Monday, March 24, 2025

சண்டேச நாயனார்" அவதார தலம் தஞ்சாவூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர்.

சிவபெருமானின் திருக்கரங்களால் தீண்டப்பெற்று 
பட்டம் சூட்டப் பெற்ற 
ஒரே நாயன்மாரான,
சிவபூசைகுரிய பாலை காலால் எட்டி உதைத்து இடையூறு செய்த தனது தந்தையின் கால்களை வெட்டிய, திருத்தொண்டர்களுக்கெல்லாம் தலைவரான,
63 நாயன்மார்களில் ஒருவரான, பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான 
"சண்டிகேஸ்வரர்" என்ற "சண்டேச நாயனார்" அவதார தலமாகவும் 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, கோட்செங்கட்சோழன் கட்டிய மாடக் கோயிலில் ஒன்றானதும், சோழர்கள் முடி சூடிக்கொள்ளும் ஐந்து தலங்களில் முதன்மை தலமான 
*தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 
#சேங்கனூர் என்ற 
#திருச்சேய்ஞலூர்
#சத்தியகிரீஸ்வரர்
(சத்தியகிரிநாதர்)
#சகிதேவியம்மை
திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 
திருச்சேய்ஞலூர் சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் சம்பந்தர் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவத்தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப் பெருமான், சிபி சக்கரவர்த்தி, அரிச்சந்திரன் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 41வது தலம் ஆகும்.

கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி சேங்கனூர் நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு வாயில் உள்ளது) சுமார் 1 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
*இறைவர் திருப்பெயர்:   சத்தியகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்.  

*இறைவியார் திருப்பெயர்: சகிதேவியம்மை.  
     
*தீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்).  

*வழிபட்டோர்:

முருகப் பெருமான்,சம்பந்தர், அப்பர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார்,சிபி, அரிச்சந்திரன் ஆகியோர்.

#திருஞானசம்பந்தர் பாடிய திருச்சேய்ஞல்லூர்
தேவாரப் பதிகம்:

"நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.   நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

மக்கள் வழக்கில் 'சேங்கலூர் ' என்று வழங்குகிறது. இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.

‘சேய்’ என்ற சொல்லுக்கு இளமை, குமரன், குழந்தை, முருகன், சிகப்பு, செவ்வாய் என்னும் பல பொருள்கள் உண்டு.  இவையனைத்தும் உடையவன் முருகன்.  எனவே அவனை ‘சேய்’ என்பார்கள்.  சேய் தாம் உறைதற்கு நல்ல ஊர்  என்று விரும்பியதைக் கண்டு தேவர்கள் இதனை சேய் நல் ஊர் -  சேய்ஞலூர் என்று அழைத்தனர்.  “சேய் அடைந்த சேய்ஞலூர்” என்று திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடுகின்றார்.

சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து நகரங்களில் சேய்ஞலூரும் ஒன்றாகும்.  பண்ணுக்கு  இசையும்,; பாலுக்கு சுவையும், கண்ணுக்கு பெருகும் ஒளியும், கருத்திற்கு திருவைந்தெழுத்தான பஞ்சாட்சரமும், விண்ணுக்கு மழையும்,; வேதத்துக்குச் சைவமும் பயனாவது போல மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமையுடையது திருச்சேய்ஞலூர் என்று பாடுவார் சேக்கிழார்.

*#சண்டிகேஸ்வரர் அவதாரம்:

இவ்வூரில் காச்யப கோத்திரத்தில் மறைவர் மரபில் எச்சதத்தன் என்பவர் பவித்ரை என்னும் மாதரசியை மணந்து இல்லறம் நடத்தி வந்தார்.  சிவனருளால் அவருக்கு பிறந்த குழந்ததைக்கு விசார சர்மர் என்று பெயரிட்டனர்.  அக்குழந்தை முற்பிறவியில் வேத சாஸ்திர ஆகமங்களில் பெற்றிருந்த அறிவால் இப்பிறவியிலும் ஐந்து வயதிலேயே பல்கலைகளிலும் சிறந்து விளங்கினான்.  அவனுக்கு ஏழாவது வயதில் உபநயனம் செய்வித்தனர்.  அளவில்லாத கலைகளின் பொருள்களுக்கெல்லாம் முடிந்த பொருள் தில்லையில் ஆடும் எல்லையில்லாத அருட்பெரும் கூத்தனின் திருவடியே ஆகும் என்ற உணர்வு அவனுக்கு மேலோங்கியது.  சிவபெருமானிடம் கொண்ட பேரன்பினால் விசாரசர்மனுக்கு இறைத் தொண்டின் ஆர்வமும் பெருகியது.

சேய்ஞலூரில் மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஒருநாள் ஒரு பசுவை அடித்தபோது அதனைக் கண்ட விசாரசர்மனுக்கு அதன்மீது இரக்கம் உண்டாயிற்று.  புனிதமான பசுக்களைக் காத்து வருதலே சிறந்த கடமை எனக் கருதி இம்மாடுகளை மேய்க்கும் தொழிலைத்தானே மேற்கொள்வேன் என்று தீர்மானித்தான்.  ஊரில் உள்ள மறையவர்களின் அனுமதியுடன் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டான்.  இவனது பாசத்தாலும் தாய் போன்ற அரவணைப்பாலும் பசுக்கள் மேலும் பல் மடங்கு பாலைச் சொரிந்தன.  சில சமயங்களில் அவை தாமாகவே பாலைப் பொழியத் தொடங்கின.  அதனைக் கண்ட விசார சர்மாவுக்கு அந்தப்பால் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்ய உதவுமே என்று சிந்தித்தான்.  மண்ணியாற்றங்கரையில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் ஒரு மணல் திட்டில் சிவலிங்கத்தை மணலால் அமைத்து, அதனைச் சுற்றிலும் திருக்கோயில், கோபுரம், மதில் முதலியன மணலால் கட்டினான்.  ஆத்திமலர் மற்றும் கிடைத்த காட்டுப் பூக்களைப் பறித்துவந்தான்.  பால்குடத்தை எடுத்துக்கொண்டு பசுக்களின் மடியைத் தொட்டபோது தாமாகவே பாலைச் சொரிந்தன.  அதனைக் கொண்டு மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மலர்களினால் பூஜை செய்தான்.  இப்படி அபிஷேகத்திற்குப் பால் கொடுத்த பசுக்கள் அதன் சொந்தக்காரர்கள் வீட்டிற்குச் சென்றபோதும் முன்போலவே பாலை அளித்தன.

விசார சர்மா தினமும் இவ்வாறு சிவபூஜை செய்து வந்ததை ஒருநாள் அவ்வூரில்  ஒருவன் கண்டான்.  இந்தப் பையன் பசும்பாலை மணலில் கொட்டி வீணாக்குகிறான் என்று ஊராரிடம் கோள் மூட்டினான்.  அவர்கள் எச்சதத்தனிடம் இதனைத் தெரிவித்து கண்டித்தனர்.  இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வதாகக் கூறிவிட்டு,  மறுநாள் தானே நேரில் கண்டு அறிய எச்சதத்தன் தீர்மானித்தான்.  தன் மகன் அறியாமல், அங்கு மண்ணியாற்றங்கரையில் இருந்த குராமரம் ஒன்றின்மேல் ஏறினான்.  நிகழ்வதை கவனிக்கத் தொடங்கினான்.  விசார சர்மாவின் சிவ பூஜையைக் கண்ட எச்சதத்தன் மரத்திலிருந்து இறங்கி வந்து ஒரு கோலினால் அவன் முதுகில் அடித்தான்.  விசாரசர்மாவின் மனமும் உடலும் சிவ பூஜையில் லயித்திருந்ததால் அந்த அடியை அவன் உணரவில்லை.  எச்சதத்தன் மேலும் கோபம் கொண்டு அங்கிருந்த பாற்குடங்களைக் காலினால் இடறிச் சிந்தினான்.  அவ்வாறு செய்தது தன் தந்தை என்றும் பொருட்படுத்தாமல் அந்த பாதகத்தைத் தண்டிக்க ஒரு கோல் எடுத்து வீசினான்.  அக்கோல் உடனே சிவபெருமானுடைய மழுப்படையாக மாறி எச்சதத்தனது கால்களைத் துண்டித்தது.  எச்சதத்தன் மணல்மேல் வீழ்ந்து இறந்தான்.  விசாரசர்மன் எதுவும் நடவாததுபோல் கவலைப்படாமல் பூஜையில் வந்த இடையூறு நீங்கியது என்று எண்ணி வழிபாட்டைத் தொடர்ந்தான்.

சிவபூஜையில் அவனது உறுதியும், ஊக்கமும், மன லயிப்பும் இறைவனை மகிழ்வித்தது.  தேவியுடன் இடபவாகனத்தில் காட்சிதந்து அருளினார்.  இளம் பாலகனாகிய விசார சர்மனது தீவிரமான சிவபக்தியும், தொண்டும், பசுக்களிடம் அவன் காட்டிய அன்பும் பெருமானுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  அவன் சிவபிரான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.  “நம்பொருட்டாக உன்னைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டி இறக்கச் செய்தாய்.  ஆதலால் இனிமேல் நாமே உனக்கு தந்தை ஆயினோம்.” என்றருளிச்செய்து தம் மார்போடு அணைத்துத் தழுவி உச்சி மோந்து மகிழ்ந்தார்.  சிவபெருமானின் திருக்கரங்களால் தீண்டப்பெற்ற விசார சர்மாவின் உடல் சிவமயமாகப் பிரகாசித்தது.

சிவபெருமான் விசாரசர்மரை திருத்தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார்.  “நமக்கு நிவேதனம் செய்த உணவும், உடுத்த உடைகளும், சூடும் மலர் மாலைகள் அணிகலன்கள் முதலியன அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி “சண்டீசன்” என்னும் பதவியையும் தந்தோம்” என்று கூறித் தம் சடை முடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து அவருக்குச் சூட்டி அருளினார். மேலும், “எம்மை வழிபட்டவர்கள் கடைசியில் உன்னைத் தரிசனம் செய்தால்தான் எம்மை வழிபட்டபலனைப் பெறுவார்கள்” என்ற வரத்தையும் அளித்தார். தேவர், சித்தர், கனநாதர், முனிவர் ஆகிய அனைவரும் ‘ஹர ஹர’ என்று ஆரவாரித்து மலர் மாரிப் பொழிந்தனர்.  விசார சர்மரும் “சண்டேச்வர நாயனார்” ஆகி சிவபெருமானைத் தொழுது சண்டீசப் பதம் அடைந்தார்.  கால்கள் வெட்டப்பட்டு இறந்த எச்சதத்தன் சிவனருளால்  குற்றம் நீங்கி உயிர்பெற்று தம்சுற்றத்தாருடன் திருக்கயிலாயத்தை அடையும் பேறு பெற்றான்.

சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய்.  இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார்.  அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார்.  மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று.  பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உல்ள கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.

         எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால், அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.

எந்த அடியார்க்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த சண்டேச நாயனாருக்கு மட்டுமே உண்டு.  அறுபத்து மூவர் பிரதிஷ்டையில்லாத கோயில் உண்டு.   தேவார மூவர், மணிவாசகர் ஆகியோர் பிரதிஷ்டையில்லாத கோயிலும் உண்டு.  ஆனால் எல்லாசிவாலயங்களிலும் சண்டேசர் சன்னதி நிச்சயமாக இருக்கும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகமிக இளய வயது உடையவர் இவரே என்பதும், மற்றவர்களைவிட காலத்தால் முந்திய நாயன்மாரும் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

*தல வரலாறு:

இப்போது சேங்கனுர் என்று அழைக்கப்படும் இவ்வூர் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் வாய்ந்தவர் என்கிற போட்டியில் ஆதிசேஷன் பிடியில் இருந்த மேரு மலையை வாயு பகவான் தகர்த்தபோது ஒன்பது சிகரங்களாக உடைந்து ஒன்பது கண்டங்களில் விழுந்தது. அதில் கந்தமாதனம் எனும் சிகரம் எழு சிகரங்களாக பாரதத்தில் எழு இடங்களில் விழுந்தன. அதில் சத்தியம் எனும் சிகரம் இவ்வாலயம் உள்ள இடத்தில் விழுந்தது. விழுந்தது மேருமலை என்பதால் இவ்வூர் புனிதம் மிக்கதாக கருதப்படுகிறது. எனவே முனிவர்களும், மகரிஷிகளும் இங்கு விலங்குகளாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும் இந்த தலத்தை வழிபட்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்ரீ சண்டிகேஸ்வரர் அவதரித்த தலம் இதுவாகும். எச்சதத்தன் என்கிற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் விசாரசருமர்(சண்டிகேஸ்வரர்). இவர் மாடுமேய்க்கும் தொழிலை செய்துவந்தார். பசுக்கள் மேய்ச்சலின் போது பால் மிகுதி காரணமாக தானாக பாலை கிழே சொரிய ஆரம்பித்தன. பால் வீணாவதை விரும்பாத விசாரசருமர், அத்தி மரத்தடியில் மணலால் லிங்கம் செய்து பால் அபிசஷேகம் செய்துவந்தார். இதை பார்த்த ஊர்மக்களும், தந்தையும் கண்டித்தும் மீண்டும் மீண்டும் பால் வீணாவதை கண்டித்த தந்தையை பக்தி மயக்கத்தால் செய்வதறியாது அருகில் இருந்த கோலால் அடிக்க தந்தை இறந்தார். விசாரசருமர் முன் தோன்றிய தேவியும், பரமேஸ்வரரும் சிவபூசை தடைபட கூடாது என்பதற்காக ஈன்ற தந்தையை இழந்தாய். இனி யாமே உனக்கு தந்தையாய் இருப்பேன் எனக்கூறி கொன்றை மாலை ஒன்றை அனிவித்து நாம் உண்ட கலமும், உடுப்பனவும், சூடுவனவும் உனக்கே உரித்தானவை. என்னை வழிபட்டவர்கள் உன்னை வழிபட்டால்தான் என்னை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீசண்டிகேசர் என்ற பட்டமும் அளித்தார். சிலகாலம் இங்கு தவம் செய்து இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருவாய்ப்பாடியில் மோட்சம் அடைந்தார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் அங்கு குருவாக இருக்க நேர்ந்ததால் சிவத்துரோக தோஷம் பற்றியது. அது இங்கு நீங்கியதாக கூறுவர். சூரனை அழிப்பதற்கு இங்கு தங்கி ஈசனை வழிபட்டு சர்வசங்காரபடையை பெற்று போருக்கு சென்றார். சேய் என்றால் முருகன் எனவே இவ்வூர் திருசேய்ஞலூர் ஆயிற்று. இங்குள்ள சண்டிகேஸ்வரரின் திருமுடியில் பிறை, ஜடை, குண்டலம், கங்கை ஆகியவற்றை கொண்ட சண்டிகேஸ்வரர் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. வைணவப் பெரியவராகிய பெரியவாச்சான் பிள்ளை அவதரித்ததலம்.

சோழ மன்னர்கள் முடிசூடும் ஐந்து தலங்களில் முதன்மையானதென இத்தலத்தை பெரிய புராணம் கூறும் திருத்தலம்.
சேங்கனூரில் சிவலோக நாதர் எனும் மற்றொரு சிவன் கோயிலும் வைணவக் கோயிலும் அமைந்துள்ளது.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்.

கும்பகோணம் - அணைக்கரை சாலையில் சோழபுரம் தாண்டியதும் 12வது கிலோ மீட்டரில் சேய்ஞலூர் கூட்ரோடில் வலதுபுறம் ஒரு கீலோ மீட்டர் சென்றால் இவ்வூரை அடையலாம்.  இங்குள்ள சிவாலயத்தில் ஸ்ரீ சக்திகிரீஸ்வரர் சகிதேவியுடன் அருட்காட்சி வழங்குகிறார்.  தெற்கு நோக்கி அமைந்த சந்நிதியில் முருகன் ஒருமுகம் நான்கு கரங்களுடன் வலதுமுன்கரம் தாமரை மலர் ஏந்தி சிவபெருமானை பூசிக்கும் நிலையில் உள்ளார்.  பின் இரு கரங்களில் சக்தி ஹஸ்தமும் ஜபமாலையும் கொண்டுள்ளார்.  இத்தலத்தில் முருகன் சிவபிரானை பூசித்து ருத்ர பாசுபதம் என்னும் சர்வ சம்ஹாரப்படைக்கலத்தைப் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.

சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை, உருத்திர பாசுபதத்தை பெற்றார். சேய் என்பது முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. முருகனுக்கு இத்தலத்தில் பெரிய தனி சன்னதி உள்ளது.

கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்., கோயில் கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர் சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.

சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள் சேய்ஞலூர் தலமும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய பெரியவாய்ச்சான் பிள்ளை அவதாரத் தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.

         திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சண்டேசுவர நாயனார் வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7-வது பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார். சண்டீச நாயனார் அவதாரத்தலம் என்பதால்,  திருஞானசம்பந்தர் சிவிகை இருந்து இறங்கி நடந்து சென்று இத்தல இறைவனை வழிபட்டார் என்று பெரிய புராணம் கூறும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " ஏழ் புவிக்குள் வாய்ஞ்ஞலூர் ஈதே மருவ என வானவர் சேர் சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே" என்று போற்றி உள்ளார்.

கோயில் உட்புறம் மேற்கு நோக்கிய சுவர்களில் சண்டேச நாயனார் வரலாறு வண்ண ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன.  வடக்கு சுற்றில் வேறு எங்கும் காண இயலாத அற்புதத் திருமேனியில் சண்டேசர் ஜடை, கங்கை, பிறை, வலது காதில் குண்டலம், இடது காதில் குழை ஆகிய அனைத்தும் சிவபெருமானே என்னும்படி காட்சியளிக்கிறார்.  திருஞானசம்பந்தர் தமது நான்காவது தலயாத்திரையில் இத்தலத்தை தரிசித்துப் பாடுகிறார்.  இத்தலத்திற்கு சத்யகிரி, குமாரபுரி, சண்டேச்வரபுரம் என வேறு பெயர்கள் உண்டு.  இத்திருக் கோயில் கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றாகும்.  சிவபெருமானுக்குப் பிள்ளைகள் எனப்படும் நான்கு பிள்ளையார்களில் மூத்தவர் கணபதி, இளயவர் முருகன், காழிப்;பிள்ளையார் திருஞானசம்பந்தர், சேய்ஞலூர் செல்லப்பிள்ளை விசாரசர்மன் எனும் சண்டேசர்.

சேய்ஞலூரில் பிறந்த இன்னொரு பிள்ளை யார் தெரியுமா?  அவர்தான் பெரிய வாச்சான் பிள்ளை.  சேய்ஞலூரில் வாழ்ந்த யாமுன தேசிகருக்கும், நாச்சியார் அம்மாளுக்கும் 1227ல் திருமகனாகத் தோன்றியவர் கிருஷ்ணசூரி என்பவர். விஷ்ணு பக்தியே சாரம் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து எப்போதும் கண்ணன் எம்பெருமானிடம் தீவிர பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.  திருமணமானபின் தம்மனைவியுடன் திருமலை சென்று வேங்கடமுடையானை தரிசித்தார்.  பெருமானது பேரழகில் மயங்கி தம் பெற்றோர் உறவினர்களை மறந்தார்.  ஒருநாள் வேங்கடமுடையானே வயோதிகர் கோலத்தில் அவர் முன் தோன்றி ஒரு சாளக் கிராமத்தைக் கொடுத்து “இதையே ஸ்ரீனிவாசனாக வைத்து வழிபட்டுவருவாயாக” என்றார்.  உடனே தமது ஊருக்குத் திரும்பி வரும் வழியில் தமது துணி மூட்டையை வைத்துவிட்டு கொள்ளிட நதிக்கரையில் நீராடினார்.  அனுஷ்டானம் முடித்து புறப்படும்போது அவரது துணிமூட்டையில் சாளக்கிராமம் காணப்படவில்லை.

மிக்க மன வருத்தத்துடன் சேய்ஞலூர் வந்த கிருஷ்ணசூரியின் கனவில் வேங்கடவன் தோன்றி “சாளக்கிராமத்திலிருந்து இதேரூபம் எடுத்து கொள்ளிட நதியில் இருக்கிறோம்” என்று கூறியவுடன் அங்கு சென்று பெருமாள் காட்டிய அடையாளத்தின்படி சீனிவாசப்பெருமான் விக்ரஹத்தை எடுத்து கண்டு மகிழ்ந்தார். சேய்ஞலூர் கீழ வீதியில் உள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் கிருஷ்ணசூரி கட்டிய திருக்கோயில் என்று கூறுகிறார்கள்.

கிருஷ்ணசூரி ஸ்ரீரங்கநாதனை தரிசிக்கச் சென்றபோது ஸ்ரீ நம்பிள்ளை என்பவர் இவரது பக்தியையும் ஞானத்தையும் அறிந்து தமது சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்கு பெரிய வாச்சான்பிள்ளை என்ற திருநாமம் சூட்டினார்.   திருவாய் மொழிக்கு வியாக்யானம் செய்து “வியாக்யான சக்ரவர்த்தி” என்ற பட்டம் பெற்றார்.  அவர் தொகுத்த “திவ்யப்பிரபந்த பாசுரப்படி ராமாயணம் மிக அருமையான பாசுர நூலாகும்.  அவரது திருமாளிகை மற்றும் திருக்கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்துள்ளவர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அவர்கள்.   இவ்வாறு சைவம், வைணவம் இரண்டிற்கும் பெருமை சேர்க்கும் அடியார்கள் வாழ்ந்த அற்புதத்தலமாக சேய்ஞலூர் திகழ்கின்றது.

பதவி அளிக்கும் சேங்கனூர் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு இமயம் முதல் குமரி வரை உள்ள சகல சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும் அவர்தம் வாழ்வில் மறக்க முடியாத நல்ல மாற்றம் காத்துக்கொண்டு இருக்கிறது.

வேண்டியதை அருளும் பரமனிடம் நமக்கு நல்ல வேலை கிடைப்பதற்கும், கிடைத்த உத்யோகம் நிலைக்கவும், பதவி உயர்வு பெறவும் பிரார்த்தனை செய்யலாம் வாருங்களேன்!

காலை 7 மணி முதல் பகல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அத்திருப் பதிபணிந்து அகன்று போய்,அனல்
கைத்தலத் தவர்பதி பிறவும் கைதொழு
முத்தமிழ் விரகர்ஆம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலம்முத்து ஈனும் சேய்ஞலூர்.

திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழவு ஒலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம் . 

No comments:

Post a Comment

Followers

திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்

ஐவண்ணப்பெருமான்.. திருமூக்கீச்சுரம்.. பிரம்மன் வழிபட்ட தலம்..!! அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்...!!    *இந்த கோயில் எங்க...