தஞ்சை மாவட்டம், பூதலூர்வட்டம், அரங்கநாதபுரம் சிவன்கோயில்
திருவையாற்றில் இருந்து மேற்கில் 17 கிமி தூரத்தில் உள்ளது அரங்கநாதபுரம். திருக்காட்டுப்பள்ளியை தாண்டி மூன்று கிமி தொலைவில் ரங்கநாதபுரம் செல்ல இடதுபுறம் ஒரு அலங்கார வளைவு உள்ளது அதில் இரண்டு கிமி தூரம் சென்றால் ரங்கநாதபுரம் அடையலாம்.
ஊரின் முகப்பிலேயே உள்ளது சிவன்கோயில் கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் இது முதலாவது கோயிலாகும். கோயிலின் காலம் 1800ஆண்டுகளாகலாம். யானைக்காட்டுக் கோயில் என்றும் பூரட்டாதிக் கோயில் என்றும் கொண்டாடப்படும் திருவானேசுவரர் கோயில்,
கோயில் கிழக்கு நோக்கியது, எனினும் வாயில் மேற்கில் ஒன்றும் வடக்கில் ஒன்றும் உள்ளது வடக்கில் சிறிய ராஜகோபுரம் போன்ற அமைப்பில் வாயில் உள்ளது. வலம்புரி விநாயகர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சன்னதிகள் கீழ் தளத்தில் உள்ளன. மற்றும் வடபுறம் சண்டேசர் சன்னதியும் உள்ளது, சண்டேசர் சன்னதியை ஒட்டி துர்க்கைக்கு மாடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் துர்க்கை வைக்கப்பட்டு உள்ளார். முற்கால சோழர் காலத்தை சார்ந்த வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர்.
வலம்புரி விநாயகரின் விமானம் கஜபிருஷ்டம் போல அமைக்கப்பட்டு உள்ளது. கரண்டமகுடம், சரப்பளி, தோள், கை வளைகள், சிற்றாடையுடன் வலம்புரியராய் லலிதாசனத்திலுள்ள பிள்ளையாரின் வல முன் கையிலும் தும்பிக்கைச் சுருட்டலுக்குள் மோதகம். இட முன் கை தொடையில் முஷ்டியில் இருக்க, பின்கையில் இடப்புறம் கரும்புத்தோகை, வலப்புறம் தந்தம். பிள்ளையாரின் வலத்தந்தம் உடைந்திருக்க, இடப்புறம் தந்தமில்லை. சுகாசனத்திலுள்ள சண்டேசுவரரின் சடைப்பாரம் இருபுறமும் கனத்துப் பரந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், முத்துச்சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், அரைக்கச்சு இருத்தும் சிற்றாடை அணிந்துள்ள அவரது இடக்கை தொடைமீதிருக்க, வலக்கையில் மழு ஏந்தி உள்ளார்.
வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் உள்ளது. தென்புறம் ஒரு மாடத்தில் சிறிய நந்தி ஒன்று உள்ளது, இது மேல் தளத்தில் உள்ள அம்பிகைக்கு உரியது. தென்புறம் பெரிய வில்வமரம் ஒன்று பசுமையான தழைகளுடன் காய்த்து நிற்கிறது.
கபிலர் மாமரத்தைத் ‘தேமா’ என்று குறிப்பிடுகின்றார் பழுத்தவுடன் இனிக்கும் வகையை தேமாங்கனி என சொல்ல கேட்டிருக்கலாம். வாழை, பலா, மா முதலிய முக்கனிகளுள் ஒன்றாகும். தேமா மரம் ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளாக இந்திய நாட்டில் உள்ளது. இதுவே இத்தல மரமாகும்.
இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் மேல் தளத்தில் உள்ளனர். இறைவன்- திருவானேஸ்வரர் இறைவி - காமாட்சி அம்மன்
காலபைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார். இவற்றை ஏழு யானைகளின் மீது ஏற்றி பவனி வந்தார். இவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இந்த அரங்கநாதபுரம் என தல புராணம் கூறுகிறது. இக்கோயிலும் ஏழு யானைகளின் மேல் உள்ளபடி அமைத்துள்ளனர். தற்போது கிழக்கு திக்கில் மட்டுமே யானை தெரிகிறது.
மூலவர் விமானம் கஜகடாக்ஷசக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
இதனால் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்.
ஏழைகளுக்கு ஏழு வகையான வண்ண ஆடைகளை இங்கு வந்து தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரைத் தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.
.
காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார் என்பதே பெரும் சிறப்பு.
கிழக்கு நோக்கிய மாடக்கோயில் மேற்கில் ஒரு சிறிய வாயிலும், வடபுறம் சிறிய கோபுரத்துடன் ஒரு வாயிலும் உள்ளது. தென்புறம் மாடக்கோயிலின் மேலேற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கீழ் தளத்தின் கிழக்கில் ஐராவதம் யானை அந்த மாடக்கோயிலையே தாங்கி நிற்பது போல அமைத்துள்ளனர்.
முதல் தலத்தில் மாடக்கோயில் கருவறை அதன் முன்னர் ஒரு அர்த்தமண்டபம் மகாமண்டபம் என உள்ளது. பத்து படிகள் ஏறியவுடன் மகாமண்டபத்தினை அடையலாம். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், அவரின் முன்னம் ஒரு சிறிய நந்தியும் கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் உள்ளனர். மகாமண்டபத்தில் தொட்டி போன்ற அமைப்பு கட்டப்பட்டு அதில் அழகிய பெரிய நந்தி பலிபீடம் உள்ளது அம்பிகை காமாட்சி சன்னதியில் இரு அம்பிகைகள் இருக்க காணலாம். கருவறையில் ஒன்றும் இடைநாழியில் ஒன்றும் உள்ளன. இடைநாழியில் உள்ள அம்பிகை கரம் பின்னமானதால் புதிய மூர்த்தியை வைத்துள்ளனர் என நினைக்கிறேன்.
மாடக்கோயிலின் மேல்தள கருவறையினை சுற்றி வர பிரகார அமைப்பு உள்ளது கருவறை கோட்டங்களில் தென்புறம் தக்ஷணமூர்த்தி மட்டுமே உள்ளார். பிற மாடங்கள் காலியாக உளளன. கல்வெட்டுக்கள் மிக சமீபத்தவை 1984 இக்கோயிலில் கஜலட்சுமி சன்னதியினை வைத்தியநாதர் மகன் சுப்பிரமணியன் என்பவர் கட்டிய செய்தியும் உச்சிகால பூஜைக்கு ஒரு ஏக்கர் நிலமும், வடக்கில் அவரது துணைவியார் சிறிய கோபுரம் அமைத்ததையும் குறிக்கிறது..
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment