சிவஸ்தலம் பெயர் திருகரவீரம் (தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர் கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்
பதிகம் திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம். கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்ய தேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்
கரையபுரம்.
மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 610104
இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது. இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப் பட்டவர் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.
கௌதமர் பூசித்த இத்தலம் திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தம் அனவரத தீர்த்தம் காணலாம். முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிரகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாட்களில் பெண்கள் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால் அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. ஆலயத்தின் தல விருட்சமான செவ்வரளி மரம் மேற்கு வெளிப் பிரகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்திற்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்திற்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும். குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள என்பது ஐதீகம்.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் இத்தலம் வந்த போது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறு நாள் இறைவனை பாடியுள்ளார். சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment