நாம் செய்யும் அன்னதானம் இறைவனை சென்றடைவது எப்படி
அன்னதானத்தின் மூலம் இறைவனின் அனுக்கிரகத்தை எளிதில் அடைய முடியும். இதனால் நம்முடன் இருந்த தீய கர்மாவை அழித்து ஆன்மாவை தூய்மைப் படுத்தும் முயற்சியை மேற்கொள்ளலாம். இது உள் அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை அடைய உதவுகிறது. சேவை என்பது வெறும் பொருள் தியாகம் அல்ல, அது இறைவனுக்கான உங்கள் பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
கோயில்களில் இறைவனின் திருப்பெயரால், அன்னதானம் வழங்குவது இறைவனின் அருளைப் பெறும் எளிய வழியாகும். இயல்பாக அன்னதானம் செய்தாலே நற்பலன்கள் கிடைக்கும். ஆயினும், இறை சக்தி மிகுந்த கோயில்களில் அன்னதானம் செய்வது பசியில் இருப்போரின் மனதினை குளிர வைப்பதோடு, இறைவனின் மனதையும் குளிர்விக்கும். பொது வெளி அன்னதானங்களில் எளியவர்கள் மட்டுமே உணவினை வாங்கி பசியாறுவார்கள். அதுவே கோயில் என்னும் பொழுது அங்கு எளியவர்கள் மட்டுமின்றி பக்தர்கள், சாமியார்கள், பணக்காரர்கள் வரை தயக்கமின்றி உணவினை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் சகல விதமான பக்தர்களின் ஆசிகள் உங்களை தேடி வரும்.
பிறர் பசியைப் போக்க ஒருவர் முயற்சிப்பது பூமியில் சிறந்த செயலாகும். மனிதனுக்கு மட்டுமல்லாமல் பிற விலங்குகளுக்கும் உணவை தானம் செய்தல் நலம். மனிதனை தவிர மற்ற விலங்குகளுக்கு உங்களால் நன்மை செய்ய முடியும் என்றால் அது உணவு தானம் மட்டுமே. அதை தவிர வேறு எதுவும் உங்களால் செய்ய முடியாது. அன்னதானத்தை கோயிலுக்கு வரும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
கோயில்களுக்கு பாத யாத்திரையாக செல்வபவர்களுக்கும், கிரிவலம் வருபவர்களுக்கும் களைப்பைப் போக்க தானம் செய்யலாம். சில மலைக் கோயில்களில் குரங்குகள் உணவுக்காக அலைந்து கொண்டிருக்கும். குரங்குகளுக்கும், கோயில் பசுக்களுக்கும், யானைகளுக்கும் கூட உணவுகளை அர்ப்பணியுங்கள்.
இறைவன் எப்போதும் தன் சுய ரூபத்தில் மனிதர்களுக்கு காட்சிக் கொடுப்பதில்லை. முன்னோர்களுக்கு அன்னம் பாவிக்க காகத்திற்கு உணவினை வைப்பதால் அது அவர்களுக்கு அடைவதை போல, ஏதேனும் ஒரு உயிர்களின் ரூபத்தில் அன்னதானம் இறைவனை அடையும். ஈ, எறும்பு, பசு, காகம் அல்லது ஏதேனும் ஒரு ரூபத்தில் அவர் அந்த படையலை ஏற்றுக் கொள்வார்.
இவ்வுலகத்தை படைத்தவனிடம் நாம் கொடுப்பது ஊசி முனை அளவு கூட கிடையாது. எளிய மக்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அது ஒரு அன்புதானே தவிர, வேறேதும் இல்லை.
ஆன்மீக பயணத்தில் தான தர்மங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல நோக்கத்துடன் தானம் செய்பவர்கள் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைவார்கள் என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். கோயில்களில் சேவை செய்வது பக்தியின் ஒரு வடிவாக கருதப்படுகிறது. அது ஆன்மாவை பிறப்பு மற்றும் இறப்பு என்ற தீய சுழற்சியில் இருந்து விடுவித்து முக்தியை அளிக்கிறது.
கோயில்ககளில் அன்னதானம் செய்வதால் கடவுளுடனான உங்கள் உறவை அது மேம்படுத்தும். உங்கள் செயல்கள் அனைத்தும் தூய்மைப் படுத்தப்படும். தன்னலமற்ற மனப்பான்மையுடன் தர்மம் செய்தால் பொருள் ஆசைகள் தீரும். இது ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
அன்னதானம் செய்யும் போது, தானம் செய்பவர்கள் முதலில் உணவினை உண்ணாமல் இருந்து, தம் பசியினை உணர்ந்து மற்றவர்களுக்கு உணவு வழங்கும் போது, உங்கள் எண்ணங்கள் தூய்மையடையும்.
தானம் செய்ய நினைக்கும் எளியவர்கள் தங்களால் அன்னம் அளிக்க இயலாமல் இருந்தால், தண்ணீரை வழங்கலாம். கோயில் புறாக்களுக்கு ஒரு கொட்டங்குச்சியில் தண்ணீர் வைப்பது கூட உங்களுக்கு முழுப் பலனை தரும்.
No comments:
Post a Comment