ஐவகை நந்திகள்
ஐவகை நந்திகள் என்பவை சிவ ஆகமங்களின் அடிப்படையில் சிவாலயங்களில் அமைக்கப்பெரும் ஐந்து நந்திகளாவர்.
ஆகமத்தில் ஒவ்வொரு நந்தியை அமைக்கும் விதமும், அமைவிடமும், அந்த நந்திகளின் வரலாறும் இடம்பெற்றிருக்கின்றன.
*1. கைலாச நந்தி*
கைலாச நந்தி என்பது ஐவகை நந்திகளில் முதலாவது நந்தியாகும். அனைத்துச் சிவாலயங்களிலும் மூலவருக்கு அருகே அமைக்கப் பெறுகிறார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாச நந்தி என்று பெயர் வந்தது.
இவர் கரங்களில் பொன்னாலான பிரம்பினையும், வீர வாளினையும் கொண்டுள்ளார்.
இவர் எப்பொழுதும் தன்னுடைய மூச்சுக்காற்றினால் இறைவனாகிய சிவபெருமானைக் குளிர்வித்துக் கொண்டே இருப்பவர் என்கிறன சிவ ஆகமங்கள். சிவ ஆலயத்தினுள் இந்த நந்தி நிறுவப்படுகிறது.
*2. அவதார நந்தி*
அவதார நந்தி என்பது ஐவகை நந்திகளில் இரண்டாவது நந்தியாகும். சிவாலயங்களில் காணப்பெறும் லிங்கத்திற்கு அருகே இருக்கும் கைலாச நந்திக்கு அடுத்து இருப்பதாகும்.
சிவபெருமானுக்கு வாகனமாக திருமால் நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள். இதற்கும் ஒரு கதை இருக்கிறது.
அசுரர்களின் தொல்லைகளைத் தாங்கமுடியாமல் முனிவர்களும், தேவர்களும் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்கள் ஏற்பாடு செய்திருந்த தேரில் சிவபெருமான் போரிடப் புறப்பட்டார். அவர் அசுரர்களை நோக்கிச் செல்லும் வழியில் தேரின் அச்சு முறிந்தது. சிவபெருமான் போரில் பின்தங்காமல் இருப்பதற்காக, திருமால் காளையாக வடிவெடுத்து சிவபெருமானை தன் முதுகில் ஏற்றிச் சென்றார்.
இதனால் ரிஷபாரூடர் என்ற பெயர் சிவபெருமானுக்கு வந்தது. அவ்வாறு விஷ்ணு ரிசபமாக மாறியதால் சிவாலயங்கள் அனைத்திலும் விஷ்ணு நந்தி அமைக்கப்பெருகிறது. இருப்பினும் நான்கு நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த விஷ்ணு அவதார நந்தி நிறுவப்படுவதில்லை.
*3. அதிகார நந்தி*
அதிகார நந்தி என்பது ஐவகை நந்திகளில் மூன்றாவது நந்தியாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானைத் தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால், இதற்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பெற வேண்டுமென சிவ ஆகமங்கள் கூறுகின்றன.
கைலாயத்தில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார்.
சிவபெருமானின் காவலனான நந்தி தேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார்.
சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பி வர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளேச் செல்ல முயன்றார்.
இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.
தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப் பெற்றார் என்று ஒரு கதை கூட உண்டு.
*4. சாதாரண நந்தி*
சாதாரண நந்தி என்பது ஐவகை நந்திகளில் நான்காவது நந்தியாகும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப் பெறுவதில்லை.
*5. பெரிய நந்தி*
பெரிய நந்தி என்பது ஐவகை நந்திகளில் ஐந்தாவது நந்தியாகும். சிவாலயங்களில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் காவலனாக எந்நேரத்திலும் பேர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் இந்த நந்தி இருக்கிறார். அதன் காரணமாக இவரை மகாநந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் முன்பகுதியில் இருக்கும் நந்தியை இந்நந்திக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment