அருள்மிகு ஒப்பிலாநாயகி அம்மன் உடனுறை திருநெடுங்களநாதர் திருக்கோயில்.
திருநெடுங்களம்-620015
திருச்சி மாவட்டம்.
*மூலவர்: திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.
*இறைவி: ஒப்பிலா நாயகி, மங்களாம்பிகை.
*தல விருட்சம்: வில்வம், கஸ்தூரி, அரளி.
*தீர்த்தம்: அகத்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
*"மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களமேயவனே". எனத் தொடங்கும் "இடர் களையும் திருப்பதிகம்'' என்ற பெயரில் திருநெடுங்களம் கோயில் குறித்து திருஞானசம்பந்தர் அருளியிருக்கிறார்.
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "இடர் களையாய் நெடுங்களமேயவனே' என்று இத்திருக்கோயில் இறைவனைப் போற்றுகின்றார்.
*திருநெடுங்களம் என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர் என்று பெயர்.
*பார்வதி தேவி சிவபெருமானைக் கரம்பிடிப்பதற்காக இந்த இடத்தில் கடுந்தவம் புரிந்தார். தவத்தை மெச்சிக் காட்சிகொடுத்த சிவன், பார்வதி தேவியைக் கைப்பிடித்த இடம் இது.
*உமையொரு பாகனாகிய ஈசன் கருவறைக்குள் தேவிக்கு தனது இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்து வலது பக்கமாய் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார். ஐதீகப்படி இங்கே தேவியும், 'சிவனுக்குப் பக்கத்தில் ஒப்பில்லாநாயகி அரூபமாய் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இருவருக்குமாய் சேர்த்து இரண்டு விமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை தட்சண விமானம், கைலாய விமானம் எனவும் காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இந்தச் சிறப்பு என்கிறார்கள்.
*ஆண்டுதோறும் சிவபெருமான் மீது ஆடி மாதத்தில் சூரியக்கதிர்கள் படுகிறது.
*இத்தல ஈசனை 6 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் முகப்பொலிவு பெறலாம் என்பது நம்பிக்கை.
*திருநெடுங்களநாதருக்கு மாதுளம் பழ முத்துக்களால் நண்பகலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். அதுவும் வெள்ளை நிற மாதுளம் பழங்களால் அபிஷேகம் செய்வது பன்மடங்கு பலன்களை பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை. திருமணம் நிறைவேறுதல், கணவன்-மனைவி ஒற்றுமை, செல்வ வளம், வீடு, நிலம் வாங்க என யாவற்றிற்கும் மக்கள் இந்த மாதுளம் பழ அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
*திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக திருநெடுங்களநாதர் திருக்கோயில் திகழ்கிறது. இத்திருக்கோயில் இறைவனை வணங்கினால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பதும் பலன் அடைந்தவர்களின் கூற்றாகும்.
*இறைவி ஒப்பிலாநாயகி அம்மன் கோயிலின் நந்தி மண்டபத்தின் வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சியளிக்கிறார். இவருக்கு மங்களாம்பிகை என்ற பெயரும் உண்டு. தனது மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டியும் பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
*மங்களநாயகி அம்மனை, தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் வழிபட வேண்டும். அப்போது அம்பாளுக்கு எலுமிச்சைப் பழத்தில் நெய்தீபம் ஏற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை வைத்து வழிபட்டால் காரியத் தடைகள், உடற்பிணிகள், வறுமை நிலை யாவும் அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
*திருச்சுற்று மாளிகையில் சப்த கன்னியர்களில் நடுநாயகமாக உள்ள வராகி அம்மனுக்கு வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தின் போது *சிற்ப உரலில்* விரலி மஞ்சளை இடித்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும். ஆண் - பெண் என இருபாலரும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். *மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் சிற்பஉரல் சிறந்த வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.
*இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரத்தில் மான் மழுவும், கீழ்க் கரத்தில் சின் முத்திரையும் ஏந்தி, யோக நிலையில் காட்சி தருகிறார்.
*இத்திருக்கோயில் முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.
*திருக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் வடமேற்கு மூலையில் எழுந்தருளி, பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.
* அருகிலேயே ஜேஷ்டாதேவி
மாந்தன், மாந்தி ஆகியோருடன் உள்ளார். விபத்து, ஆபத்துகள் நீங்கவும், சோம்பல் அகலவும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் அகலவும், ஜோஷ்டாதேவி வழிபாடு துணை புரியும்.
*இக்கோயிலின் நவக்கிரக சந்நிதியில் சூரியனின் திருவுரு தமது இரு மனைவியரோடு மேற்கு திசை நோக்கியும் ஏனைய எட்டு கிரகங்களின் திருவுருவங்கள் சூரியனாரை நோக்கியும் காட்சி தருவதாக அமைந்துள்ளது.
*கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் அகத்தீசுவரர் சன்னதி, அகத்தியர் தீர்த்தம் ஆகியவற்றுடன், தல விருட்சமான கஸ்தூரி அரளி, வில்வமரம் ஆகியவை உள்ளன. அருகிலேயே சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.
*இந்த ஆலயத்தில் உள்ள காலபைரவரை குளிகை காலத்தில் வழிபட்டால் தொழில், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை.
*இது சோழ மன்னனுக்கு இறைவன் கல்யாணக் கோலத்தில் காட்சி தந்த தலமாகும்.
*இத்திருத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் மூலம் ஆதித்த சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விஜயநகர பேரரசின் மன்னர்கள், படைத்தலைவர்கள் முதலானோர் இத்திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளது அறியப்படுகின்றது.
*இக்கோவிலிலுள்ள கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும், இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
*திருச்சி – தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment