் ஆகியோரும், பிராகாரம், மண்டபத்தில் சப்த ஸ்வர விஸ்வரூப ஆஞ்சனேயர், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி, கருவறை சுவரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளும் அருளுகின்றனர். அனுமன் சப்தஸ்வர அனுமன் எனப் போற்றப்படுகிறார்.
இத்தல பெருமாளை வழிபட்டால் காஞ்சிபுரம் அத்தி வரதர், திருப்பதி ஏழுமலையான், நரசிம்மர் ஆகிய மூவரையும் ஒருசேர வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த பெருமாளை ஒரு நாள் சென்று வழிபட்டு அருள் பெறுவோம்!
108 வைணவ திவ்ய தேச உலா - 7. கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில்
கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் (கண்டன க்ஷேத்ரம், பஞ்ச கமல க்ஷேத்ரம்) ஹரசாப விமோசன பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 7-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பிரம்மதேவன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பிண்டியார் மண்டை ஏந்தி பிறர்மனை திரிதந்து உண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபே மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே
மூலவர்: ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
தாயார்: கமலவல்லி நாச்சியார், பூரணவல்லி
தீர்த்தம்: கமல புஷ்கரணி (பத்ம தீர்த்தம்), கபால புஷ்கரணி (கதா தீர்த்தம்)
விமானம் : கமலாக்ருதி விமானம்
தல வரலாறு
ஈசனுக்கு 5 திருமுகங்கள் இருப்பது போல் பிரம்மதேவனுக்கும் 5 திருமுகங்கள் உண்டு. (ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள்.) ஒருசமயம் ஈசனுக்கு ஈடாக தன்னையும் நினைத்துக் கொண்டு மிகுந்த கர்வத்துடன் செயல்பட்டார் பிரம்மதேவன். இவரது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று எண்ணிய ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளில் நடுத்தலையை கிள்ளி எறிந்தார். அன்று முதல் பிரம்மதேவன் நான்முகன் ஆனார்.
பிரம்மதேவனின் தலையை கிள்ளி எறிந்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. மேலும் கிள்ளி எறியப்பட்ட கபாலமும் ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக தலங்கள்தோறும் சென்று தரிசிக்கலானார். ஒரு இடத்தில் கபாலம் விழுந்தது. விழுந்த இடத்தருகே திருமால் இருந்தார். அந்த இடமே பூரணவல்லியுடன் அருள்பாலிக்கும் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் ஆகும்.
ஈசனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இத்தலப் பெருமாள் ஹரசாப விமோசனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டியதாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே ஊரில் ஈசனும் ‘கண்டீஸ்வரர்’ என்ற பெயரில் கோயில்கொண்டார். கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவன் (நான்முகன்) அருள்பாலிக்கிறார். பிரம்மதேவனுக்கு எங்கும் கோயில் கிடையாது என்பதால் இத்தலத்திலேயே தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் ‘கமலாரண்யம்’ என்றும் மும்மூர்த்திகளுக்கும் கோயில் அமைந்து உள்ளதால் ‘திரிமூர்த்தி க்ஷேத்ரம்’ என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.
இத்தல பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்ட நாராயண தீர்த்தர், இத்தலத்துக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தவர். இவரது நூல் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ மிகவும் பிரசித்தி பெற்றது.
திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை தனது பாசுரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சிபுரம் பெருமாள், கோவிலடி பெருமாளுடன் ஒப்பிட்டு பாடியுள்ளது சிறப்பு.
இத்தல பெருமாள் கமலாக்ருதி விமானத்தின் கீழ் இருந்து கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அகத்திய முனிவர் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்துள்ளார்.
இந்த திரிமூர்த்தி தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் எட்டு அத்தியாயங்களிலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், திருமுறைகளிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாதியிலும் காணலாம்.
திருவிழாக்கள்
பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசி பவித்ரோற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீப தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், பல வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதியுலா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மும்மூர்த்திகளையும் தரிசித்து அருள்பெறுவர்.
ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 19 நாட்கள் கொண்டாடப்படும். விழாவில் கருட சேவை, தேர்த் திருவிழா, திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
ஈசனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து இத்தலத்தில் வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment