Friday, October 24, 2025

திருமேற்றளீஸ்வரர் பிள்ளையார்பாளையம் காஞ்சிபுரம்.

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், பிள்ளையார்பாளையம்- 631 501 காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம். 
*இறைவன்: திருமேற்றளீஸ்வரர் , *மற்றோர் மூலவர்: ஓதவுருகீஸ்வரர் 

*இறைவி: திருமேற்றளி நாயகி 

*இது தேவாரப்பாடல் பெற்ற தலம் ஆகும். அப்பர், சுந்தரர் இருவரும் பதிகம் பாடி உள்ளனர்.    

 *காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும் 

*இக்கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார். 

*மேற்றளீஸ்வரராக சுயம்பு மூர்த்தி வடிவில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 
*மேற்கு நோக்கி இருப்பதால் இவருக்கு “மேற்றளீஸ்வரர்’ (மேற்கு பார்த்த தளி) என்ற பெயர் வந்தது. தளி என்றால் “கோயில்’ என்றும் பொருள் உண்டு. 

*கிழக்கு நோக்கிய மற்றோர் கருவறையில் ஓதவுருகீஸ்வரர் அருள்புரிகிறார். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், “ஓதஉருகீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். 

*திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும், கோயிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத உருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது.              

*காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே பிரதான அம்பாளாக கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அம்பாள் இருப்பதில்லை. ஆனால், இங்கு பராசக்தி அம்பாள் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அருள்புரிகிறாள். 

*பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனவே, சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது எனக்கூறிவிட்டார். ஆனால் விஷ்ணு விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்யத் தொடங்கினார். விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன், அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி, தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். 
அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு, தீர்த்தத்தில் நீராடி வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார்.  

திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு,  தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு, லிங்க வடிவம் பெற்றபோது, சம்பந்தர் பாடலை முடித்தார். எனவே, இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். 

*ஆனால் திருஞானசம்பந்தர் பாடலால் மகாவிஷ்ணுவிற்கு சிவசாரூபம் கிடைத்ததாகப் புராணங்கள் கூறும் பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. 

 *ஓதவுருகீஸ்வரர் கருவறையில் சிவ வடிவான லிங்கத்தையும், அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில் குறைவிலாத வளம்பெறலாம் என்பது நம்பிக்கை. 

*தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால் திருமேற்றளீஸ்வரரை வணங்கிட, வேண்டும் வரங்கள் கிடைத்திடும் என்பது நம்பிக்கை.           

*நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேரும், புதனும் வழிபட்ட தலம் இது. 

*திருமேற்றளித் தெருவின் ஒரு கோடியில் மேற்றளீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்க, இத்தெருவின் மற்றொரு கோடியில் திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச்சிறிய கோயில். ஞானசம்பந்தர் சந்நிதி மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. இவரின் உற்சவத் திருமேனி வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது. 
இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.         

*சம்பந்தருக்கு ஆளுடைப்பிள்ளையார், சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி “பிள்ளையார் பாளையம்’ என்றழைக்கப்படுகிறது.                        

*திருநாவுக்கரசர் இத்தலத்தை, “”கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்” என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இதனால், இத்தலத்து சுவாமியை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.  

*கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருப்பது வித்தியாசமான கோலம் ஆகும்.   

*இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

*சகலபுவனச் சக்கரவர்த்தி இராச நாராயண மல்லிநாதன் சம்புவராயரின் 16ஆம் ஆட்சி ஆண்டிலும், விசயநகர வேந்தர்களில், மகா மண்டலேசுவரன் சதாசிவ தேவ மகாராயர் (சகம் 1484) காலத்திலும், பல்லவ மன்னர்களில், தந்திவிக்கிரமவர்மன் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளில் இறைவரின் திருப்பெயர் திருமேற்றளி உடைய நாயனார் என்றும், இறைவரின் திருக்கோயில் திருமேற்றளித் திருக்கோயில் என்றும் குறிக்கப் பெற்றுள்ளன. 

*இக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ தொலைவில் பிள்ளையார் பாளயத்தில் அமைந்துள்ளது.            

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...