தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நாலு ரோட்டில் கிழக்கில் திரும்பி ஏழுப்பட்டியில் தெற்கில் திரும்பி 5 கிமி சென்றால் குருங்குளம் அடையலாம்.
குருங்குளம் பகுதியில் புகழ்பெற்ற அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை ஊர் குருங்குளம் கிழக்கு, குருங்குளம் மேற்கு, எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் காணவிருக்கும் சிவன் கோயில் கீழ் பாதியில் தான் உள்ளது பெரிய ஒரு குளத்தின் கரையில் தான் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.
இது வாகுயர் நாட்டின் தலைமை கிராமமான குருங்குளமாகும். இந்த பெயர் வருவதற்கான ஒரு காரணத்தையும் தெரிந்து கொள்வோம்.
இந்த ஊரில் நவகிரகங்களில் ஒருவரான குரு வழிபட்டதால் குரு குளம் எனப்படுகிறது என்கின்றனர்.
பெரிய குளத்தின் கரையில் சிவாலயம் மற்றும் மாரியம்மன் விநாயகர் கோயில்கள் உள்ளன. மேற்கு நோக்கிய திருக்கோயில்.
நவக்கிரகங்களும் வழிபட்ட ஸ்தலம்; சூரியன் ஒவ்வொரு நாளும் அந்திசாயும் நேரத்தில் சிவபெருமானிடம் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கம் மீது படரச் செய்து வணங்கி மறையும் தலமாக இயல்பாகவே அமைந்துள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் இத்தலம் மிகவும் சிறப்புக்குரியத் தலமாக விளங்குகிறது.
கோயிலும் குளமும் அருகருகே இருக்கும் இடத்தில், பல முனிவர்களும், சித்தர்களும் நித்தம் வந்து சிவபெருமானை வழிபடுவார்கள் என நம்பப்படுகிறது. குருங்குளம் செஞ்சுடேஸ்வரர் கோயிலில். மேலும் ஒரு பெருமையாக பெருமாள் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் கிழக்கு நோக்கி கம்பீரமாக காட்சி தருகின்றனர். ஒரே இடத்தில் சிவனையும், பெருமாளையும் வழிபட நமக்கு நல்வாய்ப்பு கிடைக்கிறது.
மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவலிங்கத்தை காணுவதும், அப்படி ஒரு தல மண்ணில் நம் பாதம் படுவதே ஒரு சிறப்பாகும்.
இறைவன் செஞ்சுடேஸ்வரர் இறைவி அகிலாண்டேஸ்வரி
'வெண்சுடர்' (திங்கள்/சந்திரன்) மற்றும் 'செஞ்சுடர்' (ஞாயிறு/சூரியன்) ஆகியவை சிவபெருமானின் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. செஞ்சுடர் ஈஸ்வரன் என்பது சிவபெருமானின் ஒளியுள்ள, சிவந்த வடிவம் அல்லது அருட்பெருஞ்ஜோதியைக் குறிக்கும் சொல் தினமும் மாலை கதிரவன் ஒளி வீழ்ந்து செஞ்சுடராக காட்சியளிப்பதால் இப்பெயர் என நினைக்கிறேன்.
இறைவன் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். வாயிலில் இரண்டு பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் நிற்கின்றனர். உயர்ந்த விமானம் ஒன்று அவரது கருவறை மீது நிற்கிறது. நீண்ட மண்டபத்தில் எதிரில் நந்தியும் கொடிமரமும் உள்ளது. அம்பிகை தெற்கு நோக்கிய கருவறையில் உள்ளார். அவற்றின் வாயிலிலும் இரு பெரிய துவாரபாலகி சிலைகள் உள்ளன.
கருவறை கோஷ்டங்களில் துர்க்கை பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் விநாயகர் என உள்ளனர். சுற்று மதில் சுவர் இல்லாத பிரகாரமாக உள்ளது. முதலில் தெற்கில் வராகி ஒரு சன்னதியில் உள்ளார். அடுத்து அழகிய சிற்றாலயம் ஒன்றில் விநாயகர் அடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் வாயிலில் இரண்டு ஆழ்வார்கள், ஒருபுறம் ஆஞ்சநேயர் அடுத்து முருகன் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். இரண்டு சன்னதிகளின் இடையில் கஜலட்சுமி சன்னதி.
வடக்கில் சண்டேசர், வடகிழக்கில் பைரவர் சூரியன் உள்ளனர். பழுதடைந்துபோன கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இறைவன் இங்கு எழுந்தருளி பல ஆயிரம் ஆண்டுகளாகலாம்.
குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் செம்பாறாங்கல் கற்கள் எனப்படும் ஒருவித laterite கற்களை கொண்டு கட்டப்பட்டு காலப்போக்கில் கோயில் சிதைந்து போனது.
இந்த ஸ்தலத்துக்கு நவக்கிரக நாயகர்கள் சூக்ஷும வடிவில் வந்து செஞ்சுடேஸ்வரரை தரிசித்து வருவதால் இந்த கோயிலில் நவக்கிரக சன்னதி ஏதும் கிடையாது. இங்குள்ள இறைவன் செஞ்சுடேஸ்வரரை வழிபட்டாலே " நவக்கிரகங்களையும் வழிபட்ட பேறு கிட்டும்" என நம்பப்படுகிறது.
இத்தலத்தில் இங்கு பவுர்ணமி பூஜையும், பிரதோஷ வழிபாடும் பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இக்கோயிலின் அருகே எழுந்தருளியுள்ள வேதமுத்து மாரியம்மன் தான் கிராமத்தின் காவல் தெய்வமாக உள்ளார்.
மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று
ஆவி எழும்அள வன்றே உடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கிற் பரகதி தானே.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.