Tuesday, April 1, 2025

வாளாடி விஸ்வநாதர் கோயில் அன்பில் திருச்சி...

*வாளாடி விஸ்வநாதர் கோயில்*
காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர்.

காசியில் மரிப்போருக்கு, அவர்களது செவிகளில் சிவபெருமானே ‘ராமநாம’த்தை ஓதுகிறார் என்பது புராண வழி வந்த நம்பிக்கை. ஆனால், அனைவரும் காசிக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனம்.

எனவே காசிக்குச் சென்று இறைவனை தரிசிக்க இயலாதவர்களுக்காகவும், அவர்கள் காசியில் இறைவனை தரிசித்த பலனைப் பெற வேண்டியும் அன்னை விசாலாட்சி இறைவனை நோக்கி தவமிருந்தாள். அன்னையின் தவத்தால் இறைவன் மகிழ்ந்தார்.

அவர் பார்வதியின் முன்பாக தோன்றி, ‘பார்வதி! காசியின் சக்திகளைக் கிரகித்து, பல தலங்களில் நிரவுதல் வேண்டும் என்பது தானே உன் ஆசை? கவலை வேண்டாம். வாரணாசியில் உள்ள சுயம்பு லிங்க ரூபங்களை வழியில் கீழே வைக்காமல், தலையில் சுமந்து சென்று பிரதிஷ்டை செய்யும் தலங்களிலும் எல்லாம் நான் அருள்பாலிப்பேன்’ என்று அருள் செய்தார்.

இதன்படி பலரும் காசியில் இருந்து தலையில் சுமந்து வந்து உருவாக்கிய லிங்க பிரதிஷ்டை தலங்களில், காசி விசுவநாதர் சன்னிதிகள் தோன்றின. காசி விசுவநாதர் சுயம்புவாய் தோன்றிய தலங்களும் உண்டு. இப்படிப்பட்ட தலங்களில் ஒன்று வாளாடி. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விசுவநாதர். இறைவி விசாலாட்சி அம்மன்.

இந்தத் திருத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரம். எதிரே கோபுர பிள்ளையார் அருள்பாலிக்கிறார். தெற்கு பிரகாரத்தில் திரும்பி வலது புறம் சென்றால், மகா மண்டபம். அந்த மண்டப வாசலின் எதிரே அன்னை விசாலாட்சி சன்னிதி உள்ளது. அம்மன் சன்னிதியின் அர்த்த மண்டப நுழை வாயிலின் இடது புறம், தட்சிண துர்க்கை நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் உருவம் மிகவும் பெரியது. அர்த்த மண்டபத்தைக் கடந்ததும் இறைவனின் கருவறையை தரிசிக்கலாம். இங்கு லிங்கத் திருமேனியுடன் விசுவநாதர் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். இறைவனுக்கு மாத்ரு பூதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

தேவகோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி, நடராஜரும், வடக்கில் துர்க்கையும், வடகிழக்கில் நவக் கிரக நாயகர்களும், கிழக்கில் சூரியன் மற்றும் பைரவரும் இருக்கின்றனர். திருச்சுற்றின் மேற்கு திசையில் பிள்ளையாரும், சுப்பிரமணியரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. சுப்பிரமணியர் சன்னிதிக்கு நேர் எதிர் சுவற்றில், ஒரு சாளரம் பொருத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள துவாரம் வழியாக பார்த்தால் கருவறை மூலவரின் தரிசனம் தெளிவாகக் கிடைக்கும்.

துர்க்கை அன்னை வழிபட்ட தெற்கு நோக்கிய துர்க்கை சன்னிதி தலங் களில் ஒன்றே வாளாடி தலமாகும். அன்னைக்கு வழிகாட்டும் சிறுமியாக வந்தவள் லட்சுமிதேவி.

திருச்சியில் இருந்து அன்பில் செல்லும் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது வாளாடி திருத்தலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீராமஜெயம் என்னும் மந்திரம் வேறு என்ன உண்டு.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்றிரண்டே ழுத்தின...