முதலாம்
குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட,
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றானதும், வெள்ளை யானையான ஐராவதம் ஈசனை வழிபட்ட தலங்களில் ஒன்றானதும் ,
சுபக மகரிஷி தேனீ வடிவில் ஈசனை வழிபட்ட தலமான
#திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வாஞ்சியாற்றங்கரையில் அமைந்துள்ள
#திருக்கோட்டாறு என்ற #திருக்கொட்டாரம்
#கோட்டாற்றுநாதர் என்ற
#ஐராவதீஸ்வரர்
#சுகுந்தகுந்தளாம்பிகை என்ற
#வண்டமர்_பூங்குழலிஅம்மன் திருக்கோயிலை தரிசிக்கலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻
பசுமையான மரங்களும், பூஞ்சோலைகளும், நெல் வயல்களும் சூழ்ந்த அற்புதமான பதி திருக்கோட்டாறு. தற்போது இத்தலம் திருக்கொட்டாரம் என்று ஆகியுள்ளது.
குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இந்தத் தலம் சோழ தேசத்தின் காவிரித் தென்கரையின் 53வது தலமாகப் போற்றப்படுகின்றது.
திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும்.
திருகோட்டாறு (தற்போது திருக்கொட்டாரம் என்று அழைக்கப்படுகிறது)
ஐராவதத்தின் தந்தங்கள் மேகங்களைத் துளைத்தபோது, மழை ஒரு நதியைப் போல பலமாகப் பாய்ந்தது, மேலும் வாஞ்சியாறு நதி உருவானதாகக் கூறப்படுகிறது. தமிழில், "கொட்டு" என்றால் தந்தம் என்றும் "ஆறு" என்றால் ஆறு என்றும் பொருள், எனவே கொட்டாரம் என்பது தந்தங்களால் உருவாக்கப்பட்ட நதி / வெள்ளத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயில் நட்டாறு (வாஞ்சியாறு) நதியின் கரையில் அமைந்துள்ளது - இது காவேரி நதியின் துணை நதி - இது கோயிலின் தீர்த்தங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இறைவன் பெயர்:-ஐராவதேஸ்வரர்,
ஐராவதீஸ்வரர்.
இறைவி பெயர்:-வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாம்பிகை.
தல விருட்சம்:-பாரிஜாதம்(தற்போது இல்லை).
தீர்த்தம்:-வாஞ்சியாறு,மற்றொன்றாகிய சூரிய தீர்த்தம் கோவிலின் முன் உள்ளது.
🍁தேவாரப் பாடல்கள்
"திருஞானசம்பந்தர்"
1. கருந்தடங்கண்ணின்
2. வேதியன் விண்ணவரேத்த
*திருஞானசம்பந்தர் பாடிய திருக்கோட்டாறு பதிகம்:
"கருந்த டங்கணின் மாத ராரிசை
செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெரு மானை யுள்கி
இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.
நின்று மேய்ந்து நினைந்து மாகரி
நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பி ரான்கழல்
ஏத்தி வானர சாள வல்லவர்
பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.
*அப்பர் வாக்கில் இடம்பெற்ற தேவார வைப்பு பாடல்:
"இடைமரு தீங்கோ யிராமேச் சுரம்
இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்
சடைமுடி சாலைக் குடிதக் களூர்
தலையாலங் காடு தலைச்சங் காடு
கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு
கடைமுடி கானூர் கடம்பந் துறை
கயிலாய நாதனையே காண லாமே.
புராண வரலாறு:
ஒருமுறை, துர்வாச முனிவர் கைலாசத்தில் சிவனை வழிபட்டு ஒரு மாலையைப் பெற்றார். அது இந்திரனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து , முனிவர் அந்த மாலையை அவருக்குக் கொடுத்தார். தான் தேவர்களின் தலைவன் என்பதில் பெருமை கொண்ட இந்திரன், தனது யானையான ஐராவதத்தின் தலையில் மாலையை வைத்திருந்தார் . ஆனால் அந்த மாலை யானையை எரிச்சலடையச் செய்தது, அது அதை உதறித் தள்ளி, அதை மிதித்தது. இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த முனிவர், இந்திரனையும் ஐராவதத்தையும் சபித்தார், இதன் விளைவாக நான்கு தந்தங்களுடன் கூடிய வெள்ளை யானை அதன் தெய்வீகத்தை இழந்து சாதாரண காட்டு யானையாக மாறியது. நூறு ஆண்டுகளாக, ஐராவதம் பல சிவாலயங்களில் வழிபட்டது, இறுதியில் மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் சாபத்திலிருந்து விடுபட்டது . ஐராவதம் வழிபட்ட கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஐராவதம் இங்கு வந்தபோது, அதன் தந்தங்களைப் பயன்படுத்தி மேகங்களைத் துளைத்து, வழிபாட்டிற்காக மழையைப் பொழிந்தது. இந்தக் கோயிலில் உள்ள தேவாரத்தில் உள்ள சம்பந்தரின் பதிகம், இந்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறது .
சுபக முனிவர் இந்த கோவிலில் தினமும் வழிபட்டு வந்தார். ஒரு நாள் அவருக்கு தாமதம் ஏற்பட்டது, அவர் சென்றடைந்ததும் கோவில் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இங்குள்ள இறைவனை வழிபடத் தீர்மானித்த அவர், தேனீ வடிவத்தை எடுத்து கோவிலுக்குள் நுழைந்தார். பிரார்த்தனைகளுக்குப் பிறகு, அவர் ஒரு தேனீ வடிவத்திலேயே இருக்கத் தேர்ந்தெடுத்தார். காலப்போக்கில், தேனீக்களின் கூட்டம் ஒன்று எழுந்தது, இந்தக் கூட்டத்திலிருந்து வரும் தேன் சிவபெருமானின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும். இன்றும் கூட, வருடத்தின் சில நேரங்களில் இந்தக் கூட்டத்தைக் காணலாம். சுபக முனிவருக்கு கோயிலில் தனி சன்னதி உள்ளது.
அகஸ்தியர் வழிபட்ட கோயில்களில் இதுவும் ஒன்று .
சம்பந்தர் இங்கு வழிபட்டதால், குறைந்தது 7 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தக் கோயில் இருந்து வருகிறது. உள்ளே உள்ள கல்வெட்டுகளின்படி, இந்தக் கட்டமைப்பு கோயில் 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் உட்பட பல்வேறு மன்னர்களின் நன்கொடைகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் உள்ளன. சுவாரஸ்யமாக, இந்தக் கோயிலில் இரண்டு பலி பீடங்கள் உள்ளன - நந்தியின் பின்புறத்திலும் முன்னும் ஒவ்வொன்றும். பிரதான கருவறை வவ்வால்-நேத்தி மண்டபத்தில் (மண்டபத்தின் வடிவமைப்பு ஒரு வவ்வாலின் நெற்றியைப் போன்றது) அமைந்துள்ளது .
🍁எப்படிப் போவது:
1. காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது.
காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவு வரும்.அங்கிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
2. கும்பகோணம் - காரைக்கால் பிரதான சாலையில் கொல்லுமாங்குடி,பேரளம் தாண்டியவுடன் அம்பகரத்தூர் என்ற ஊர் வரும்.அவ்வூரிலுள்ள காளி கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இத்தலத்தின் ஐராவதேஸ்வரர் ஆலயம் உள்ளது.கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் இவ்வழியே வந்து ஆலயத்தை அடையலாம்.
🍁திருவிழா:
ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம்.
🍁தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.ஐராவதம் தன் தந்தத்தால் மேகத்தை நோக்கி வணங்கி கங்கையை வரவழைத்து பூஜை செய்ததாக
ஐதீகம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 116 வது
தேவாரத்தலம் ஆகும்.
🍁பொது தகவல்:
இக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூர் "ராசராசப் பாண்டி நாட்டு உத்தமச்
சோழ வளநாட்டு நாஞ்சில் நாட்டுக் கோட்டானான் மும்முடிச்சோழ நல்லூர்'' என்று குறிக்கப்படுகிறது.இக்கோயிலைக் கட்டுவித்தவன் "சோழ மண்டலத்து
மண்ணி நாட்டு முழையூர் உடையான் அரையன் மதுராந்தகனான் குலோத்துங்க
சோழ கேரள ராசன்" ஆவான் (காலம் கி.பி .1253), கல்வெட்டில் இறைவனின்
பெயர், "இராசேந்திர சோழீசுவரமுடைய மகாதேவர்" என்று காணப்படுகின்றது.
🍁கோவில் அமைப்பு:
மூன்று நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது.
உள்ளே சென்றதும் நேரே சுவாமி சந்நிதி தெரிகிறது.வலமாக வரும்போது விநாயகர் சந்நிதியுள்ளது. விசாலமான வெளிச் சுற்று.கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், பிரம்மா, விஷ்ணு உருவங்களும் உள்ளன. பிராகாரத்தில் சுந்தரர், பரவையார், சுபமகரிஷி மூலத்திருமேனிகள் காணப்படுகின்றன.
உள் பிரகாரத்தில் பால விநாயகர், கைலாசநாதர், சமயாசாரியர், சடைமுடியோடு கூடிய சுப முனிவர், முருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நடராஜர் முதலிய சன்னதிகள் உள்ளன. சுபமகரிஷியின் சிலையும், குமார புவனேஸ்வரரின் உருவச்சிலையும் வெளிச்சுற்றில் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் மிகச் சிறிய உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியது நின்ற திருக்கோலம்.
🍁பிரார்த்தனை:
திருமண வரம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும், கல்வி கேள்விகளில்
சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
🍁நேர்த்திக்கடன்🍁
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது
வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
🍁தலபெருமை:
ஐராவதம் வழிபட்டதால் இறைவனின் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று.
கோடு-கரை வாஞ்சியாற்றின் கரையில் விளங்குவதால் இத்தலம் கோட்டாறு
எனப்பட்டது.வெள்ளையானை தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை
ஆறுபோலச் சொரிவித்து வழிபட்டதால் கோட்டாறு என இத்தலப்பெயர்.
அகத்தியர், சுபகமுனிவர், குமாரபுவனதேவர், முதலியோர் வழிபட்டு அருள்பெற்ற சிறப்புடையது இத்தலம்.
🍁தல வரலாறு:
ஐராவதம் சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமாக உள்ள யானை.வெண்மை நிறமும் நான்கு கொம்புகளும் உடையது.ஒரு முறை துர்வாச முனிவர் காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு
இறைவனுக்கு சாத்தியதாமரை மலர் ஒன்றை யானைமீது அமர்ந்து பவனிவரும் இந்திரன் கையில் கொடுத்தார்.செல்வச் செருக்கால் இந்திரன் அம்மலரை ஒரு கையால் வாங்கி யானை மீது வைத்தான். யானை அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் தேய்த்தது.
துர்வாசர் இந்திரனையும் யானையையும் சபித்தார்.அவர் சாபப்படி ஐராவதம்
காட்டானையாகி நூறு ஆண்டுள் பல தலங்களுக்கு சென்று இறைவனை
வழிபட்டு மதுரையில் இறைவன் அருளால் பழைய வடிவம் பெற்றது என்பது
திருவிளையாடற்புராண வரலாறு.
ஐராவதம் காட்டானையாய் வழிபட்ட தலங்களில் திருக்கோட்டாறும் ஒன்று.
சுபமகரிஷி என்பவர் நாள்தோறும் வந்து இப்பெருமானைத் தரிசித்து வந்தார்.
ஒருநாள் அவர் வருவதற்கு நேரமானதால் கோயில் கதவு சார்த்தப்பட்டது.
அதைக் கண்ட "சுபமகரிஷி" தேனீ வடிவம் கொண்டு உள்ளே சென்று பெருமானை
வழிபட்டார்.அதுமுதல் அங்கேயே தங்கிவிட்டார்.அக்காலந் தொடங்கி மூலவர்
சன்னதியில் தேன்கூடு இருந்து வருகிறது தரிசிக்கச் செல்வோர் அக்கூட்டைத்
தொடாது எட்டி நின்று பார்த்துவிட்டு வரவேண்டும்.ஆண்டுக்கொரு முறை
இக்கூட்டிலிருந்து தேனையெடுத்துச் சுவாமிக்குச் சார்த்துகிறார்களாம்.மீண்டும்
கூடுகட்டப்படுகின்றதாம்.இந்த சுபமகரிஷியின் உருவமே வெளிச் சுற்றில் பின்புறத்தில் உள்ளது.
முன் மண்டபத்திற்கு அருகில் குமாரபுவனேசுவரர் கோவிலுள்ளது.மேற்கு
நோக்கிய பெரிய சிவலிங்கம் இங்குள்ளது. இதை அகத்தியரும் சுபமகரிஷியும்
சேர்ந்து பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
🍁சிறப்புகள்:
சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், 3-ம் திருமுறையிலும் உள்ளன.கருந்தடங்கணின் மாதரார் இசை செய்யக் கார் அதிர்கின்ற பூம்பொழில் என்று தொடங்கும் பதிகம் 2-ம் திருமுறையிலும், வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை என்று தொடங்கும் பதிகம் 3-ம் திருமுறையிலும் இடம் பெற்றுள்ளன.
சுபமகிரிஷி என்பவர் நாள்தோறும் மூலவரை தரிசித்து வந்ததாகவும், ஒரு நாள் அவர் வருவதற்கு நேரமானதால் கதவு சாத்தப்பட்டதாகவும், அதைக் கண்ட மகரிஷி தேனி வடிவம் கொண்டு உள்ளே பெருமானை வழிபட்டதாகவும் கூறுகின்றனர். அப்போது முதல் அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். அது முதல் மூலவர் சன்னதியில் தேன் கூடு இருந்ததாகவும் தற்போது அந்த தேன்கூடு இல்லை என்றும் கூறினர். முன்பு தேன் கூடு இருந்ததை சிறப்பாகக் கூறுகின்றனர்.
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது.
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேரந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கி.மீ. சென்று இவ்வூரை அடையலாம்.பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கி.மீ. சென்றும் இவ்வூரை அடையலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment