Wednesday, March 26, 2025

பிரமபுரீஸ்வரர் திருக்கோயில் அம்பல்பூந்தோட்டம் நன்னிலம்..

அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், 
அம்பல்- 609 503
பூந்தோட்டம் வழி,   
நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம். 
*மூலவர்:
பிரமபுரீஸ்வரர்

*தாயார்:
சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை

*தல விருட்சம்:
புன்னை மரம்

*தீர்த்தம்:
பிரம தீர்த்தம் 

*பாடல் பெற்ற தலம்
பாடியவர் சம்பந்தர்.                     

*அம்பர் இன்று  அம்பல் என்று வழங்கப்படுகிறது.
  
*திருக்கோயிலில் "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் சிறப்புவாய்ந்த கிணறு உள்ளது.   

*நைமிசாரண்ய முனிவர்கள், எல்லாப் பெருமைகளையும் உடையதும், முக்தி தருவதுமான தலம் ஒன்றின் பெருமையைக் கூறுமாறு சூத முனிவரிடம் கேட்க, மிக்க மகிழ்ச்சியடைந்த சூதர், பிரமபுரி எனப்படும் அம்பர் தலத்தின் பெருமைகளைக் கூறினார். 
"வேண்டுவோர் வேண்டுவன யாவற்றையும் அளிக்கும் இத்தலம், கற்பக விருக்ஷத்தையும் காமதேனுவையும் சிந்தாமணியையும் ஒத்தது. இங்கு சிறிது நேரம் தங்கினாலும் காசியில் தங்கி தருமங்கள் செய்வதற்கு நிகராகும். இங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களும் சிவலோகப் பதவி பெறுவது நிச்சயம். இதன் அருகில் ஓடும் அரிசிலாறு காவிரியே. அதிலும், கோயிலில் உள்ள அன்னமாம் பொய்கையிலும் நீராடினால் பெறும் பயன் அளவிடற்கரியது. நீராடுவோர் கொடிய பாவங்களில் இருந்து நீங்கப்பெறுவர்."   
*பிரமன் அருள் பெற்றது:    ஒரு சமயம் பிரமனும் திருமாலும் தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று நீண்ட காலம் போரிட்டுக் கொண்டனர். அப்போது அவ்விருவரிடையே முதலும் முடிவும் அறியமாட்டாத சோதி வடிவாகச் சிவபெருமான் தோன்றினார். அச்சோதியின் அடிமுடி கண்டவரே உயர்ந்தவர் என இறைவன் கூறவே, திருமால் வராக வடிவெடுத்து திருவடியைக் காண்பதற்காக   நிலத்தை அகழ்ந்து   பாதாளம் வரை சென்றும் முடியாதுபோகவே இறைவனைத் தொழுது, " நீரே பரம்" எனக் கூற, பிரமன் அன்னப்பறவை வடிவில் முடி காணச் சென்றார். அது முடியாது போகவே, இறைவனது முடியிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சி சொல்லுமாறு கூறி விட்டு, தான் முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தார். 

"அன்னப்பறவை வடிவிலேயே இருப்பாயாக" என்று பிரமனைப் பெருமான் சபித்து விட்டு, இனித் தாழம்பூவை சிவபூஜைக்கு உதவாதவாறும் சபித்தார். 

பிரமன், அன்னவடிவம் நீங்குவதற்காக புன்னாக வனத்தை அடைந்து கடும் தவம் மேற்கொண்டார்.
சிவபெருமான், பிரமனுக்கு காட்சி அளித்து, அவர் வேண்டியபடியே, அன்ன உருவம் நீங்கிப் பழைய வடிவு பெறுமாறு
அருளினார். 
பிரமா தவம் செய்த பொய்கை, " அன்னமாம் பொய்கை" எனப்படுமாறும்,  மாசி மகத்தன்று அதில் நீராடுவோர் தேவ பதவி பெறுவர் என்றும் பல வரங்களை அளித்தருளினார்.                      

*சம்கார சீலனை அழித்தது: சம்கார சீலன் என்பவன் பிரமனைக் குறித்து தவம் செய்து யாவரையும் வெல்லும் வரம் பெற்றான். இந்திரனையும் பிற தேவர்களையும் வென்றான். அதனால் கலங்கிய இந்திரனைப் பார்த்துப் பிரமதேவன், "நீ புன்னாக வன ஈசனை நோக்கி தவம் செய்தால் அப்பெருமான் அந்த அசுரனை அழித்தருளுவார்" எனக் கூறினார். அவ்வாறே தவம் செய்து கொண்டிருந்த இந்திரனைத் தேடி அசுரன் அம்பருக்கும் வந்து விடவே, இறைவன் கால பைரவரை அனுப்பி அவ்வசுரனை வீழ்த்தினார்.             

*விமலன் அருள் பெற்றது:    காசியைச் சேர்ந்த விமலன் என்ற அந்தணன் தன் மனைவியோடு பல தலங்களை வணங்கி விட்டு அம்பரை  வந்தடைந்து, பெருமானையும் அம்பிகையையும் பல்லாண்டுகள் வழிபட்டுப் பணி செய்து வந்தார்.
இறைவன் அவருக்கு காட்சி அளித்து 
அன்னமாம் பொய்கையில் கங்கையை வச்சிரத் தூண் போல் எழுமாறு செய்யவே, விமலனும் தன் துணைவியுடன் அதில் நீராடி மகிழ்ந்தார். 

*மன்மதன் வழிபட்டது:   தேவலோக மாதர்களால் தனது தவம் வீணானதால் மன்மதன் மீது சினந்த விசுவாமித்திரர் இனி அவனது பாணங்கள் எவரிடமும் பலிக்காமல் போகக் கடவது என்று சபித்தார். அதனால் வருந்திய மன்மதன், பிரமனது சொற்படி புன்னாக வனத்திற்கு வந்து பிரமபுரீசனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான். 

*நந்தன் பிரமஹத்தி நீங்கியது:  காம்போஜ தேச அரசனான நந்தன்  ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது புலித் தோலால் தன் உடலை மறைத்துக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த பிங்கலாக்கன் என்ற முனிவரைப் புலி என்று எண்ணி அம்பு எய்தான்.  முனிவன் அக்கணமே மாண்டார். அரசனை பிரமஹத்தி பற்றியது. அப்பழி தீர வேண்டிப் பல தலங்களுக்கும் யாத்திரை செய்தும் அது அவனை நீங்கவில்லை. 
அவன் இந்த அம்பர் எல்லைக்கு வந்தபோது பிரமஹத்தி அவனைப் பின் தொடர அஞ்சி ஊர்ப் புறத்திலேயே நின்றுவிட்டது.
பிரமபுரீசுவரர் கோயிலுக்குச் சென்ற அரசன் பெருமானைத் தரிசித்துத் தனது பழி தீர்த்தருளுமாறு வேண்டினான். பிரமஹத்தி அவனை விட்டு நீங்கியது. இறைவனது திருவருள் பெற்ற அரசன் மீண்டும் தன்னாட்டிற்குச் சென்றான். 

பின்னர் உத்தமன் என்ற தனது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு மீண்டும் அம்பரை வந்தடைந்து தொண்டுகள்கள் பல செய்தான்.

அப்போது அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது.
தன் கையிலுள்ள எல்லாப் பொருட்களையும் அளித்துப் பசிப்பிணி தீர்த்து வந்தான். கைப்பொருட்கள் முற்றும் செலவானதும் பெருமானது சன்னதியை அடைந்து, பெருமானே வழி காட்ட வேண்டும் என்று விண்ணப்பித்தான். அவனுக்கு இரங்கிய பெருமான் விநாயகப் பெருமான் மூலம் நாள்தோறும் படிக்காசு பெறச் செய்து பஞ்சம் தீர்த்தருளினார்.  

*சோமாசி மாற நாயனார்: அம்பரில் அவதரித்த,  பெருமானது மலரடிகளை என்றும் மறவாத இவர், திருவாரூர் சென்று  சுந்தரரை அம்பரில் தாம் செய்யவிருக்கும் சோம யாகத்திற்குத் தியாகராஜ மூர்த்தியுடன் வருமாறு வேண்டினார். அதனை ஏற்ற  சுந்தரர், மாறனாறது வேள்விச் சாலைக்கு எழுந்தருளினார். 
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இறைவனும் இறைவியும், கணபதியும், கந்தனும் 
நீச உருவில்  யாகசாலைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேதியர்கள் "யாகம் வீணானது" எனக் கூறி அங்கிருந்து அகன்றனர். சுந்தரரும் சோமாசி மாறரும் மட்டும் அங்கிருந்து அகலவில்லை. பெருமான் அம்பிகையோடு அவர்களுக்குக் காட்சி அளித்தருளினார். 

*இந்த மாடக்கோயிலே கோட்செங்கச் சோழ நாயனாரின் கடைசித் திருப்பணியாகச் சொல்லப்படுகிறது. 

*சங்க இலக்கியங்களில்,   அரசர்களும், கொடையாளிகளும், புலவர்களும், கலைஞர்களும் அம்பரில் வாழ்ந்ததாக குறிப்பு உள்ளதாக அறிகிறோம். 

*மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இத்தலத்திற்கு தலபுராணம் பாடியுள்ளார்.  

*இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.  

*இக்கோயில் பேரளத்திலிருந்து தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ தொலைவில் உள்ளது.  பூந்தோட்டம் இரயில் நிலையத்திற்குக் கிழக்கே 5-கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1-கி.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.      
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்..

_27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் .._ அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன் பரணி. ... சுக்கிரன். ... சக்...