Tuesday, September 2, 2025

திருமால்பூர் மணிகண்டீசுவரர்

*திருமால்பூர் மணிகண்டீசுவரர் திருக்கோவில்*
*வேறு எங்குமே காண இயலாத ....ஈசனை திருமால் வணங்கி வழிபட்டு நிற்கும் அபூர்வ காட்சி*

*பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் *

காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி. 

திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்பதால், இத்தலம் 'திருமாற்பேறு' என்றானது. அதுவே மருவி நாளடைவில் திருமால்பூர் என்றானது.

திருமால், சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்து, சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது..வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். 

திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார். தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். 

பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, 'நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். 

இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் 'திருமாற்பேறு' என விளங்கப் பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க' என்று கூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.

பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் 

மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பாகும்.

 திருமால் பூஜித்த காரணத்தால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது. இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

 சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் கருட சேவை நடைபெறும் ஒரே சிவத்தலம் என்பது வியப்புக்குரியதாகும். 

இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், 

இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும் எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.

பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் சுயம்புவாக அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...