Tuesday, November 25, 2025

நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிப்புலியூர்.

நவபுலியூர் 02 : திருப்பாதிரிபுலியூர
இந்திய தமிழகத்தின் இந்து ஆலயங்களெல்லாம் மிக மிக தொன்மையானவை, ஒவ்வொன்றும் எக்காலத்தில் உருவானதென அறியமுடியாதபடி பழமையானவை, ஒவ்வொரு ஆலயத்துக்கும் தனி சிறப்பும் தத்துவமும் தனித்துவமான ஆற்றலும் உண்டு
அப்படி ஒரு அபூர்வமான ச்கதி நிலையமே நவபுலியூரின் இரண்டாம் ஆலயமான திருப்பாதிரிபுலியூர

அன்று "கடை ஞாழலூர்" என்றும் இன்று கடலூர் என்றும் அழைக்கபடும் அந்த ஊரில்தான் இந்த சக்தியான ஆலயம் ஸ்தாபிக்கபட்டிருக்கின்றது

சோழ மன்னர்களும் பல்லவர்களும் பாண்டியர்களும் நாயக்கர்களும் மராட்டிய மன்னர்களும் கண்போல் காத்துவந்த தலம் இது
இது தேவாரம் பாடபட்ட தலம், சம்பந்தபெருமான் பாடுகின்றார்

"போதினானும் புகையாலும் உய்த்தே அடியார்கள் தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் இல்லாத அடிகள் மறை
ஓதிநாளும் இடும் பிச்சை ஏற்றுண்டுணப் பாலதே".

அப்படியே அப்பர் பெருமானும் பாடுகின்றார்

"கருவாய்க் கிடந்து உன்கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனதருளால்
திருவாய் பொலியச் சிவாய நம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி  பாதிரிப் புலியூர் அரனே."

பாதிரி மரங்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில் யார் இந்த ஆலயத்தை தொடங்கிவைத்தார்கள் என்றால் அதை அன்னை சக்தியே சிவனின் திருவுளத்துக்க்கு ஏற்ப ஸ்தாபித்து கொடுத்தார்

அவ்வளவுக்கு பெரும் பெருமை கொண்ட ஆலயம் இது

இந்த ஆலயம் சிவாலயமாக கருதபட்டாலும் அன்னைக்கான தலமாக இருக்கவேண்டும் என திருவுளம் கொண்ட  பெருமான், ஒரு நாடகம் நடத்தினார்

அதன்படி அவரும் தேவியும் அமர்ந்திருந்த நேரம், சிவனின் கண்களை விளையாட்டாக பொத்தினார் தேவி, தேவர்களே உலகை காக்க இமையா கண்களை பெற்றவர்கள், அவர்கள் கண் இமைக்கும் நொடியில் கூட உலகம் மாறிவிடும் கடமை தவறிவிடும் என்பதால் ஒரு நொடி கூட கண்ணை மூடாதபடி திறந்த கண்ணோடு இருப்பார்கள், அவர்கள் கண் இமைக்காது

தேவர்களுக்கே அப்படி என்றால் சிவபெருமான் எப்படி இருக்கவேண்டும்? அவர் கண்ணை மறைத்தால் என்னாகும்?

எங்கும் இருள் உண்டாயிற்று, அன்னை சட்டென அஞ்சி கைகளை எடுத்தாலும் பெரும் குழப்பம் வந்தது
இந்த குழப்பத்துக்கு காரணமான நீ பூலோகம் செல் என சாபமிட்டார் சிவன், தேவி தவறை உணர்ந்து மன்றாடினாள்

அவள் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் , நீ போய் எல்லா ஆலயங்களையும் வணங்கு, எங்கே உன் இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே நீ இழந்த நிலையினை மீட்பாய், என்னை அடைவாய் என பரிகாரமும் சொன்னார்

தேவி பூலோகம் வந்து தானாக உருவாகிய எல்லா லிங்கங்களையும் தரிசித்து வழிபட்டாள், இந்த லிங்கத்தை அதாவது பாதிரி மரங்கள் நிரம்பிய இந்த இடத்தில் இருந்த லிங்கத்தை வணங்கியபோது அவளின் இடது கண்ணும் தோளும் துடித்தது, அன்னை அங்கே சாபம் நீங்கி சிவனை அடைந்தாள்

எந்த பாதிரி மரத்தடியில் அவள் தவமிருந்தாளோ அந்த மரத்தின் பெயராலே அவ்வூர் திருப்பாதிரிபுலியூர் என்றாயிற்று
அந்த மரம் அதாவது அன்னை எந்த மரத்தடியில் தவமிருந்தாளோ அது இன்றும் உண்டு.

அங்கிருந்துதான் தொடங்குகின்றது இந்த ஆலய வரலாறு, இது சிவனை அன்னை மீண்டும் அடைந்த இடம் என்பதால் பிரிந்தவர் சேரவும், இழந்ததை கொடுக்கும் தலமாகவும் விளங்குகின்றது

கடைஞாழல், கன்னிவனம், பாடலவுரம், ஆதிமாநகர், உத்தாரபுரம், பாதிரிப்பதி, புலிசை என இதற்கு பல பெயர்கள் உண்டு
அப்படியான இந்த தலத்தில்தான் புலிக்கால் முனிவர் புலிபோல் விடாபிடியாக தவமிருந்த காரணத்தால் புலியூர் எனும் பெயரும் சேர்ந்துகொண்டது

அன்னை சிவனை வேண்டி தவமிருந்தபோது சில காட்சிகளை அரூபமாய் கண்டாள், பெரும் பெரும் ஞானியரும் ரிஷிகளும் தெய்வீக பாடகர்களும் வந்து சிவனை பாடுவதையும் அதிலே அவர் மகிழ்வதையும் கண்டாள்

அதனால் பாடலை ஏற்று மகிழும் சிவனை பாடலீஸ்வரர் என அவளே பெயரிட்டாள், அந்த பாடலீஸ்வரரை நோக்கி தவமிருந்ததால் அவள் அருந்தவ நாயகி என்றுமனாள்

இந்த தலத்தின் பெருமை இன்னும் நீண்டது, புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் உத்தரவுக்கு ஏற்ப இங்கு வந்து வணங்கி பலன் பெற்றார்கள்

அப்படியே வியாக்ரபாதரரின் மகன் உபமன்யு இங்கு தவமிருந்தார், சில சாபம் காரணமாக முயல் வடிவம் பெற்ற அவர் இங்கேதான் தவமிருந்து தன் இழந்த வடிவினை மீட்டெடுத்தார்

அகத்தியர், கங்காதேவி, அக்னிபகவான் என பலர் வந்து சிவனை பணிந்து இழந்ததை எல்லாம் மீட்டார்கள்

காலம் காலமாக இப்படி பலர் வந்து வழிபட்டு இழந்ததை மீட்ட ஆலயத்தில், பிரிந்தவர் இங்கு வந்து முறையிட்டு வழிபட்டு மறுபடி சேர்ந்த ஆலாய்த்தில்தான் அப்பர் பெருமானுக்கு பெரும் அதிசயம் செய்தார் சிவ‌பெருமான்

அப்பர் பெருமான் வாழ்வில் எல்லோரும் அதிசயிக்குமிடம் அல்லது பெரும் அற்புதமான இடம் அவரை கல்லை கட்டி கடலில் இட்டபோது அவர் கம்பீரமாய் கட்டுமரமாய் மிதந்து கரையேறிய காட்சி

அந்த அதிசயமே அப்பர் பெருமானை பணிந்து சமண மன்னன் மகேந்திர வர்மனை சைவத்தை ஏற்றுகொள்ள செய்தது
அப்பர் சுவாமிகள் முதலில் மதம் மாறிமருணீக்கினியார் என சமணராக மதம் மாறி பெரும் சமண பண்டிதராக அவர் வலம் வந்ததும் இந்த திருபாதிரிபுலியூரில்தான்

அங்கேதான் அவருக்கு நஞ்சூட்டி கொல்வது, அதிவெப்பமான சுண்ணாம்பு காளவாயில் அவரை தள்ளியும் அவர் பிழைத்தது என பல கொடுமைகள் நடந்தன‌

கடைசியாக அவரை கல்லைகட்டி கடலில் இட்டதும் அங்கேதான், ஆனால் அவர் கல்லோடு மூழ்கவில்லை. அந்த கல் கட்டுமரம்போல் மிதந்து அவரை கரையேற்றியது

அந்த இடம் இன்றும் "கரையேறிய குப்பம்" என அழைக்கபடுகின்றது, "சோற்றுனை வேதியன் சோதியில் வானவன்" என்ற பதிகத்தை பாடியபடியே கரை ஏறினார் அப்பர் சுவாமிகள்

கரையேறி அவர் பாடிய தலம் இதுதான், அந்த பாடல்தான் " 'ஈன்றாளுமாய் எனத் தொடங்கும் பாடல்

அதாவது இந்த ஆலயத்து சிவனேதான் தன்னை காப்பாற்றி தன்னோடு சேர்த்துகொண்டான், கடலில் மடிய இருந்த தன்னை இந்த சிவன் மீண்டும் தன்னோடு சேர்த்துகொண்டார், இழந்த பாக்கியத்தை கொடுத்தான் என அவர் பணிந்தது இந்த ஆலயம்தான்
சிவன் தனக்கு தாயாய் வந்தான், சக்திவடிவாய் அன்னையாய் வந்தான் என, தாயினை பாடுவது போல் " 'ஈன்றாளுமாய்" என பாடினார் அப்பர் சுவாமிகள்

இந்த ஆலயம் பிரிந்தோரை சேர்க்கும் இழந்ததை கொடுக்கும் என அன்னையாலும் ரிஷிகளாலும் வணங்கபட்ட ஆலயம், இங்கிருக்கும் முருகபெருமான் சன்னதிக்கு அருணகிரி நாதரும் வந்து பாடியிருகின்றார்
இந்த தலம் சந்திரன் ஆதிக்கம் கொண்ட தலம், இதனால் இங்கு சந்திரனுக்கு தனி சன்னதி உண்டு
நாம் முன்பே பார்த்தபடி நவபுலியூரும் நவகிரகங்களின் அருளை அருள்பவை, சிதம்பரம் சூரியனுக்கு என்பது போல சந்திரனுக்கானது இந்த திருப்பாதிரிபுலியூர்
பிரபஞ்ச ரீதியாக வானியல் ரீதியாக சந்திரன் மகா முக்கிய கிரகம்
காலத்தின் அதிபதி யாராக இருந்தாலும் காலத்தின் அளவை சொல்பவன் சந்திரனே, அவ்வகையில் சந்திரனை முன்னிட்டே நாள், திதி,மாதம் என எல்லாமும் நிர்ணயிக்கபடுகின்றது
கால பைரவராக கால்த்தின் அதிபதி சிவன் என்றால் சூரியன் சிவன் அம்சம் என்றால், சந்திரன் காலத்தை அளந்து காட்டும் சக்தி தேவியின் அம்சம்

பவுதீக ரீதியாக சந்திர சுழற்சியாலே மழை பொழிகின்றது, பருவம் மாறுகின்றது, பூமியோடு சேர்ந்து சூரியனை சுற்றும் நிலவு இல்லையேல் பூமி இல்லை, அது இயங்காது

சந்திரனின் ஈர்ப்பு விசையே பூமியில் பல மாறுதல்களை செய்து  இயக்குகின்றது, அதுதான் பருவகாலமாகின்றது
ஜாதகரீதியாகவும் இன்னும் பல தொடர்புகள் ரீதியாகவும் சந்திரனுக்கும் மானுட மனதுக்காமன் தொடர்பு மிக மிக நெருக்கமானது

அதற்கு முன் சிவன் தலையில் சந்திரன் அமர்ந்த கதையும் அதில் இருக்கும் உண்மையினையும் காண வேண்டும்

சந்திரனுக்கு 27 மனைவியர் அதாவ்து 27 நட்சத்திரங்களும் மனைவியர் என்பதும் ஒரு சாபத்தால் சந்திரன் பிறை நிலவாய் சிவனிடம் அடைக்கலாகி அவரின் சிரசில் அமர்ந்து சிவன் கண்காணிப்பில் கடமையாற்றுகின்றான் என்பதும் புராண செய்தி
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், 27 நட்சத்திரகாரர்களுக்கும் சந்திரன் தொடர்பு உண்டு, சந்திரன் இல்லாமல் ஜாகதகமே இல்லை

சந்திரன் இருக்குமிடமே தாயின் ஸ்தானத்தை குறிப்பதாக ஜோதிட நுணுக்கங்கள் சொல்லும், அவ்வகையில் தாய் எனும் சக்தி அருளை பெற சந்திரன் அருள அவசியம்

தேவியின் அருளை பெற சந்திரன் அவசியம்

இன்னும் சந்திரனாலே மனதின் உணர்ச்சிகள் எண்ணங்கள் எழுகின்றன, சந்திரனே மனதிடம் மனோபலத்துக்கான அதிபதி என்பதும் ஜோதிடம் சொல்லும் உண்மை

சந்திரன் மனதுக்கான கிரஹம், பவுர்னமி அமாவாசையில் கடல்மட்டம் எழுவதும் குறைவதும் கண் காணும் உண்மைகள்
அதாவது நீரானது பவுர்னமி அன்று பொங்குகின்றது,அப்படி நீரால் இயங்கும் உடலிலும் நீரில் மிதக்கும் மூளையிலும் சில மாறுபாடுகள் வரும்

அதனாலே சிலருக்கு பவுர்னமி அன்று ஒருவித அதீத எழுச்சிகள் வரும் நிலையற்ற தன்மை வரும், அமாவாசையில் அது தலைகீழாகும்

இதெல்லாம் மனம் சம்பந்தபட்டது சந்திரன் என்பதற்கான பெரும் சான்றுகள், அதனாலே ஜாதகத்தில் சந்திரன் இருக்குமிடம் முக்கியமானது

மனம் சரியாக இருந்தாலே புத்தியும் செய்யும் தொழிலும் சரியாகும் செல்வம் வாய்க்கும், இதனாலே சந்திரன் செல்வத்துக்கும் அடையாளமான கிரஹமானார்

திருப்பதி ஸ்தலம் சந்திரனின் தலம் என அழைக்கபடுவது அப்படித்தான்

சந்திரன் கால நேரத்தை அளந்து தரும் கிரஹம், உணர்ச்சிகளின் அதிபதி, இன்னும் தெளிவாக சொல்லபோனால் ஈர்ப்பு விசைகளை கட்டுபடுத்துபவர்

பூமியின் ஈர்ப்பு விசை எப்படி சந்திர கிரஹணம், அமாவாசை, பவுர்ணமியில் மாறுமோ இன்னும் வள்ர்பிறை தேய்பிறையில் மாறுமோ அப்படி மனம் கொள்ளும் பற்றுகளில் இருந்தும் அதனை விடுவிக்கவும் கட்டிவைக்கவுமான சக்தி சந்திரனுக்கு உண்டு
சந்திரனின் பார்வையே ஒரு பொருளை பற்றவும் செய்யும், மனம் விரும்பும் ஒன்றை துறக்கவும் செய்யும்

இதனாலே பற்றற்ற கோலத்துக்கு செல்ல சந்திரன் அருள் அவசியம், இறைவனை பற்றி நிற்க அந்த அருள் அவசியம்
அப்பர் கடல்நீரில் மிதந்தார் என்பது சிவனருளில் நடந்த ஒரு அதிசயம் மட்டும் அல்ல, அங்கும் விஞ்ஞான ரீதியாக சந்திரனின் கரங்கள் உண்டு

பூமி எல்லா பொருளையும் ஈர்க்கும் ஆனால் சந்திரனின் சக்தியால் அந்த ஈர்ப்பில் மாறுபாடு காட்டமுடியும், பவுர்ணமியில் கடல் பொங்குவது அப்படித்தான்

அப்பர்  க்டலில் வீசபட்டபோது சிவன் சந்திரனை நோக்க சந்திரன் தன் ஈர்ப்பு சக்தியால் அவரை மிதக்கவைத்தார், அந்த இடத்தில் புவியின் ஈர்ப்பு சக்தி மீறி சந்திரனின் சக்தி பெருகி நின்றதால் அவர் மிதந்தார்

அதுதான் அங்கு நடந்த அதிச்யம், அதனால்தான் அங்கிருக்கும் சந்திரனுக்கு சக்தியும் அதிகம்

இதைத்தான் சிவன் நடத்திய திருவிளையாடலில் காணமுடியும், தேவிக்கு என்ன சொல்லி அனுப்பினார் சிவன்?

எங்கே இடது கண்ணும் இடது தோளும் துடிக்குமோ அங்கே உன் சாபம் தீரும் என்றார், அது கவனிக்கதக்கது
ஏன் அப்படி சொன்னார் சிவன்?

மானிட உடலின் இடபாகத்தில்தான் இதயம் உண்டு அதன் அருகே சிதம்பர தத்துவம் சொன்ன மனம் உண்டு, அந்த மனதில்தான் சந்திரனின் உணர்ச்சிகள் பிரதிபதிக்கும்

சந்தோஷம், அழுகை, மகிழ்ச்சி சோகம் என எது என்றாலு இதயம் பக்கம் உணர்வதும் அதனால்தான்

மனம் அங்கேதான் இருக்கின்றது, மனதுக்கு சக்தி கொடுப்பவன் சந்திரன் எங்கே மனோபலம் பெறுகின்றாயோ அங்கே உன் சாபம் தீரும் என சொல்லி அனுப்பினார் சிவன்

இறைவனும் இறைவியும் விளையாடும் நாடகங்கள், திருவிளையாடல்கள் அவர்களுக்கானது அல்ல அது மக்கள் பின்பற்றி நடந்து அந்த பாடத்தை கற்று ந்ன்மைகளை அடையவேண்டும் என்பதற்காக‌

அப்படி இந்த தலம் சந்திரனுக்கானது, சந்திரனால் மனம் பலம் பெறும், ஜாதகத்தில் சந்திரனாஓ இல்லை இதரரீதியாக‌ மனோபலம் குறைந்தவர்களாக இருந்தால் இங்கு வந்து மனபலம் பெற்று செல்லலாம்

இது மனோபலம் அருளும் ஆலயம்

முன்பே பார்த்தபடி சந்திரன் என்பது தாய்ஸ்தானத்தில் இருப்பது, அதனாலே சந்திரனாலே பூமியில் அழை பெய்யும், சந்திரனாலே நேரம், திதி என எல்லாம் வகுக்கபடும், மாதம் வரை காட்டுவது சந்திரனே

சந்திரனே பாச உணர்ச்சிகளுக்கு அதிபதி, தாயினை விட அன்பினை கொட்டுவார் யாருமில்லை

இங்கே சிவனை விட சக்தி பலமாக இருக்கின்றாள், சந்திரனின் அம்சத்தில் அள்ளி கொடுக்க தயாராக இருக்கின்றாள், சூரியன் சிவனின் அம்சம் என்றால் சந்திரன் அன்னையின் அம்சம்

அதனால் இங்கு வழிபட்டால் அன்னையின் அருளோடு சந்திரனின் அருளும் பூரணமாகும், அதனால் மனோபலமும் இதர பலங்களும் வாய்க்கும், தெளிவான தைரியமான மனம் வாய்க்கும் என்பது இந்த ஆலயத்தின் தத்துவம்

புலிக்கால் முனிவர் அதற்கு விளக்கமாக வழிகாட்டுகின்றார்

குட்டிபுலியினை தாய் தொலைவில் இருந்தே கண்காணிக்கும், குட்டி தனியாக விளையாடுவது போல தோன்றினாலும் தாய் தள்ளி இருந்து தன் கண்காணிப்பிலே வைத்திருக்கும்

அப்படி அன்னை தன் பக்தர்களை எப்போதும் கண்காணிக்கின்றாள், புலிபோல் தள்ளி இருந்து ஆனால் பாசமாக காக்கின்றாள், தன் பக்தர்களுக்கு எந்த சோதனையும்  அவள் வரவிடமாட்டாள், ஆபத்தில் அவளே வந்து காப்பாள் என்பதை திருபாதிரிபுலிபூர் சொல்கின்றது

லவ்கீக வாழ்வில் தாய்போல் நின்று எல்லா நலமும் தைரியமும் மன அமைதியும் பலமும் தரும் அந்த ஆலயத்தின் அன்னை துறவிகளுக்கும் ரிஷிகளுக்கும் பற்றற்ற மனமும் தரும் அன்னை அதனை சந்திரன் மூலம் தருவாள் என்பதை சொல்கின்றது அந்த ஆலயம்

கடலூரில் இருக்கும் அந்த திருப்பாதிரிபுலியூர் ஆலயம், இழந்ததை தரும் ஆலயம், அப்படித்தான் தேவி நீங்கிய கையாலத்தை கொடுத்தது, சாபம்பெற்ற உபமன்யு முனியின் தோற்றத்தை கொடுத்தது

புலிக்கால் முனிவருக்கும் பதஞ்சலிக்கும் ஞானத்தை கொடுத்தது, அப்பர் சுவாமிகளுக்கு மீண்டும் சைவத்தில் பெரும் இடம் கொடுத்தது

பிரிந்தவர்களை சேர்த்துவைக்கும் தலமும் அதுதான், மனதால் மாற்றமும் தெளிவும் கொடுத்து நல்வாழ்வு அருளும் ஆலயமும் அதுதான்

சந்திர பரிகாரம், சந்திரனுக்கான குறைகள் இருப்பினும், பிரிந்தவர் கூட தடை இன்னும் பல்வேறு மனசிக்கல்களால் பாதிக்கபட்டு இருப்பினும் அங்கே உடனே நலம் கிடைக்கும், அன்னை அருந்தவ நாயகி அதனை அருள்வாள்

பாதிரிமரம் பூக்கும் ஆனால் காய்க்காது, அப்படி அங்கு வழிபடுவோர்க்கு பிறவி இல்லை என்பதும் இன்னொரு ஐதீகம்
கர்மம் கழிக்க வந்த வாழ்வினை நன்முறையில்  வாழ, சரியாக வாழ்ந்து செல்ல  மனபலம் அவசியம், மனோபலமே ஒருவனை வழிநடத்தும், சந்திரன் அதை அருள்வார். அது கொடுக்கும் பலமே மனோசக்தி, தாயாய் நின்று காக்கும்பெரும் சக்தி

சிதம்பரத்தில் ஆத்ம பலம் பெற்று இங்கே மனோபலம் பெற்று அந்த இருமுனிவர்களும் அடுத்த மூன்றாம் தலத்துக்கு சென்றார்கள், அதை அடுத்து காணலாம். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...