ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்ரபாதர் அதிஷ்டானம். திருப்பட்டூர் வியாக்ரபாதர் பிருந்தாவனம்.
காசிக்கு நிகரான திருப்பட்டூர்!
ஸ்ரீஆதிசேஷனின் அவதாரமாகிய
பதஞ்சலி முனிவருக்கு, அவர் சிந்தனைக்கு ஈடான ஒரு முனிவர் நண்பராகக் கிடைத்தார். அவர்... வியாக்ரபாதர். இருவரும் இணையற்ற நண்பரானார்கள். காட்டிலும் மலையிலுமாக கடும் தவம் மேற்கொண்டார்கள்.
தில்லையம்பதி என்று போற்றப்படுகிற சிதம்பரம் திருத்தலத்தில், இவர்களுக்கு சிவனார் திருக்காட்சி தந்து, தன் திருநடனத்தையும் ஆடிக்காட்டியதைப் புராணம் அழகுறச் சொல்லியிருக்கிறது. ஒருகாலத்தில், மகிழ மரங்களும் வில்வ மரங்களும் சூழ்ந்த திருப்பட்டூர் வனப்பகுதியில், பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அனுதினமும் சிவபூஜை செய்தார்கள். கண் மூடி தவமிருந்தார்கள். பர்ணசாலை அமைத்து, மௌனம் அனுஷ்டித்தார்கள்.
யோகிகள் தவமிருந்த பூமி எனும் சிறப்பும் கொண்ட திருப்பட்டூர் தலத்தில், அமானுஷ்யங்களும் அதிசயங்களும் பக்தர்களுக்கு சத்விஷயங்களாக இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றன.
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் அருகில், ஒரு பத்துநிமிடம் அமைதியாகக் கண்மூடி உட்காருங்கள். தெளியாத மனமும் தெளியும். தீராத பிரச்னையும் தீரும். உணர்ந்து சிலிர்ப்பீர்கள்.
பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. பயணித்தால், காசி விஸ்வநாதர் ஆலயத்தை அடையலாம். சிறிய அதேசமயம் அழகான கோயில். உள்ளே நுழைந்ததும், வியாக்ரபாதர் திருச்சமாதியைத் தரிசிக்கலாம். அங்கே பிரம்மா கோயிலில் பதஞ்சலி முனிவர் சமாதி. இங்கே, வியாக்ரபாதரின் திருச்சமாதி. மனித உடலும் புலியும் கால்களும் கொண்ட வியாக்ரபாதர், தன் காலால் உண்டு பண்ணிய திருக்குளம் அருகில் உள்ளது. காசிக்கு நிகரான ஆலயம். கங்கைக்கு நிகரான திருக்குளம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
திருப்பட்டூர் வருபவர்கள், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து, வியாக்ரபாதர் தீர்த்தக்குளத்தில் கால் அலம்பிவிட்டு, சிவனாரைத் தரிசிக்கவேண்டும். முடிந்தால், காசிவிஸ்வநாதருக்கு வஸ்திரமும் ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்குப் புடவையும் சார்த்தி மனதார வேண்டிக் கொண்டால், அதுவரை தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்கள், நம் பரம்பரையில் உள்ள பித்ருக்கள் சாபம் முதலானவை நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
அடுத்து, வியாக்ரபாதரின் அதிஷ்டானத்துக்கு வந்து, ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து, கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். .. உங்கள் மூதாதையர்கள் அனைவரின் ஆசீர்வாதம் முழுவதும் கிடைக்கப்பெறுவீர்கள்.
காசி விஸ்வநாதர் ஆலயம், காசியம்பதிக்கு நிகரான திருத்தலம்!
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment