மஹா சிவராத்திரி நலமுடன் வாழ நான்கு கால சிவ பூஜை சிறப்புகள்...
முதல் காலம்
**************
மு தல் காலத்தில் சிவபெருமானுக்கு அனைத்து விதமான திரவியங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும். பொதுவாக, சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நான்குகால பூஜை வேளையிலும், அனைத்துவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் என்பது சாஸ்திரம்.
ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் ஓர் அபிஷேகம் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் காலத்தில் விசேஷமான திரவியமாக சொல்லப்பட்டு இருப்பது பஞ்சகவ்யம்.
இந்த பஞ்சகவ்யத்தை தயாரிப்பது பற்றியும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்பது பசுவிலிருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்களைக் குறிப்பது ஆகும். பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் முறைப்படி ஒவ்வொரு படி எடுத்துக்கொள்ளவும். பிறகு நடுவில் பசுவின் பாலையும், அதன் கிழக்கே தயிரையும், தெற்கே நெய்யையும், வடக்கே கோமியத்தையும், மேற்கே பசுவின் சாணத்தையும் வைத்து, முறைப்படி நடுவே ஈசானன், கிழக்கே தத்புருஷன், தெற்கே அகோரன், வடக்கே வாமதேவன், மேற்கே ஸத்யோஜாதன் என்பதாக இறைவனின் ஐந்து நாமாக்களையும் கூறி பூஜிக்கவேண்டும்.
பின்னர் பசுவின் சாணத்தை எடுத்து, கோமியத்தில் இட வேண்டும். அடுத்து இந்தக் கலவையை பசுநெய்யில் சேர்க்கவேண்டும். பிறகு, இந்த மூன்றும் சேர்ந்த கலவையை பசுந் தயிருடனும் கலந்தபிறகு, நிறைவாக அனைத்தையும் பசும்பாலில் கலந்துகொள்ளவேண்டும். இப்படி பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய மந்திரம் சொல்லி கலக்கவேண்டும். தெரியாதவர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.
பஞ்சகவ்யம் தயாரானதும், அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து, அந்த பொருளை பூஜிக்கப்பட்ட ஒரு விசேஷத் திரவியமாகக் கொள்ள வேண்டும். இந்த பஞ்சகவ்யம் அபிஷேக திரவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
இந்த பஞ்சகவ்யத்தை நாம் வெவ்வேறு வண்ண பசுக்களிடமிருந்து பெற வேண்டும். பால் சிவப்புநிற பசுவிலிருந்தும், தயிரானது வெண்மை நிற பசுவிலிருந்தும், நெய்யானது சாம்பல் நிற பசுவிலிருந்தும், கோமியம் கறுப்பு நிற பசுவிலிருந்தும், பசுஞ்சாணம் பலவர்ணமுடைய பசுவிலிருந்தும் பெறப்பட வேண்டும். ஒருவேளை அப்படி கிடைக்காவிடில், அனைத்தையும் கறுப்பு வண்ண பசுமாட்டிலிருந்து இவற்றைப் பெறலாம்.
முதல் கால அபிஷேகம் முடிந்ததும் ஸ்வாமியின் திருமேனியில் சந்தனம், தேன் கலந்து தடவவேண்டும்.
முதல் காலத்துக்கு உரிய விசேஷ அபிஷேகப் பொருளாக பஞ்சகவ்யம் திகழ்வதுபோன்று, விசேஷ பூக்கள், வஸ்திரம், நைவேத்தியம் முதலானவை குறித்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அவை: வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டு
மாலை: வில்வம்
தூபம்: சந்தனக் கட்டைளைத் தூள் செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பருப்பும் நெய்யும் சேர்த்த அன்னம்.
பாராயணம்: ரிக்வேதம் மற்றும் சிவபுராணம்
--------------------------------------------------------------------.
இரண்டாவது காலம்
***********************
இ ரண்டாவது யாமத்தில் அனைத்துவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதுடன், விசேஷ திரவியமாக பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும்.
இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ரச பஞ்சாமிர்தம், மற்றொன்று பழ பஞ்சாமிர்தம். நாம் பார்க்கின்ற இந்த சிவராத்திரியிலே இரண்டாவது காலத்திலே சொல்லப்படுகிற பஞ்சாமிர்தம் ரச பஞ்சாமிர்தம். ரசம் என்றால் திரவநிலை.
சிவப்பு பசுவிலிருந்து பெறப்பட்ட பாலை நடுவில் வைக்கவேண்டும்.
பின்னர், வெள்ளை பசுவின் பாலில் உருவான தயிரை கிழக்கிலும், சாம்பல் பசுவின் பாலில் பெறப்பட்ட நெய்யை தெற்கிலும், அச்சுவெல்லம் அல்லது தூள்சர்க்கரையை வடக்கிலும், தேனை மேற்கிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு முன்னர் சொன்னதுபோன்று சிவமந்திரம் அல்லது சிவநாமம் சொல்லி பூஜித்து அவற்றை கலந்துகொள்ளவேண்டும். இந்தக் கலவைக்கே ரச பஞ்சாமிர்தம் என்று பெயர். இயலாவிடின், ஐவகை பழங்களைக் கொண்டு பழ பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்தும் வழிபடலாம்.
இரண்டாம் கால அபிஷேகம் முடிந்ததும், பச்சைக் கற்பூரம் அரைத்து சுவாமியின் திருமேனியில் பூசவேண்டும்.
வஸ்திரம்: மஞ்சள் வண்ண வஸ்திரம்.
மாலை: குருந்த மர இலைகளால் ஆன மாலை. துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
தூபம்: சாம்பிராணியும் குங்கிலியமும் கலந்து தூபம் இடவேண்டும்.
தீபம்: இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
நைவேத்தியம்: பாயசம்.
பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
மூன்றாம் காலம்
*******************
மூ ன்றாம் யாமத்தில் அதாவது காலத்தில், சிவபெருமானுக்கு அனைத்துவிதமான திரவியங்களுடன், விசேஷமாக தேனபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும், கஸ்தூரி சேர்த்த சந்தனத்தை ஸ்வாமிக்குப் பூசவேண்டும்.
வஸ்திரம்: வெள்ளை வஸ்திரம்.
மாலை: கிலுவை இலை மற்றும் விளா இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையும் ஜாதிமுல்லை மாலையும் மூன்றுதள வில்வத்தால் அர்ச்சிக்க வேண்டும்.
தூபம்: குங்கிலிக பூவினால் தூபம் போடவேண்டும்
தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: மாதுளை, எள் அன்னம்.
பாராயணம்: சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யவேண்டும்.
--------------------------------------------------------------------
நான்காம் காலம்
******************
நா ன்காம் கால பூஜையின்போது, கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவேண்டும். புனுகு, சந்தனம் சேர்த்துப் பூசவேண்டும்.
வஸ்திரம்: பச்சை அல்லது நீலவண்ண வஸ்திரம்.
மாலை: கருநொச்சியினால் அலங்காரம் செய்து, வெள்ளை நந்தியாவட்டையால் ஆன மாலையை அணிவிக்கவேண்டும். மேலும் நிறைய புஷ்பங்களால் அலங்கரிக்கவேண்டும்.
தூபம்: கற்பூரம் மற்றும் லவங்கப்பட்டையைப் பொடி செய்து தூபம் போடவேண்டும்.
தீபம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
நைவேத்தியம்: வாழை முதலான அனைத்துவகைப் பழங்களும், சர்க்கரைப்பொங்கலும் படைக்கலாம்.
பாராயணம்: அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment