Monday, January 6, 2025

வயிற்றுநோய் பாவங்கள் நீங்கும் தலம் அக்னீஸ்வரர். திருக்காட்டுப்பள்ளி...

தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூருக்கு அருகில் உள்ள தலம் திருக்காட்டுப்பள்ளி. இத்தலம் 2000 ஆண்டு பழமை உடையது என வரலாறு கூறுகின்றது. நாயன்மார்களால் பாடப்பட்ட தலம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாட
ப்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்பதாவதாக விளங்குகிறது. இறைவன் நாமங்கள்: அக்னீஸ்வரர், அழலாடியார் தீயாடியப்பர், வன்னி வனநாதர், திருக்காட்டுப்பள்ளி உடையார். இறைவியின் நாமங்கள்: சௌந்தர நாயகி, அழகமங்கை, வார்கொண்ட முலையாள். அக்னி தீர்த்தம், காவிரி நதி ஆகியவை தவிர தீர்த்தக் கிணறு உள்ளது. தலவிருட்சம் : வன்னிமரம், வில்வமரம்.
அக்னி பகவான் யாகங்களில் உண்ட நெய்யால் வந்த வயிற்றுநோய் நீங்கவும், பொருட்களைச் சுட்டெரித்த பாவம் நீங்கவும், இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் கட்டளைப்படி கோயிலின் கிழக்கே அக்னி தீர்த்தத்தை ஏற்படுத்தி, அந்தத் தீர்த்தத்தினால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு, வயிற்றுநோயும் பாவங்களும் நீங்கப் பெற்றார். மேலும் இறைவனிடம், "பக்தர்கள் இங்கு வருகை புரிந்து எம்மால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடினால், அவர்களது வயிற்றுநோய், பாவங்கள் நீக்கி, உன் திருவடியை அடையும் பேற்றினை அருளவேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவனும் அக்னி தேவனுக்கு அந்த வரமருளினான். அன்று முதல் இத்திருத்தலம் அக்னீஸ்வரம் என்ற பெயர்பெற்றது. வயிற்றுநோய் உள்ளவர்கள் இங்குவந்து இறைவனைத் தொழுது நோய்நீங்கப் பெறுகின்றனர்.

கோயிலின் நான்கு புறங்களிலும் கோட்டை மதில்களால் சூழப்பெற்று இருந்ததன் சான்றாக தெற்கு, மேற்கு மதில் கோட்டைகள் இன்றும் காணப்படுகின்றன. இத்தலத்தில் திருநாவுக்கரசரின் தேவாரத்தைக் காதுகொடுத்துக் கேட்ட கோட்டை விநாயகர் சன்னதி கிழக்குக்கோட்டைப் பகுதியில் உள்ளது. பண்டைச் சித்தர்களில் ரோமரிஷி என்பவர் இங்கு வந்து இறைவனை வழிபட்டதன் அடையாளமாக ஓம் பிரகாரத்தில் சித்தர் மலர்கொண்டு இறைவனைப் பூஜை செய்யும் விக்ரகம் உள்ளது. இங்குள்ள தீயாடியப்பரும் அகத்தியரின் சீடரான ரோம ரிஷியால் வழிபடப்பட்டவர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிரம்மதேவன் மகாசிவராத்திரியன்று மூன்றாம் காலத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டு இறையருள் பெற்றதாக வரலாறு.
இங்குள்ள சௌந்தரநாயகி கோயிலை செம்பியன் பல்லவராயன் என்பவன் சோணாடு வழங்கிய சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டினான் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. திருக்காட்டுப்பள்ளி உறை நாயனாருக்கு திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் பிரதிஷ்டை செய்ததாக பல்லவராயன் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்பது காமாட்சி அம்மனைக் குறிக்கும். காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ள காமகோட்டத் தலம் ஒன்பதில் சௌந்தர நாயகி எழுந்தருளியுள்ள திருக்காட்டுப்பள்ளியும் ஒன்று.

தினமும் கோயிலில் நான்கு கால பூஜை நடக்கிறது. திருவிழாக்களில் பங்குனி உத்திரப் பெருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தன்று சுவாமி, அம்பாள் வீதி உலா புறப்பாடு, காவிரி ஆற்றில் வாண வேடிக்கைகள் போன்றவை நடைபெறுகின்றன. மாசி மகத்தில் சுவாமி, அம்பாள், நாகாச்சி என்னும் ஊருக்கு எழுந்தருளும் விழாவும் சிறப்புடன் நடைபெறுகிறது. இது தவிர்த்து ஆண்டின் பன்னிரண்டு மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி
கருத்தனார் கடிபொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்
பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே
- சம்பந்தர் தேவாரம்
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்

ஓம் நமச்சிவாய.  63 நாயன்மார்கள் வரலாறு 63 நாயன்மார்கள் வரலாறு நாயன்மார் வரலாற்று சுருக்கம் 63 நாயன்மார்கள் வரலாறு நாயன்மார் வரலா...