Thursday, May 1, 2025

விறன்மிண்ட நாயனார் குருபூஜை இன்று 63 நாயன்மார்களில் ஒருவர்...

63 நாயன்மார்களில் ஒருவரான,
சிவபெருமானையே 
சைவ சமயத்தில் இருந்து விலக்கி வைத்த நாயனாரான, சிவனடியார்களை வணங்காது சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரை 'புறகு" என்று ஒதுக்கித் தள்ளியவரான, சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர் தொகை பாட காரணமானவருமான ,
கணநாதர் என்று அழைக்கப்பட்ட 
#விறன்மிண்ட_நாயனார்
(விறல்மிண்டர்) 
குருபூஜை இன்று : 
(#முக்தி_நாள்)
(#சித்திரை_திருவாதிரை) 
சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் குறிப்பிடத்தக்கவர் விறன்மிண்ட நாயனார். இவர் சிறுவயது முதலே சிவபெருமானின் மீது பக்தியும் பேரன்பும் கொண்டிருந்தார். அதைப்போன்றே சிவனடியார்கள் இடத்தும் பெருமதிப்பும், பக்தியும் வைத்திருந்தார்.
சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவத்தொண்டுகள் செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாகக் கருதினார்‌. சிவாலயங்களுக்குப் போகும் போது அங்கு வரும் சிவனடியார்களை முதலில் வணங்கிய பின் சிவபெருமானை வணங்குவார்.
திருத்தொண்டத் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடக் காரணமாக இருந்தவர் விறன்மிண்ட நாயனார்.
சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரைச் சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்” என்று குறிப்பிடுகிறார்.

அடியார்களின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்க இறைவன் திருவுளம் கொண்டார். சைவ நெறியில் அடியார்களே முதல். அதை உலகுக்கு எடுத்துரைக்கவும் எப்போதும் அடியார் பெருமை நிலைத்திருக்கவும் இறைவன் ஒரு திருவிளையாடலைப் புரிந்தார். அதற்கு விறன்மிண்டரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

விறன்மிண்ட நாயனார் சிவனடியார்களை வணங்காது சென்ற சுந்தரரை புறகு என்று ஒதுக்கித் தள்ளிய வேளாளர். நாயன்மார்கள் அறுபத்து மூவரில் ஒருவர். திருத்தொண்ட தொகையை சுந்தரர் பாடக் காரணமாக இருந்தவர். அவரின் கதையை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மலைநாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மனசில் இருத்தி உட்பற்றுப் புறப்பற்றுக்களை அறுத்தவரும், அடியார் பத்தியிலே உயர்வொப்பில்லாதவருமாகிய விறன்மிண்டநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், சிவஸ்தலங்களுக்குப் போனபொழுதெல்லாம், முன் அடியார் திருக்கூட்டங்களுக்கு எதிரே போய், அவர்களை வணங்கிக்கொண்டே, பின் சிவபெருமானை வணங்குகின்றவர். அவர் தாம் வசிக்கின்ற மலைநாட்டை நீங்கி, பல தலங்களினும் சஞ்சரித்து, சிவனடியார்கள் ஒழுகும் ஒழுக்கத்தை அனுசரித்து, திருவாரூரை அடைந்து, சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.

ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் தேவாசிரயமண்டபத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவனடியார்களை அடைந்து வணங்காமல் ஒரு பிரகாரம் ஒதுங்கிச்சென்றதை அவ்விறன் மிண்டநாயனார் கண்டு, "அடியார்களை வணங்காமற் செல்கின்ற வன்றொண்டன் அவ்வடியார்களுக்குப் புறகு" என்றார். சுந்தரமூர்த்திநாயனார் அவ்விறன்மிண்டநாயனாரிடத்துள்ள சங்கம பத்தி வலிமையைக் கண்டு, அவ்வடியார்கள் மேலே திருத்தொண்டத்தொகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக்கேட்ட விறன்மிண்ட நாயனார் மிகமகிழ்ந்து, "இவ்வன்றொண்டருடைய மனம் அடியாரிடத்திலே பதிந்திருக்கின்றது" என்று அருளிச் செய்தார். இந்தச் சங்கமபத்தி வலிமையைக் கண்ட பரமசிவனார் அவ்விறன்மிண்டநாயனாரைத் தம்மைச் சேவிக்கின்ற கணங்களுக்குத் தலைவராக்கியருளினார்.

சிவபெருமான் விறன்மிண்ட நாயனார் மீது கருணைக்கொண்டு அவரின் பக்தியை உலகுக்குத் தெரிவிக்க விருப்பம் கொண்டவராய், சிவனடியார் வேடம் தரித்து ஆண்டிப்பந்தல் வந்தார். விறன்மிண்ட நாயனாரை சந்தித்தார்.

“அடியவரே நான் சிவதொண்டன். திருவாரூருக்கு சென்று, என் ஈசனை தரிசிக்க வேண்டும். திருவாரூருக்கு செல்லும் வழி இதுதானே?” என்று விறன்மிண்ட நாயனாரை கேட்கவும், கோபம் கொண்ட விறன்மிண்ட நாயனார், “நீ திருவாரூருக்கா செல்கிறாய்? இரு உன் காலை வெட்டுகிறேனா இல்லையாப் பார்.. ” என்று அடியவர் வேடம் தரித்து வந்த சிவபெருமானை துரத்த ஆரம்பித்தார்.

“இது என்னடா வம்பாக போய்விட்டது.. நான் வழிதானே கேட்டேன்” என்ற அடியவர் அவர் கையில் அகப்படாமல் வேகமாக ஓட ஆரம்பித்தார். விறன்மிண்ட நாயனார் துரத்த சிவனடியார் ஓட என்று இருவரும் திருவாரூருக்கே வந்து சேர்ந்து விட்டார்கள்.

இப்பொழுது வேடம் தரித்த அடியவர் நின்றுவிட்டார்.

அதைக்கண்ட விறமிண்ட நாயனார்.. “ இத்தனை தூரம் ஓடிய நீங்கள் ஏன் நின்று விட்டீர்கள் ?” என்றார். 
“நீங்கள் என்ன சொன்னீர்கள்? திருவாரூர் மண்ணை மிதிக்க மாட்டேன் என்று சபதம் செய்தீர்களே.. ஆனால் தற்பொழுது நீங்களே இம்மண்ணை மிதித்து விட்டீர்களே?” என்று கேலி சிரிப்பு சிரித்தார்.

அப்பொழுது தான் விறன்மிண்ட நாயனார் தான் நின்றுக் கொண்டிருப்பது திருவாரூர் என்பதை தெரிந்துக்கொண்டார். சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த வாளால் தன் கால்களையே வெட்டிக்கொண்டார். உடனே சிவனடியார் உருவிலிருந்த சிவபெருமான் நாயனாரைத் தடுத்தாட்கொண்டார்.

சிவனடியார் உருவில் வந்தவர் சிவபெருமான் தான் என்பதை அறிந்துக்கொண்ட விறன்மிண்டர், அவரிடம் மன்னிப்புக் கோரி சிவபெருமான் மேல் பாடல்களை பாடினார். பிறகு கைலாசம் அடைந்தார்.

*பெயர்: விறன்மிண்ட நாயனார்
*குலம்: வேளாளர்
*பூசை நாள்: சித்திரை திருவாதிரை
*அவதாரத் தலம்:செங்கண்ணூர்
*முக்தித் தலம்:ஆரூர்/வண்டாம்பாளை

சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.

விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.

அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.

ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.

திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.

திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.

பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.

அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தர‌ர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.

“இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்” என்றார் விறல்மிண்டர்.

“அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்” என்றனர் அருகில் இருந்தவர்கள்.

“அடியார்களை மதிக்காது செல்லும் வன்தொண்டருக்கு அருள்புரியும் ஆரூராரும் எனக்கு புறம்பானவரே” என்று கோபத்துடன் கூறினார்.

விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் ‘இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது. அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்’ என‌ மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.

“இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.

இறைவனாரும் தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன் என்ற அடியைஎடுத்துக் கொடுக்க‌, அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடி தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கினார் சுந்தரர்.

அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.

விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.

விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட இவரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன் என்று வியக்கிறார்.

#திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துத் தந்த தியாகேசர்:

விறன்மிண்ட நாயனார் சொன்னதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார், விறன்மிண்ட நாயனார் அடியார்களிடத்துக் கொண்டுள்ள பக்தி எத்துணைச் சிறப்புடையது என்று எண்ணிப் பெருமையுற்று, கோயிலுக்குள் சென்று தியாகராசப் பெருமானை வணங்கி, “இறைவா, நான் அடியவர்களுக்கு அடியவனாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்” என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்தார். “தில்லைவாழ் அந்தணர்தம் அடியாருக்கும் அடியேன்” என, தியாகேசரைத் திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துத் தந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் அதனையே முதலடியாகக் கொண்டு திருத்தொண்டர் தொகையைப் பாடி தேவாசிரிய மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கினார். அதனை உளங்குளிரக் கேட்டு விறன்மிண்ட நாயனார் ஆரூர் தியாகராஜப்‌ பெருமானையும், சுந்தரமூர்த்தி நாயனாரையும் போற்றினார்.
விறன்மிண்ட நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரையும், தியாகராஜரையும் புறக்கணித்ததால் திருத்தொண்டர் தொகையை சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். திருத்தொண்டர்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டத் தொகை இல்லாவிடில் நாயன்மார்களின் பெருமையைச் சொல்லும் பெரியபுராணமே தோன்றியிருக்காது.

#சிவகணங்களுக்குத் தலைமையான கணநாதர் பேறு:

சிவனடியார்களான திருத்தொண்டர்களின் பெருமையை நிலைநாட்டிய விறன்மிண்ட நாயனார் இவ்வுலகில் சைவ நெறி போற்றப்பட பெருந்தொண்டுகள் பல புரிந்தார். சிவபெருமான் அருளால் திருவடி நிழலை அடைந்து, கயிலையில் சிவகணங்களுக்கான தலைமையான கணநாதராய் விளங்கும் பேற்றினைப் பெற்றார்.

#குருபூஜை நாள்:

சிவனடியார்களான திருத்தொண்டர்களின் பெருமையை நிலைநாட்டிய விறன்மிண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான கேரள மாநிலம்,திருச்சூர் மாவட்டம் (குன்றையூர் அல்லது திருச்செங்குன்றூர் இப்போது செங்கன்னூர்) (கொடுங்கோளூருக்கு தெற்கே இரண்டு கி.மீ.திருச்சூரில் இருந்து 40கி.மீ.சென்னை−கொச்சி ரயில் பாதையில் இரிஞாலக்குடா ரயில் நிலையத்தில் இருந்து 8கி.மீ. ஆலுவா ரயில் நிலையத்தில் இருந்து 30 கி.மீ.தொலைவில் தலம் அமைந்துள்ளது) ஸ்ரீ பார்வதியம்மை சமேத ஸ்ரீ மஹாதேவர் கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. விறன்மிண்ட நாயனார் திருவாரூர் மற்றும் வண்டம்பாளைக் கோயில்களில் தனி சந்நிதிகளை கொண்டுள்ளார். இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 






No comments:

Post a Comment

Followers

வில்வாரண்யேஸ்வரர் திருக்களம்பூரதிருக்கொள்ளம்புதூர் திருவாரூர்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரிதென்கரை தலங்களில் ஒன்றான #திருக்கொள்ளம்பூதூர்  #திருக்களம்புதூர் #திருக்களம்பூர் மூலவர் : #வில்வாரண்ய...