Wednesday, March 26, 2025

மகாலட்சுமி சிவபெருமானிடம் ஐஸ்வர்ய பெற்ற தலம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர்.

வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில்
*மகாலட்சுமி  இனிய சிவபெருமானிடம் ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்*

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோவிலை அடுத்து, ஆனால் முசிறிக்கு  6 கி.மீ. முன்னால் உள்ள தலம்  வெள்ளூர். இத்தலத்து இறைவன் திருநாமம்  திருக்காமேஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. திருக்காமேஸ்வரர் பெருமானை வணங்கினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த ஊருக்கு வெள்ளூர் என்ற பெயர் ஏற்பட்டது.
வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாத வகையில், இங்கே மகாலட்சுமி கோவில் கொண்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கோவிலின் குபேர பாகத்தில் மகாலட்சுமி தவம் செய்யும் கோலத்தில்,  ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்தோடு சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை தலையில் சூட்டியவாறு, அமர்ந்த திருக்கோலத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி அவதாரமெடுத்தார். அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்பு நிறைந்த கடலில் அசுரர்களை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டு திரும்பும்போது சிவபெருமானின் பார்வையில் மோகினி தென்பட்டாள். மோகினியின் அழகைக்கண்டு சிவபெருமான் மோகிக்க ஹரிஹரபுத்திரர் எனும் ஐயப்பன் அவதரித்தார். இதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி கோபம் கொண்டாள். உடனே வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் எனும் வெள்ளூரில்,மகாலட்சுமி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து  தவம் செய்யலானாள். பல யுகங்களாக தவம் செய்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக்கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வமழையாகப் பொழிந்து சிவபூஜை செய்தாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் மகா லட்சுமியின் முன் தோன்றி, ஹரிஹரபுத்திர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கிக்கூறி மகாலட்சுமியை சாந்தப்படுத்தினார். பின் மகாலட்சுமியை ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்ராமமாக மாற்றி, மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமரச் செய்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பெற செய்தார்.
பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் ப்ரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

வில்வமரமாகத் தோன்றி, வில்வமழை பொழிந்து சிவபூஜை செய்ததின் பலனாக இத்தலத்தில் மகாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மகாலட்சுமியை சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். அதனால் இத்தலத்தில் மகாலட்சுமி, ஐஸ்வர்ய மகாலட்சுமி என்ற திருநாமத்துடன், தல விருட்சமான வில்வ மரத்தடியில் தவக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கின்றாள். திருவருட்பாலிக்கிறாள். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள்.  மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அருளியதால் இத்தல இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.

இத்தலத்தின் பிற சிறப்புகள்

சுக்கிரன், ஈசனை வழிபட்டு யோகத்திற்கு அதிபதி ஆனதும், குபேரன் தனாதிபதி ஆனதும் இத்தலத்தில்தான் என தலபுராணம் கூறுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் தினமும் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக ஓலைச்சுவடிகளில் காணப்படுகிறது. ராவணன் சிவவழிபாடு செய்து ஈஸ்வரப் பட்டம் பெற்றதும் இத்தலத்தில்தான். ஈசன் காமனை நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாலும் அவன் எய்த மன்மத பாணம் அம்பிகை மீதுபட, தேவி சிவகாம சுந்தரியானாள் அவளே இங்கு சிவனுடன் உறையும் நாயகியாய் வீற்றிருக்கிறாள். மகேசன், மன்மதனை மன்னித்து அரூப அழகுடலை அளித்ததால், சிவபிரான் திருக்காமேஸ்வரர் என்றும், மன்மதனுக்கு வைத்தியம் அருளியதால் வைத்தியநாதராகவும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்கிர தோஷம் உடையவர்கள்,வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம் . தாமரை மலர் சாற்றி அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமியை வழிபட்டால் சகல செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

20 வகை பிரதோஷங்களும். அதன் பலன்களும்

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும் * 20 வகை பிரதோஷங்கள் பார்ப்போமா* *1. தினசரி பிரதோஷம்* *2. பட்சப் பிரதோஷம்* *3. மாசப...