Thursday, July 31, 2025

திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் (திருக்கள்ளீஸ்வரர்)

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான #திருக்கண்டலம் #சிவாநந்தீஸ்வரர் (திருக்கள்ளீஸ்வரர்) #ஆனந்தவல்லி_அம்மன் திருக்கோயில்[252] [வரலாறு]
திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் (சிவானந்தேஸ்வரர் கோயில்) திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிவாநந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட திருத்தலம். இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 

மூலவர்:சிவாநந்தீஸ்வரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்:ஆனந்தவல்லி
தல விருட்சம்:கள்ளி
தீர்த்தம்:நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை :காரணாகமம்
புராண பெயர்:திருக்கள்ளில்
ஊர்:திருக்கண்டலம்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு

#பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர்

#தேவாரப்பதிகம்:

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் ஓடுஅலாற் கலன்இல்லான் உறைபதியால் காடுஅலாற் கருதாத கள்ளின் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசுவாரே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 18வது தலம்.

#தல_சிறப்பு

இக்கோயிலில் சிவன், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்
இத்தலத்தின் தல விநாயகர் திருநாமம் சுந்தர விநாயகர்.

மூலவரின் மேல் உள்ள விமானம்: கஜபிருஷ்டம்.

 #தலபெருமை:

சக்தி தெட்சிணாமூர்த்தி
பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒருசமயம் சிவனைப் பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன், பார்வதியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு, சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார். இதைக்கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என நினைத்த அவள் சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார். சிவமும், சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தன் இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு மனதில் திருப்தி ஏற்படவில்லை. “என்னதான் இருந்தாலும் சிவன்தானே பெரியவர்!’ என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.

பின்னர் பிருகு பூலோகத்தில் சிவதல யாத்திரை வந்தபோது, கள்ளில் (ஒரு வகையான மரம்) வனமாக இருந்த இங்கு அகத்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்போது சிவன் அவர் முன்பு தோன்றி, “சிவமும், சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும், சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது’ என்று உபதேசம் செய்து, அம்பாளை தன் மடியில் அமர வைத்து சக்தியுடன் இணைந்த தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்தார். பிருகு உண்மையை உணர்ந்தார்.

ஆனந்தவல்லி அம்பாள்
சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு தன்னையும், சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும்படி அருளினாளாம். எனவே, அம்பாள் “ஆனந்தவல்லி’ என்ற பெயர் பெற்றாள். இவள் சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது இடக்கை பாதத்தை நோக்கி காட்டியபடியும், வலது கை அருள் வழங்கும் கோலத்திலும் இருக்கிறது. இதனை, தன் பாதத்தை சரணடைபவர்களுக்கு என்றும் குறைவிலாத ஆனந்தத்தையும், அருளையும் அம்பாள் தருவாள் என்பதை உணர்த்தும் கோலம் என்கிறார்கள்.

#சிறப்பம்சம்:

திருவெண்பாக்கம் (பூண்டி) தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர் சிவனை வணங்கி விட்டு தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குசஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்கள், விபூதி பிரசாதம் ஆகியவற்றை வைத்துவிட்டு குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது அப்பொருட்களைக் காணவில்லை. அதனைத் தேடிய சம்பந்தர் இங்கு வந்தபோது, சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததைக் கண்டார். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜைப்பொருட்களை மறையச்செய்து அருள் செய்ததாக அசரீரியாக ஒலித்தார் சிவன். பின் சம்பந்தர் சுவாமியை வணங்கி பதிகம் பாடினார்.

#பிரம்ம_முருகன்:

இக்கோயில் குசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. சுவாமி, அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு “திருக்கள்ளீஸ்வரர்’ என்ற பெயரும், தலத்திற்கு “திருக்கள்ளில்’ என்ற பெயரும் இருக்கிறது. அகத்தியருக்கு காட்சி தந்தது போலவே சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனிச்சன்னதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமாக இக்கோயில் இருக்கிறது.

இவர் வலது கையில் ஜெபமாலை, இடக்கையில் தீர்த்த கலசத்துடன் பிரம்மாவின் அம்சத்துடன் தனியே நின்ற கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள நந்தி மிகவும் விசேஷமானது.

இவரது பெயரிலேயே சிவனை “சிவா நந்தீஸ்வரர்’ என்றும், தீர்த்தத்தை “நந்தி தீர்த்தம்’ என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளத்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நெல்லி மரத்தின் கீழே நாகர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரும் இருக்கின்றனர். பொருள்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பொருள் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பொருள்கள் கிடைத்துவிட்டால் இவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

#தல_வரலாறு:

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, வடக்கு உயர்ந்து தெற்கு பகுதி தாழ்வாகியது. இதனால் பூமி சமநிலை இழக்கவே சிவன், அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். சிவனது திருமணத்தை தானும் காண வேண்டுமென விரும்பிய அகத்தியர் அவரிடம், தான் விரும்பும் இடங்களில் எல்லாம் அவரது திருமணக்காட்சியை தரிசிக்கும்படி வரம் பெற்றார். தென்பகுதியை நோக்கி வந்த அகத்தியர், திருப்பாலைவனம் தலத்தை வணங்கிவிட்டு அங்கு தங்கியிருந்தார்.

அன்று இரவு அவரது கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீர்த்தத்தையும் குறிப்பால் உணர்த்தி, சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். பின் அகத்தியர் இத்தலம் வந்து சுவாமியை வழிபட்டார். சிவன், அம்பாளுடன் திருமணக்காட்சி காட்டியருளியதோடு, முருகனோடு சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார். அவரது தரிசனத்தால் அகத்தியர் சிவ ஆனந்தம் அடைந்தார்.

தனக்கு அருள்புரிந்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருளவேண்டும் என வேண்டினார் சிவனிடம் அகத்தியர் வேண்டினார். சிவனும் இங்கு சுயம்புவாக எழுந்தருளி “சிவாநந்தீஸ்வரர்’ என்ற பெயரும் பெற்றார்.

#சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவன், “சக்தி தெட்சிணாமூர்த்தி’யாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.

#திருவிழா

வழக்கமான பூஜைகளைத் தவிர, மஹாசிவராத்திரி (பிப் - மார்ச்), பிரதோஷம், திருக்கார்த்திகை (நவம்பர் - டிசம்பர்), ஸ்கந்த சஷ்டி (அக்டோபர் - நவம்பர்), மார்கழி திருவாதிரை (டிசம்பர் - ஜனவரி) ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

#திறக்கும்_நேரம்

கோயில் காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#தொடர்பு_விவரங்கள்:

மேலும் விவரங்களுக்கு +91 90472 60791 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#அமைவிடம்:

கன்னிகைப்பேர் இடம் சென்னையிலிருந்து பெரியபாளையம் செல்லும் வழியில் உள்ளது. அங்கிருந்து திருக்கண்டலம் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னிகைப்பேரிலிருந்து ஷேர் ஆட்டோ கிடைக்கிறது.
இந்த கோயில் பெரியபாளையத்திலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைமையகமான திருவள்ளூரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 37 கி.மீ தொலைவிலும் உள்ளது. 
அருகிலுள்ள ரயில் நிலையம் திருவள்ளூர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன்:

தஞ்சாவூர் புன்னைநல்லூர் 
மாரியம்மன்:
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சை - நாகை சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு முத்துமாரியம்மன் புற்று வடிவில் அருள்பாலிக்கிறார்.

மூலவர் : முத்து மாரியம்மன்

தல விருட்சம்: வேம்பு

தீர்த்தம்: வெல்லகுளம்

புராண பெயர்: புன்னைவனம்

ஊர்: புன்னைநல்லூர்

மாவட்டம்: தஞ்சாவூர்

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத்   திசைகளிலும் அஷ்ட சக்திகளைக் காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்குக் கிழக்குப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே  அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ஆம் ஆண்டில் திருத்தல யாத்திரை மேற்கொண்டபோது கண்ணபுரம் என்றழைக்கப்படும்  சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அரசனின் கனவில் அம்பிகை தோன்றினார். அப்போது, தஞ்சைக்குக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைக்காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வழிபடும்படி கூறினாராம் அம்பிகை.

அதன்படி வெங்கோஜி மகாராஜாவும் தஞ்சைக்கு வந்து புன்னைக்காட்டுக்குச் சென்றார். அந்தக் காட்டுக்கு வழியமைத்த மகாராஜா, அம்பிகை  இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சிறிய கூரை அமைத்துப் புன்னைநல்லூர் எனப் பெயர் சூட்டினார். மேலும், அந்தக் கிராமத்தையும் அந்தத் திருக்கோயிலுக்கே வழங்கினார்.

பின்னர், 1739 - 1763 ஆம் ஆண்டுகளில் ஆண்ட பிரதாப மகாராஜா, இந்தத் திருக்கோயிலுக்கு அருள்மொழிப்பேட்டை என்ற கிராமத்தை மானியமாக அளித்தார். மேலும் இத்திருக்கோயிலுக்கு வருவோர் அம்பாள், ஈசுவரனை வழிபடுவதுடன், பெருமாளையும் வழிபடுவதற்காக அம்பாளின் கோயிலுக்கு வட திசையில் அருள்மிகு கோதண்டராமர் கோயிலையும் கட்டி மானியங்களையும் வழங்கினார். 

 1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

அரசனும் அரசகுமாரியுடன் சென்று அம்பிகையை வழிபட்டவுடன் அரசகுமாரி தனது பார்வையைத் திரும்பப் பெற்றார். இதில், மகிழ்ச்சி அடைந்த அரசன்  அம்பிகைக்கு சிறியதொரு கோயிலைக் கட்டினார். மேலும், இந்தத் திருக்கோயிலைச் சுற்றி திருச்சுற்று மாளிகையையும் அமைத்தார். பிற்காலத்தில் இந்த மன்னரே ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் உருவத்தை வடிவமைத்து ஶ்ரீ சக்ர பிரதிஷ்டையும் செய்தார். 

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகா ராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது. மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலிலிருந்து சற்றுத் தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகா ராஜா.

சிவாஜி மகாராஜா மூன்றாவது திருச்சுற்றைக் கட்டி வைத்து, மேலும் பல திருப்பணிகளைச் செய்தார். வெளி மண்டபம், போஜன சாலை, வடக்குக் கோபுரம் ஆகியவற்றை 1892 ஆம் ஆண்டில் சிவாஜி மன்னரின் துணைவியார் காமாட்சியம்பா பாயி சாகேப் கட்டினார்.

இரண்டாம் சிவாஜி ராஜா காலமான கி.பி. 1855 ஆம் ஆண்டில் கல்காரம் வரை  கட்டப்பட்டிருந்த ராஜகோபுரம் ஏழுநிலை கொண்ட அழகிய ராஜகோபுரமாக கட்டப்பட்டுள்ளது.

தல சிறப்பு:

இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

 பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோவில் அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது. சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது.

மராட்டிய மன்னரான இரண்டாம்  சிவாஜி இக்கோவிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன.

 புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப்பல்லக்குத் திருவிழாதான் இக்கோவிலின் மிகப்பெரிய திருவிழா. முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. தஞ்சாவூர் கீழவாசல் அழகர்சாமி தலைமையில் இருபது பேர் கொண்ட குழுவினர், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தப்பல்லக்கை உருவாக்கித் தருகின்றனர். இதனை உருவாக்கிட, அவர்களுக்கு ஏழெட்டு தினங்கள் ஆகின்றன. முழுமையான முத்துப்பல்லக்கின் நீளம் முப்பத்தைந்து அடி, அகலம் பன்னிரெண்டு அடி, உயரம் ஐம்பத்தைந்து அடி, இந்த நீள, அகல, உயர பிரம்மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது. நான்கு சக்கரபட்டறை மீதாக இருபுறமும் நாற்பதடி நீள ஒரே ஒரு மர வாரினைக் கட்டுகிறார்கள். அதன் மீதுதான் முத்துப்பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. முன்பாக, பல்லக்கை வடிவமைக்கும் இருபது கலைஞர்களும், மூங்கில் பிளாச்சுகளை அளவுகளுக்கு ஏற்றாற்போல் வெட்டி, அலங்கார வடிவங்களை உருவாக்குகின்றனர். ஜிகினாக்களை வெட்டி ஒட்டுகின்றனர். ஜொலிக்கும் முத்துக்களை (டூப்ளிகேட்) பதிக்கின்றனர். கீழே கைவேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் அவற்றை அந்தப் பட்டறை மீது ஏற்றி ஆங்காங்கே கட்டி, ஒட்டி மிகப் பிரம்மாண்ட முத்துப் பல்லக்கினை உருவாக்கி விடுகின்றனர். அதன் பிறகு முத்துப்பல்லக்கு மின் விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்படுகின்றன. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கு மிகுந்த பேரழகுடன் தோற்றமளிக்கிறது.

தலபெருமை:

சுயம்பு அம்மன் – மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.

விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

உள்தொட்டி நிரப்புதல்:  

அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது. இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது. 

கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு. அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையை ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த எண்பத்தியெட்டு திருக்கோவில்களில் ஒன்று. 

வெல்லக்குளம்:

திருக்கோவிலின் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது. உடம்பில் கட்டி, பரு ஏற்படுபவர்கள் அம்பாளை வேண்டிக் கொண்டு வெல்லம் வாங்கி வந்து  வெல்லக்குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவது போல முகப்பரு, கட்டிகளும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. இது இப்போதும் வழக்கமாக இருக்கிறது.

கோயில் உருவாக்கம்:

சிறு கோயிலுள் குடிகொண்டிருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் சோழ மன்னர்களால் சிறிய கோவிலாக அமைக்கப்பட்டது. பின்னர் மராட்டிய மன்னர்களால் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. 

கி.பி.1727 முதல் 1735 வரை தஞ்சாவூரை ஆண்ட துளஜா மகாராஜாவினால் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. கி.பி.1798 முதல் 1832 வரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய இரண்டாவது திருச்சுற்று முதலியவற்றைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.1950,1987  மற்றும் தொடந்து கும்பாபிஷேகம் நடை பெற்று வருகிறது.

திருவிழா: 

ஆடி மாதம் – முத்துப்பல்லக்கு, ஆவணி மாதம் – கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் – தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைவர். வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

முத்துப்பலக்குப் பெருவிழா அன்று காலை ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கைலாசநாதர் கோவிலிலிருந்து பால் குடம் சுமந்து, பகல் 12 மணியளவில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வார்கள். மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை. அதன் பின்பு மாலை 4 மணியிலிருந்து சுவாமி அலங்கார மண்டபத்தில், உற்ஸவர் மாரியம்மனுக்கு இரவு 7 மணி வரைக்கும் அலங்காரம் நடைபெறும். அலங்கார மண்டபம் எதிரே, இசைக்கலைஞர்கள் பலர் இசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பர். இரவு 12 மணியளவில் மல்லாரி இசையினைக் கேட்டபடி, உற்ஸவர் மாரியம்மன் உள் பிராகாரம் வலம் வருவார். இரவு 1 மணியளவில் அம்பாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளியுவுடன் முத்துப்பலக்கு வீதியுலா தொடங்கி விடும். நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்பாள் திருக்கோவில் வந்து சேர, காலை 6:30 மணியாகி விடும். தொடர்ந்து 7 மணியளவில், மீண்டும் மல்லாரி இசை கேட்டபடி, மாரியம்மன் கருவறை முன்மண்டபம் வந்து சேர்வாள். புரட்டாசி மாதம் வசந்த உற்ஸவ தெப்பத் திருவிழா ஆகியவை இக்கோவிலின் சிறப்புகள்.. 


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி

கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி
பற்றிய தகவல்கள்...
ஆடி வெள்ளிக் கிழமை விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

எத்தனை வெள்ளிக் கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு.ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

எனவே,தான்"கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி'"என்று சொல்வார்கள்.தேடிச் சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும்.அதுமட்டுமல்ல,திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும்.

எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும்.கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும்.

துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை,வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை,
ஆதிபராசக்தியை,
அகிலாண்டேஸ்வரியை,
புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி,தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,மஞ்சள்,குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும்.இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்,வெள்ளிக் கிழமைகள் விசேஷமானவை.அன்றைய தினம் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு,பூஜை அறையில் குத்து விளக்கேற்றி லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடி தேவியை வணங்குவது நன்மை தரும்.பால் பாயசம்,சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம்.பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து,அவர்களுக்கு மங்களப் பொருட்களைக் கொடுத்து சிறப்பிக்க,தேவியின் அருள் கிடைக்கும்.

இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று அம்மனுக்கு இந்த மாலையை போட்டுவேண்டுதல் வையுங்கள். நினைத்தது உடனே நடக்கும். வேண்டிய வரம் உடனே கிடைக்கும்.

ஆடி மாதத்தில் அம்மனை வழிபாடு செய்வதற்கு எத்தனையோ முறைகள் உள்ளன. அதில் சக்திவாய்ந்த சுலபமான ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை வெள்ளிக்கிழமை ஆடி மாதத்தில் வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை. ஆடி வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு இந்த மாலையை அணிவித்து, அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் நினைத்த வேண்டுதல், நினைத்த மார்க்கத்தில் உடனே நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. அம்மனுக்கு உகந்த, அம்மனுக்கு மிகவும் பிடித்த அந்த பிரத்தியேகமான மாலை என்ன. அதை எப்படி அம்மனுக்கு அணிவிக்க வேண்டும்.?

அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பொருளின் வரிசையில் முதலில் இருப்பது வேப்ப இலை. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆடி வெள்ளி அன்று நம் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய பொருள் வேப்ப இலை. அடுத்தபடியாக அம்மனுக்கு உகந்த பொருள் என்றால் அது மஞ்சள். குறிப்பாக விரலி மஞ்சள். அம்மனுக்கு மிகவும் உகந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது.

மஞ்சள் நூலில் இந்த வேப்ப இலையையும் மஞ்சள் கிழங்கையும் சேர்த்து மாலையாகத் தொடுத்து கோவிலில் உள்ள அம்மனுக்கு சாத்தி உங்களுடைய வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் உடனே பலிக்கும். கோவிலுக்கு செல்ல முடியவில்லை, கோவிலில் அம்மனுக்கு இந்த மாளிகையை சாத்த முடியவில்லை என்றால் இந்த மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவ படத்திற்கு போட்டு மனதார வேண்டுதல் வைத்தால், வேண்டிய வரத்தை உடனடியாக பெறமுடியும்.

ஒரு மஞ்சள் நூலை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் அதில் வேப்ப இலையை ஒரு முறை வைத்து தொடுக்க வேண்டும். அடுத்தபடியாக ஒரு விரலி மஞ்சளை தொடுக்க வேண்டும். அடுத்து வேப்ப இலை, அடுத்து விரலிமஞ்சள் இப்படி மாறி மாறி மாலையை கட்டிக் கொள்ளுங்கள். மாலையை கட்டும் போது உங்களுடைய வேண்டுதலை மனதார சொல்லிக்கொண்டே இருங்கள். 7, 11, 21 என்ற ஒற்றை படை கணக்கில் மஞ்சள் கொம்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். வேப்ப இலைகளை கணக்கில்லாமல் வைத்து கட்டிக் கொள்ளலாம்.

இவ்வாறாக அம்மனை மனமுருக வேண்டி ஏதாவது ஒரு பிரார்த்தனையை வைத்து இந்த மாலையை கட்டி அம்மனுக்கு சாத்தி பாருங்கள். நிச்சயமாக நீங்கள் வேண்டிய வேண்டுதலை காண பலன் கூடிய விரைவில் உங்களை வந்து சேரும். குறிப்பாக இந்த மாலையை கோவில் சாத்தும் போது, அம்மனுக்கு கூடவே ஒரு அழகான மஞ்சள் நிற புடவையையும் எடுத்துக்கொடுத்து சாத்தினால் வீட்டில் மங்கள நிகழ்வுகளுக்கு தடை இருக்காது.

அம்பாள் மனம் மகிழ்ந்து வரங்களை வாரி தந்து விடுவாள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் அத்தனை கஷ்டத்திற்கும் விடிவு காலம் பிறக்கும். இந்த மாலையை, இந்த வெள்ளிக்கிழமை சாத்த முடியாதவர்கள், ஆடி மாதத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சாத்தி நல்ல பலனை பெறலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருநள்ளாறு கோயிலில் தர்ப்பை புல்லே தல விருட்சம்

தர்ப்பையும், ரகசியமும்.........
நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், 
நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே!

நாம் அவற்றின் காரணத்தை உணராமல், 
அவற்றை நவீன கண்டு பிடிப்புகளுடன் ஒப்பிட்டு,
அதன் எளிமையான பயன் பாட்டையே நாம் புறக்கணிக்கிறோம்.

அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில், 
ஒரு சூட்சுமான செயல்பாடு தான் தர்ப்பை புல் பயன்பாடு.

தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது.

உலகம் தோன்றிய போதே தோன்றிய தொன்மையான புல் என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர்.

தர்ப்பை புல்லின் உச்சியில் சிவபெருமானும், 
மத்தியில் பிரம்மனும்,
அடியில் விஷ்ணுவும்
இருப்பதாக ஐதீகம்.

தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் என்பதே தர்ப்பை புல்லின் சிறப்பாகும். 

தர்ப்பை புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது, நீருக்குள் பல நாட்கள் கிடந்தாலும் அழுகாது. 

இந்து சமய சடங்குகளில், பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்ப்பை புல்லுக்கு உண்டு. 

தர்ப்பை புல்லில் ஏழு வகை உண்டு....
குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல்,
விசுவாமித்திரம், யவை
என்பவை அவை.

தோற்றத்தை பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.

நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண் தர்ப்பை எனவும், 
அடிப்பகுதி பருத்து இருந்தால் அது அலி தர்ப்பை எனவும், 
அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது. 

தர்ப்பை புல்லின் மகிமைகளை யஜூர், அதர்வண வேதங்களிலும், 
சம்ருதி சிந்தாமணி, சம்ருதி பாஸ்கரம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலும், 
நிகண்டு ரத்தினாகரம், ராஜ நிகண்டு போன்ற ஆயுர்வேத நூல்களிலும் காணலாம்.

தர்ப்பை புல்லினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்புக்கு பவித்ரம் என்று கூறுவர்.

பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

பவித்ரத்தை எல்லா விதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்தில் இருந்தே உள்ளது.

நமது வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது.

இந்த விரலில் பவித்ரம் அணிந்து ஹோமம், ஜப வேள்வி சடங்குகளில் ஈடுபட, 
அது அண்ட வெளியில் உள்ள ஆற்றலை மூளைக்கு கொண்டு சேர்க்கும். 

பவித்ரம் அணியாமல் மேற்கொள்ளும் எந்த ஆன்மீக சடங்குகளும், 
மின்சாரம் இல்லாத கணினி போல அவற்றால் எந்த பலன்களும் இல்லை. 

தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,
அதே போல் தர்ப்பை அணிந்து இருப்பவரிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்ம சாஸ்திரம். 

உபாசனையில் ஜபம் மற்றும் வேள்விக்கு இடையூறு செய்யும் கண்ணுக்கு புலப்படாத, 
அரக்கர்கள், பூதங்கள், பிசாசுகள், பிரம்மராக்ஷகர்
முதலியோர் நம் கையில் உள்ள தர்ப்பையை பார்த்ததும் விலகியே ஓடுவர். 

மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று ஆனால், மின்சாரத்தை விட பல மடங்கு செயல் திறன் கொண்டது.

அக்னி பரிசுத்தமானது தான்
என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும். 
ஆகவே தான் இதற்கு அக்னி கர்பம் என்ற பெயர் உண்டு. 

தர்ப்பை புல்லுக்கு மந்திர சக்தியை உள் வாங்கி கொள்ளும் தன்மை மிக மிக அதிகம். 

ஆகவே அது தீய எண்ணங்களையும், 
கர்ம வினைகளையும்
நம்மிடம் ஒட்டாமல் இருக்க செய்யும்.

தர்ப்பை புல்லில் ஆன ஆசனம் மிகவும் விசேஷம். 

தர்பாசனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பல மடங்கு சக்தி உண்டு.

கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பார்கள்.
அந்த தர்ப்பையின் வழியாகத் தான் ப்ராண சக்தி கும்பத்துக்குள் வரும்.

சிறந்த புனிதமான தெய்வீக சக்தியைக் கொண்ட தேவர்களும்,
பித்ருக்களும் நம் கண்களுக்கு தெரியாத ஒளி ரூபத்தில் வந்து அந்த
தர்ப்பையில் அமர்கின்றனர்.

தர்ப்பை உஷ்ண வீரியமும், அதி வேகமும் கொண்டது. 
மேலும் பஞ்ச லோகங்களில்
தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. 

எனவே தான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையை பயன் படுத்துவார்கள். 

அதை நாடி சந்தானம்
அல்லது உயிர் கொடுத்தல் என்று சொல்வார்கள்.

கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றிய பின், அந்த நீரை கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இது தான். 

உபாசனையின் போது கையில் ஒரு பிடி தர்ப்பையும், ஆசனமாக நான்கு பிடி தர்ப்பையையும் வைத்து மந்திரம் சொல்ல எல்லா தேவதைகளையும்
தொடர்பு கொண்டு பல்வேறு செய்திகளை அறியலாம். 

நன்கு உரு ஏற்றிய
தர்ப்பையை எரித்து சாம்பலாக்கி அதில் சிறிது நெய் விட்டு மை போல
குழைத்து புருவங்களில் தடவ எல்லா விதமான தோஷங்களும் விலகி
ஓடும்; ஜன வசீகரம் ஏற்படும். 

பொதுவாக ஹோமங்களின் முடிவில் இதை ஹோமபூஜா ரக்ஷசையாக இதை செய்வார்கள்.

தர்ப்பை புல்  புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.

ஒரு புல்லை கொண்டு செய்யும் பவித்திரம் 
இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், 

இரண்டு புற்களை கொண்டு
செய்யப்படும் பவித்திரம்
தினசரி நடை முறைகளுக்கும், 

மூன்று புற்கள்
கொண்டு செய்யப்படும் பவித்திரம் அமாவாசை அன்று செய்யப்படும் நீத்தார்
சடங்கு போன்றவற்றிலும், 

நான்கு புற்களினால் செய்யப்பட்ட பவித்திரம்
கோயில் நடை முறைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றது.

தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், 
பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் தர்ப்பை புல்லை உபயோகப் படுத்துவர்.

சிராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆசனம், கூர்ச்சம் போன்றவைகள் 
தர்ப்பை புல்லில் தான் செய்யப்படுகின்றன.

தேவ தர்ப்பணத்திற்கு நுனியாலும், 
மனித தர்ப்பணத்திற்கு மத்தியாலும்,
பித்ரு தர்ப்பணத்திற்கு மடித்து நுனியாகவும், தர்பணாதிகள் செய்ய
வேண்டும் என்று சாஸ்திரம் வரையறுத்துள்ளது

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம்.

எனவே தான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய
கிருமிகளால் உணவு கெடாமல் இருக்க தூய்மையான தர்ப்பையை பரப்புகிறார்கள்.

தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும். 

தர்ப்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்து வர, அங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாது. 

வீடுகளில், உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டி வைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்கும். 

வியாதி உள்ளவர்கள் தங்கும் இடங்களில் தர்ப்பை புல்லை வைக்க வியாதிகள் பரவாது நலம் பெறுவர். 

முன்பு திருநள்ளாறு தர்ப்பைப் புல் வளரும் காடாக இருந்து உள்ளது. 

ஆகவே அங்கு வீற்றிருக்கும் ஈஸ்வரனுக்கு 'தர்பாரண்யேஸ்வரர் 
என்று பெயர்.

திருநள்ளாறு கோயிலில் தர்ப்பை புல்லே தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

திருவெண்பாக்கம் பூண்டி ஊன்றீஸ்வரர் (ஆதாரதாண்டேசுவரர்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றானதும் சிவபெருமான் சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலமான #திருவெண்பாக்கம் என்ற #பூண்டி 
#ஊன்றீஸ்வரர் (ஆதாரதாண்டேசுவரர்) 
#மின்னொளியம்மை திருக்கோயில் 
திருவெண்பாக்கம் - ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
மூலவர் : ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர் 
அம்மன்: மின்னொளி அம்பாள், தடித்கௌரி்
தல மரம் : - இலந்தை
தீர்த்தம் : - குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்
வழிபட்டோர் : சுந்தரர்

தேவாரப் பாடல்கள் :- சுந்தரர்

#தேவாரப்பதிகம்:

பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.

-சுந்தரர்

#தலசிறப்பு:

சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். 

சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.

சுந்தரர் இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.

கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்தே இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 251 வது தேவாரத்தலம் ஆகும்.

#தலவரலாறு:

இறைவன் , சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பழைய கோயில் திருவிளம்புதூரிலுள்ளது. சிவபெருமான் கண்ணொளி தராது ஊன்றுகோல் தந்ததால் கோபமடைந்தார் சுந்தரர். தாம் பெற்ற ஊன்றுகோலைக் கோபத்துடன் இறைவனார் நோக்கி வீசியெறிந்தார். அது நந்தியெம்பெருமான் மீது பட்டு கொம்புடைந்ததால் இத்திருக்கோயில் நந்தி கொம்புடைந்து உள்ளார்.

#பழையகோயில்_வரலாறு:

தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.

#வரலாறு:

சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார்.

சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை.

இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை.

இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.

பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.

#மின்னொளி_அம்பாள்: 

சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம், "மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள்.

தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் "மின்னொளி அம்பாள்' என்றும், "கனிவாய்மொழிநாயகி' என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதியானவள்.

#பொது_தகவல்:

இங்குள்ள விநாயகர் வலம்புரி விநாயகர். இக்கோயில் முதலில் பூண்டிக்கு அருகே உள்ள திருவளம்புதூர் ஏரியின் அருகே இருந்தது. பிற்காலத்தில் இக்கோயில் பூண்டி பகுதியின் மத்தியில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிரதான வாசலுக்கு நேரே மின்னொளி அம்பாள் சன்னதி இருக்கிறது. ஒரே இடத்தில் நின்று சுவாமி, அம்பாள் இருவரையும் வழிபடும்படி அமைந்துள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடனும், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் எட்டு கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

இவருக்கு அஷ்டமி நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே பாடல் பெற்ற தலங்களான கூவம், திருப்பாசூர் ஆகிய தலங்கள் அமைந்திருக்கிறது.

#கோவில்_அமைப்பு:

தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன.

சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார்.

தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம்.

சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.

பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடனும், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர். பைரவர் எட்டு கைகளுடன் கால பைரவராக தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

#சிறப்புக்கள் :

வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள்.
பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை "நம்பிக்கை கோயில்'.

திருமணத்தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

#அமைவிடம்:

திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் 1 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, July 30, 2025

திருக்கொட்டாரம் கோட்டாற்றுநாதர் என்ற ஐராவதீஸ்வரர் திருவாரூர்

முதலாம் 
குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட, 
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், வெள்ளை யானையான ஐராவதம் ஈசனை வழிபட்ட தலங்களில் ஒன்றானதும் , 
சுபக மகரிஷி தேனீ வடிவில் ஈசனை வழிபட்ட தலமான 
#திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வாஞ்சியாற்றங்கரையில் அமைந்துள்ள 
#திருக்கோட்டாறு என்ற #திருக்கொட்டாரம்
#கோட்டாற்றுநாதர் என்ற 
#ஐராவதீஸ்வரர்
#சுகுந்தகுந்தளாம்பிகை என்ற 
#வண்டமர்_பூங்குழலிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻

பசுமையான மரங்களும், பூஞ்சோலைகளும், நெல் வயல்களும் சூழ்ந்த அற்புதமான பதி திருக்கோட்டாறு. தற்போது இத்தலம் திருக்கொட்டாரம் என்று ஆகியுள்ளது. 
குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இந்தத் தலம் சோழ தேசத்தின் காவிரித் தென்கரையின் 53வது தலமாகப் போற்றப்படுகின்றது. 

திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும்.

திருகோட்டாறு (தற்போது திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது)

ஐராவதத்தின் தந்தங்கள் மேகங்களைத் துளைத்தபோது, மழை ஒரு நதியைப் போல பலமாகப் பாய்ந்தது, மேலும் வாஞ்சியாறு நதி உருவானதாகக் கூறப்படுகிறது. தமிழில், "கொட்டு" என்றால் தந்தம் என்றும் "ஆறு" என்றால் ஆறு என்றும் பொருள், எனவே கொட்டாரம் என்பது தந்தங்களால் உருவாக்கப்பட்ட நதி / வெள்ளத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயில் நட்டாறு (வாஞ்சியாறு) நதியின் கரையில் அமைந்துள்ளது - இது காவேரி நதியின் துணை நதி - இது கோயிலின் தீர்த்தங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

இறைவன் பெயர்:-ஐராவதேஸ்வரர்,
ஐராவதீஸ்வரர்.

இறைவி பெயர்:-வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாம்பிகை.

தல விருட்சம்:-பாரிஜாதம்(தற்போது இல்லை).

தீர்த்தம்:-வாஞ்சியாறு,மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம் கோவிலின் முன் உள்ளது.

🍁தேவாரப் பாடல்கள்

"திருஞானசம்பந்தர்"

1. கருந்தடங்கண்ணின்

2. வேதியன் விண்ணவரேத்த

*திருஞானசம்பந்தர் பாடிய திருக்கோட்டாறு பதிகம்:

"கருந்த டங்கணின் மாத ராரிசை
  செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
  இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.    

நின்று மேய்ந்து நினைந்து மாகரி
  நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல்
  ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.

*அப்பர் வாக்கில் இடம்பெற்ற தேவார வைப்பு பாடல்:

"இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
 இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
 தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
 கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
 கயிலாய நாதனையே காண லாமே.  

 புராண வரலாறு:

ஒருமுறை, துர்வாச முனிவர் கைலாசத்தில் சிவனை வழிபட்டு ஒரு மாலையைப் பெற்றார். அது இந்திரனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து , முனிவர் அந்த மாலையை அவருக்குக் கொடுத்தார். தான் தேவர்களின் தலைவன் என்பதில் பெருமை கொண்ட இந்திரன், தனது யானையான ஐராவதத்தின் தலையில் மாலையை வைத்திருந்தார் . ஆனால் அந்த மாலை யானையை எரிச்சலடையச் செய்தது, அது அதை உதறித் தள்ளி, அதை மிதித்தது. இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த முனிவர், இந்திரனையும் ஐராவதத்தையும் சபித்தார், இதன் விளைவாக நான்கு தந்தங்களுடன் கூடிய வெள்ளை யானை அதன் தெய்வீகத்தை இழந்து சாதாரண காட்டு யானையாக மாறியது. நூறு ஆண்டுகளாக, ஐராவதம் பல சிவாலயங்களில் வழிபட்டது, இறுதியில் மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் சாபத்திலிருந்து விடுபட்டது . ஐராவதம் வழிபட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஐராவதம் இங்கு வந்தபோது, அதன் தந்தங்களைப் பயன்படுத்தி மேகங்களைத் துளைத்து, வழிபாட்டிற்காக மழையைப் பொழிந்தது. இந்தக் கோயிலில் உள்ள தேவாரத்தில் உள்ள சம்பந்தரின் பதிகம், இந்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறது .

சுபக முனிவர் இந்த கோவிலில் தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவருக்கு தாமதம் ஏற்பட்டது, அவர் சென்றடைந்ததும் கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இங்குள்ள இறைவனை வழிபடத் தீர்மானித்த அவர், தேனீ வடிவத்தை எடுத்து கோவிலுக்குள் நுழைந்தார். பிரார்த்தனைகளுக்குப் பிறகு, அவர் ஒரு தேனீ வடிவத்திலேயே இருக்கத் தேர்ந்தெடுத்தார். காலப்போக்கில், தேனீக்களின் கூட்டம் ஒன்று எழுந்தது, இந்தக் கூட்டத்திலிருந்து வரும் தேன் சிவபெருமானின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும். இன்றும் கூட, வருடத்தின் சில நேரங்களில் இந்தக் கூட்டத்தைக் காணலாம். சுபக முனிவருக்கு கோயிலில் தனி சன்னதி உள்ளது.

அகஸ்தியர் வழிபட்ட கோயில்களில் இதுவும் ஒன்று .

சம்பந்தர் இங்கு வழிபட்டதால், குறைந்தது 7 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தக் கோயில் இருந்து வருகிறது. உள்ளே உள்ள கல்வெட்டுகளின்படி, இந்தக் கட்டமைப்பு கோயில் 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் உட்பட பல்வேறு மன்னர்களின் நன்கொடைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் உள்ளன. சுவாரஸ்யமாக, இந்தக் கோயிலில் இரண்டு பலி பீடங்கள் உள்ளன - நந்தியின் பின்புறத்திலும் முன்னும் ஒவ்வொன்றும். பிரதான கருவறை வவ்வால்-நேத்தி மண்டபத்தில் (மண்டபத்தின் வடிவமைப்பு ஒரு வவ்வாலின் நெற்றியைப் போன்றது) அமைந்துள்ளது .

🍁எப்படிப் போவது:

1. காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது.
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும்.அங்கிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.

2. கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி,பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் என்ற ஊர் வரும்.அவ்வூரிலுள்ள காளி கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலத்தின் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.

🍁திருவிழா:

ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்.

🍁தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக
ஐதீகம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 116 வது
தேவாரத்தலம் ஆகும்.

🍁பொது தகவல்:

இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் "ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச்
சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது.இக்கோயிலைக் கட்டுவித்தவன் "சோழ மண்டலத்து
மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க
சோழ கேரள ராசன்" ஆவான் (காலம் கி.பி .1253), கல்வெட்டில் இறைவனின்
பெயர், "இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்" என்று காணப்படுகின்றது.

🍁கோவில் அமைப்பு:

மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது.
உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி தெரிகிறது.வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச் சுற்று.கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன. பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் காணப்படுகின்றன.
உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன. சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது நின்ற திருக்கோலம்.

🍁பிரார்த்தனை:

திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில்
சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🍁நேர்த்திக்கடன்🍁

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது
வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

🍁தலபெருமை:

ஐராவதம் வழிபட்டதால் இறைவனின் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று.

கோடு-கரை வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு
எனப்பட்டது.வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை
ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர்.
அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம்.

🍁தல வரலாறு:

ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை.வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது.ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு 
இறைவனுக்கு சாத்தியதாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார்.செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.

துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார்.அவர் சாபப்படி ஐராவதம்
காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை
வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது
திருவிளையாடற்புராண வரலாறு.
ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.

சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார்.
ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது.
அதைக் கண்ட "சுபமகரிஷி" தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை
வழிபட்டார்.அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார்.அக்காலந் தொடங்கி மூலவர்
சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத்
தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும்.ஆண்டுக்கொரு முறை
இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம்.மீண்டும்
கூடுகட்டப்படுகின்றதாம்.இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.

முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது.மேற்கு
நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுபமகரிஷியும்
சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

🍁சிறப்புகள்:

சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், 3-ம் திருமுறையிலும் உள்ளன.கருந்தடங்கணின் மாதரார் இசை செய்யக் கார் அதிர்கின்ற பூம்பொழில் என்று தொடங்கும் பதிகம் 2-ம் திருமுறையிலும், வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை என்று தொடங்கும் பதிகம் 3-ம் திருமுறையிலும் இடம் பெற்றுள்ளன.

சுபமகிரிஷி என்பவர் நாள்தோறும் மூலவரை தரிசித்து வந்ததாகவும், ஒரு நாள் அவர் வருவதற்கு நேரமானதால் கதவு சாத்தப்பட்டதாகவும், அதைக் கண்ட மகரிஷி தேனி வடிவம் கொண்டு உள்ளே பெருமானை வழிபட்டதாகவும் கூறுகின்றனர். அப்போது முதல் அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். அது முதல் மூலவர் சன்னதியில் தேன் கூடு இருந்ததாகவும் தற்போது அந்த தேன்கூடு இல்லை என்றும் கூறினர். முன்பு தேன் கூடு இருந்ததை சிறப்பாகக் கூறுகின்றனர்.

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது.

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேரந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கி.மீ. சென்று இவ்வூரை அடையலாம்.பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கி.மீ. சென்றும் இவ்வூரை அடையலாம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Tuesday, July 29, 2025

திருப்பாம்புரம்மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர்

நாக நாதர் கோவில், திருப்பாம்புரம்
திருப்பாம்புரம்மூலவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்புரநாதர் 
அம்மன்: பிரமராம்பிகை, வண்டமர் பூங்குழலியம்மை
தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம் 
புராணபெயர்: சேஷபுரி 
ஊர்: திருப்பாம்புரம் 
மாவட்டம்: திருவாரூர்

திருப்பாம்புரம் கோவில் வரலாறு☘️🐍🥀

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார்.

அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புர நாதரரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ராகு – கேது தோஷம் நீக்கும் கோவில்: திருப்பாம்புரம் ஒரு ராகு – கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்புரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது.

மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புரேஸ்வரரை வழிபட்டால் எல்லா வகையான நாக தோஷங்கள் விலகிவிடுகின்றன. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவிலின் பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால் திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்ற் சம்பந்தர் தனது பதிகத்தில் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.

நால்வர் துதி ☘

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

ஓம் உமா மகேஸ்வராய நம 🌷
ஓம் நமசிவாய ☘️

திருச்சிற்றம்பலம் 🙇

1. சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புர நன்னக ராரே.

2. கொக்கிற கோடு கூவிள மத்தங் கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.

3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.

4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னக ராரே.

5. நதியத னயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.

6. ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்
மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல் மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையவன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர் பாம்புர நன்னக ராரே.

7. மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுக மொழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி அனலது ஆடுமெம் மடிகள்
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் பாம்புர நன்னக ராரே.

8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள் அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னக ராரே.

9. கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத் தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.

10. குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் கையர்தாம் உள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே.

11. பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே.

திருநீலகண்டம் 🌻
சிவா திருச்சிற்றம்பலம் ☘️🐍🥀

திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை: போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மாலை 5 மணிக்கு மேல் பரிகார பூஜை கிடையாது.

நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

திருப்பாம்புரம் கோவிலுக்கு எப்படிப் போவது?
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் – காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

கருட தரிசனம் எவ்வளவு அரிதானது



கருடன், தனது தாயாருக்காக இந்திரனிடம் அமிர்தகலசத்தை திருடியதும், சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை ஒரு துளி கூட பருகாமல் அப்படியே நாகர்களிடம் கொடுத்ததையும் பார்த்து வியந்து போனார் விஷ்ணு.
கருட பஞ்சமி என்பது மும்மூர்த்திகளில் ஒருவரான, விஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் நாளாகும். பெரிய திருவடி, பக்ஷிராஜா, வைனதேயா, விஷ்ணுவாகனம், நாகாந்தகம், சுபர்ணா, கருத்மந்தம், மற்றும் காஷ்யபேயா என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் மாதத்தில் ஆடி மாதத்திலும், இந்து பங்காங்கத்தின் படி ஷ்ரவண மாதத்தில் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் வரும்) வளர்பிறையின் (சுக்ல பட்ச பஞ்சமி) 5வது நாளில் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி என்ற இரண்டு நாட்களுமே வழிபாடுகள் செய்யப்படும்.

இன்று வகையில் நாளை கருட பஞ்சமியும், நாக சதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருடனை வழிபாடு செய்வது சிறப்பாகும்.


கருட பஞ்சமி புராணம்:

கருடன், கழுகு போல வெள்ளை முகம், தங்க நிறத்தில் உடல், பெரிய சிவப்பு நிற இறக்கைகள் மற்றும் தலையில் கிரீடம் அணிந்தவர் என்றும், மிகவும் வலிமையானவர், என்று புராணங்கள் விவரிக்கின்றன. புராணங்களின்படி, காஷ்யப முனிவருக்கு கத்ரு மற்றும் வினயதா என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். கத்ரு ஆயிரம் பாம்புகளை தனது குழந்தைகளாக பெற்றெடுத்தார், வினயதா கருடனை மட்டுமே பெற்றெடுத்தார்.

கத்ரு மற்றும் வினயதா இருவரும், கடலைக் கடக்கும்போது ஏழு தலைகள் கொண்ட ஒரு வெள்ளை நிறக்குதிரை பறந்ததைப் பார்த்தனர். பறக்கும் குதிரையான உச்சைஷ்ரவஸின் வால் என்ன நிறத்தில் இருக்கும் என்பது பற்றி இருவரும் பந்தயம் கட்டுகிறார்கள். ஆயிரம் பாம்புகளின் தாயான கத்ரு, குதிரையின் வால் நிறம் கருப்பு என்றும், கருடனின் தாயான வினயதா நிறம் வெள்ளை என்றும் கூறினார். பந்தயத்தில் தோல்வியடைந்தவர் மற்றவருக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

அமிர்தக் கலசத்தை தேவர்களின் தலைவனான இந்திரன் வைத்திருந்தார். கருடன் இந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைத் திருடி, நாகர்களுக்கு வழங்கி, தன்னையும் தனது தாயையும் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தான். நாகர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்தாலும் அதைப் பற்றி வெளிகாட்டாத கருடன், தனது தாயாருக்காக இந்திரனிடம் அமிர்தகலசத்தை திருடியதும், சாகா வரம் கொடுக்கும் அமிர்தத்தை ஒரு துளி கூட பருகாமல் அப்படியே நாகர்களிடம் கொடுத்ததையும் பார்த்து வியந்து போனார் விஷ்ணு.

கருடனுக்கு ஒரு வரம் அளித்தார் விஷ்ணு. கருடன் உடனே தனக்கு விஷ்ணுவை விட உயர்ந்த பதவி வேண்டும் என்று கூறி விஷ்ணுவின் வாகனமானார்.


கருட வழிபாடு: அம்மாவும் மகனும்

கருட தரிசனம் எவ்வளவு அரிதானது மற்றும் சுபிட்சமான பலன்களைத் தரும் என்பது பலரும் அறிந்ததே. வைணவர்களின் சமயத்தில், பெருமாள் ஆலயங்களில் மூலவர் சந்நிதிக்கு சென்று மூலவரை வணங்குவதற்கு முன்பு, கருட வழிபாடு செய்ய வேண்டும் என்பது நியதியாகக் கருதப்படுகிறது.

கருடன், காசிபர் - வினயதா தம்பதிக்கு, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த பறவை இனங்களின் அரசன் ஆவார். கருடனுக்கும் அவரது தாயான வினயதாக்கும் இடையே உள்ள எல்லையிலாத பிணைப்பை வெளிப்படுத்தவே, கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது. அம்மாக்கள் மற்றும் மகன்களுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும், பிணைப்பையும் கொண்டாட, அதிகரிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அம்மாக்கள், தங்கள் குழந்தைகளின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், வளமான எதிர்காலத்திற்காகவும் கருடனை வணங்குகிறார்கள்.

கருட வழிபாடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள்:

கருடனின் கனிவான பார்வையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் வேண்டியது எல்லாவற்றிலும் வெற்றி பெறுவது உறுதி. விஷ்ணுவின் வாகனமாக இருப்பதால், விஷ்ணு பக்தர்கள் அனைவராலும் வணங்கப்படுகிறார். மேலும், தொடர்ந்து கருட வழிபாடு செய்பவர்களுக்கு, அணிமா, மகிமா, லகிமா என்ற எட்டுவிதமான சித்திகளை அருளக் கூடியவர்.

நாகர்களின் பிடியில் இருந்து தன்னையும் தனது தாயையும் காத்துக் கொண்டதால், கருட வழிபாடு அனைத்து விதமான நாக தோஷங்களில் இருந்து விடுபட உதவுகிறது.

கருட பஞ்சமி அன்று கருட வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

* பாம்புகள் மற்றும் பிற விஷ ஜந்துக்களால் ஆபத்து நேரிடுமோ என்ற பயம் நீங்கும்

* கண் திருஷ்டி, பில்லி சூனியம் மற்றும் பிற எதிர்மறை ஆற்றலை அகற்றும்

* சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் தீராத நோய்கள் தீரும்

* எல்லா நியாயமான விருப்பங்களும் படிப்படியாக நிறைவேறும்

* மனக்கவலைகளில் இருந்து விடுபட முடியும், தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்

* புகழ், பெயர், செல்வம் கிடைக்கும்

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, July 28, 2025

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?
தெய்வீக பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வரம் கொடுத்தார். 

அதனால்தான் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிக மாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடி செவ் வாய், ஆடி வெள்ளிக்கிழமைகள் முக்கிய த்துவம் பெறுகின்றன.

ஆடி செவ்வாய் தேடிகுளி என்பது பழமொ ழி. அதாவது ஆடிமாத செவ்வாய்க்கிழமை யன்று விரதம் இருந்து எண்ணெய் தேய் த்து குளித்து அம்பாளை வழிபட பெண்க ளின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. 

ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்கியம் கைகூடும், நீண்ட காலமாக குழந் தை பாக்கியம் எதிர்பார் த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்திக்கூர்மையுடன் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதத்தில் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்த ல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாட்டு மாதமாகிறது. 

ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத் திகை, ஆடித்தபசு, ஆடி பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. இத்தகைய விசேஷ நாட்களில் விரதமிருந்து அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது.

🌹🌹ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த் த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தா ர். தீக்காயங்களால் ரேணுகா தேவியின் உடலி ல் கொப்பளங்கள் ஏற்ப ட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகி ல் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட் டார். அப்போது மக்கள் அவரு க்கு பச்சரிசி வெல்லம் இளநீரை உணவா க கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணு காதேவி கூழ் தயாரித்து உணவுண்டார். 

அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பி லை சிறந்த மருந்தா கும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூறும் வகை யில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களி ல் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், ஆடி மாதத்தில் வீசக்கூடிய காற் றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனா ல் எங்கு ம் தூசியாக இருக்கும். இதனால் காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். 
ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

Sunday, July 27, 2025

திருவிற்கோலம் என்ற கூவம் திரிபுராந்தகேசுவரர் திருக்கோயில்

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான #திருவிற்கோலம் என்ற #கூவம் 
#திரிபுராந்தகேசுவரர் திருக்கோயில் 
 திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

மூலவர்: திருவிற்கோல நாதர், திரிபுராந்தகேஸ்வரர்,தீண்டாத் திருமேனி நாதர்
அம்மன்: திரிபுரசுந்தரி அம்பாள்
தல மரம் : - வில்வம்
தீர்த்தம் : - அக்னி தீர்த்தம்
வழிபட்டோர் : முஞ்சிகேசர், கார்கோடர் , தேவர்கள்
தேவாரப் பாடல்கள் :- திருஞானசம்பந்தர்

#தேவாரப்பதிகம்:

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழில் கூக மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச் செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே.

-#திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 14வது தலம்.

மூலவர் தீண்டாத் திருமேனி; சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயத்தழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சைக் கற்பூரம் மட்டும் தூவி, பாலபிஷேகம் செய்கின்றனர்.

இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் இது "அக்னி தலம்' ஆகும்.

#தல_வரலாறு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர். இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது. திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

#தல_வரலாறு:

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி.

இது சிவனுக்கும் பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் "கூரம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "கூவம்' என்று மருவியது.

திரிபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால் சுவாமி "திரிபுராந்தகர்' என்றும், அம்பாளை "திரிபுராந்தகி அம்மன்' என்றும் பெயர் பெற்றுள்ளனர். சக்கர அச்சு முறிந்து நின்றபோது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரில் இருந்து இறங்கி கையில் வில் ஏந்திய கோலத்திலேயே இங்கு நின்றார். எனவே, இங்குள்ள சிவனுக்கு "திருவிற்கோலநாதர்' என்றும், தலத்திற்கு "திருவிற்கோலம்' என்றும் பெயர் உள்ளது. சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது மட்டும் சுவாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.

முஞ்சிகேசர், கார்கோடர் என்ற இரு முனிவர்களின் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செருக்கை அடக்கினார். அவளிடம் சிவன், தான் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப்போவதாகவும், அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடியபோது, காளி சுவாமியை தரிசித்து அமைதியடைந்தாள்.

இவள் இக்கோயிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனிச்சன்னதியில் "தர்க்க மாதா' என்ற பெயரில் அருளுகிறாள். சிவனுடன், தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

#கோவில்_அமைப்பு:

தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன.

சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது.

சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன.

இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலைவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது.

#பொது_தகவல்:

இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாறை குறித்து பாடியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர்.

ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் தாண்டவம் ஆடிய நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். அம்பாள், சுவாமிக்கு வலது புறத்தில் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதனை சுவாமி, அம்பாளை திருமணம் செய்த கோலம் என்கிறார்கள். இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார். 

#திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆடியில் அம்மனுக்கு 10 நாட்கள் “பூ பாவாடை’ திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம்.

#அமைவிடம்

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்கிறது. கூவம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 1கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, July 26, 2025

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெய்வீக ரகசியம்...

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம்...
பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி என மூன்று விதமாய் காட்சி தருவாள்.

அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.

ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்த பின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.

பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது.

மதுரையில் மீனாட்சி தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

அவை...

(1) திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

(2) ப்ராத சந்தியில் – பாலா

(3) 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

(4) 12 – 15 நாழிகை வரையில் – கெளரி

(5) மத்யானத்தில் – சியாமளா

(6) சாயரக்ஷையில் – மாதங்கி

(7) அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

(8) பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக் காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்து, இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டுப் புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள்.

இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.

ஒரேநாளில் புவனேஷ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்.

வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய காட்சி ஒன்று உண்டென்றால், அது அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜையாகும்...!!

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது.

இரவு அர்த்த ஜாமத்தில்...

மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண் தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக் காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறைக்கு வரும்.

பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை) நடக்கிறது.

உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும். அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம்.

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.

அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடுகிறது.

(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும்

பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம்.

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

குறிப்பாக திருமணமாகாதவர்கள் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் உடனே மனம் போல திருமணம் நடப்பது உறுதி.

மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்.

பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .

வியாபார நஷ்டம், தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

இவை எல்லாவற்றையும் விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை 
புவனேஷ்வரி,
கௌரி,
சியாமளா,
மாதங்கி,
பஞ்சதசி

என எல்லா அலங்காரத்திலும் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!! வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்.

ஆடியில் தேடிய கரூர் மாரியம்மன்* கோயில்.

*ஆடியில் தினம் ஓர் மாரியம்மன்*  கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்* 
 #கரூர்மாரியம்மன்* 🌿🌿 கோயில் பற்றி பார்ப்போம்

☄🦅சமயபுரத்தில் மகமாயியாகவும், திருவேற்காட்டிலே கருமாரியாகவும், புன்னை நல்லூரிலே மாரியம்மனாகவும் அருளும் பராசக்தி கரூர் நகரிலே மாரியம்மனாய் தண்ணருள் பொழிகின்றாள். 
☄🦅கருவறையில் மாரியம்மன் நான்கு திருக்கரங்களுடன் சற்றே ஈசான்ய மூலையை (வடகிழக்கு) பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றியது. பக்கத்து கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்திலிருந்து பிடிமண் எடுத்துவந்து கரூர் நகரின் மையப் பகுதியான மார்க்கெட்டின் நடுவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல் உள்ள பெரியதொரு பிரார்த்தனைத் தலமாக கரூர் விளங்குகிறது. ஆண்டு முழுதும் அடுத்தடுத்து பல திருவிழாக்களைக் காணும் கரூர் மாரியம்மன், தன்னை வந்து தரிசிக்காவிட்டாலும், தன்னை நினைத்து வணங்குபவரின் கவலைகளையும் கரைக்கக்கூடியவள்

☄🦅வேண்டுவோர் வேண்டும் வரம் தந்து அவர்தம் குறைகளைப் போக்கி ஆனந்தம் அளிப்பவள்.

  ☄🦅கம்பம் விழா மிகச் சிறப்பானது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியான காப்பு கட்டுதல், ஒரு திருவிழா போல் நடைபெறும். அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம், மாவிளக்கு ஏற்றுதல், பொங்கல் வைத்தல் போன்ற பிரார்த்தனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவின்போது நிறைவேற்றுகின்றனர். கம்பத்திற்கு தயிர்சாதம் படைப்பது விசேஷமானது. இந்தப் படையலுக்குப் பின் கரூர் மாரியம்மனுக்கும், கம்பத்திற்கும் மாலை மாற்றும் வைபவம் நடக்கும். பின் உரிய வழிபாட்டுடன் கம்பம் திருக்கோயிலிலிருந்து ஊர்வலமாக அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு வழிபாடுகள் செய்து முடித்ததும் கம்பம் ஆற்றில் விடப்படும். அப்போது நடைபெறும் வாணவேடிக்கையைக் காண இருகண்கள் போதாது. 22 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள், மாரியம்மனுக்கு பூச்சொரிதலும், திருத்தேர் பவனியும். இவ்விழா காலங்களில் கிராமிய நடனங்கள், கூத்து, கரகாட்டம், பக்தி சொற்பொழிவுகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 

☄🦅அம்மன் திருவீதியுலா வரும் போதெல்லாம் மாவடி ராமஸ்வாமி என போற்றப்படும் கரூரின் காவல் தெய்வமாய் வழிபடப்படும் ராமர் கூடவே எழுந்தருள்கிறார். இவர் மாரியம்மனின் சகோதரராகவும் பாவிக்கப்படுகிறார். 

☄🦅இத்திருவிழாவைப் பொறுத்தவரை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி முத்தாய்ப்பானது எனில், பல்லக்கு மஞ்சள் நீராட்டு விழா மங்கள கரமான நிறைவு நிகழ்ச்சியாகும்.

 ☄🦅மற்ற நாட்களில் அம்மனை அமர்ந்த நிலையில் அலங்கரிக்கும் அர்ச்சகர்கள் பல்லக்கு அன்று அம்மன் ஓய்வெடுப்பதை உணர்த்தும் வண்ணம் சற்று சாய்ந்த நிலையில் சயன கோலத்தில் அலங்கரிப்பர். 

☄🦅பக்தர்கள் அனைவரும் அன்னைக்கு தாம்பூலம் தருவார்கள். நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து நிவேதனம் நடக்கும். 

☄🦅பக்தர்களுக்கு மஞ்சள் நீர் கொடுக்கப்படும். சில கிராம மக்கள் பல்லக்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் ஆலயம் வந்து சேரும் வரை பல்லக்கின் கூடவே சென்று திரும்ப வந்து அதனை விட்டு விட்டுச் செல்வதை வழிபாடாக கொண்டிருக்கிறார்கள். 

☄🦅அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. 

☄🦅மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இம்மாரித்தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள்  

☄🦅நேர்த்தி கடன்
அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் , மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை. இவை தவிர நீர்மோர், பானக்கம், வடைபருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம்.பால் அபிசேகம் செய்யலாம்.திருவிளக்கு பூஜை நடத்தலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். 

☄🦅தயிர்ச்சாதம் படைத்தல் : 

இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

☄🦅அம்மன் ஈசாண்யப் பார்வையுடன் அமர்ந்த நிலையில் உள்ளார்

☄🦅அளவில் சிறிய கோயிலாக இருந்தாலும் இங்குள்ள அம்மன் மிகுந்த சக்தி கொண்டவள் என்பது இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கொண்டு அறியலாம்.

☄🦅100 வருடத்திற்கும் முந்தய பழமையான கோயில்.

☄🦅இந்துக்கள் தவிர முஸ்லிம்கள், கிருஸ்த்துவர்கள் என்று அனைத்து மத்தினரும் வந்து வழிபடும

☄🦅திருமண் தத்துவம் மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில். மறைவது பூமித் தாயின் வயிற்றில். எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் எனபதே இதில் அடங்கியுள்ள தத்துவம்.இதன் உண்மை வடிவமே மாரியம்மன்.அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே. 

☄🦅மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து மஞ்சள் சொருகப்பட்டு ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும்.இதை சுவாமியாகக் கருதுகிறார்கள்.இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.

☄🦅மதங்களைக்கடந்த அம்மன் விழாக்காலங்களில் போடப்படும் பிரம்மாண்டமான பந்தல் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஷேக் முகமது என்னும் இஸ்லாமியப் பெரியவரால் போடப்பட்டது.அப்பழக்கம் அவரது பரம்பரையால் தொடரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.அதற்கான ஆவணமே உள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

ஆடி மாத தரிசனம்.திருவக்கரை வக்கிரகாளி அம்மன்..

ஆடி மாத அம்மன் தரிசனம்.
திருவக்கரை வக்கிரகாளி அம்மன் 

பிரம்மம் அசைவில்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி.

தட்சிணாமூர்த்தியாக யோக நிஷ்டையில் ஈசன் அமர்ந்திருக்கும்போது அவர் உள்ளி ருக்கும் அம்பிகை வெளிப்பட்டு துஷ்டர்க ளை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகி றாள். 

அம்பிகையே பரமாத்மா. அனைவருக்குள் ளும் இருந்து சக்தியை தருபவள்.அவளி ன் அபாரமான சக்தியை வெளிப்படுத்துவ து காளி ரூபம். அவதார ங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உண்டா கின்றன. தன்னை நம்பி வருபவர்களைக் காக்கவே அவள் காளி அவதாரமும் எடுக்கிறாள். 

காளி என்றாலே பயமும், நடுக்கமும் உண்டாகும். ஆனால் அவளை உபாசிக்க நாளடைவில் பயம் நீங்கி அவளிடம் பக்தி யும், ஈடுபாடும் உண்டாகி விடும். துஷ்ட நிக்ரகம் காரணமாகவே அம்பிகை எடுத்த உருவம் காளி. "அனைத்தும் நான்' என்னு ம் காளியைப் புரிந்து கொண்டால் அவளி டம் பயம் ஏற்படாது. 

திருவக்கரையில் அம்பிகை அமிர்தேஸ்வ ரி, வடிவாம்பிகை என்ற திருப்பெயர்களு டன் காட்சி அளித்தாலும் அவளின் வக்கிர காளி ஸ்வரூபமே மிகப் பிரசித்தம். 

குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த  வக்கிராசுரன் என்ற அசுரனை அழிக்க ஈசனிடம் வரம் பெற்று, அன்னை காளியா க அவதாரமெடுத்து அவனுடன் போர் புரிந்து வெற்றி பெற்றாள். 

சிவபெருமானை நோக்கி உக்கிர தவம் இருந்த வக்கிராசுரன் ஈசனிடமிருந்து ஏராளமான வரங்கள் பெற்றான். அதனா ல் ஆணவம் அடைந்த அவன் பல கொடு மைகள் செய்தான். மக்களைத் துன்புறுத் தி வந்தான். 

தேவர்களை அடிமைப்படுத்தி எண்ண முடியாத அக்கிரமங்கள் செய்தான். வக்கி ராசுரனை அழிக்க மகாவிஷ்ணுவை அனுப்புகிறார் சிவன். அதன்படி மகா விஷ்ணு வக்கராசுரனுடன் போர் செய்து தன் சக்கராயுதத்தின் மூலம் அவனை அழிக்கிறார்.

அவனின் தங்கை துன்முகி  அண்ணனை ப் போலவே கொடூர குணமும், ஆணவமும் நிறைந்தவள். வக்கிராசுரனைப் போலவே அவளும் பல கொடுமைகளை மனிதர்க ளுக்குப் புரிகிறாள். ஈசன் அவளை அழிக்க பார்வதி தேவியை அனுப்பினார். 

கயிலையிலிருந்து கிளம்பிய அம்பிகை துன்முகியை அழிக்க காளியாக உருவெ டுக்கிறாள். அப்போது துன்முகி நிறைமா த கர்ப்பிணி. அவளை அழிக்கலாம். ஆனால், அந்தச் சிசு செய்த பாவம் என்ன? அன்னையின் வயிற்றில் அழகாய் உறங்கும் அதை ஏன் கொல்ல வேண்டும்?' என்று நினைத்த அன்னை, குழந்தையை பத்திரமாக எடுத்து தன் காதில் குண்டல மாக மாட்டிக் கொண்டு பின் துன்முகியை வதம் செய்தார். 

எனவேதான் இந்த இடம் வக்கரக்கரை என்றும், அன்னை வக்கிரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள்.

வராகநதி என்று அழைக்கப்படும் சங்கரா பரணி ஆற்றின் கரையில் பெரிய அழகா ன ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கிற து கோயில். இங்கு மூலவர் மும்முக லிங்க மாகக் காட்சி அளிக்கிறார். வேறு எங்கும் இல்லாத சிறப்பு இது. வக்கிரன் பூஜித்த லிங்கம் இது. கோடை காலங்களில் குளிர் ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்ப மும் அளிக்கும் தலம் இது. 

அசுரர்களை சம்ஹாரம் செய்ததால் அன் னை இங்கு ஓங்காரமாக இருந்திருக்கி றாள். ஆதிசங்கரர் இங்கு வந்து அன்னை யை சாந்தப்படுத்தி, இடது பாதத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். "வக்ர சாந்தி திருத்தலம்' என்றே பெயர் வழங்குகிறது. 

ஊரின் நடுவில் ராஜகோபுரத்தின் நுழை வு வாயிலின் அருகிலேயே பிரமிப்பூட்டும் திருக்கோலத்துடன் விஸ்வரூபமாய் காளி காட்சி அளிக்கிறாள். தலைக்குப் பின்புற ம் சுடர்விடும் தீக்கங்குகள். மண்டை ஓட்டு கிரீடம், இடது காதில் சிசுவின் குண்டலம். வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி கபாலம், அசுரர்களின் தலைகளையே மாலைகளாகத் தொடுத் து அணிந்திருக்கிறாள். 

ராகு, கேது கிரகங்களுக்கு அதிபதி என்ப தால் வலது புறம் ஐந்து சுற்று, இடதுபுறம் நான்குசுற்று என்றகணக்கில் சந்நிதியை ச் சுற்றி வர வேண்டும் என்பது ஐதீகம்.

இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்திரு க்கிறது. ராஜகோபுரம், கொடிமரம், நந்தி, சுவாமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி  வக்கிர நிலையில் காட்சி அளிக்கிறது. காளி ரூபத்தில் இருந்தாலும் அன்னையி ன் கருணை மழையாகப் பொழிகிறது பக்தர்கள் மேல்.

"தாயே! நீயே அனைத்துத் தத்துவங்களுக் கும் அர்த்தமானவள். ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் நடுவில் உன் பதியு டன் கூடி மகிழும் நீயே எங்களின் குரலுக்கு செவி சாய்த்து ஓடி வருகிறாய். எங்கள் இதயத்தில் நீயே நடுநாயகமாய் இருக்கிறாய். உன்னை வணங்குவோருக் கு எந்த வினைகளும் இல்லை' என்கிறார் ஆதிசங்கரர்.

அன்னையை பிரார்த்தனை செய்தால் மன நிம்மதி, காரியத் தடைகள் விலகுதல் கர்ம வினைகள் நீங்குதல், ஜாதக ரீதியா ன வக்கிரங்கள் விலகுதல் ஆகியவை நிகழ்கின்றன. திருமணம் நடைபெற, குழந்தைப்பேறு கிடைக்க காளியை வணங்குகிறார்கள். 

காளிக்கு எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்யக் கயிறு கட்டி, எலுமிச்சம் பழதீபம் போட்டால் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோரிக்கைகளை எழுதி சூலத்தில் கட்டுகிறார்கள்.

பௌர்ணமி இரவு பன்னிரண்டு மணிக்கு ம், அமாவாசை பகல் பன்னிரண்டு மணிக் கும் வக்கிர காளியம்மனுக்கு ஜோதி தரிச னம் மிகச் சிறப்பாகக் காட்டப்படுகிறது. மிகப் பழைமையான பெரிய கோயில் கிழக்கு நோக்கி ராஜகோபுரம் விண்ணை முட்டும் உயரத்தில் நிற்கிறது. சோழ அரசர் கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் பண்பாடும், சிறப்புகளும் இங்குள்ள முதுமக்கள் தாழி மூலம் அறிய ப்படுகிறது. சுமார் இரண்டு கோடி ஆண்டு களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் இருந் த மரங்கள் காலப்போக்கில் பூமியில் புதைந்து அதே கிளைகள், பட்டைகளுடன் கூடிய தோற்றத்துடன் படிமங்களாக மாறிவிட்டன. 

அவையெல்லாம் இப்போது மரக்கல் காடு களாகக் காட்சி அளிக்கின்றன.  "சிலிகா' என்ற கண்ணாடிக்கல் அம்மரங்களுள் ஊடுருவி மரங்களை உறுதியான கற்க ளாக மாற்றியிருக்கின்றன என்பது வரலாறு. அவற்றை "வக்கிராசுரனின் எலும்புகள்' என்று நம்புகிறார்கள். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

கிரகணம் காலங்களில் மூடாத தமிழக கோவில்கள்

*கிரகணம் காலங்களில் மூடாத கோவிலுக்கு பற்றி தெரிந்து கொள்வோம்.!* சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் நேரங்களில் நாடு முழுவதும் அன...