Saturday, March 29, 2025

மகாகாளநாதர் மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்...

அம்பர் (அம்பல்) என்ற திருத்தலத்தில் ஒரு கி.மீ இடைவெளியில் சம்பந்தரால் பாடல் பெற்ற இரண்டு பெரிய கோயில்கள் உள்ளன.  
ஒன்று அம்பர் பெருந்திருக்கோயில். இது மாடக்கோயில். பிரம்மா அன்னமாம் பொய்கை தீர்த்தத்தில் நீராடி பிரமபுரீஸ்வரரை வணங்கி தனது அன்னப்பறவை தோற்ற சாபம் நீங்கி மீண்டும் நான்முகனாக உருப்பெற்ற தலம்.  

மற்றொன்று "அம்பர் மாகாளம்". 

அம்பர் சோமாசி மாற நாயனார் அவதாரத்தலம் என்பதால் இவ்விரண்டு கோயில்களிலும் அவருக்கு திருவுருவச்சிலைகள் உள்ளன.  

இனி அம்பர் மாகாளம் குறித்து சிந்திப்போம்.  

திருமாகாளம்,
மகாகாளநாதர் கோயில்,    கோயில் திருமாளம், பூந்தோட்டம் - 609 503.
நன்னிலம் வட்டம், 
திருவாரூர் மாவட்டம்.

*மூலவர்:
மகாகாளநாதர், மாகாளேசுவரர், காளகண்டேசுவரர்,

*தாயார்: அச்சம் தவிர்த்த நாயகி, ராஜமாதங்கி
பட்சயாம்பிகை

*தல விருட்சம்:
கருங்காலி, மருதமரம்

*தீர்த்தம்:
மாகாள தீர்த்தம் 

*பாடல் பெற்ற தலம். 
திருஞானசம்பந்தர்  மூன்று தேவாரப்பதிகங்கள் அம்பரில் அருளியுள்ளார்.               

"மாகாளம்" என்ற பெயர் பெற்ற சிவத்தலங்கள் இந்தியாவில் மூன்று உள்ளன. அவை, வடஇந்தியாவிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம், மற்றும் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான அம்பர் மாகாளம் என்ற இத்தலம். 

*அசுரர்களாகிய அம்பன், அம்பாசுரன் ஆகியோரைக் கொன்ற பாவம் தீர காளி தேவி வழிபட்ட திருத்தலம் இது என்பதால் "மாகாளம்" எனப்பட்டது. 

*திருமணத் தடை நீக்கும் தலமாக  மாகாளநாதர் கோவில் விளங்குகிறது.   மதங்க மகரிஷி தனக்கு புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை  வழிபட்டு, இறைவன் அருளால் பிறந்த பெண் குழந்தைக்கு ராஜமாதங்கி என்று பெயரிட்டு வளர்த்து, உரிய பருவம் வந்ததும், இவ்வாலயத்தில் உள்ள இறைவனுக்கு அவளை மணமுடித்து வைத்தார். 

திருமணக் கோலத்தில் வீற்றிருக்கும்போது, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பார்வதியிடம் இறைவன் கேட்க, அதற்கு பார்வதி, இத்தலம் வந்து நம் இருவரையும் வழிபடும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் திருமணம் விரைவில் நடைபெற அருள செய்ய வேண்டும் என்ற வரம் கேட்டுப் பெற்றாள். 

எனவே நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலம் வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்துகொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும். 

*சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டை செய்து சுந்தரரின் நட்பைப் பெற்றார். 
அவரிடம் சோமாசிமாறர், "தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றும், அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துச்சென்று திருவாரூர்ப் பெருமானிடம்  வேண்டுகோளைத் தெரிவித்தார். 
அதற்கு இசைந்த இறைவன், "தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்" என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார். 

யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராசப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு,  தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்.  
இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர். 
ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார். இறைவனை அவர்கள் அந்த வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க - இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு. 

சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் "பண்டாரவாடை திருமாளம்" என்று வழங்குகின்றது. 
இன்றும் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று சோமாயாகப் பெருவிழா இங்கு நடக்கிறது.      

*வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றது. 
நாகதோஷம், புத்திரதோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் வாசுகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் அடையலாம். 

*சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார்.  சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.  

*சோழர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.           

*இத்தலம் மயிலாடுதுறை- திருவாரூர் செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், பூந்தோட்டம் எனும் பகுதிக்கு அருகே அரசலாற்றின் கரையில் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்றிரண்டே ழுத்தின...