*கல்யாணம் கைகூட* *வைக்கும் கல்யாணபுரி*
மலையரசனுக்கு மகளாய் அவதரித்த பார்வதியை திருக்கல்யாணம் செய்வதற்காக
சிவபெருமான்
இமயமலைக்கு எழுந்தருளினார்.
இதனையறிந்த ப்ரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், வசுக்கள் முதலான தேவர்களும் இமயமலையைச் சூழ்ந்தனர்.
முசுகுந்தன் முதலான அரசர்கள், ருத்ர கணங்கள், மந்தாரமலை முதலானவர்கள் , வாசுகி முதலிய அஷ்டநாகங்கள், வசிஷ்டர் முதலான முனிவர்கள், சித்தர்கள் அனைவரும் வடக்கே திரண்டனர்.
அனைவரும் வந்து ஓரிடத்தில் கூட பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென் பாகம் மேலே உயர்ந்தது.
அனைவரும் அஞ்சி சிவபெருமான் திருவடியை அபயம் என்று பற்றினர்.
சிவபெருமான் அகத்திய முனிவரைப் பார்த்து "நீ எவ்வுயிர்க்கும் தஞ்சம் அருளுபவன்.
அதுவுமின்றி அருளுவதில் எனக்கும் சமமானவன் .
ஆதலால் பூமி சமநிலை
அடைய நீ பொதிகை மலைக்குச் சென்று சமன் செய்வாயாக'என்று சிவனார் அருளினார்.
அகத்தியர் சிவபெருமானுடைய திருவடியை வணங்கி "தேவரீர் ! திருக்கல்யாணத்தை தரிசிக்க இங்கு வந்திருக்கும் மற்றவர்களைப் போல் அடியேன் புண்ணியம் செய்யவில்லை போலும்" என்று சொல்லி மனம் வருந்தி கண்கலங்கி நின்றார் .
"அகத்தியனே !
நமக்கு உன்னளவு உன்னத அன்பர் ஒருவரும் இல்லை . வருந்தற்க .
நீ செல்லும் வழியில் பாண்டியநாட்டில் திருப்பழம்பதிக்கருகில் நம்முடைய திருமணக்காட்சி முதன்முறையாக காட்டியருளுவோம் " என்றார்.
அகத்தியர் மனமகிழ்ந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கினார்.
மனைவி லோபா முத்திரையுடன் பொதிகை நோக்கி புறப்பட்டார் .
வழியில் பல தலங்களை வணங்கி வனங்களையும் கடந்து தீர்த்தங்களில் நீராடி திருப்பழம்பதி என்னும் திருப்புனவாசலுக்கு சற்று
முன் வருகையில் இத்தலத்து இறைவன் உமையொரு பாகனாய் காட்சி தந்து அகத்தியரிடத்து "கைலாயத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பாக நான் உனக்கு திருமணக் கோலக்காட்சி அருள இருக்கின்றோம் .
ஆகவே இங்கு மணவறை ஒன்றை அமையுங்கள்' என்றார் .
முனிவர் தன் தவ வலிமையால் ஒரு குளத்தை உருவாக்கி, கமண்டல நீரால் அதனைப்பெருக்கி, அதற்கு "கல்யாண தீர்த்தம்" என்று பெயர்சூட்டி, குளக்கரையில் ஸ்ரீகல்யாணநாயகி சமேத ஸ்ரீகல்யாணநாத லிங்கத்தை நிறுவி , அருகில் ஒரு கல்யாணமண்டபத்தை மணவறையாக நிறுவி அலங்கரித்து அனைத்துப் பொருட்களையும் அங்கு வரச்செய்தார்.
இறைவன் பார்வதியோடு மணக்கோலத்தில் அங்கு எழுந்தருள முப்பத்து முக்கோடி தேவர்களும் வர, பிரம்மதேவன் திருமணச்சடங்குகளைச் செய்ய மங்களநாண் பூட்டி தேவர்கள் பூமழை பொழிய உமையின் கரம் பற்றி , , பொறி சிதறி அக்னி வலம் வந்து உமையின் பாதத்தை அம்மியில் வைத்து அருந்ததியைக் காணச் செய்தார் .
அரம்பையர்கள், விஷ்ணு முதலியோர் வணங்க, வைதிகர்கள் வேதம் ஓத, சித்தர்கள் பல்லாண்டு இயம்ப, திருமணக்கோலத்தை தரிசித்து அகத்திய முனிவர் ஆனந்த பரவசம் அடைந்தார் .
தேவலோக ஐராவதம் வர
அதில் சிவனாரும் உமையும் எழுந்தருளி சகல வாத்தியங்கள் முழங்க தேவர்கள், கணங்கள், மனிதர்கள் சூழ்ந்து வர திருப்புனவாயில் மகாகோபுர வாயில்முன் வெள்ளையானையில் வந்திறங்கி கோயிலில் புகுந்தனர்.
அகத்தியர் இறைவனிடம் " உங்கள் திருக்கல்யாணம் நடந்த இந்த மணவறைக்கு அனைவரும் வந்து வழிபடவும் அவர்களுக்கு விரைவில் கல்யாணம் நடந்து , நல்ல வாழ்க்கை அமைந்து, வம்சம் விருத்தியாக வேண்டும்'
என்று வேண்டினார்.
இறைவன் "உனக்கு முதலில் காட்சி கொடுத்த இத்தலம் கல்யாணபுரி என வழங்கப்படும்.
கல்யாண முருங்கையை தலவிருட்சமாகக் கொண்ட இத்தலத்தில் நீ உருவாக்கிய கல்யாண தீர்த்தக்கரையில் உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்யாணபுரீஸ்வரரும் கல்யாண நாயகியையும் வணங்கி வழிபட வேண்டியவர்க்கு விரும்பியது கிடைக்கும்' என அருளினார்.
கல்யாணபுரி திருமணத்தடை நீக்கும் திருமணப்பரிகாரத்தலமாகும்
இத்திருக்கோயிலின் வரலாறு
திருப்புனவாசல் பழம்பதிநாதர் வரலாற்றில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
சுமார் 2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இத்தலம் காலவோட்டத்தில் சிதிலமுற்றுப்போக இறைவன் அருளாணைப்படி கட்டுமானங்கள் அவ்வாறே பிரிக்கப்பட்டு சிற்ப ஆகம விதிப்படி மீண்டும் எடுத்து கட்டப்பட்டு ஒருகாலபூஜை தடையின்றி நடந்து மக்களும் பலன் பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டம் திருக்கல்யாணபுரம் திருக்கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவிலை அறந்தாங்கி ஆவுடையார்கோயில் பேருந்து தடத்தில் கரூர் என்னும் ஊரில் இறங்கி அங்கிருந்து சென்று தரிசிக்கலாம்.
ஆட்டோக்கள் கோயில் வாசல் வரை செல்ல வசதி உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment