தமிழக முக்கிய குரு பகவான் கோயில்கள்..
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
பணம் சேர...
காஞ்சிபுரம் அருகில் உள்ள பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரரை (சிவன்) வழிபட்டால் குறையின்றி வாழலாம். மகாலட்சுமி அருளால் பணம் சேரும். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரம்மா, விஷ்ணுவின் பதவி காலம் முடிந்து விடும். அப்போது அவர்களின் உடலை (காயம்) இங்குள்ள சிவன் தன்னுள் சேர்த்துக் (ஆரோகணம்) கொள்வார். அதனால் இவருக்கு 'காயாரோகணேஸ்வரர்' என பெயர் வந்தது. எமதர்மன் பூஜித்த எமலிங்கம் இங்குள்ளது.
சிவபூஜை செய்வதற்காக மகாலட்சுமி உருவாக்கிய குளத்தை 'தாயார் குளம்' என்கின்றனர். குருபகவான் இங்குள்ள சிவனை வழிபட்டு தேவர்களின் குருவாகும் தகுதி பெற்றார். இங்கு குருபகவான் கைகூப்பியபடி மேற்கு நோக்கி இருக்கிறார். இக்கோயிலை 'குருகோயில்' என அழைக்கின்றனர். இங்கு வழிபட்டால் குருவருளால் குறை தீரும்.
இழந்த பதவியை பெற...
விழுப்புரம் மாவட்டம் முன்னுாரில் தெற்கு நோக்கி உள்ள சிவனை தரிசித்தால் இழந்த பதவி கிடைக்கும். முன்பு தேவர்களுக்கு குருநாதரான தனக்கு நிகர் யாருமில்லை என்று குருபகவானுக்கு ஆணவம் ஏற்பட்டது. தலைக்கனத்தால் தெய்வீக ஆற்றலை இழந்தார். இதனால் அவர் மீண்டும் பதவியை அடைய பிரம்மாவிடம் யோசனை கேட்டார். அவரது அறிவுரையின்படி இத்தலத்தில் தவமிருந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை தினமும் வழிபட்டு பதவியை அடைந்தார்.
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு நடனக்காட்சி தந்ததால் இங்குள்ள சுவாமி 'ஆடவல்லீஸ்வரர்' எனப்படுகிறார். அம்மனின் பெயர் பெரியநாயகி. ராஜராஜச்சோழனின் பாட்டி செம்பியன் மாதேவி கட்டிய 300 வது கோயில் என்பதால் முன்னுார் எனப் பெயர் பெற்றது. தட்சிணாமூர்த்தி இக்கோயிலில் மேற்கு நோக்கி இருக்கிறார். நல்லியன் கோடன் என்னும் மன்னன் போரில் வெற்றி பெற இங்குள்ள முருகப்பெருமான் உதவி செய்தார். ஜாதகத்தில் ஏற்படும் குரு வக்கிரம், குருதோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலம்.
நிம்மதி கிடைக்க...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன்மலை குருபகவானை தரிசிக்க நிம்மதி கிடைக்கும். காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமியின் பெயர் கைலாசநாதர். அம்மனின் பெயர் பெரிய நாயகி.
சிவலிங்கத்தைப் போலவே இங்குள்ள குருபகவானும் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். பதினான்கு சீடர்களுடன் உள்ள இவரை வழிபட்டால் கல்வி வளர்ச்சி, ஞானம் உண்டாகும். பொதிகை மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் இங்கு தங்கி சிவபூஜை செய்தார். பாண்டவரில் ஒருவரான சகாதேவன் இங்கு வழிபட்டே ஜோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றார். இங்குள்ள பேச்சாயி அம்மன் கோயிலில் தரப்படும் கூழாங்கற்களை வாயில் இட்டுக் கொண்டு மலையை சுற்றினால் பேசும் ஆற்றல் உண்டாகும். பாண்டிய மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.
உடல்நலம் பெற...
கும்பகோணம் திருமங்கலக்குடிக்கு அருகிலுள்ள சூரியனார் கோயிலில் குருபகவான் நவக்கிரக அதிபதியான சூரியனை நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு வியாழன் அன்று அபிஷேகம் செய்தால் உடல்நலம் பெருகும். சகல நன்மையும் உண்டாகும். விதிப்படி காலவ முனிவர் தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். அதில் இருந்து விடுபட எண்ணி நவக்கிரகங்களை நோக்கி தவத்தில் ஈடுபட்டார். மகிழ்ச்சி அடைந்த கிரகங்கள் முனிவரின் தலைவிதியை மாற்றின.
இதனால் கோபம் கொண்ட படைப்புக் கடவுளான பிரம்மா , 'காலவ முனிவருக்கு வரவிருந்த தொழுநோய் நவக்கிரகங்களை சேரட்டும்' என சபித்தார். அதற்கு பிராயசித்தமாக இங்குள்ள பிராணநாதர், மங்களாம்பிகையை வழிபட்டு நவக்கிரகங்கள் சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றன. இங்கு சூரியனின் சன்னதிக்கு எதிரில் குருபகவானுக்கு சன்னதி உள்ளது
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment